|
ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டின் அனைத்துக் கிராமங்களும் அடிப்படை வசதிகளைப்
பெற்றுத் தன்னிறைவு அடையச்செய்யும் நோக்கத்துடன் தமிழக அரசு ஒரு புதிய கனவுத்
திட்டத்தைச் செயல்படுத்த முனைந்துள்ளது. முந்தைய அரசின் அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்,
நமது கிராமம் ஆகிய இரு திட்டங்களையும் ஒருங்கிணைத்து, அதன் போதாமைகளைக் களைந்து
மேம்படுத்தி, இந்தப் புதிய அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்
உருவாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு
இத்திட்டத்தில் இணைக்கப்படும். இத்தேர்ந்தெடுப்பில் தனிநபர் வருமானம் குறைவாக உள்ள
ஊராட்சிகளுக்கு முன்வாய்ப்பு தரப்படுகிறது. கீழிலிருந்து மேல்நோக்கிப் பரவும் இந்தப்
பொருளாதார அடிப்படையிலான முன்னுரிமை குறிப்பிடத்தக்க சிறந்த தேர்வு முறை.
ஐந்தாண்டுகளில் அனைத்துக் கிராமங்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடையும்.
தமிழ்நாட்டில் செயல்படும் மத்திய, மாநில அரசுகளின் ஏழு கிராம நலத் திட்டங்களுள்
அதிக நிதி ஒதுக்கீட்டுடன் இயங்குவது அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித்
திட்டந்தான். ரூபாய் 69 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் பொன்விழா ஆண்டு கிராம சுய
வேலைவாய்ப்புத் திட்டம் இயங்குகிறதெனில் ரூபாய் 507 கோடி நிதி ஒதுக்கீட்டுடன்
இயங்குகிறது அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் (கிநிகிவிஜி).
2006-2007ஆம் ஆண்டில் முதல் 2,540 கிராமங்களும் நிகழும் ஆண்டில் 2,534 கிராமங்களும்
இத்திட்டத்தின்கீழ் வந்துள்ளன. இன்னும் இருக்கும் மூன்றாண்டு முடிவில் அனைத்துக்
கிராமங்களும் வந்துவிடும்.
இப்பெருங்கனவுத் திட்டம் ஒன்பது அம்சங்களைக் கொண்டுள்ளது. நூலக வசதி, நீர்
சேமிப்பு, விளையாட்டுக் களம், மயான வசதி, உள்ளூர்ச் சந்தை, உள்ளூர் நீர்நிலை,
குடிநீர், தெருவிளக்கு, செய்திச் சேவை போன்றவற்றுக்கான அடிப்படைகளைக் கிராமந்தோறும்
உருவாக்குவது இத் திட்டத்தின் நோக்கம். இவற்றை உருவாக்கித் தருவது அரசின் வேலை.
தொடர்வதும் பராமரிப்பதும் ஊராட்சிகளின் கடமை. சேவையைத் துய்ப்பதும் தொடர்ந்து
அவற்றைக் காப்பதும் மக்களின் பொறுப்பு. கால வளர்ச்சிக்கேற்ப அமையும் மனிதனின்
அன்றாடத் தேவைகளைக் கிராமத்திலேயே கிடைக்கும்படி செய்து, நகரப் பெயர்வைக்
குறைக்கும் நோக்கிலமைவன. இந்த அடிப்படைத் தேவைகள், நாம் பல காலமாய் வற்புறுத்தி
வருபவைதாம் என்றாலும் நூலக வசதி, செய்திச் சேவை ஆகியவை புதியவை. காலத்தின்
பேரெழுச்சியாகக் கிராமத்தில் நுழைபவை.
கிராம நூலகம் இந்த ஒன்பது அம்சங்களிலேயே மிக முக்கியமானது, தொலை நோக்கிலானது.
இப்போது ஒரு ஊராட்சி ஒன்றியத்தில், கிராம எண்ணிக்கையில் 20 சதவீத எண்ணிக்கையிலேயே
கிளை நூலகங்கள் உள்ளன. 47 கிராமங்கள் அடங்கிய ஒரு ஒன்றியத்தில் ஏறக்குறைய 10
நூலகங்களே உள்ளன. பொது நூலகத் திட்டம் மூலம் அவ்வளவுதான் முடிந்திருக்கிறது.
இத்திட்டம் முழுமையடையும்போது, தமிழ்நாட்டின் 13,500 கிராமங்களிலும் நூலகம்
ஏற்படுத்தப்பட்டுவிடும்.
திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய காலத்தே ஊர்கள்தோறும் படிப்பகங்களை நிறுவியது.
இன்றும் சில கிராமங்களில் பழைய சோபையுடன் நாவலர், அண்ணா படங்களுடன் அவை காணக்
கிடைக்கின்றன. அக் கட்சியின் பத்திரிகைகள் அங்குதான் கிராம மக்களுக்கு அறிமுகம்
பெற்றன. அக்கட்சியின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிந்தவை இப்புத்தகங்கள்தான்.
அண்ணா முதலமைச்சர் ஆனதும் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும்போது வீடுதோறும்
நூலகம் வேண்டுமெனச் சொன்னார். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைத் திறப்பின்போது,
முதல்வர் வேண்டுகோள்படி அய்யன் திருவள்ளுவர் பெயரில் பல ஊர்களில் நூலகம் அமைந்தது.
இப்போது உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னுரைத்துள்ள அனைத்துக் கிராம
அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் கிராமந்தோறும் நூலகத்தை உறுதிசெய்கிறது. சென்னையில்
100 கோடி ரூபாய் செலவில் அமையவிருக்கும் நூலகத்தைக் காணக் காத்துக்கொண்டிருக்கும்
நமக்கு, இந்தக் கிராம நூலகங்கள் நம்பிக்கையை மேலும் வளர்க்கின்றன.
இந்தக் கிராம நூலகங்களைப் பராமரிக்க ஓய்வுபெற்ற ஆசிரியர்களை நியமிக்கலாம் என அரசு
கருதுகிறது. கை நிறையச் சம்பளம் வாங்கிய ஆசிரியர்கள், மாதம் ரூ. 750 சம்பளத்தில்
சேவைப் பணிக்கு வருவார்களா என்பது சந்தேகமே. இதை அரசு மறுபரிசீலனை செய்யலாம்.
இப்பணிக்கு ஆண்களைவிடப் பெண்களே பொறுப்பானவர்கள். குழந்தைகளைப் போலப் புத்தகங்களை
அவர்களால் கவனித்துக்கொள்ள முடியும். சுயஉதவிக் குழுவில் இயங்கும் படித்த
பெண்களிடம் இதை ஒப்படைக்கலாம். கால ஓட்டத்தில் மக்களின் கவனம் குவிந்து பயன்பாடு
பெருகி, ஊராட்சிகளின் நிதி நிலைமையும் வளர்ந்தால் நூலகப் படிப்புப்
படித்தவர்களுக்கு இதன் மூலம் வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும்.
சமூகம் திசை தவறிப் போகும்போது, அதைத் தடுப்பது காவல் துறை எனில் சமூகத்தை
நல்நெறியில் இருக்கவைப்பது ஆசிரியர்களும் நூலகங்களும் என்பதில் என்ன சந்தேகம்?
நடைமுறையில் இதில் நாம் தவறுகிறோம் என்பது வேறு. நூலகச் செலவும் காவல் துறைச்
செலவும் எதிர்நிலைத் தன்மை கொண்டவை. நூலக முதலீட்டைப் பெருக்கினால் காவல் துறைச்
செலவு தானாய்க் குறையும். நூலக முதலீடு வருங்காலச் சமுதாயத்தை உருவாக்கப் பயன்படும்
செலவாகும்.
பயன்படுத்துவோரும் இயக்குவோரும் இன்மையால் கிராம ஊராட்சிக் கட்டடத்தில் முடங்கிக்
கிடக்கும் கணினியைப் (அது பயன்படத் தகுதி இழக்கு முன்) பயன்படுத்தவும் இந்த நூலகப்
பணியாளரையே கேட்டுக்கொள்ளலாம். இத்திட்டங்கள் தொடங்கும்வரை அவை அரசின் நேரடிக்
கட்டுப்பாட்டில் இருக்கும். பின்னர் ஊராட்சி அமைப்புகளே நேரடியாகப் பராமரிக்கும்.
அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் என்கிற பெருங்கனவு தன்னிறைவு கொண்ட
கிராமத்தை உருவாக்க உதவும் திட்டம். இதை நடைமுறைப்படுத்தும் தமிழக அரசுக்கும் ஊரக
வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கும் பாராட்டுகள்.
|