|
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நவீனத் தமிழ்ப் புனை கதைகள், கவிதைகளை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்துத் தமிழின் சிறப்பை உலகறியச் செய்து வருபர் திருமதி லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம்.
மௌனி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ந. முத்துசாமி, அம்பை, பாமா,
இமையம் போன்றவர்களின் பதினைந்து படைப்புகளை மொழிபெயர்த்து, உலக அரங்கில் நவீனத்
தமிழின் வளத்தை அறியச் செய்துவருபவர். தமிழக, ஈழத்துக் கவிஞர்கள் பலரின் தமிழ்க்
கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுப்பொன்றும் அவரது உழைப்பின் பயனாகப்
பெங்குவின் மூலம் விரைவில் வெளிவர உள்ளது. இதுபோலவே, சுந்தர ராமசாமியின் குழந்தைகள்
பெண்கள் ஆண்கள் நாவலையும் லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம் ஆங்கில மொழியாக்கம் செய்துள்ளார்;
அதுவும் விரைவில் பிரசுரமாகவுள்ளது.
இங்கிலாந்து, கனடா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் மொழிபெயர்ப்புப் பட்டறைகளை
நடத்தித் தமிழ் ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்வதற்குப் புதியவர்களை
ஊக்குவிப்பதில் பெரும் பங்காற்றி வருபவர். தமிழ்க் கவிதைகளைத் தமிழிலும்
ஆங்கிலத்திலும் லண்டனிலும் பிற இடங்களிலும் தமிழரல்லாதவர்கள் மத்தியில் வாசித்துக்
காட்டி, தமிழ்க் கவிதைக்குச் சிறப்புச் சேர்ப்பவர். கனடாவில் வெளியான ஈழத்துத்
தமிழ்க் கவிதை, புனை கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுப்பான லிutமீsஷீஸீரீ
ணீஸீபீ லிணீனீமீஸீtஇல் இவர் மொழிபெயர்த்த கவிதைகள் இடம்பெற்றுள்ளமையும்
குறிப்பிடத்தக்கது. பழந்தமிழ் இலக்கியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரு
காவியங்களையும் வசன நடையில் ஆங்கிலத்தில் ஆக்கி வழங்கியிருப்பமை இவரது
மொழிபெயர்ப்புப் பணியின் மற்றுமொரு பரிமாணமாகும். நவீனத் தமிழ் இலக்கியங்கள்
பற்றியும் பல கட்டுரைகளை ஆங்கில இதழ்களில் எழுதியுள்ளார்.
பாமாவின் கருக்கு, அம்பையின் காட்டில் ஒரு மான் ஆகியவற்றின் ஆங்கில
மொழிபெயர்ப்புக்காக
Hutch Crossword Book Awardஐ (இது
இந்தியாவின்
Booker Prize எனக் கருதப்படுவது) முறையே 2000,
2006ஆம் ஆண்டுகளில் பெற்றவர். தற்போது சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை என்னும்
நாவலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக்கொண்டிருக்கிறார்.
தமிழுக்கு அவர் ஆற்றிவரும் வாழ்நாள் பங்களிப்பிற்காக, கனேடியத் தமிழ் இலக்கியத்
தோட்டம், அவருக்கு 2007ஆம் ஆண்டுக்கான 'இயல் விரு'தையும் 1,500 டாலர் பரிசையும்
வழங்கிக் கௌரவிப்பதில் பெருமை அடைகிறது. அவருக்கு எம் வாழ்த்துக்கள்.
2001ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்பட்டு வருகின்றமை யாவரும்
அறிந்ததே. இதுவரை 'இயல் விருது' பெற்ற வாழ்நாள் சாதனைணயளர்கள்: சுந்தர ராமசாமி, கே.
கணேஷ், வெங்கட் சாமிநாதன், இ. பத்மநாப ஐயர், ஜோர்ஜ் ஹார்ட், ஏ.சீ. தாஸிசியஸ்.
விருது வழங்கும் விழா வழமைபோல் டொரொன்டோ பல்கலைக்கழகத்தில் 2008ஆம் ஆண்டு மே மாதம்
நடைபெறும்.
இம்முறை விருதுக்கான தெரிவுக் குழுவில் பங்காற்றியவர்கள்: பேராசிரியர் எம். ஏ.
நுஃமான், பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி, கவிஞரும் எழுத்தாளருமான மு. பொன்னம்பலம்,
பதிவுகள் இணையத் தள ஆசிரியர் வ. ந. கிரிதரன் ஆகியோர். நெறிப்படுத்தியவர் காலம்
ஆசிரியர் செல்வம் அருளானந்தம்.
|