Google   www kalachuvadu.com

 

விவாதம்
நந்திகிராம்:
மறைக்கப்பட்ட உண்மைகளும் எழுப்பப்படாத கேள்விகளும்

நந்திகிராம் பற்றிய டிசம்பர் மாதத் தலையங்கம் முற்றிலும் ஒருதலைப் பட்சமானதாகவே இருந்தது. இந்தியாவின் அனைத்துக் கட்சிகளும் ஊடகங்களும் ஒருமித்த குரலில் சி.பி.எம்மீது என்னென்ன குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்களோ அதையே நீங்களும் கூறியிருக்கிறீர்கள். நந்திகிராம் நிகழ்வுகளை விமர்சிக்கும் அனைவரும் மார்ச் 14 மற்றும் நவம்பர் 8, 9 தேதிகளில் நடைபெற்ற வன்முறையை மட்டுமே கண்டனஞ்செய்வதோடு அதற்கு முன்பும் பின்பும் வேறு எதுவுமே நடைபெறாததைப் போல் நடந்துகொள்கின்றனர்.

இந்தோனேசியாவைச் சேர்ந்த சலீம் குழுமத்தினர் அமைக்கவுள்ள கெமிக்கல் தொழிற்சாலை ஒன்றிற்காக மேற்கு வங்க அரசு நந்திகிராம் பகுதியில் நிலத்தைக் கையகப்படுத்த இருப்பதாக 2007 ஜனவரி 3ஆம் தேதி ஹால்டியா வளர்ச்சி ஆணையம் வெளியிட்ட அறிவிப்பிலிருந்து தொடங்கிய இப்பிரச்சினை, தங்கள் வீடுகளிலிருந்து துரத்தியடிக்கப்பட்டிருந்த சி.பி.எம். கட்சியினர் சுமார் 3,000 பேர் தங்கள் வீடுகளுக்குத் திரும்பும் முயற்சியில் ஏற்பட்ட வன்முறையுடன் (நவம்பர் 10ஆம் தேதி) முடிவிற்கு வந்தது. ஜனவரி 7ஆம் தேதி மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் திரிணமுல் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறையில் இருதரப்பையும் சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்டனர்.

நிலத்தைக் கையகப்படுத்த எதிர்ப்பு வலுப்பதைக் கண்ட மேற்கு வங்க அரசு, பிப்ரவரி மாத இரண்டாம் வாரத்தில் நந்திகிராம் பகுதியில் நிலம் கையகப்படுத்தமாட்டாது என அறிவித்தது. ஆனால், நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக உருவாக்கப்பட்ட அமைப்பான பி.யு.பி.சி. தனது எதிர்ப்பைத் தொடர்ந்தது. இவ்வமைப்பு திரிணமுல் மற்றும் மாவோயிஸ்டுகளின் தலைமையிலும் வழிகாட்டுதலிலும் இயங்கியது. இதற்கிடையே தங்கள் வீடுகளிலிருந்து துரத்தியடிக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் சுமார் 3,000 பேரை அவர்களது வீடுகளுக்குத் திருப்பி அனுப்ப போலீஸ் உதவியுடன் அரசு மேற்கொண்ட முயற்சியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் சுமார் 15 பேர் கொல்லப்பட்டனர். இதில் போலீஸ் உடையில் சி.பி.எம். கட்சியினர் சிலரும் சேர்ந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகளும் ஊடகத்தினரும் குற்றஞ்சாட்டினர். அரசு நிலம் கையகப்படுத்தப்படமாட்டாது எனக் கூறிய பிறகும் பி.யு.பி.சி. தொடர்ந்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தது ஏன் என்றோ சி.பி.எம். கட்சியைச் சேர்ந்தவர்கள் என்னும் காரணத்திற்காக 3,000 பேர் அவர்களது வீடுகளிலிருந்து துரத்தியடிக்கப்பட்டது ஏன் என்றோ ஊடகத்தினரும் இடதுசாரி அறிவாளிகளும் மற்றவர்களும் கேள்வி எழுப்பவில்லை.

நந்திகிராமை மாநிலத்தின் மற்ற பகுதியுடனான தொடர்பிலிருந்து துண்டித்து அதை 'விடுவிக்கப்பட்ட பகுதியாக' அறிவித்துச் சிவில் நிர்வாகத்தையோ போலீசையோ அங்கு அனுமதிக்காத பி.யு.பி.சியின் நடவடிக்கை பற்றி எதுவும் பேசாத, கேள்விக்குட்படுத்தாத ஊடகம் துப்பாக்கிச் சூடு நடந்தவுடன் கொதித் தெழுந்தது. மார்க்சிஸ்ட் கட்சியினர் வன்முறைக்கு ஆளானபோது, அமைதியாய் இருந்த மேதகு ஆளுநரின் தார்மீகக் கோபம் திடீரெனத் தூக்கக் கலக்கத்திலிருந்து விழித்தெழுந்தது.

ஏனெனில், இப்போது பாதிக்கப்பட்டவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியினர் அல்ல. மாறாக அவர்களது எதிரிகள். அடுத்த ஏழு மாதங்களுக்கு அப்பகுதி 'விடுவிக்கப்பட்ட பகுதியாக' தொடர்ந்ததையும் 3,000 பேர் பல்வேறு முகாம்களில் வாழ நேர்ந்ததையும் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த 30 பேர் வன்முறையில் இறந்ததையும் விமர்சனம் செய்யாத ஊடகத்தினரும் முதலாளித்துவ மற்றும் இடதுசாரி அறிவுஜீவிகளும் சி.பி.எம் கட்சியினர் முகாம்களிலிருந்து தங்கள் வீடுகளுக்குத் திரும்ப செய்த முயற்சியில் ஏற்பட்ட வன்முறையில் சுமார் ஆறு, ஏழு பேர் கொல்லப்பட்டபோது, அவர்களது தார்மீகக் கோபம் மீண்டும் ஒருமுறை தூக்கநிலையிலிருந்து நினைவுநிலைக்குத் திரும்பியது. சுதந்திர இந்தியா இதுவரை கண்டிராத மாபெரும் வன்முறை ஏற்பட்டுவிட்டதைப் போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டது. இந்நிகழ்வுகள் குஜராத் படுகொலையுடன் ஒப்பிடப்பட்டன. புத்ததேவ், மோடியுடன் ஒப்பிடப்பட்டார். இப்படி அனைத்துக் கட்சிகளும் ஊடகத்தினரும் முதலாளித்துவ மற்றும் இடதுசாரி அறிவுஜீவிகளும் ஒன்றுதிரண்டு கடுமையாக விமர்சித்தது இதுவரை இருமுறை மட்டுமே. ஒன்று, பாபர் மசூதி இடிப்பு; மற்றொன்று குஜராத் படுகொலை.

இதன் மூலம் நந்திகிராம் அவற்றிற்கு இணையான ஒரு படுபாதகச் செயலாகவும் இதைச் செய்ததன் மூலம் சி.பி.எம் கட்சி குஜராத் படுகொலை போன்றவற்றை விமர்சிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டதாகவும் ஒருமித்த குரலில் தீர்ப்பளிக்கப்பட்டது. முஸ்லிம் மத அடிப்படைவாதக் கும்பல் செய்ததாகக் கூறப்படும் கோத்ரா சம்பவத்திற்குப் பழிவாங்க குஜராத்தில் சங்கப்பரிவாரம் ஆடிய வெறியாட்டத்தில் ஒரு சில நாள்களில் சுமார் இரண்டாயிரம் முஸ்லிம்கள் படுகொலைசெய்யப்பட்டனர். இதை நந்திகிராம் வன்முறையுடன், அதாவது பத்து மாதக் காலகட்டத்தில் குடிமைச் சமுதாயத்தின் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட வன்முறையிலும் மற்றும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டிலுமாகச் சுமார் அறுபது பேர் இறந்த நிகழ்வை அதிலும் இதில் முப்பது பேர் இறந்த வன் முறைக்குக் காரணம் எனக் குற்றஞ் சாட்டப்படும் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்னும் நிலையில் இதைக் குஜராத்துடன் ஒப்பிடுவது என்ன நியாயம்? குற்றம் மற்றும் வன்முறையின் தன்மையும் அளவும் எப்படி இருந்தபோதிலும் எல்லாம் ஒன்றேதான் என்று வாதிடுவது என்ன அறிவுடமை? கொசோவோவில் நடந்த படுகொலைகள் ஜெனோசைட் (ஒரு இனத்தையே அழித்தொழிப்பது) என்று வர்ணிக்கப்பட்டபோது, அது ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களை அவமதிப்பது என்று நோம் சோம்ஸ்கி கூறியது இங்கும் பொருந்தும். நந்திகிராமைக் குஜராத்துடன் ஒப்பிடுவது கொல்லப்பட்ட முஸ்லிம்களை அவமதிப்பது மட்டுமல்ல; மோடிக்கு மரியாதையைப் பெற்றுத்தருவதும் ஆகும்.

நந்திகிராம் வன்முறையை விமர்சித்த முதலாளித்துவ ஊடகங்களும் அறிவுஜீவிகளும் அதற்கு அடிப்படைக் காரணமான 'கார்ப்போரேட் தொழில் மயமாக்கல்' கொள்கையை விமர்சனம் செய்யவில்லை. அது அடிப்படைக் காரணம் அல்ல. ஆனால், அதைப் பல காரணங்களுள் ஒன்றாகக்கூடக் கருதவில்லை. தொழில்மயமாக்கலில் மிகவும் பின்தங்கியிருந்த மேற்கு வங்கத்தைத் (மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொண்ட மத்திய அரசும் தொழிற்சங்கங்கள் வலிமையாக இருந்ததால் புறக்கணித்த முதலாளிகளுமே இதற்குக் காரணம்) தொழில்மயமாக்க இக்கொள்கையைப் பின்பற்ற புத்ததேவ் முடிவுசெய்தபோது, அவர் கம்யூனிசக் கொள்கைகளிலிருந்து வழுவிச் செல்வதற்காக அவரைப் போற்றிப் புகழ்ந்தவர்கள், அதன் விளைவாக உருவான வன்முறைக்குக் கம்யூனிஸ்ட் கட்சி பின்பற்றும் ஸ்டாலினிய வழிமுறையே காரணம் எனக் கூறினர். அது உண்மை எனில், கடந்த 30 வருடங்களில் எத்தனை நந்திகிராம்கள் மேற்கு வங்கத்தில் நிகழ்ந்தன? எத்தனை வன்முறைக் கலவரங்கள் நிகழ்ந்தன? இந்தக் கேள்விகளுக்கான பதிலை யோசித்துப் பார்த்தாலே புரியும், நந்திகிராம் வன்முறை ஒரு பிறழ்வு என்பது.

'எதிர்க்கட்சியினருக்கு அவர்கள் வழியிலேயே பதிலடி தரப்பட்டது' என்னும் தனது தவறான பேச்சிற்காகச் சமீபத்தில் மன்னிப்புக் கோரிய புத்ததேவ், நந்திகிராம் ஒரு நிர்வாக மற்றும் அரசியல்ரீதியான தோல்வி என்றும் இனி ஒரு நந்திகிராம் நிகழாது என்றும் மக்களின் விருப்பத்திற்கு மாறாக நிலம் கையகப்படுத்தமாட்டாது என்றும் கூறியதிலிருந்தே நந்திகிராம் ஒரு பிறழ்வு என்பதை அறியலாம். கார்ப்போரேட் உலகமயமாக்கல் முன்பு நெல்சன் மண்டேலா மற்றும் பிரேசிலின் லூலா போன்றவர்களே எப்படிச் சக்தியற்றவர்களாக இருக்கிறார்கள் என்று தி இந்து பத்திரிகையில் தான் எழுதிய கட்டுரை ஒன்றில் அருந்ததி ராய் குறிப்பிட்டிருந்தார்.

சோசலிசம் ஒரு மாற்று அரசியல், பொருளாதார அமைப்பாக வெற்றிபெற ஒரே நேரத்தில் ஒரு சில முன்னேறிய முதலாளித்துவ நாடுகளிலாவது சோசலிசப் புரட்சி நடக்க வேண்டும் என்று மார்க்ஸ் எதிர்பார்த்ததற்கு இதுவே காரணம். ஆனால், இத்தகைய கரிசனமான புரிந்துணர்வை அருந்ததி ராயோ மற்ற இடதுசாரி அறிவுஜீவிகளோ இந்திய மார்க்சிஸ்டுகளுக்கு நீட்டிக்கத் தயார் இல்லை என்பது விநோதந்தான். தேசிய அரசுகளே திணற, ஒரு மாநிலத்தின் முதல்வர் எம்மாத்திரம்? இன்றைய சர்வதேசச் சூழலில், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பைனான்சியல் கேப்பிடலின் கிடுக்கிப் பிடியில் உலகப் பொருளாதாரம் சிக்கியிருக்கின்ற நிலையில், இத்தகைய கொள்கைகளை இந்திய ஆளும் வர்க்கம் மிக உற்சாகமாகப் பின்பற்றும் நிலையில் ஒரு மாநிலத்தின் இடதுசாரி அரசிற்கு மாற்று வழிகள் என்ன இருக்கின்றன? புதிய பொதுத் துறை மற்றும் கூட்டுறவுத் துறை நிறுவனங்கள் உருவாக வாய்ப்பே இல்லை என்னும் நிலையை மத்திய அரசு உருவாக்கியிருக்கும் நிலையில் மேற்கு வங்க அரசுக்கு டாடா போன்ற முதலாளிகளை நாடுவதைத் தவிர வேறு வழியே இல்லை.

மத்தியில் இத்தகைய கொள்கைகளை எதிர்க்கும் இடதுசாரிகள் தங்கள் மாநிலத்தில் அதே கொள்கையைப் பின்பற்றுவது முரண்பாடு இல்லையா எனக் கேட்கப்படுகிறது? நியாயமான கேள்வி. ஆனால், அந்நிய மற்றும் தனியார் முதலீட்டிற்குத் தாங்கள் முற்றிலும் எதிரானவர்கள் அல்ல என்பதையும் எத்தகைய முதலீடுகள் ஏற்கப்படலாம் என்பதையும் சி.பி.எம். பலமுறை தெளிவுபடுத்தியிருக்கிறது. இன்றைய உலகச் சூழலில் இடதுசாரிகள் தங்கள் கொள்கைகளுக்கு மாறான ஒன்றைப் பின்பற்ற வேண்டியிருப்பது தவிர்க்கவியலாத முரணே.

அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது சர்வதேசக் கொள்ளைக்குச் சாதகமாக இந்தியாவைத் தனது பங்காளியாக்க இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப் பந்தத்தின் மூலம் முயல இந்திய ஆளும் வர்க்கம் அந்தக் கொள்ளையில் தனக்குக் கிடைக்கவிருக்கும் எலும்புத் துண்டுகளுக்காக இதை வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பாகக் கருத, ஆனால், வரலாறோ அதைத் தடுத்து நிறுத்தும் சக்தியை இந்திய இடதுசாரிகளுக்குத் தந்திருக்கும் இந்தச் சூழலில் இந்திய முதலாளித்துவ ஊடகங்களும் அறிவுஜீவிகளும் அடைந்திருக்கும் ஆத்திரத்தை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

K. திருநாவுக்கரசு

n

சிங்கூர் டாடா கார்த் தொழிற்சாலை, நந்திகிராம் ரசாயனத் தொழிற்சாலைகள் இரண்டையும் போட்டுக் குழப்புகிறது சென்ற இதழ் தலையங்கம். கார்த் தொழிற்சாலைக்கான வேலை சிங்கூரில் வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. நந்திகிராம் கலவரம் விவசாயிகளுக்கும் இடது முன்னணி அரசுக்கும் இடையிலான போராட்டம் அல்ல. ஜனவரி தொடக்கத்தில் நிலம் கையகப்படுத்தப்படப் போவதாகத் தவறாகக் கருதி ஆவேசப்பட்டவர்கள் விவசாயிகளாக இருக்க இடமுண்டு. நிலம் கையகப்படுத்தப்படாது என்னும் அறிக்கையின் பின்பும் அரசு நிர்வாகத்திற்குத் தடைவிதித்தது. சி.பி.எம். தொண்டர்களை விரட்டியடித்தது, ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளின் செயலாகும். பங்களாதேஷ் எல்லைப் பகுதியில் வந்து குடியேறியவர்கள் வனப்பகுதிகளிலிருந்து விரட்டப்பட்டபின் வந்து தங்கிய இடம் நந்திகிராம். அங்கும் இடம் பறிபோகலாம் என்னும் உணர்வு இவர்களிடம் பீதி ஏற்படுத்தியதில் ஆச்சரியமில்லை. தீவிரவாதிகள் இடது அரசின் நிர்வாகத்தைக் குலைக்க எடுத்த முயற்சியே நந்திகிராம் கலவரம். இல்லையென்றால், ரசாயனத் தொழிற்சாலைகளுக்கு மாற்று இடம் தெரிவுசெய்யப்பட்ட பிறகும் போராட்டம் தொடர வேண்டியதன் அவசியமென்ன? நந்திகிராமில் மார்க்சிஸ்டுகள் வீடு திரும்பியதை எதிர்த்துக் கொல்கொத்தாவில் கண்டனப் போராட்டம் நடத்தியவர்களின் குணாம்சம் நடுநிலைப் பார்வையாளர்களுக்குப் புரிந்திருக்கும்.

சி.பி.எம். தொண்டர்கள் வன்முறைக்கு ஈடுகொடுத்துத் தம் வீடுகளுக்குத் திரும்பியபோது, பத்திரிகையாளர்கள் தடுக்கப்பட்டதை மட்டுமே தலையங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அதற்கு முன் பல மாதங்களாக நடந்த அராஜகம் பற்றி ஏன் குறிப்பிடவில்லை?

தலையங்கத்தின் காழ்ப்புணர்ச்சியும் துவேஷமும் புத்ததேவை, நரேந்திர மோடியுடன் ஒப்பிட்டுச் சொல்வதிலிருந்து தெரிகிறது. அதுவும் இந்துத்துவவாதிகளின் ஒப்புதல் வாக்கு மூலங்களை வெளியிட்டுள்ள அதே இதழில் இது நிகழ்ந்திருப்பது அகோரமானது. நிர்வாகத்தைச் செயலிழக்கச் செய்தும் பல இடங்களில் நிர்வாகத்தின் ஆதரவை அளித்தும் அப்பாவிச் சிறுபான்மையினரைக் கொன்றொழித்த அரக்கத்தனத்தோடு பதினொரு மாதங்களாக ஆயுதம் தாங்கி நிர்வாகத்தை முடக்கிப்போட்டு கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் என்ற ஒரே காரணத்திற்காக வன்முறைக்கு உட்படுத்தி உள்நாட்டிலேயே அகதிகளாக்கிய வன்முறைக் கும்பலுக்கு எதிராக, வன்முறையைச் சுயபாதுகாப்பாகப் பயன்படுத்திக்கொண்டவர்களை ஒப்பிட எப்படி மனம்வந்தது எனப் புரியவில்லை. அகதிகள் அவர்கள் சொந்த இடத்திற்குச் செல்ல இடது முன்னணி அரசு என்ன செய்திருக்க வேண்டு மென்று ஆசிரியர் கருதுகிறார்? அவர்கள் நிரந்தரமாகவே அகதிகள் முகாமில் தங்கியிருந்து அல்லல்பட வேண்டுமென்று நினைக்கிறாரா?

சி.பி.எம். கட்சியில் குறைபாடுகள் பல உண்டு. வன்முறையை விவேகத்தோடு பயன்படுத்தும் பக்குவம் எல்லாக் கிளைகளிலும் உண்டு எனச் சொல்ல முடியாது. ஆனால் இந்தியாவிலுள்ள அரசியல் இயக்கங்களில் ஏழைகளுக்குப் பயன்படும் சமூக மாற்றத்தைக்கொண்டு வரும் திட்டமும் அனுபவத்தின் அடிப்படையில் தவறுகளைத் திருத்திக்கொள்ளும் பக்குவமும் எனக்குத் தெரிந்த அளவில் வேறு எந்த இயக்கத்திடமும் இல்லை. சி.பி.எம். இயக்கத்திற்கெதிரே ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசுவது இந்தியாவின் ஏழைகளுக்கு இழைக்கும் துரோகமாகும்.

கு. அமிர்தராஜ்

உள்ளடக்கம்

 

 

Google