Google   www kalachuvadu.com

 

சேதுக் கால்வாய்: பாதையை மறிக்கும் பாலம்
நவம்பர் 07 இதழில் தேவிபாரதியின் "பாதையை மறிக்கும் பாலம்" கட்டுரை கண்டேன். நமது முதல்வரைப் பொறுத்தமட்டில் அவருக்கு அரசியல்ரீதியாக இறங்குமுகம் ஏற்படும் போதெல்லாம் 'பகுத்தறிவு' ஆவேசம் மிக அதிகமாக அவர் பேச்சில் தென்படும். ராமன் பற்றிய அவரது சமீபத்திய விமர்சனமும் அவ்வாறானதே, நாத்திகம் பேச நமது முதல்வருக்கு எவ்விதத் தார்மீக உரிமையும் கிடையாது. அவர் பேசிவரும் நாத்திகத்தை அவரது குடும்பத்தினரே கடைபிடிப்பதில்லை. நமது முதல்வர் பெரும்பான்மை மக்கள் தெய்வமாக வழிபடும் ஒரு புராண நாயகனை இகழ்வது அவரது தகுதிக்கும் பதவிக்கும் பெருமை சேர்க்காது. நீதிமன்றங்கள் பல மக்கள் போராட்டங்களை வலுக் கட்டாயமாகத் தடை செய்கின்றன எனவும் தேவிபாரதி சொல்கிறார். இதில் முழு உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் முழு அடைப்புக்கான தடை நிச்சயம் அவற்றில் ஒன்றல்ல. எத்தனையோ வழிமுறைகள் இருக்கும்போது, அரசே மக்களின் ஒட்டு மொத்த இயக்கத்தையும் தடைசெய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. திமுகவின் துதிபாடிகளும் சில பத்திரிகையாளர்களுந்தான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டித்துள்ளனர். தன் கட்சி அங்கம் வகிக்கும் ஒர் அரசை எதிர்த்துத்தானே முழு அடைப்பு நடத்துவது கேலிக் கூத்து.

களந்தை பீர்முகம்மதுவின் 'ஊர் விலக்கம் தேவையா?' கட்டுரை படித்தேன். ஜமாத் கூட்டமைப்பிலிருந்து ஒருவரை வெளியேற்றும் அதிகாரம் வேண்டுமானால் ஜமாத்திற்கு உண்டே தவிர பீர்முகம்மது சொல்வதுபோல இஸ்லாத்திலிருந்து ஒருவனை வெளியேற்றும் அதிகாரம் ஜமாத்திற்கும் வேறு எந்த அதிகார அமைப்பிற்கும் கிடையாது. அதை ஒருவன் தனது செயல்பாடுகளால், தானே தீர்மானித்துக்கொள்கிறான் என்பதே உண்மை. இது போன்ற சர்வாதிகாரமான முடிவுகளை ஜமாத் அமைப்பினர் கைவிட வேண்டும். இவர்கள் கூறும் ஞானமார்க்கம் இஸ்லாமியக் கொள்கைகளுக்குப் புறம்பானது.

கே.எஸ். முகம்மத் ஷுஐப்
காயல்பட்டிணம்

சேதுக் கால்வாய்: பாதையை மறிக்கும் பாலம், தேவிபாரதி எழுதிய கட்டுரை படித்தேன். ஆளும் கட்சிக்கு எதிராக எந்தப் பத்திரிகையும் எழுதாத நிலையில், அரசியல் சாராமல் உண்மை நிலையை எழுதியிருக்கிறார். சேதுக் கால்வாய்த் திட்டத்தால் வாழ்வு இழக்கப் போகும் ஏழு லட்சம் மீனவர்கள் சார்பாக நன்றி. இன்று இந்தத் திட்டத்தை மதம் அல்லது அரசியல் காரணமாக எதிர்க்கும் அனைத்து எதிர்க்கட்சிகளும் நாளை ஆட்சிப்பெறுப்பில் அமரும்போது ஆதரிப்பார்கள். காரணம் திட்டத்தின் காரணமாகக் கிடைக்கும்-கிடைத்துவரும் பணம். தரையில் கால்வாய் வெட்டாமல், கடலில் கால்வாய் வெட்டினால் தினசரி எவ்வளவு தொகை கணக்கில் காட்டப்படும்? வரும், போகும் கப்பல்களில் கிடைக்கும் சுங்கத்தீர்வை அளவிட முடியாத செல்வம். ஆகவே, இத் திட்டத்தை ஆளுங்கட்சி ஆதரிக்கிறது. எதிர்க்கட்சி எதிர்க்கிறது. சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு, பவளப் பாறைகள் அழிப்பு, மீன் வளங்கள் குறைவு, பாது காப்புக்கு ஆபத்து, இவற்றையெல்லாம் யாரும் பொருட்படுத்தவில்லை. இது ஒரு லாபகரமான திட்டம் எனப் புள்ளி விவரங்களும் சொல்லவில்லை. தமிழ் நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள மக்களின் வாழ்வு நிலை எப்படி உயரும் என்ற பொருளாதார விளக்கமும் இல்லை.

கடந்து-செல்லும் கப்பல்கள் திறந்துவிடும் கழிவு நீரும் கெமிக்கல் கலந்த நீரும் இனி பாக் ஜலச்சந்தியில் நிறைந்திருக்கும். புதுப்புது வியாதிகள் பரவும். கால்நடைகள், செடிகொடிகள் மரங்கள் இந்த ரசாயனக் கழிவுகளால் பாதிக்கப்படும். அந்தக் கப்பல்களில் என்ன ஏற்றிச் செல்கிறார்கள்? என்ற கேள்விகளையும் கேட்க முடியாது. சுருக்கமாகச் சொன்னால் பாக் ஜல சந்தி சாக்கடையாகும். எதிர்காலத் தமிழ்ச் சமூகம் சீரழியும் என்பதையும் தற்போது மீன்பிடித் தொழில் செய்துவரும் மீனவர்கள் தங்கள் வாழ்வு பறிபோவதால் "கிரிமினல்" குற்றவாளிகளாக மாறுவார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.

ந. ஆவுடையப்பன்
இலத்தூர்.

சுப்ரமணியசாமி-ஜெயலலிதா-பாஜக-உச்ச நீதிமன்றம் எனத் தனி நபர்களையும் அமைப்புகளையும் இந்துத்துவா என்னும் பாசப் பிணைப்பு வலுவாக இணைத்திருப்பதை மீண்டும் நிரூபிக்க சேதுக் கால்வாய் தொடர்பான சர்ச்சை வாய்ப்பளித்துள்ளது. ராமன் தமிழ்நாட்டு இந்துக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி விடமுடியுமென்று மேற்கூறியுள்ள கூட்டணி நம்புகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்த ஜெயலலிதா இப்பொழுதுதான் நமக்குப் பொருளாதாரரீதியாக அத்திட்டம் பயனற்றது எனத் தெரிவதாகக் கூறுகிறார். ஜெயலலிதா கருணாநிதியைத் தன் பரம்பரை எதிரி என்பது பொய்யல்ல. கருணாநிதி என அவர் குறிப்பிடுவது ஒரு தனி மனிதரையன்று. காலங்காலமாய் நிலவிவரும் ஒடுக்கப்பட்டோ ரின் அவலம் ஜெயலலிதாவின் பார்வையில் இன்று கருணாநிதி வடிவில் காட்சிதருகிறது. ராமர் பாலம் என்ற விஷயத்தைக் கையிலெடுத்துக்கொண்டு இந்து மத வெறியைத் தூண்டிவிடுவதில் பாஜகவை மிஞ்சி நிற்கிறார் ஜெயலலிதா.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அவரைப் பதவியைவிட்டு இறக்காமல் விடமாட்டேன் என்று சபதம் கூறிக்கொண்டு அலைந்தவர் சுப்ரமணிய சாமி. பா.ஜ.க. தமிழகத்தில் வேரூன்ற இடம் தந்த பலனை இப்பொழுது கருணாநிதி உணருகிறார். 'சேரிடம் அறிந்து சேர்' என்பதை மறந்த வைகோ திராவிட இயக்க வரலாற்றை நன்கு அறிந்திருந்தும் ஜெயலலிதாவுக்கு வக்காலத்து வாங்கிப் பேசுகிறார். அண்ணா காலத்திலேயே மாணவர் திமுகவின் அச்சாணியாக விளங்கிய வைகோவுக்கு ராமன், கிருஷ்ணன் ஆகியோரைப் பற்றி அண்ணா கூறியது மறந்துவிட்டதா?

உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா விஷயத்தில் எவ்வளவு கனிவாக நடந்துகொள்கிறது என்பதற்கு டான்சி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பே தக்க சான்றாகும். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள முதல்வர் உச்ச நீதிமன்ற ஆணையைக் குப்பைக் கூடையில் கசக்கி எறிந்த இவ்விஷயத்தில் எவ்வளவு விரைவாக ஞாயிற்றுக் கிழமையிலும் செயல்பட்டுத் தடையாணை வழங்குகிறது!

உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு என்றால் இழுபறி! இடைக் காலத் தடை வழங்க மறுப்பு! உச்ச நீதிமன்றம் அறிவிக்கப்படாத சர்வாதிகாரியாக மாறி, வெளிப்படையாகவே இந்துத்துவாவின் காவலனாகச் செயல்படுவது கண்ணுக்குத் தெரியாத விஷயமல்ல!

தெ. சுந்தரமகாலிங்கம்
வத்திராயிருப்பு - 626 132

உள்ளடக்கம்

 

 

Google