|
சச்சிதானந்தன் சுகிர்தராஜா, இங்கிலாந்தின் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்
துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். பின்-காலனியத்துவம் தொடர்பான ஆய்வுக்
கட்டுரைகள் பல எழுதியுள்ளார். ஐந்து தனி நூல்களை எழுதியுள்ள சுகிர்தராஜா, சில தொகை
நூல்களின் ஆசிரியருங்கூட. இவரது நூல்களை ஆக்ஸ்ஃபோர்ட், கேம்பிரிட்ஜ்
பல்கலைக்கழகங்களும் சில அமெரிக்கப் பதிப்பகங்களும் வெளியிட்டுள்ளன. கணையாழியில்
தொடர்ச்சியாக எழுதிய சுகிர்தராஜா, இலங்கையிலிருந்து வெளிவரும் உயிர்நிழல், கூடம்
ஆகிய இதழ்களிலும் சமீபத்தில் எழுதியுள்ளார்.
n
லண்டனிஸ்தான் என்னும் பெயர் இதுவரை உலக விமானநிலையப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
ஆனால், இங்கிலாந்தின் தலைநகருக்கு வலதுசாரி அரசியல்வாதிகளும் விமர்சகர்களும்
எள்ளலாகச் சூட்டியுள்ள பெயர் இது. இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்புகளுக்கும் மதத்
துவேசத்தைத் தூண்டிவிடும் பிரசங்கிகளுக்கும் பழமைவாதத்தைப் பரப்பும்
பள்ளிவாசல்களுக்கும் தற்கொலைக் குண்டுதாரிகளைத் தயாரிக்கும் கேந்திரமாக லண்டன்
விளங்குவதால்தான் இந்த நாமம். பல முஸ்லிம் தீவிரவாதிகளின் புகலிடம் மட்டுமல்ல;
பலதரப்பட்ட இறுக்கமான இஸ்லாமியக் கருத்துகளைப் பரப்ப வசதியான இடமுமாக லண்டன்
கருதப்படுகிறது. இந்த மிதமிஞ்சிய வர்ணிப்பைப் படித்துவிட்டு இங்கிலாந்தில் வாழும்
எல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறவர்கள் என்று நினைக்க வேண்டாம்.
அதேபோலக் கொடூரமான சர்ச்சைத்தன்மையுள்ள இஸ்லாமைப் போதிக்கும் மதவாதிகள் அந்த
மதத்தின் சரியான பிரதிநிதிகளும் அல்ல.
தலைமுறைகளின் வேறுபாடுகள்
இங்கிலாந்துவாழ் முஸ்லிம்கள் சிறுபான்மையினரில் சிறுபான்மையினர். இவர்களின் தொகை
1.6 இலட்சம். இதில் பாதிக்கு மேற்பட்டவர்கள் இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம்
முதலான நாடுகளிலிருந்து வந்த பொருளாதார மேம்பாட்டுக் குடியேறிகள். ஆப்பிரிக்க
நாடுகளிலிருந்து வந்த முஸ்லிம்கள் இரண்டாம் வகையினர். பிறகு ஈராக், பொஸ்னியா,
ஆப்கானிஸ்தான், சேச்சனியா போன்ற நாடுகளிலிருந்து அரசியல் பிரச்சினை காரணமாக
அகதிகளாகச் சமீபத்தில் வந்த முஸ்லிகள். இங்கு வசிக்கும் முஸ்லிம்களில்
பெரும்பான்மையினோர் வறுமைநிலைக்குக் கீழே உள்ளவர்கள். இடம்பெயர்ந்த மற்றவர்கள்
இங்கிலாந்தின் பொருளாதாரத்தில், சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்களைப் போல்
இவர்களால் சாதிக்க முடியவில்லை. படித்த இஸ்லாமியப் பட்டதாரிகளுக்குங்கூட வேலை
கிடைப்பது அரிது. 9/11க்குப் பிறகு பிரித்தானிய அரசு பிரகடனப்படுத்திய பயங்கரவாதத்
தடுப்புச் சட்டங்கள் முஸ்லிம்களையே பெரிதும் பாதிக்கின்றன. தெருக்களில் பொலிசாரால்
திடீர்ச் சோதனைக்குள்ளாக்கப்படுகிறவர்களில் பெரும்பாலோர் இளம் முஸ்லிம்களே.
இந்த இரண்டாம் தலைமுறைப் பிரித்தானிய முஸ்லிம்கள், தாங்கள் அன்றாட வாழ்க்கையில்
அனுபவிக்கும் இன்றைய ஆங்கிலக் கலாச்சாரத்தைவிடவும் இவர்களது பெற்றோரின்
கற்பனையிலிருக்கும் இந்தியத் துணைக்கண்ட கலாச் சாரத்தைவிடவும் ஏழாம் நூற்றாண்டுப்
பாலைவனக் கலாச்சாரத்தினால் கவரப்பட்டிருக்கிறார்கள். ஜிகாத் - புனிதப் போர் -
அர்த்தம் குறித்து அரசியல் விமர்சகர்கள், மத போதகர்களிடையே எப்போதுமே தர்க்கமுண்டு.
பிரித்தானிய முஸ்லிம் இளைஞர்கள் ஜிகாத்தை ஒரு எதிர்ப்புமுறைக் கலாச்சார வாழ்க்கைப்
பாணி என்றே கருதுகிறார்கள். இஸ்லாமுக்கும் ஜிகாத்துக்குமுள்ள நீண்டகாலச் சரித்திர,
இறைசார்ந்த இணைப்பைவிட இந்தப் புனிதப் போர் வன்மை மூலம் ஈடுசெய்யும் சரித்திரப்
பிழைகள், நிவர்த்திக்கும் அரசியல் பாதகங்கள் இவர்களுக்கு வசீகரமானவையாகத்
தெரிகின்றன.
இன்னுமொன்று. உயிர்த் தியாகம் செய்யும் இந்த இளைஞர்கள் படிப்பறியாத, வறுமையில்
வாழ்கின்ற நாகரிகமற்றவர்கள் என்னும் பொதுக்கணிப்பு சரியானதல்ல. இங்கிலாந்தின் முதல்
தற்கொலைப் போராளிகள் என்னும் பெருமையைப் பெற்றுக்கொண்ட ஆசிவ் ஹானிவ், ஒமார் ஷ்ரிவ்
கான், (இருவரும் 2003 தெல் அவிவ் குண்டுவெடிப்பில் பங்கு கொண்டவர்கள்) மற்றும் ஆடி
7, 2005 லண்டன் பாதாள ரயில் குண்டுவெடிப்புக்குக் காரணமாயிருந்த இளைஞர்கள் கொஞ்சம்
வசதியுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மேற்கத்தைய நாகரிகத்தையும் சிந்தனை
முறைகளையும் நவீன வாழ்க்கைப் போக்குகளையும் நன்கு புரிந்துகொண்டவர்கள். ஆங்கிலப்
பள்ளியில் படித்தவர்கள். இவர்கள் ஆங்கில வாழ்க்கையோடு கரைந்துவிடவில்லை என்னும்
பொதுவான கருத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.
இஸ்ரவெலில் உயிர்த் தியாகம் செய்த ஒமார் ஷ்ரிவ் கான் லண்டன் பல்கலைக்கழகத்தில்
கணிதப் பட்டப்படிப்பு மாணவராயிருந்தவர். ஆடி 7 போராளிகளின் தலைவராகக் கருதப்படும்
சித்திக் கான் பல்கலைக்கழகத்தில் படித்தவர் மட்டுமல்ல, பல இன மாணவர் படிக்கும் ஒரு
ஆரம்பப் பள்ளியில் உபாத்தியராக இருந்திருக்கிறார். இங்கிலாந்தின் உன்னதச்
சின்னமாகக் கருதப்படும் உதை பந்தாட்டம், தேசிய விளையாட்டான கிரிக்கெட்டில் எல்லாம்
இவர்கள் பங்குபெற்றிருக்கிறார்கள். முதலாம் தலைமுறை ஏதோ பழைய பஞ்சாங்கங்கள், இன்றைய
இளைஞர்கள் நவீனத்தின் புதிய வார்ப்புகள் என்னும் கணிப்பும் பொருத்தமுடையதல்ல.
ஹானிப் குரேஷி சிறுகதையாக எழுதி, பிறகு திரைப்படமாக வெளிவந்த My Son the Fanatic கைப் பார்த்தால் நான் சொல்வது புரியக்கூடும். இந்தப் படைப்பில்,
முகத்தாடியுடன் சம்பிரதாய ஆடை அணிந்து பழுதில்லாத ஆங்கிலம், ஐரோப்பிய நவநாகரிகங்களை
வெறுப்பவனாக மகன் பரிட் சித்தரிக்கப்படுகிறான். இவனுக்கு மாறாக அவனுடைய தகப்பன்
பார்வேஸ் வெள்ளைக்கார உடை அணிந்து, ஆங்கில இசைப்பிரியனாக, மது அருந்துபவனாக, ஒரு
வெள்ளைத் தாசியுடன் தொடர்புவைத்துக்கொள்பவனாகக் காட்சியளிக்கிறான். இந்தக் கதை
80களின் இறுதியில் ருஷ்டியின் நாவலான சாத்தானின் வசனங்கள் தூண்டிவிட்ட இஸ்லாமிய
எழுச்சியின் பின்னணியை விளக்குவதற்காக எழுதப்பட்டது. ஆனால், இந்தக் கதைப்புலன்
சித்தரிக்கும் தலைமுறை வித்தியாசங்கள் இன்றைக்கும் பொருந்தும்.
இந்தத் தலைமுறை வேறுபாடுகள் மிகவும் சிக்கலானவை. ஒரு சீரான அறிதல் முறையில்
விளக்கம் தருவது கொஞ்சம் கடினம். எட் ஹுசெயின் என்னும் பிரித்தானிய முஸ்லிம் இளைஞர்
பிற்போக்குத்தனத்தையும் பழமைவாதத்தையும் ஆதரிக்கும் பல தீவிரவாத இஸ்லாமிய
இயக்கங்களில் செயல்பாட்டாளராக இருந்து இப்போது மனம் திருந்தி அவருடைய அனுபவங்களை
ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறார். இவர் எழுதிய The Isalmistஇல் புதிய
தலைமுறையின் கடுமையான, இரக்கமற்ற, கோபாவேசமான இஸ்லாமியப் போக்கைப் பார்த்து
ஹுசெயினின் தந்தை கேட்ட கேள்வி, மேற்கில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில்
படித்துக்கொண்டு எதற்காகப் புனிதப் போர், உயிர்த் தியாகம் பற்றிப் பேசுகிறீர்கள்?
ஒரு மதச்சார்பற்ற ஐரோப்பியச் சூழலில், ஜனநாயகச் சுதந்திரங்களையும் நவீனத்தின்
சுகபோகங்களையும் அனுபவித்த இந்த முஸ்லிம் இளைஞர்கள் குண்டுதாரிகளாக மாறியதற்கான
காரணங்களை அறிந்துகொள்ள, அரசியல் விமர்சகர்கள், சமய வியாக்கியானர்கள்,
சர்வகலாசாலைச் சமூகவியல் கல்விமான்களின் கனமான கட்டுரைத் தொகுப்புகளைப் படிக்க
வேண்டியதில்லை. நாளாந்தர அரசியல், சமூக, கலாச்சார நிகழ்ச்சிகளைச் சற்றுக் கூர்ந்து
பார்த்தாலே சொல்லிவிடலாம். நடப்புச் செய்திகளைப் பார்க்கிறபோது, பொதுவாக இரண்டு
காரணங்கள் மேலோங்கி நிற்கின்றன. இவற்றில் ஒருசில உண்மையாயிருந்தாலும் இவற்றை
அப்படியே முழுதாக நம்ப வேண்டும் என்றில்லை. ஒன்று, பிரித்தானிய அரசின் வெளிநாட்டு
அரசியல், இராணுவக் குறுக்கீடுகள், பிளேர் அரசு ஈராக் தாக்குதலுக்கு,
அமெரிக்காவுக்குக் கொடுத்த ஆதரவு, பெருஞ்சேதம் விளைவிக்கும் ஆயுதங்கள் பற்றித்
தயாரித்த தவறான திரட்டுக் கோப்பு, பெரும்பாலான ஆங்கில மக்கள் போருக்குத் தெரிவித்த
எதிர்ப்பை அசட்டை செய்தது. மற்றது முஸ்லிம்களின் உணர்ச்சிகளை உதாசீனம் செய்தது.
இரண்டாம் தலைமுறைப் பிரித்தானிய முஸ்லிம்களை ஆளுமை செய்யும் இஸ்லாம் பழமைவாதம்,
தீவிர, குறுகிய கண்ணோட்டம் கொண்டது. இந்திய உபகண்டத்திலிருந்து குடியேறிய முதல்
தலைமுறை முஸ்லிம்கள் கடைபிடிக்கும் இஸ்லாம் இதிலிருந்து வேறுபட்டது. மூத்த
தலைமுறையில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமின் ஒரு பிரிவான சூஃபி இயக்கத்தைச்
சேர்ந்தவர்கள். இந்த இயக்கம் இறையியல் தாராளத் தன்மையைப் போதிக்கிறது. இவர்கள்
அரசியலைச் சற்று ஒதுக்கியே வைத்திருந்தார்கள். இவர்களுடைய கவனம் அன்றைய இந்திப் பட
நட்சத்திரங்களான மதுபாலா, நர்கிஸ், திலீப்குமார் போன்றோர் மீதே இருந்தது. இன்றைய
இளைய தலைமுறை தீவிர அடிப்படைப் பழமைவாதத்தைப் பிரசங்கிக்கும் மதம் சவூதி
அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இஸ்லாமியச் சிறுபான்மை இயக்கமான
வாஹபிசமாகும். பலராலும் அறியப்படாதிருந்த இந்தச் சிறிய இயக்கம் ஆங்கில முஸ்லிம்
இளைஞர்களின் கவனத்தை ஈர்க்க இரண்டு காரணங்கள். ஒன்று, இவர்களின் மசூதிகளில்
பிரசங்கங்கள் ஆங்கிலத்திலேயே நிகழ்த்தப்படுகின்றன. ஆகையினால், இந்தத்
தலைமுறையினரால் இறையியல் சித்தாந்தங்களை இலகுவில் புரிந்துகொள்ள முடிகிறது. மற்ற
இஸ்லாமியப் பள்ளிவாசல்கள் வெள்ளிக்கிழமை உரைகளை உருதுவில் ஆற்றுவதால் இந்த இரண்டாம்
தலைமுறைக்கு இஸ்லாமிய இறையியல் சூட்சுமங்களைக் கிரகித்துக்கொள்வது அவ்வளவு
சுலபமல்ல. மேலும் இந்தத் தலைமுறை குரானை ஓதக் கற்றுக்கொண்டாலும், இவர்களுக்கு
அராபிய மொழிகூடச் சரிவரத் தெரியாது. இந்த மொழி தெரியாத குறையினால்தான் இறையியல்
விளக்கங்களுக்கும் அராபியப் பதங்களின் மொழிபெயர்ப்புக்கும் முழுக்க முழுக்கத்
தீவிரவாத மதப் பிரசங்கிகளையே சார்ந்திருக்க வேண்டியிருந்தது என்று எட் ஹுசென்
தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தலைமுறையினரிடையே வாஹபிசம் பிரபலமடைய இரண்டாம் காரணம், இந்த மதப் பிரிவு
அறிமுகப்படுத்திய இறையியலும் அரசியலும் கலந்த இஸ்லாமாகும். இந்தச் சக்தி வாய்ந்த,
ஆனால் ஆபத்தான, கலவை தினமும் இன வெறியையும் இனத் தாக்குதலையும் சந்திக்கும்
இஸ்லாமிய இளைஞர்களுக்குக் கவர்ச்சியாகப்படுகிறது. மேற்கத்தைய நவீனத்தின் மகுடமான
மதச் சார்பின்மைக்கு எதிரான ஒரு அறிவியல் கருதுகோளாக வாஹபிசத்தை இளைய தலைமுறையினர்
பார்க்கிறார்கள். வேகமாக மாறிவரும் இந்த உலகில் வாஹபிசம் போதிக்கும் நிரந்தரமும்
நிச்சயமும் இவர்களுக்கு மனத் தேற்றத்தைக் கொடுக்கிறது. பன்முகச் சமூகம், ஜனநாயக
அமைப்புகள் அளிக்கும் சிக்கல்கள், தெரிவுகளுக்குப் (choices) பதிலாக வாஹபிசம்
வலியுறுத்தும் ஒரே மதம், ஒரே கடவுள், ஒரே திரு வெளிப்பாடு இந்த இளைஞர்களுக்குத்
தெய்வரீதியான தெம்பைத் தருகின்றன. புனிதச் சமயச் சடங்குகளான தொழுகைகளைவிட வாஹபிசம்
தூண்டிவிடும் நேரடி அரசியல் ஈடுபாடு இவர்களுக்கு ஆன்மீகச் செயல்பாடாகத் தெரிகிறது.
சுருங்கக் கூறிப்போனால் குழப்பங்கள் நிறைந்த தங்கள் வாழ்க்கையில் வாஹபிசம் மூலம்
ஆங்கிலேய முஸ்லிம் இளைஞர்கள் ஒரு திடகாத்திரமான சுய அடையாளத்தைப்
பெற்றிருக்கிறார்கள்.
மதம் ஒன்று, பார்வைகள் பல
எல்லா மதத்தினரையும் போலவே இங்கிலாந்து முஸ்லிம்களின் இறையியல் பார்வை ஒற்றை
அடையாளம் கொண்டதல்ல. இங்கிருக்கும் முஸ்லிம்களின் சமயப் புலவுப்பதிவுகளை
(perception) மூன்று பிரிவுகளாக எண்ணிக்கையிடலாம். இதில் முதல் குழு
மரபுவாதிகள், மற்றது அடிப்படைவாதிகள். மூன்றாவது நவீனவாதிகள். இந்த மூன்று
குழுக்களின் வட்டங்கள் நான் இங்கே வகைபடுத்தியது போல் அப்படி இறுதியானவையுமல்ல. ஒரு
வட்டத்தில் இவற்றை எளிதில் கட்டுப்படுத்த முடியாது. இவற்றின் முக்கியக் கொள்கைகளைச்
சுருக்கித் தருகிறேன். நான் தரும் சுருக்கம் இவற்றின் இறையியல் முதன்மைகளைச்
சிதைத்துவிடக்கூடும் என்ற தயக்கத்துடனே இதை எழுதுகிறேன். மரபுவாதிகளுக்குக்
குரானிலும் அதைத் தொடர்ந்துவந்த இறையியல் விளக்கங்களிலும் முழு நம்பிக்கையுண்டு.
ஷ்ரியாத் என்னும் இஸ்லாமியச் சட்டமுறை சூழலுக்கும் காலமாற்றங்களுக்கும் ஏற்றவாறு
அதன் மூலக்கோட்பாடுகள் சேதமடையாமல் மறுபரி சீலனைக்கும் மறுவாசிப்புக்கும்
உட்படுத்தப்பட வேண்டும் என இவர்கள் நம்புகிறார்கள். இந்தக் குழுவின் அங்கத்துவத்தை
நிர்ணயிப்பது அவ்வளவு சுலபமல்ல. இதில் மூடுண்ட இஸ்லாத்தைச் சேராத மூத்த, பிந்திய
தலைமுறைகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.
குரானில் மட்டுமே கடவுளுடைய வார்த்தை புதைந்திருக்கிறது என்பது இரண்டாம் வட்டத்துக்
குள்ளிருக்கும் அடிப்படைவாதிகளின் திடமான கருத்து. இந்தத் திரு வார்த்தைகள்
அல்லாவினால் வெளிப்படுத்தப்பட்டன. ஆகையினால், அவை அப்பழுக்கற்றவை. மாறாத்
தன்மையுடையவை, முரண்பாடற்றவை. காலத்தை மீறியவை. நபி நாயகத்திற்குப் பின்னே வந்த இறை
தூதர்களையும் இறையியல் கோட்பாடுகளையும் இவர்கள் பெரிது படுத்துவதில்லை. இன்றைய
வாழ்க்கைத் தேவைகள் முக்கியமாக இஸ்லாமிய நாடுகள் கடைபிடிக்க வேண்டிய அரசியல்
கூறுகள் குரானிலேயே இருக்கின்றன என்பது இவர்களின் தீர்மானமான கருத்து. குரானின்
வசனங்களை நேரடிப் பொருள்தன்மையுடையதாக (literal) இவர்கள் கருதுகிறார்கள்.
அதனால், குரானின் உண்மைத்துவம் பற்றிக் கேள்வி எழுப்புவதை மதக் குற்றமாகப்
பார்க்கிறார்கள். குரானிலேயே எல்லாவற்றுக்கும் விடை இருப்பதனால் நவீன வாழ்க்கை
எழுப்பும் பெண் விடுதலைச் சிந்தனைகள், ஓரின ஈர்ப்பாளர்கள் (gays) கோரும் உரிமை
வேட்புகள், ஜனநாயகம் தரும் வாய்ப்புகள், பல்லினச் சமூகம் ஊக்குவிக்கும்
சந்தர்ப்பங்கள் இவர்களைச் சங்கடப்படுத்துகின்றன. இவர்களுக்கு நவீனமும்
மதச்சார்பற்றமையும் ஏற்படுத்தும் சுதந்திரம் குரானுக்கு எதிரிடையாகவே இருப்பதாகத்
தெரிகிறது. நவீனத்தின் நற்கனிகளான விடுதலை, மதச்சார்பின்மை, திறனாய்வு முறை
இவர்களுக்குக்கெட்ட வார்த்தைகளாகவே தெரிகின்றன. ஒரு மூடுண்ட இஸ்லாமியச் சமூகத்தையே
இவர்கள் நிறுவமுயல்கிறார்கள். தற்கொலைப் போராளிகள் இந்தக் குழுவிலிருந்தே
வந்தவர்கள். Jamat -e- Islami, Hizb-ut- Tahrir ஆகிய
இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களை இந்த வட்டத்துக்குள் சேர்த்துக்கொள்ளலாம்.
மூன்றாம் குழுவினரான நவீனவாதிகள், குரானை அது படைக்கப்பட்ட அரசியல், சமூக,
பொருளாதாரப் பின்புலத்திலேயே பார்க்கவேண்டும் எனக் கருதுகிறார்கள். இவர்கள் நவீன
ஆய்வுக் கருவிகளைத் திருக்குரானுக்கு உட்படுத்தி அதன் உள்ளார்ந்த இறையியல்
செறிவுகளைச் சமகாலத் தேவைகளுக்கும் திருப்பிரதியில் காணப்படும் ஏழாம் நூற்றாண்டு
இறைவாக்கை இன்றைய நடைமுறைக்குப் பொருத்தமானதாக மாற்றம் செய்வதே இவர்களின் நோக்கம்.
தாராளத் தன்மையுள்ள, ஜனநாயகத் தன்மையுள்ள இஸ்லாத்தையே நவீனவாதிகள் அறிமுகப்படுத்த
விரும்புகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் பொது அறிவுஜீவிகள், பல்கலைக்கழக
சம்பந்தமுடையவர்கள். இவர்களில் முக்கியமானவர்கள் டாரீக் ராம்தான், சீயாயூதீன்
சார்தார். இவர்கள் ஊக்குவிக்கும் குரானின் மறுவாசிப்பு திருமறையை இன்னுமொரு சாதாரண
நூலாக்கிவிடுகிறது என்பது மற்ற இரு குழுவினர் இவர்கள்மேல் செலுத்தும் குற்றச்
சாட்டாகும்.
இந்தக் கட்டத்தில் அடிப்படைவாதம் பற்றி ஒரு சிறிய கருத்து. அடிப்படைவாதம் முதலில்
கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கத்துடன் ஆரம்பமாகி இப்போது ஒரு பொதுக் கருத்தாடலாக
மற்ற மதங்களிடையேயும் பரவலாகி, உபயோகத்திலிருக்கிறது. கிறிஸ்தவத்தில் நேர்ந்த
மறுமலர்ச்சி இயக்கம்போல் இஸ்லாத்திற்கும் நடைபெற வேண்டும் என்னும் எண்ணம் பரவலாகக்
காணப்படுகிறது. கிறிஸ்தவ மறுமலர்ச்சி ஏற்பட்ட சூழல் வேறு. இன்றைய இஸ்லாம்
செயல்படும் களம் வேறு. இந்த மறுமலர்ச்சிப் பேச்சுக்குப் பின்னால் மறைந்திருக்கும்
உப செய்தி: கிறிஸ்தவ மறுமலர்ச்சியின் விளைவாக ஐரோப்பாவிலிருந்து கொடுமைகள், மானிட
அக்கறையின்மைகள், இரக்கமின்மைகள் எல்லாம் முற்றுமாக அழிந்துவிட்டன. இதே மறுமலர்ச்சி
இஸ்லாத்தில் செயல்படுமானால் அந்த மதமும் தாராளத் தன்மையுள்ள, வன்முறையற்ற, மேற்கைச்
சார்ந்த நவீன மதமாக இன்றையப் பன்முகச் சமூகத்தில் இடம்பெற வாய்ப்பு உண்டு. இதில்
மறைக்கப்பட்ட செய்தி என்னவென்றால் மக்களை அதிகம் பாதித்து, அக்கினைக்குள்ளாகிய
சென்ற நூற்றாண்டின் தீய இயக்கங்களான பாசிசம், நாசிசம், கம்யூனிசம், காலனித்துவம்
ஆகியவை கிறிஸ்தவ ஐரோப்பாவின் சாதனைகளே. இந்தக் கருத்தாடல்களின் குறுக் கீட்டினால்
நேரிட்ட இலட்சக் கணக்கான மனிதச் சாவுகள், மானிட இடப்பெயர்ச்சிகள், இனத்
தூய்மைப்படுத்தல்கள், கலாச்சாரக் கலவைகள், நில ஆக்கிரமிப்புகளுக்குப் பின்னால்
ஐரோப்பியச் சித்தாந்தத்தின் தூண்டுதல்கள், கிறிஸ்தவ மறுமலர்ச்சியின் குணாம்சங்களின்
அடையாளங்களைப் பார்க்கலாம். ஐரோப்பிய மறுமலர்ச்சி இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு
மாற்று மருந்தல்ல.
தற்கொலைப் போராளிகள், உயிர்த் தியாகம்: சில தகவல்கள்
தற்கொலைக் குண்டுதாரித்தனம் இஸ்லாம் சமயத்துக்கு மட்டுமுள்ள ஏகபோக உரிமையல்ல. மற்ற
மதங்களிலும் தற்கொலைக் குண்டுதாரிகள் இலட்சிய முன்னெடுத்துக்காட்டாக, போஷித்து,
வளர்க்கப்பட்டுக் கொண்டாடப்படுகிறார்கள். சமய இலக்கியங்களில்
கௌரவிக்கப்படுகிறார்கள். யூதரின் பழைய ஏற்பாட்டில் சித்தரிக்கப்பட்டிருக்கும்
சிம்சோனை உலகின் முதலாம் தற்கொலைக் குண்டுதாரி எனக் கூறலாம். அவனுக்கு ஏற்பட்ட
அவமானத்தைச் சீர்செய்ய, வேடிக்கை பார்க்க வந்திருந்தவர்கள் கூடியிருந்த கட்டடத்தின்
தூண்களைப் பலமாகச் சாய்த்து அவையிலிருந்த ஏறக்குறைய மூவாயிரம் அப்பாவி ஆண்களையும்
பெண்களையும் சிம்சோன் கொன்றுபோட்டான். இஸ்லாமியக் குண்டுதாரிகள் உயிர்த்
தியாகத்தைப் புனிதக் கடமையாகப் பார்க்கிறார்கள். இந்தக் கருத்து கிறிஸ்தவத்திலும்
உண்டு. கிறிஸ்தவ இரத்தச் சாட்சிகளின் தியாகங்கள் மற்றும் அவர்களுடைய துணிச்சலையும்
பதிவுசெய்யும் நூல் The Acts of Christian Martyrs. இந்த
முதல் கிறிஸ்தவத் தியாகிகள் தங்கள் உயிரைத் துறக்க முன்னம் அளித்த சாட்சியங்களில்,
இந்த உலகைவிடப் பரலோக இராச்சியமே சிறந்தது என்னும் எண்ணமே இவர்களிடத்தில்
காணப்பட்டது. இதே கருத்தை இன்றைய இஸ்லாமியத் தற்கொலைக் குண்டுதாரிகளின் மரணத்திற்கு
முன் பதிவுசெய்யப்பட்ட இறுதி உரையில் பார்க்கலாம். தற்கொலைச் சாட்சியும் ஆபிரகாமிய
நம்பிக்கைகளான (Abrahamic faith) யூத, கிறிஸ்தவ, இஸ்லாத்தாலும் ஒரே
இறைக் கொள்கையுடைய (monotheistic) மதத்தினருக்கு மட்டுமே உரிய
தனிப்பிரத்தியேகச் செயலல்ல. வியட்னாம் போரில் புத்தகுரு உயிர்த் தியாகம் செய்ததால்
இந்தக் கருத்துப்பிழையானது என்பது நிரூபணமாகிறது.
உயிர்த் தியாகம் சமயங்களினால் மட்டும் ஊக்குவிக்கப்பட்டதல்ல. மதச் சார்பற்ற
இயக்கங்களாலும் தூண்டுவிக்கப்படுகிறது. சட்டென்று நினைவுக்கு வரும் உதாரணம், ஈழ
விடுதலைப் புலிகள். இவர்களின் தற்கொலைக் குண்டுதாரிகள் இந்து சமய உணர்வினால்
உந்தப்பட்டு உயிர்த் தியாகம் செய்ய முன்வரவில்லை. ஈழத் தேசியத்தின் முக்கிய நோக்கு
தமிழ்மொழிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் ஏற்பட்ட இழப்புகளை, பாதகங்களை
நிவர்த்திசெய்வதே. அதுபோல் 80களில் லெபனானில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் உயிர்த்
தியாகம் செய்தவர்கள் பெரும்பாலும் பொதுவுடைமை வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்.
உயிர்த் தியாகத்திற்கும் மதங்களுக்குமிடையே இருக்கும் தொடர்பு அரசியல்வாதிகளும்
விமர்சகர்களும் ஊடகங்களும் சொல்லுவதுபோல் அவ்வளவு இறுக்கமானதல்ல. உயிர்த்
தியாகத்திற்குத் திருமறைப் பிரதிகள் மட்டுமே பொறுப்பல்ல. எப்பொழுது அன்னிய
ஆட்சிக்குள் மக்கள் அகப்படுகிறார்களோ அப்போதே உயிர்த் தியாகத்திற்கு
வித்திடப்படுகிறது. இது பழைய சாம்ராஜ்யங்களுக்கும் இன்றைய பேரரசுகளுக்கும்
பொருந்தும். பெரும்பாலான கிறிஸ்தவ இரத்தச் சாட்சிகள் ரோம சாம்ராஜ்ய நாள்களிலேயே
உருவாகினார்கள். 1980-2003 இடையே முஸ்லிம்கள், ஈழத் தமிழர்கள், சீக்கியர்கள்,
கூர்த்துகள் மேற்கொண்ட குண்டுவெடிப்புகள் பற்றி Robert A. Pape, Dying to Win என்னும் நூலில் ஆராய்ந்திருக்கிறார். அவர் வந்தடைந்த முடிவு
இன்றைய பொது அறிவுக்கு எதிர்மாறாயிருக்கிறது. இந்த ஆராய்ச்சியை ஆணையிட்ட அமெரிக்க
அரசின் அரசியல் விவரிப்புக்கு (political narrative) முரணாக
இருக்கிறது. மத அடிப் படைவாதத் தூண்டுதலைவிடக் குண்டுதாரிகளின் தற்கொலைக்கு ஒரு
நாட்டை அந்நியர் ஆக்கிரமிப்புச் செய்வதே காரணம் என்கிறார். இஸ்லாமிய
அடிப்படைவாதத்திற்கும் உயிர்த் தியாகத்திற்குமுள்ள தொடர்பு திட்டமாக வகுத்துரைக்க
முடியாதென்கிறார். இந்த வன்முறைச் செயல்களுக்கு மதங்கள் உடந்தையாய்
இருக்காவிட்டாலும், மதம் மிகப் பக்குவமாக, தந்திரமாகப் பயன்படுத்தப்படுகிறது.
பேப், குண்டுதாரிகளின் தற்கொலைக்கான காரணங்களை விசாலமான பூலோக அரசியல்
கண்ணோட்டத்தில் பார்வையிடவேண்டும் என்கிறார். இந்தத் தற்கொலைப் போராளிகள்
உருவாகுவதற்கு இவர் தரும் இரண்டு காரணங்கள். ஒன்று, அன்னியத் துருப்புகள் இன்னொரு
நாட்டை சுவாதீனம் செய்தல். மற்றது, தோற்ற நாட்டில் ஜெயித்தவர்கள் தம் பலத்தை
நிலைநாட்ட நிறுத்தப்பட்ட இராணுவத்தினர் அன்னிய மதத்தைச் சார்ந்தவராக இருத்தல்.
பேப்பின் கணிப்பு இன்றைய ஈராக்குக்குப் பொருந்துகிறது. அமெரிக்கா ஈராக்கை
ஆக்கிரமித்துக்கொண்டது. அந்த நாட்டை ஆதிக்கம் செய்யக் குடிவைக்கப்பட்டிருக்கும்
இராணுவப் படையினரில் பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவர்கள். இங்கிலாந்திலும்
ஐரோப்பாவிலும் பாலியிலும் நடந்த குண்டுவெடிப்புகள் பேப்பின் பகுத்தாய்வுடன்
ஒத்துப்போகின்றன.
தற்கொலைப் போராளிகள் பற்றி ஒரு முடிவான சித்திரம் இல்லை. ஆரியல் மெராரி என்னும்
தெல் அவிவ் பல்கலைக்கழக ஆய்வாளர் ஐம்பதுக்கும் மேற்பட்ட தற்கொலைப் போராளிகளின்
வாழ்க்கைப் பின்னணியைக் கூர்ந்து படித்தபோது, இவர்களிடையே ஒரு பொதுவான வடிவமைப்பைப்
பார்க்க முடியவில்லை என்கிறார். இவர்களை நாங்கள் முன்கூட்டியே தீர்மானித்திருக்கும்
தற்கொலைக்காரப் படிவார்ப்புகளுக்குள் (sterotype) இணைக்க முடியாது. ஆரியல்
மெராரி ஆராய்ந்த தற்கொலைப் போராளிகளில் ஒருவருக்குமே மூளைப் பிசகு இல்லை. மற்றும்
இவர்களில் யாருக்குமே ஆளுமைப் பிளவும் இல்லை. ஆரியல் மெராரியின் ஆய்வு தெரிவித்த
மற்ற சம்பவங்கள், போராளிகளிடையே காணப்பட்ட இரண்டு நெருக்கமான ஒற்றுமைகள். ஒன்று,
இவர்கள் எதிர்ப்பு இயக்கங்களில் உறுப்பினராகச் சேர்க்கப்பட்ட விதம். மற்றது,
அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஆயுதப் பயிற்சி. இவர்கள் மேற்கத்தைய நாடுகள்மீது
வைத்துள்ள ஆவேசத்திற்கும் பகைமைக்கும் காரணம் குழு மனப்பான்மை ஏற்படுத்தும் உளவியலே
தவிர இவர்களிடம் காணப்படும் தனி ஆள் தன்மையல்ல.
தற்கொலைப் போராட்டத்தை ஒற்றை வார்த்தையால் பயங்கரவாதம் என்று வர்ணிப்பதும்
பயங்கரவாதம் இஸ்லாம் மதத்தின் மூலக்கருத்து எனக் கூறுவதும் அரசியல் சோம்பேறித்தனம்
மட்டுமல்ல விஷமத்தனமுங்கூட. இன்று பயங்கரவாதத்தைப் பறைசாற்றும் இஸ்லாம் அல் கொய்தா
போன்ற இயக்கங்களினால் பணயக்கைதியாக்கப்பட்டிருக்கிறது.
போரும் சமாதானமும் சமயமும்
இப்பொழுது ஒரு புதிய சொல் மேற்கத்தைய அரசியல் அகராதியில் விஷமத்தனத்துடன்
புகுத்தப்பட்டுள்ளது. அந்தச் சொல் 'இஸ்லாமிசம்'. இது ஒரு பாதகமான வார்த்தை. இந்தச்
சொல்லுக்குள் பதுங்கியிருக்கும் உபசெய்தி: எவ்வாறு மற்ற இசங்களில் ஒன்றான
கம்யூனிசம் உலகைத் தன் ஆட்சிக்குக் கீழ் கொண்டுவர முற்பட்டதோ அதையே இப்பொழுது
இஸ்லாமும் செய்ய முயல்கிறது. இந்த வார்த்தையை உபயோகிப்பதில் இன்னுமொரு
சங்கடமுண்டு. இஸ்லாம் ஒரு மதமாகவே அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால், அந்த
மதத்திற்குப் பலம் தரும் சமூக, அரசியல், பொருளாதார, கலாச்சார விஷயங்கள்
பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. இந்தத் தீவிர எண்ணத்தை ஸ்திரப்படுத்த குறுகிய
பார்வையுள்ள இஸ்லாமிய இயக்கங்களும் உடந்தையாயிருக்கின்றன. உதாரணத்திற்கு "உலகை
இஸ்லாமியப்படுத்தி இஸ்லாமியத் தேசியத்தை (caliphate) நிறுவுவோம்,
திருக்குரானே இறுதித் திரு வெளிப்பாடு, 10, டவுனிங் தெருவில் இஸ்லாமியக் கொடி
பறக்கும்" என்னும் பயனற்ற வார்த்தைகள் இந்த இன, சமய, பதற்ற, நெருக்கடியான நாள்களில்
பொறுப்பானவையல்ல.
எல்லா மத அடிப்படைவாதிகளும் தங்கள் மதத்தினரைத் தங்கள் மேலாண்மையை வலியுறுத்தவும்
தம் பிடியில் வைத்திருப்பதற்கும் அவர்கள் மதத்தின் மேல் பூரண நம்பிக்கையை
ஏற்படுத்துவதற்கும் கூறும் உபாயம் நாங்கள் உங்களைக் கலப்படமற்ற, உண்மையான, அசல்
மூலத்திற்கு இட்டுச் செல்லுகிறோம் என்பதே. 'தூய இந்து', 'மெய்யான கிறிஸ்தவம்',
'பரிசுத்த இஸ்லாம்', 'சுத்தமான புத்தமதம்' என்றெல்லாம் ஒன்றுமில்லை. மதங்கள்
பலதரப்பட்ட அர்த்தங்களைக் கொண்டுள்ளவை. மதங்களும் கலாச்சாரம்போல் காலத்திற்கும்
சூழலுக்கும் ஏற்றவாறு உருவாகுபவை, விருத்தியடைபவை; மாறுபடுபவை. இந்த மாற்றுத்
தன்மைதான் மதங்களின் பெரும் பலம் என்றும் கூறலாம்.
குண்டுவெடிப்புகள் நடைபெறும்போதெல்லாம் எல்லா மதக் குருக்களும் ஊடகங்களுக்குத்
தரும் பேட்டிகளில் அலுப்புத்தட்டும்வரை கூறுவது எங்கள் சமயம் சமாதானத்தையே
போதிக்கிறது. இதில் ஓரளவுக்குத்தான் உண்மை இருக்கிறது. எல்லாச் சமயப் புனிதப்
பிரதிகளிலும் சமாதானத்தையும் சண்டையையும் ஊக்கமளிக்கும் வாசகங்களைப் பார்க்கலாம்.
பழைய சரித்திரத்தையும் மற்றும் சமீபகாலச் சில சம்பவங்களையும் பார்க்கிறபோது,
மதங்களின் தவறான பங்களிப்பைப் பார்க்கலாம். இடைக்காலச் சிலுவைப் போர்கள் கிறிஸ்தவ
ஆளுமையை நிலைநாட்டவே தொடங்கப்பட்டன. இன்று அமெரிக்காவில் கருச்சிதைவு
மருத்துவமனைகளையும் அதில் வேலை பார்ப்போரையும் குண்டுவெடிப்புக்குள்ளாக்குவதற்குக்
கிறிஸ்தவ வேதாகமத்தின் இறைவாக்கியங்களே உடந்தையாயிருக்கின்றன.
இஸ்லாமியப் புனிதப் போரின் விளைவாகச் சொட்டிய இரத்தம் அந்த மதத்தின் பெயராலேயே
செய்யப்பட்டது. இன்றுங்கூட அல் கொய்தா தன் மேலாதிக்கத்தைப் பலப்படுத்தவும்
தற்கொலைப் போராளிகளின் உயிர்த் தியாகத்தை நியாயப்படுத்தவும் திருக்குரானையே
துருவித்துருவிப் பயன்படுத்துகிறது. பாலஸ்தீனப் பிரச்சினையில் இரு தரப்பினரின்
கையில் துப்பாக்கி இருக்கிறது. ஆனால், மற்ற கையிலும் இருக்கும் வஸ்து
துப்பாக்கியைவிட அபாயகரமானது. யூதக் குடியேறிகளின் கையில் பழைய ஏற்பாடு, பாலஸ்தீனப்
போராளிகளின் கையில் திருக்குரான். அமைதியும் சகிப்புத்தன்மையும் விசால நோக்குமே
தங்கள் மதத்தின் முக்கியக் கருதுகோள் என்று ஓயாமல் முழங்கிவரும் இந்துக்கள்
அயோத்திய மசூதியைத் தரைமட்டமாக்கியது இந்து மதத்தின் பெயரிலேயே. கருணை, இரக்கம்,
அகிம்சை பற்றிப் பேசும் பௌத்த மதங்கூட இன்று ஈழத்தமிழர்களின் உரிமைகளைத் தடுக்க
வீராப்புமிக்க வெறிகொண்ட மதமாக மாறியிருக்கிறது.
சமயக் காவியங்களை உபயோகிப்பதில் சங்கடம் என்னவென்றால் திருமறை வசனங்கள் ஒற்றைக்
கருத்துக்கொண்டவையல்ல. பல கருத்துச்செறிவுகள் மட்டுமின்றி முரண்பாடான செய்திகளும்
அவற்றில் உண்டு. இதில் எந்தச் செய்தி முன்னுரிமை பெறுகிறது என்பதில் முக்கியப்
பங்காகத் திகழ்வது பொருள் விளக்கம் கூறுவோரின் அரசியல் அக்கறையும் நோக்கமுமேயாகும்.
இந்தப் பரிசுத்தப் பிரதிகள் ஏற்படுத்தும் இறையுணர்வைவிட விளக்க உரையாளர்களின்
அந்தஸ்தும் அவர்கள் அவையோர்மீது கொண்டிருக்கும் பிடிப்பும் அவர்கள் தங்கள் சொந்த
விருப்பத்திற்கு ஏற்றவாறு திருமறை வசனங்களுக்குத் தரும் பொருள்கோளியலே மேலோங்கி
நிற்கிறது.
ஒன்று துலாம்பரமாகத் தெரிகிறது. இன்றைய அடிப்படைவாத மோதல்களிடையே திருமறைகளில்
தீர்வை எதிர்பார்ப்பது அவ்வளவு சுலபமல்ல. இன்றைய இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின்
பிரச்சினைகளுக்கு எப்பொழுதோ எழுதிய பிரதிகளில் விடை காண முடியாது. குறிப்பிட்ட
காலகட்டத்தில் வாழும் மக்கள் தங்கள் கலாச்சாரச் சூழலில் அனுதின வாழ்வினை
நடத்தியபோது, சந்தித்த மகிழ்ச்சிகள், துன்பங்கள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புகளிடையே
எவ்விதமாகத் தங்கள் இறையுணர்வையும் கடவுளையும் புரிந்துகொண்டார்கள் என்பதன்
தொகுப்பே திருமறையாகும். ஆகையினால், திருமறையின் செய்திகள் காலத்தையும் நேரத்தையும்
மீறினவையல்ல. அவற்றிற்குக் கட்டுப்பட்டவையாகும். ஆதலால், திருமறைக்கு முன்னால்
வணக்கத்துடன் தலைகுனிந்து நிற்க வேண்டுமென்பதில்லை. இந்தப் பிரதிகளுக்குப் பின்னால்
புதைந்துகிடக்கும் மனித வேட்கைகளை அறிந்துகொள்வதுதான் முக்கியம். திருமறை
வாக்கியங்கள்மீது அசாத்திய நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதில்லை. இந்த வாக்கியங்கள்
உருவான மனித அனுபவத்துடன் நம்முடைய சமகால மனிதத் தேவைகள் ஒத்துப்போகுமா என்று
பார்ப்பதுதான் முக்கியம். ஆகையினால், ஒரு காலகட்டத்தில் எழுந்த இறைவாக்குகளை இன்றைய
நம்முடைய மாறுபட்ட சூழ்நிலைகள் எழுப்பும் கேள்விகளுக்கு விடையாகத் திணிக்க
வேண்டியதில்லை. சமயப் பிரதிகள் பிரச்சினைக்குத் தீர்வல்ல. அவையே
பிரச்சினைக்குரியவை. இன்றைய தடுமாற்றத்திற்கும் திண்டாட்டத்திற்கும் இந்தத்
திருமறைகளே ஒருவிதத்தில் காரணம் எனச் சொல்லலாம்.
கடைசியாக இப்படியான கட்டுரைகள் தீவிரவாதிகளுக்கு உபதேசங்கள், புத்திமதிகளுடன்
முடிவடையும். அப்படிக் கிருபானந்தவாரியார் பாணியைப் பின்பற்றாமல் எட் ஹுசெயினின்
The Isalmist நூலில் படித்த ஒரு வசனத்தை மேற்காட்டி இந்த வியாசத்திலிருந்து
விடைபெறலாம் என்று நினைக்கிறேன். மொழிபெயர்ப்பில் அவர் சொல்லவந்த முக்கியக் கருத்தை
இழந்துவிடாதிருக்க ஆங்கிலத்திலேயே தருகிறேன். தூய்மைத்துவத்தைக்
குறிக்கோளாகக்கொண்டு, மாறாத்தன்மையான இரக்கமற்ற இஸ்லாமைக் கடைபிடித்து அதை
அப்பாவித் தொழுகையாளர்கள், கபடமற்ற மாணவர்கள்மீது கட்டாயப்படுத்திய அந்த நாள்களைப்
பற்றி யோசிக்கும்போது, ஹுசெயின் இப்படி எழுதுகிறார்: 'As an Isamisist I have lost
my ability to smile.' இன்னுமொரு முறை இந்த
வாக்கியத்தை வாசியுங்கள். வாழ்க்கையை ரசிக்கத் தொடங்கிக் கொஞ்சம் சிரிக்கப்
பழகிக்கொண்டால் உலகமே சற்று வித்தியாசமாகத் தெரியும் என்று நினைக்கிறேன்.
மும்முரமாகப் போராட்டத்தில் ஈடுபாடுகொண்ட தற்கொலைப் போராளிகளாக இருந்தாலுங்கூட. |