Google   www kalachuvadu.com

 

கடிதங்கள்
'செல்லும் கொல்லும்' சரியான தருணத்தில் சொல்லப்பட்ட தலையங்கம். எங்கள் கல்லூரியின் திடீர் ஆய்வில் பிடிபட்ட செல்போன்களின் எண்ணிக்கை எண்பத்திரண்டு. புறக் கணிக்க முடியாத நகர்ப்புறப் பள்ளி மற்றும் கல்லூரிகளின் பிரச்சினை இது. தவறுகளைச் சுட்டிக் காட்டிச் சரியான தீர்வு சொல்வது இதழியல் கடமை. தலையங்கத்திற்குப் பாராட்டுகள். இதழ்களின் கட்டுரைகளும் யுவன் சந்திசேகரின் 'உள்ளோசை கேட்பவர்கள்' சிறுகதையும் நன்று.

எம். சிவபாரதி
தென்காசி.

'செல்லும் கொல்லும்' தலையங்கம் செல்கள் மட்டுமல்ல அவற்றுக்கானடவர்களும் கொல்லும் என்பதை எடுத்துரைத்தது. அரசும் கவனம் செலுத்திப்பாதிப்பை ஏற்படுத்தும் இடங்களில் உள்ள டவர்களை உடனடியாக அப்புறப்படுத்திட ஆவனசெய்ய வேண்டும். மாணவர்கள் பள்ளி, கல்லூரி வளாகங்களில் செல் பயன்படுத்துவது அவர்களது உடலுக்கும் உள்ளத்திற்கும் கேடு என்பதை உணர வேண்டும். லெஸ்ஸிங் நோபல் பரிசு பெற்றிருப்பது முறையான பள்ளிப் படிப்புக்கும் படைப்புத் திறனுக்கும் தொடர்பு இல்லை என்பதை உணர்த்தியது. பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட எடிசன் ஆயிரத்திற்கும் மேலான அறிவியல் படைப்புகளைக் கண்டுபிடித்தார். தமிழகத்தின் நலன் சார்ந்த சேதுக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். இராமர் கோயில் எடுபடாத நிலையில் இராமர் பாலத்தைக் கையில் எடுத்திருப்பது பலன் அளிக்காது என்பதை பிஜேபி உணர வேண்டும்.

இரா. இரவி
மதுரை.

கல்வி நிலையங்களில் செல்போன் பயன்படுத்துவதில் உள்ள அபாயங்களைத் தகுந்த ஆதாரங்களுடன் தலையங்கம் பேசியது. காலத்திற்கேற்ற கருத்துரைகள்.

சேதுக் கால்வாய் குறித்த தேவி பாரதியின் கட்டுரை இதில் பொதிந்து கிடக்கும் பல்வேறு சிக்கல்களின் உண்மை நிலையை மிகத் தெளிவாக விளக்கியுள்ளது. வேறு யாரும் இதைவிட முழுமையாக எழுத முயற்சித்ததில்லை.

அங்கோர் வாட், ஒரு வரலாற்று அதிசயத்தைப் பற்றிய பி.ஏ. கிருஷ்ணனின் பயனுள்ள சரித்திரச் சான்றுகள் மிகுந்த பயணக் கட்டுரை. இந்தியர்கள் இங்குள்ள கலை மரபுகளையே பொருட்படுத்தாதபோது இது குறித்து நாம் கவலைப்படுவதில் அர்த்தமில்லை.

ஏ.வி. வலம்புரி நாகராஜன்
ஈரோடு.

உலக அபிப்ராயங்களை மாற்றக் கூடிய வல்லமை சிலருக்கு வாய்ப்பதுண்டு. ப. சிங்காரம் பற்றி அவருடைய 'எழுத்து' வாசகர் கடிதத்தை வெளியிட்டு ஒரு mythஐ கண்ணன் உடைத்துவிட்டாணர். புயலிலே ஒரு தோணி ப. சிங்காரத்தை நான் 1989ஆம் ஆண்டு மதுரை Y.M.C.A.யில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த போது நம் தளத்துப் படைப்பாளிகள் யாரையும் அவர் வாசித்திருக்கவில்லை என்னும் செய்தியை அறிய நேர்ந்தது. ஒருவேளை அதனால்கூட 'புயலிலே ஒரு தோணி' போன்ற சாதனை அவருக்குச் சாத்தியமானதோ என்னவோ? எனக் குறிப்பிட்டு இந்த விஷயம் கதை சொல்லி 18, பதிவுகள், திண்ணை இதழ்களில் பதிவாகியிருக்கிறது. இப்படி நான் எழுதியது 'பிழை'யென்று இப்போது உள்ளங்கை நெல்லிக் கனி எனத் தெளிவாகிவிட்டது.

ஆனால், 1989ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நானும் என் நண்பர் சரவணனும் (தற்போது கரூர் வைஸ்யாபேங்க் மேனேஜர்) மாலை நேரத்தில் அவரை மதுரை Y.M.C.A. ஹாஸ்டலில் சந்தித்தபோது ப. சிங்காரம் தன்னைத் தமிழ் சமகால நவீன எழுத்துடனும் கடந்தகால இலக்கியச் சூழலுடனும் சம்பந்தமேயில்லாதவராகத்தான் காட்டிக்கொண்டார். இது ஏன் என்று இப்போது குழப்பமாக இருக்கிறது. தன்னுடைய படைப்புகளைப் பிரபலப்படுத்தியவர்கள் என்பதற்காக, சிட்டியையும் சி. மோகனையும் நன்றியுடன் நினைவுகூர்ந்தார். மற்றபடி 'நான் தினத்தந்தியிலே வேலை பார்த்தவன், உங்க இலக்கிய உலகம் பற்றி எனக்கு என்ன தெரியும்?' என்ற அவர் நாங்கள் 'புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன், சு.ரா, அசோகமித்திரன், கி.ரா' என்று உற்சாகமாகப் படைப்பாளிகள் பற்றியும் நல்ல படைப்புகள் பற்றியும் பேசியபோது அணை போட்டார்.

R.P. ராஜநாயஹம்
திருப்பூர்.

நவம்பர், 2007 இதழில் பாகிஸ்தான் பற்றிய இரவிக்குமார் கட்டுரை தொடர்பாகச் சில கருத்துகள்:

பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் ஜனநாயகம் ஏன் வெற்றிகரமாகச் செயல்பட இயலவில்லை என்பதையும் இதனோடு இணைத்துப் பார்க்கலாம். இஸ்லாம், கிறிஸ்துவம், இந்து மதம் உள்ளிட்ட அனைத்து மதங்களும் வெவ் வேறு காலகட்டங்களில் அதிகாரத்துடன் இணைந்துதான் தம் ஆதிக்கத்தை நிலை நிறுத்தின என்பதே வரலாறு. ஆனால், சிலுவைப் போருக்குப் பின்னால் மேற்குலகில், அரசு அதிகாரம் மதத்தைத் தன்னிடமிருந்து விலக்கிச் செக்குலரிசம் (secularism) என்னும் புதிய வழிமுறையில் அரசியல் செயல்பாடுகளை அமைத்துக்கொண்டது. ஆனால், இஸ்லாம் மதத்தின் பூகோள மையமான அரபு உலகு, இந்தப் போக்கை மேற்குலகின் தனித்த போக்காகக் கருதி, செக்குலரிசத்தைத் தனது அரசியலமைப்புகளில் கடைபிடிக்காமல் போனதுதான் அவற்றின் முக்கியக் காரணம்.

பாகிஸ்தானின் இராணுவ ஆட்சி என்பது ஒரு தனித்த பிரச்சினை. இந்தியா போன்ற பெரிய தேசத்தின் பகையில் பிறந்த தேசம் பாகிஸ்தான். "பெரிய தேசத்துடன் போட்டியிடும் வலிமையான இராணுவம்" என்னும் கருத்தியல் இராணுவம் பெரிய அதிகாரமையமாக மாறியதற்கு ஒரு காரணம். குறுகிய காலத்திற்குள் முகமது அலி ஜின்னா இறந்தது, அவரது முஸ்லீம் லீக் போன்ற மக்கள் செல்வாக்குள்ள வேறு கட்சிகள் தோன்றாதது ஆகியவற்றை ஜனநாயகம் உருவாகாததற்கான காரணங்கள் எனச் சொன்னாலும் ஜனநாயக ஆட்சி முறைகளின் பெரிய அளவிலான ஊழல், அதன் மீதான மக்கள் அதிருப்தி ஆகியனவும் துணைக் காரணங்கள்.

தாலிபான் போன்ற மத அடிப்படைவாத அமைப்புகளின் இருப்பிற்கும் வளர்ச்சிக்கும் தீனி போடுபவை அமெரிக்கா என்னும் பெரிய ஜனநாயகத்தின் இஸ்லாம் உலகு மீதான ஆக்கிரமிப்பு அரசியல். அமெரிக்காவின் பல்வேறு நியாயமற்ற நடவடிக்கைகள், தாலிபான் போன்ற அமைப்புகளை வெகுஜனம் ஆதரிக்க நியாயம் தந்துவிடுகின்றன.

ஒரு பெரிய இராணுவத்தைப் பராமரிக்கும் பாகிஸ்தான், அதற்கான நிதி ஆதாரங்களுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளின் உதவிகளைச் சார்ந் திருக்கிறது. மேற்குலகின் கோபத்திற்குள்ளாகியிருக்கும் தாலிபான்களை ஒடுக்காவிட்டால் உதவிகள் தடைபடும். அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மத அடைப்படைவாதிகளின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இருதலைக் கொள்ளி எறும்பின் நிலை பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு.

இந்துத்துவாவின் செல்வாக்குக்குட்பட்ட இந்திய அரசியல் சூழல் பாகிஸ்தானின் பதற்றத்தை அதிகரித்துவரும் நிலையில் அந்நாட்டின் சிக்கல்கள் பன்முகத்தன்மை கொண்டவையாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதை மறுப்பதற்கில்லை.

ஸ்ரீ. கௌதமன்
மயிலாடுதுறை.

அங்கோர்வாட் கட்டுரையில் இதுவரை அறியப்படாத பல புதிய செய்திகள் உள்ளன. ஆனால், கட்டுரையுடன் தொடர்பற்ற வேறு பல விஷயங்களை வரிந்துகட்டி எழுதுவது ஏன்?

கம்போடியாவில் போல்பாட் தலைமையிலான "கேமர்ரூஜ்" கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முன்னணி ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கெதிராக மக்கள் திரளின் ஆயுதந்தாங்கிய எழுச்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. போல்பாட் நாட்டைச் சுயசார்பாக நிற்கச் செய்யும் சட்டத்தைக் கொணர்ந்து, அனைவரும் கிராமங்களுக்குச் சென்று உழைப்பில் ஈடுபட ஆணையிட்டது. ஆனால், நகர்ப்புற மத்தியதர வர்க்கம் அரசுக்கெதிரானதாக, அமெரிக்கக் கைப்பாவை கும்பலாகச் செயல்பட்டது. நாட்டின் முன்னேற்றத்துக்கும் சுயசார்புக்கும் எதிராக இருந்த இந்தக் கும்பலை ஒழுங்குபடுத்த வேண்டிய தேவை போல்பாட் அரசுக்கு ஏற்பட்டது. இவர்களை ஒடுக்க போல்பாட், பழைய நாணயம் இனிச் செல்லாது என அறிவித்துப் புதிய நாணயத்தைக் கொண்டுவந்தார். உயிரே போனாலும் உடல் உழைப்பில் ஈடுபடமாட்டோ ம் என்றிருந்த இந்த நகர்ப்புற சோம்பேறிக் கூட்டம் கொத்துக் கொத்தாகத் தற்கொலை செய்துகொண்டது. அதேவேளையில் போல்பாட் அவர்களும் உடல்நிலை பாதிப்பால் மரணமடைந்தார். காத்துக்கிடந்த அமெரிக்கா, செத்துப்போன நகர்ப்புறச் சோம்பேறிகளின் மண்டையோடுகளைப் பொறுக்கி எடுத்துக் குவித்துவைத்து இவர்கள் சர்வாதிகாரி போல்பாட்டால் கொல்லப்பட்டவர்கள் என நம்பவைத்தது. இதை ஊடகங்களும் அப்படியே எழுதின. இது உலகளவில் ஊடகங்கள் செய்த மாபெரும் பித்தலாட்டம். உண்மை இவ்வாறிருக்க, கட்டுரைக்குத் தேவையற்ற வகையில் போல்பாட் ஆட்சி மரண ஆட்சி என்று மண்டையோடுகளின் படத்தைப்போட்டு போல்பாட்டால் கொலையானவர்கள் என்று இட்டுக்கட்டி எழுதுவது பொருத்தமானதல்ல.

ஆதவன்
சென்னை.

காலச்சுவடு-நவம்பர், 07 இதழின் அமைப்பு அனைவரையும் கவரும் வண்ணம் அமைந்துள்ளது. பி.ஏ. கிருஷ்ணனின் அங்கோர் வாட், இந்தியக் கலைமரபின் உச்சம்- கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு வரலாற்று ஆசிரியனாக அங்கோர் வாட் பற்றிய தேடுதல் என்னுள் கனிந்துகொண்டே இருந்தது. அதனை நிறைவுசெய்யும் வண்ணம் கட்டுரை அமைந்துள்ளது. உலகெங்கும் பரவ வேண்டிய இந்தியப் பண்பாடு 'கடல் தாண்டுதல்' கூடாது என்ற வறட்டுப் பிடிவாதத்தால் நம்மை ஓட்டிற்குள் சுருங்கிய ஆமைகளாய் மாற்றி அல்லல் படவைத்தது. இவ்வகை மூடப்பழக்க வழக்கங்கள் இன்றும் நம்மை, நமது வளர்ச்சியைத் தடுத்தே வருகின்றன. கட்டுரையில் வெளியிடப்பட்டுள்ள கலைச்சின்னத்தின் புகைப்படங்கள் அற்புதமாக வெளிடப்பட்டுள்ளன.

கே. வைத்தியநாதேஸ்வரன்
தஞ்சாவூர் - 7.

கவிஞர் ரசூல் அவர்களுக்கு 'ஊர் விலக்கம்' அளிக்கப்பட்டுள்ளது தொடர்பாக மாநில ஜமாத்துல் உலமா சபையின் அறிஞர் குழுவின் முடிவு இதுவரை வரவில்லை. களந்தை பீர்முகம்மது 'காலச்சுவடு' நவம்பர்-2007 இதழில் எழுதியுள்ள விவாதம் தொடர்பாக மேலும் சில கருத்துகள்.

ரசூல் எழுதிய அந்தக் கட்டுரை இஸ்லாத்தின் அறவியல் கோட்பாடுகள் தொடர்பானது. முழுமையாகவும் வரலாற்றுப்பூர்வமாகவும் அணுகி விவாதித்து உண்மையைப் பதிவுசெய்திருக்க வேண்டும். இதை முடிவு செய்வது யார்? ராமரைப் பற்றிப் பேசியதற்கு வடக்கே ஒருவன் கலைஞருக்கு 'பத்வா' கொடுக்கிறான். கருத்தைக் கருத்தால் அல்லவா எதிர்கொள்ள வேண்டும். ஊரின் நடை முறைகளுக்கு மாற்றாக-எதிராக ரசூல் எதாவது செய்திருந்தால் ஊர் ஜமாஅத் கூடி அதை ஆலோசித்து முடிவுசெய்வதில் நியாயம் இருக்கிறது. ரசூலின் பிரச்சினை அதுவல்லவே. அவர் எழுதியது ஒரு ஆய்வுக்கட்டுரை. இதில் எந்த இஸ்லாமியருக்கும் உடன்பாடு இல்லைதான். இதற்கு ஊர் விலக்கம் அளிப்பது என்பது என்ன நடைமுறை? இதை எப்படி ஏற்றுக்கொள்வது? ரசூலின் கட்டுரை தொடர்பாக அலசி ஆராய வேண்டியது மார்க்க அறிஞர்களின் கடமை. இந்தக் கடமையை இஸ்லாமிய அறிவுலகம் ஏன் இன்னும் நிறைவேற்றாமல் மவுனம் காக்கிறது? எந்த இஸ்லாமிய இதழும் இதுவரை ரசூல் பிரச்சினையை, அந்தக் கட்டுரையை கண்டுகொள்ளவோ விவாதிக்கவோ இல்லை. மார்க்க அறிஞர் பெருமக்களும் இதுபற்றி வாயைத் திறக்காமல் இருப்பது வியப்பாக இருக்கிறது!

ரசூலை மட்டும் தண்டிப்பதே தவறு என்ற நிலையில் அவருடன் அவர் குடும்பத்தையும் சேர்த்து ஊர் விலக்கம் செய்திருப்பது எந்த வகையில் நியாயம்? இவர்களுக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்? இதை முன்னுதாரணமாகக் கொண்டு மற்ற ஜமாஅத் நிர்வாகங்களும் இந்த நடைமுறையைத் தொடர்ந்தால் இதை எப்படி எதிர்கொள்வது? ஊர் விலக்கம் என்பதும் ஒரு வகை வன்முறைதான். இது அறிவுச் சுதந்திரத்துக்கு எதிரான வன்முறை.

எந்த ஒரு படைப்பாளியையும் பாராட்டிக் கௌரவிக்க முன்வராத சமூகமாகவே இருந்துவருகிறது இந்த மார்க்கம். இதற்கு நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். 'கவிக்கோ' அப்துல் ரகுமானை இதுவரை கண்டுகொண்டிருக்கிறதா இந்தச் சமூகம்? 'சாகித்திய அகாடமி' விருது கிடைத்தபோதுகூட ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்தவோ வாழ்த்து தெரிவிக்கவோ முன்வரவில்லை எந்த முஸ்லிம் அமைப்பும் ஜமாஅத்துகளும். 'சமுதாயம் என்னை மதிக்கவில்லை' என்னும் தன் ஆதங்கத்தை 'நமது முற்றம்' ஜூலை, 2007 இதழ் பேட்டியில் 'கவிக்கோ' குமுறலாகச் சொல்லியுள்ளார். இதே நிலைதான் கவிஞர் மு. மேத்தாவுக்கும் தோப்பில் முஹம்மது மீரானுக்கும். எத்தனையோ இஸ்லாமியப் படைப்பாளிகள் இலக்கியத்திற்காகத் தங்கள் பங்களிப்பைச் செய்கிறார்கள். இலக்கியச் சிற்றிதழ்கள்தான் அவர்களுக்கு உரிய அங்கீகாரத் தைக் கொடுக்கின்றன.

"சிந்திப்பவர்களுக்கு இதில் நிறைய படிப்பினை இருக்கிறது" என்பதை வலியுறுத்துகிறது திருக்குர்ஆன். அப்படிப்பட்ட மார்க்கத்தில் எழுத்துக்காக 'ஊர் விலக்கம்' என்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதுதானா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கவிஞர் ரசூலுக்காக அனைத்துப் படைப்பாளிகளும்

குரல் கொடுத்துவரும் நிலையில் மார்க்கம் மவுனம் காத்துவருகிறது. சகிப்புத் தன்மையற்ற மதம் இஸ்லாம்-என்னும் அவப்பெயரிலிருந்து தன்னை மீட்டெடுக்க இது போன்ற தருணங்களை மார்க்கம் தவறவிடக் கூடாது. இதைத்தான் தமிழ் எழுத்துலகம் எதிர்பார்க்கிறது. மாநில ஜமாத்துல் உலமா என்ன செய்யப்போகிறது?

ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்
கோவை.

யுவன் சந்திரசேகர் எழுதிய "உள்ளோசை கேட்பவர்கள்" நெடுங்கதை வாசித்தேன். பத்துப் பகுதிகளாக விரிந்துகிடக்கிற கதையில் புதிய உத்தியைக் காட்சிகளாகப் பதிவுசெய்திருக்கிறார். பல்வேறு காட்சிக் களங்கள். மடத்தின் நூல் சேமிப்பு அறைக்குள் வாசகனின் கையைப் பற்றி அழைத்துச் செல்லும் நூலாசிரியர் கதையின் இறுதிவரை கையை விடவே இல்லை. அற்புதமான கதை என்று ஆங்காங்கே சிலாகிக்க வைக்கிறார்.

இரா. இராஜேந்திரன்
மயிலாடுதுறை

தமிழக நலனுக்கான சேதுக் கால்வாய்த் திட்டத்தினை நிறைவேற்றவிடாமல் தடுக்கும் சூழ்ச்சியினையும் அரசியல் நோக்கர்கள் நன்கு அறிவார்கள். தொல்லியல் துறையின் விஞ்ஞான பூர்வ அறிக்கையை வாபஸ் பெற்றது மத்திய அரசின் மிகப் பிற்போக்கான அரசியல் நடவடிக்கை. காங்கிரஸை வைத்தே தனது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் பாஜகவின் குயுக்தி அரசியல் மக்களும் காங்கிரஸும் புரிந்துகொள்ள வேண்டியவை ராமரும், விநாயகரும் பாஜகவால் அவமானப்படுத்தப்பட்ட ஆன்மீகத்தின் அரசியல் குறியீடுகளாக்கப்பட்டுவிட்டார்கள். சமூகத்திற்கான கோரிக்கைகளே எழுப்பப்படாமல் புராண காலத்து விவாதங்களுக்கே முக்கியத்துவம் தரப்பட்டு, பாராளுமன்றம், சட்டமன்றங்கள் கேலிக் கூத்தாக்கப்படுகின்றன. வரலாற்றில் இல்லாத அளவிற்குப் பாஜகவின் மக்களவை நடவடிக்கைகள் மிகுந்த அருவறுப்பை உண்டாக்குகின்றன. மேலும் உச்ச நீதிமன்றம் அடிக்கடி மக்கள் மன்றங்களில் மூக்கை நுழைத்துத் தனது ராணுவ சர்வாதிகாரத் தனத்தைப பல்வேறு தீர்ப்புகள் மூலம் நிரூபித்து வருகிறது.

ஆரிசன்
கொடுங்காலூர்

உள்ளடக்கம்

 

 

Google