|
'இர்ரெஸ்பெக்டிவ் தமிழ்தான் எனக்குப் பேச வருங்கறதுனாலதான் இந்தக் கூட்டத்துக்கு
வரத் தயக்கமாயிருந்துச்சு. இருந்தாலும் நண்பர்களோட விருப்பத்தால இங்கே உங்ககிட்டப்
பேச வந்திருக்கேன். என் தமிழைப் பொறுத்துக்கோங்க' என்று தன் மொழிச் சரளம் குறித்த
குறிப்போடு பேச ஆரம்பித்த ஆசி, அன்றைய அற்றைத் திங்கள் கூட்டத்திற்குப்
பார்வையாளர்களுக்கு முன்பாகவே வந்திருந்தார். சிறப்பு விருந்தினருக்குரிய எந்தத்
தோரணையும் சகாக்களும் இல்லாமல் வந்திருந்தது இன்னும் அவர்மீதான மதிப்பைக்
கூட்டியது.
எளிய மக்களின் குடியுரிமை, மனித உரிமை மீறல்கள், பல்வேறு சமூகப் பிரச்சினைகள் என்று
தொடர்ச்சியான சமூக அக்கறையோடு இயங்கிவரும் ஆசியைப் பத்திரிகையாளர் உஷா
அறிமுகப்படுத்திப் பேசினார்.
தனது குடும்பப் பின்னணி, மனித உரிமைச் சட்டங்களின் அடிப்படையிலான செயல்பாடுகள்,
மனித உரிமை மீறல்கள் எவை என்பது குறித்த விளக்கங்கள் என்பதாகத் தன் பேச்சை ஆசி
முறைப்படுத்தியிருந்தார்.
இன்றுவரை சமூக வாழ்வின் இயல்பினைப் பாதிக்கும் பல்வேறு நடவடிக்கைகளையும்
பார்வையாளர்களைப் போலக் கவனித்துக்கொண்டிருக்கும் நமக்கு ஆசியின் உரை
குற்றவுணர்ச்சியைத் தந்தது. அதோடு நமது கையறு நிலையையும் புரியவைத்தது.
பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்காகச் சூறையாடப்பட்ட விளைநிலங்கள், தங்கள்
வாழிடங்களை இழந்த விவசாயிகள், எதிர்த்து நடைபெறும் போராட்டங்கள், போராட்டங்களை
ஒடுக்கும் காவல் துறை நடவடிக்கைகள் என்று மீறப்படும் மனித உரிமைகளின் அடையாளங்கள்
உருவாகிக்கொண்டிருப்பதைச் சுட்டிய ஆசி, சேது சமுத்திரத் திட்டம் குறித்த தெளிவினைத்
தந்தார்.
இத்திட்டத்தால் ஏற்படும் இயற்கைப் பேரழிவு பற்றிப் பேசிய அவர், மன்னார் வளைகுடாப்
பகுதியில் இருக்கும் பவளப் பாறைகளும் கிடைத்தற்கு அரிய ஆயிரக்கணக்கான வகை கடல் வாழ்
உயிரினங்களும் அழிந்துவிடும் அபாயம் இருப்பதைச் சொன்னார். அதோடு இத்திட்டத்தை
எதிர்த்து இரண்டாண்டுகளுக்கு முன்பாகவே பதிவுசெய்யப்பட்ட சூழலியல் அக்கறை
அடிப்படையிலான வழக்கு அறிவியல் பூர்வ ஆய்வுகளோடும் ஆதாரங்களோடும்
சமர்ப்பிக்கப்பட்டும் பலனற்றுப் போனதைக் குறிப்பிட்டார்.
நகரமயமாக்கல் என்னும் பெயரில் எளியவர்களின் வாழ்வியல் ஆதாரங்கள் மறுக்கப்பட்டுப் பல
அடுக்குமாடிக் கட்டடங்களும் தொழில் நிறுவனங்களும் உருவாக்கப்படுவது அம்மக்களின்
வாழ்வுரிமையை மறுதலிப்பதன்றி வேறில்லை என்ற ஆசி, ஐந்தாண்டுத் திட்டங்கள், பசுமைப்
புரட்சிகள், எம்.எஸ். சுவாமிநாதனின் வழிகாட்டுதலில் நடந்த நவீன வேளாண்மை என்று
நாசமாக்கப்பட்ட விளைநிலங்கள் இன்று விவசாயத்திற்குத் தகுதியற்றவையாக மாறி
நகரங்களுக்குக் குடிபெயர்பவர்களாக விவசாயிகளை மாற்றியிருப்பதையும் விவரித்தார்.
வாழத் தகுதியற்ற சூழலிலிருந்து நகரத்திற்குத் தொழில் தேடிவரும் எளிய மக்களின்
வாழ்விற்கு எந்தவிதத்திலும் ஆதரவளிக்கத் தயாராக இல்லாத அரசு, வளர்ச்சி என்னும்
வாசகத்தினுள் மறைத்து வைத்திருப்பது பெரும் பணக்காரர்களின் நலத்தை மட்டுந்தான்.
நீதிமன்றங்கள் சாமானிய மக்களின் உரிமைகளையும் நலனையும் பாதுகாக்கும்
பொறுப்பிலிருந்து தவறிப்போய்விட்டன என்பதற்கு இன்று இந்தியாவில்
நடைபெற்றுக்கொண்டிருக்கும் வாழ்வுரிமை மீறல்கள் சாட்சிகளாய் நிற்கின்றன என்றார்.
நாட்டின் தொழில் துறை வளர்ச்சி சாதாரண மக்களின் நன்மைக்காகப் பராமரிக்கப்படவில்லை.
அவை அதிகார வர்க்கத்தின் பணபலத்தை வலுப்படுத்த மேற்கொள்ளப்படுபவையே என்று தன்
ஆதங்கத்தை உணர்ச்சிபூர்வமாக வெளிக்காட்டினார் ஆசி.
அசுரத்தனமான இந்த வளர்ச்சியில் பயனடையப் போவதும் தொழிற்சாலைகளில் வேலை பெறப்
போவதும் நிச்சயம் இந்த எளியவர்கள் அல்ல. ஆனால், வாழ்வாதாரங்களை இழந்து மறுசீரமைப்பு
ஆணைகளை எதிர் நோக்கிக் காத்திருக்கப்போவது இவர்கள் தான் என்று கூறிய அவர்,
மறுசீரமைப்பு என்னும் பெயரில் குடியிருப்புகளை அவர்களது தொழிலிடங்களிலிருந்து
தொலைவில் அமைத்துத் தந்து கடமை தீர்ப்பது எந்த வகையிலும் நியாயமற்றது என்றும்
குறிப்பிட்டார்.
லயோலா கல்லூரியில் படிக்கும் போதிருந்தே மாணவர் அமைப்புகளுடன் இணைந்து நடத்திய
போராட்டங்கள் இன்று தமது பணிகளுக்கான தொடக்கத்தைத் தந்தன என்பதைச் சொன்ன ஆசி
வழக்கறிஞருக்குப் படித்து வழக்கறிஞராகப் பணியாற்றாதவர். ஆரம்பக் காலத்திலிருந்தே
அவரது பணி மக்களுக்கிடையிலான களப்பணிதான். குடிசைவாழ் மக்களிடமிருந்துதான் பேச்சு
மொழியைத் தான் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்ட ஆசி பின்னர் பார்வையாளர்களின்
கேள்விக்கு விரிவாகப் பதிலளித்தார்.

|