Google   www kalachuvadu.com

 

கட்டுரை
கட்டாயக் கிராமப்புற சேவை
பெருமாள்முருகன்

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பனபாக லட்சுமி 'இந்திய மருத்துவ முறைப் படிப்புகளைப் பயிலும் மாணவர்களுக்கும் ஓராண்டு கிராமப்புற மருத்துவ சேவையைக் கட்டாயமாக்கும் திட்டம் விவாதிக்கப்பட்டு வருகிறது' எனக் கூறியுள்ளார். மருத்துவம் என்றாலே ஆங்கில மருத்துவமாகிய அலோபதிதான் என்னும் பாமரக் கருத்து, படித்தவர்களிடமும் நிலவுவதால் இந்திய மருத்துவ முறைப் படிப்புகளைப் பற்றிய இந்த அறிவிப்பு ஒரு சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.

ஆனால், அலோபதி (எம்.பி.பி.எஸ்.) பயிலும் மாணவர்கள் இத்திட்டத்தை எதிர்த்து நடத்தும் போராட்டங்களும் அவற்றை ஒட்டிக் கட்சிகளுக்கிடையே நடைபெறும் அறிக்கைப் போர்களும் ஓரிரு மாதங்களாகத் தொடர் செய்திகளாக உள்ளன. கட்டாயக் கிராமப்புற சேவையை எதிர்ப்போர் கிராமப்புற மக்களுக்கு எதிரானவர்கள் எனப் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாசும் அக்கட்சியைச் சேர்ந்த மத்தியச் சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணியும் கடுமையாக விமர்சிக்கின்றனர். மக்கள் பணத்தில் படிப்பவர்கள் சேவைக்குத் தயாரில்லை என்றால் அந்தப் பணத்தைத் திருப்பிச் செலுத்த வேண்டும் எனவும் ஓராண்டு சேவை என்பது குறைவு, அதை ஈராண்டாக உயர்த்த வேண்டும் எனவும் அவர்கள் கோருகின்றனர். கிராமப்புற சேவைத் திட்டத்தை எப்படியாவது ஏற்கவைத்துவிடும் தன்முனைப்பும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் மாற்றுக் கட்சியினரை எதிர்கொள்ளும் பொருட்டும் இத்திட்டத்திற்கு மக்கள் மத்தியில் ஆதரவு திரட்டும் நோக்கம் கொண்ட பேச்சுகள் இவை. மருத்துவ மாணவர்களின் உண்மையான பிரச்சினை என்ன என்பதைப் புரிந்து அதற்கேற்பச் செயல்படும் நுட்பமற்று அரசியல் சார்ந்து மட்டுமே அணுகும் பார்வை இது.

இத்திட்டத்திற்கு எதிராகப் போராடிவரும் மருத்துவ மாணவர்கள் 'காலம் முழுக்கக் கிராமப்புறத்தில் சேவை செய்யத் தயாராக இருக்கின்றோம் மாணவர்களாக அல்ல, மருத்துவர்களாக' என்றும் 'கட்டாயக் கிராமப்புற சேவை என்னும் பெயரில் 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்களின் பணியிடங்களை ஒழித்துக்கட்டும் முயற்சி இது' என்றும் கூறுகின்றனர். இத்தகைய கூற்றுகள் போராட்டத்திற்கான நியாயத்தைச் சொல்வதுபோலத் தோன்றினாலும் மருத்துவ மாணவர்களின் கவலை வேறு என்பதை உணர முடிகிறது.

'எங்களைவிடக் குறைவான மதிப்பெண் பெற்றுப் பொறியியல் கல்வியில் சேர்பவர்கள் எங்களுக்கு முன்பே படிப்பை முடித்து வேலைக்குப் போய்விடுகிறார்கள். இன்னும் ஓராண்டு அதிகமானால் பொறியியல் படிப்பைவிட இரண்டரை ஆண்டுகள் கூடுதலாகக் கற்க வேண்டியவர்களாகிறோம். மருத்துவத்தைவிடப் பொறியியல் படிப்பவர்கள் அதிகம் சம்பாதிக்க இன்று வாய்ப்பிருக்கையில் இத்திட்டம் எங்களுக்கு எப்படி நன்மை செய்வதாகும்' என்பதுதான் மறைமுகமாகவும் நேரடியாகவும் மருத்துவ மாணவர்கள் கேட்கும் கேள்வி. ஆகவே, இந்த எதிர்ப்பு அடிப்படையில் சம்பாத்தியம் சம்பந்தப்பட்டது.

மருத்துவம் பயில்பவர்கள் எப்போதுமே அரசு வேலையை இலக்காகக் கொள்வதில்லை. தனிப் பயிற்சி அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பின் மூலம் நிறையச் சம்பாதிப்பதுதான் அவர்கள் நோக்கம். தனி மருத்துவமனை கிளினிக் வைத்து நடத்துபவருக்கு அரசு வேலைகிடைத்தால் கூடுதல் கவுரவம். அவ்வளவுதான். விரைவாகப் படிப்பை முடித்துச் சீக்கிரமாக நிறையச் சம்பாதிக்க வேண்டும் எனப் பறந்துகொண்டிருக்கிறவர்களிடம் இன்னொரு வருடம் கூடுதலாகப் பணியாற்றினால்தான் பட்டம் என்றால் எப்படி ஏற்பார்கள்? உள்மருத்துவராகப் (லீஷீusமீ suக்ஷீரீமீஸீ) பணியாற்றும் கடைசி ஓராண்டுக்குள்ளேயே கிராமப்புற சேவையும் அடங்கும் வகையில் திட்டம் இருக்குமானால் அனேகமாக ஏற்கப்படலாம்.

ஆனால், பாரம்பரிய இந்திய மருத்துவ முறைப் படிப்புகளைப் பயிலும் மாணவர்கள் எந்த வடிவத்திலும் இத்திட்டத்தை வரவேற்கவும் ஏற்றுக்கொள்ளவும் பலவகையான காரணங்கள் இருக்கின்றன. இந்திய மருத்துவ முறைக் கல்வியில் தமிழகத்தைப் பொறுத்தவரை ஐந்து பட்டப் படிப்புகள் உள்ளன. சித்த மருத்துவம் (பி.எஸ்.எம்.எஸ்.), ஓமியோபதி (பி.ஹெச்.எம்.எஸ்.), ஆயுர்வேதம் (பி.ஏ.எம்.எஸ்.), யுனானி (பி.யு.எம்.எஸ்.), இயற்கை மருத்துவம் மற்றும் யோகா (பி.என்.ஒய்.எஸ்.) ஆகியவை அவை.

ஆயுர்வேதம் தவிர மற்றவற்றிற்கு அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இம்மருத்துவப் படிப்புகளுக்கெனத் தனியார் கல்லூரிகள் பல செயல்பட்டுவருகின்றன. ஏறத்தாழ ஆண்டுக்கு ஆயிரம் பேர் இந்திய மருத்துவ முறையில் பயின்று மருத்துவர்களாக வெளிவருகின்றனர். ஆனால், இவர்களுக்குச் சரியான முறையில் வேலைவாய்ப்புகள் இல்லை.

சித்த மருத்துவம், ஓமியோபதி ஆகிய மருத்துவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் ஓரளவுக்குப் பணி வாய்ப்புகள் உள்ளன. மாவட்ட, வட்டத் தலைமை மருத்துவமனைகளில் இவ்விரண்டு மருத்துவப் பிரிவுகளுமோ இரண்டில் ஏதாவது ஒன்றோ உண்டு. அவற்றிலும் ஒரே ஒரு மருத்துவர் பணியிடம் மட்டுந்தான். இயற்கை மருத்துவம் மற்றும் யோகா, ஆயுர்வேதம், யுனானி ஆகியவற்றிற்கு இத்தகைய குறைந்தபட்ச அரசு வேலைவாய்ப்பும்கூட இல்லை. ஆரம்ப சுகாதார நிலையங்களில் அலோபதி தவிர பிற மருத்துவ முறைகளுக்கு வாய்ப்பே இல்லை. நமது பாரம்பரிய மருத்துவ முறைகளுக்குத் தற்போது கிடைக்கும் முக்கியத்துவம் இந்த அளவுதான். இம்மருத்துவ முறைகளின் சிறப்புகளை நம் மக்களே உணராத நிலையும் இதற்குக் காரணம். இந்நிலையில் ஓராண்டு கட்டாயக் கிராமப்புற சேவைத் திட்டம் ஏனைய இந்திய மருத்துவ முறை மாணவர்களுக்குப் பல்வேறு வாய்ப்புகளை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம். முதலாவதாகப் பொதுமக்களிடம் இம்மருத்துவ முறைகளைப் பரப்புவதற்கு இத்திட்டம் நல்ல வாய்ப்பாகும். ஆண்டுதோறும் ஆயிரம் மாணவர்கள் கிராமப்புறங்களை நோக்கிச் செல்வதும் மற்ற இந்திய மருத்துவ முறைகளில் சிகிச்சை அளிப்பதும் நடைமுறைக்கு வருமானால், அதன் பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்கலாம்.

எந்த நோயாக இருந்தாலும் ஊசி போட்டு மாத்திரைகள் கொடுத்தால் மட்டுமே சிகிச்சை பெற்ற திருப்தியுறும் வகையில் மக்களின் மனோபாவம் உள்ளது. மற்ற இந்திய மருத்துவ முறைகள் பற்றிய அறிமுகம் இல்லாததால், அலோபதி தவிர வேறு எந்த மருத்துவ முறையாக இருந்தாலும் 'நாட்டு வைத்தியம்' என்னும் அளவிலேயே புரிந்துவைத்துள்ளனர். சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம் மற்றும் யோகா முதலிய நமது பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கும் ஐந்தரை ஆண்டுகள் கல்வி கற்க வேண்டும் என்பதும் அவற்றில் கற்றவர்களும் அங்கீகாரம் பெற்ற மருத்துவர்கள் என்பதும் பெருவாரியான மக்களின் மனத்தில் இன்னும் பதிவுபெறவில்லை.

ஏராளமான பரிசோதனைக் கருவிகளைப் பார்த்து மிரண்டு கிடக்கும் இன்றைய பொது மனத்தில் ஏனைய இந்திய மருத்துவ முறைகள் ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும். மருத்துவம் என்பது நமக்கு அருகிலேயே நம்மிடத்திலேயே இருப்பது என்னும் கருத்தை விதைக்கும். நமது முன்னோர்கள் எத்தகைய மருத்துவ முறைகளைப் பின்பற்றினர் என்பது விளங்கி நமது பாரம்பரியம், வேர் பற்றிய உணர்வுகள் கூடும்.

பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளில் பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் உள்ள முதன்மைச் சிக்கல் தாம் பயின்ற மருத்துவத்தைப் பொதுமக்கள் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை என்பதுதான். ஆகவே, பொதுமக்களுக்கு இம்மருத்துவ முறைகளைக்கொண்டு சேர்த்துவிட்டால் அவற்றைப் பயில்பவர்களுக்கு இயல்பாகவே வேலைவாய்ப்பு உருவாகிவிடும்.

இவர்களால் சிறுநகரங்கள், கிராமப்புறங்கள் போன்றவற்றில் சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம் முதலியவற்றிற்கான தனி மருத்துவமனைகள் தொடங்கிச் சுயமாகச் சம்பாதிக்க முடியும்.

பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளில் புற நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதுதான் பெரும்பாலும் நடக்கிறது. சில மாநகரங்களில் மட்டுமே உள்நோயாளிகளைக்கொண்ட மருத்துவமனைகள் தற்போது உருவாகிவருகின்றன. உள்நோயாளிகளை அனுமதித்துச் சிகிச்சை தரும் வகையில் வளர்ந்தால் மட்டுமே இம்மருத்துவ முறைகளுக்கு எதிர்காலம் உண்டு.

மண் சிகிச்சை, நீர் சிகிச்சை போன்றவற்றைத் திரைப்பட நட்சத்திரங்களும் அரசியல் தலைவர்களும் பெறுவதை அவ்வப்போது நாம் பத்திரிகைச் செய்திகளில் காண்கிறோம். இத்தகைய சிகிச்சை முறைகளை எளிய மக்களும் பெற்றுப் பயனடைய வேண்டுமானால், உள்நோயாளிகளை வைத்துப் பராமரிக்கும் சிறு மருத்துவமனைகள் அவசியம்.

பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளில் உணவை அடிப்படையாகக் கொண்ட சிகிச்சை முறைகள் மிகவும் முக்கியமானவை. நோயாளிகள் உட்கொள்ளும் உணவு முறைகளைக் கண்காணிப்பதும் அவற்றில் அவ்வப்போது தேவையான மாற்றங்களைச் செய்வதும் அவர்கள் விரைவில் குணமாக உதவும். அதற்கு உள்நோயாளிகளை அனுமதிக்கும் இடவசதியும் சிகிச்சை முறைகளும் உடைய மருத்துவமனை அமைப்பு அவசியம். இவ்வாறு இந்தப் பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகள் வளர்வதற்கும் கிராமப்புற சேவை வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் ஆதிக்கம் செலுத்திவரும் நுகர்வுப் பண்பாட்டின் குறைபாடுகள் ஒருபுறமிருக்க மக்களுக்குத் தேர்வுசெய்துகொள்ளும் உரிமையை வழங்கும் நன்மையும் அதில் இருக்கிறது. கிராமப்புற சேவையின் விளைவாகப் பல்வேறு விதமான மருத்துவ முறைகள் மக்களுக்கு அறிமுகமாகும் பட்சத்தில் அவற்றை ஒப்பிட்டுத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் கிடைக்கும். செலவு குறைவு, பக்க விளைவுகள் இல்லாமை, முழுமையான குணம் அளித்தல் உள்ளிட்ட இயல்புகளைக்கொண்ட இந்த மருத்துவ முறைகளை மக்கள் தேர்வுசெய்யும் விழுக்காட்டு அளவு கூடும் எனவும் நம்பலாம்.

மாநகர மருத்துவமனைகள் சிலவற்றில் நோயாளிகளுக்கு உணவுப் பரிந்துரைக்காக இயற்கை மருத்துவம் பயின்றவர்களைப் பணியமர்த்தி உள்ளனர். யோகாசனம் கற்றவர்களையும் இத்தகைய மருத்துவமனைகள் பயன்படுத்திக்கொள்கின்றன. இது விரிவாவதும் பிற மருத்துவர்களுக்குக் குறைந்தபட்சம் ஓர் அறையையாவது ஒதுக்கிக் கொடுக்கும் நிலை உருவாவதும் நிச்சயம் நடக்கும். மருத்துவமனைக்குச் செல்லும் ஒருவர் எந்த மருத்துவ முறையை வேண்டுமானாலும் தேர்வு செய்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்.

ஒரு மருத்துவ முறையைப் பயின்றவர் சில நோய்களுக்கு வேறு மருத்துவ முறையைப் பரிந்துரைக்கலாம். குறிப்பிட்ட நோய்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மருத்துவ முறைகளை இணைத்துச் சிகிச்சை தரும் கூட்டு மருத்துவ முறைகள்கூட ஏற்படலாம். இவை நடைமுறைச் சாத்தியம். தேய்வு நோய்க்கு (எய்ட்ஸ்) சித்த மருத்துவமும் ஆங்கில மருத்துவமும் இணைந்த சிகிச்சை முறையை மருத்துவர் தெய்வநாயகம் முதலியோர் மேற்கொண்டு பெருமளவு வெற்றி கண்டதை இங்கு நினைவுபடுத்திக்கொள்ளலாம். கட்டாயக் கிராமப்புற சேவையின் நீண்டகால விளைவாக இவற்றைக் கருதிப் பார்க்கலாம்.

அரசின் உதவித்தொகையோடு கட்டாயக் கிராமப்புற சேவையைப் பெறும் இந்தத் திட்டத்தை இந்திய மருத்துவ முறைகளில் பயிலும் மாணவர்கள் வரவேற்பதற்கு இத்தகைய காரணங்கள் இருக்கின்றன. அதோடு அரசு மருத்துவமனைகள் எல்லாவற்றிலும் தங்களுக்கான பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை வலியுறுத்திச் சாதகமான பதிலை அரசிடமிருந்து பெறவும் அவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நம் முதல்வர் சொன்ன ஓர் உவமை இப்போது நினைவுக்கு வருகிறது. அதைக் கொஞ்சம் மாற்றி இப்படிச் சொல்லலாம். கரண்டியில் உளுந்து வைத்திருப்பவர்கள் அதைக் காத்துக்கொள்ளப் போராடும்போது வெறுங்கரண்டியோடு இருப்பவர்கள் கொஞ்சம் உளுந்து கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

உள்ளடக்கம்

 

 

Google