|
நந்திகிராம் விவசாயிகளுக்கும் புத்ததேவ் பட்டாச்சார்யா தலைமையிலான இடது முன்னணி
அரசுக்குமிடையிலான மோதல்கள் தீவிரமடைந்திருக்கின்றன. கடந்த சில வாரங்களில் மட்டும்
25க்கும் மேற்பட்ட விவசாயிகள் நந்திகிராமில் முகாமிட்டுள்ள மார்க்ஸிஸ்ட் கட்சியின்
குண்டர்படையால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை
இன்னும் அதிகமாக இருக்கக்கூடும் எனப் போராட்டக்காரர்கள் தரப்பிலிருந்துவரும்
செய்திகள் கூறுகின்றன. நந்திகிராம் மக்கள்மீது இடது முன்னணி அரசு
முன்னெப்போதுமில்லாத வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. நந்திகிராமுக்குள்
நுழைவதற்குப் பத்திரிகையாளர்களோ எதிர்க்கட்சிகளோ அனுமதிக்கப்படாததால் நாட்டின் மற்ற
பகுதிகளிலிருந்து நந்திகிராம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. திரிணமுல் காங்கிரஸ்
தலைவர் மம்தா பானர்ஜி, சமூகப் போராளி மேதா பட்கர் போன்றவர்களும்
தாக்குதலுக்குள்ளானதுடன் அவர்களால் நந்திகிராமுக்குள் நுழையவே முடியவில்லையென்றால்
அங்கு என்னதான் நடந்து கொண்டிருக்கிறது?
மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பீகார் முதலான அண்டை
மாநிலங்களிலிருந்தும் நந்திகிராமுக்குள் நுழைந்து அதை ஆக்கிரமித்துள்ள மார்க்ஸிஸ்ட்
குண்டர்படை விவசாயிகளை அவர்களது நிலங்களிலிருந்து விரட்டியடித்திருப்பதுடன் பாலியல்
வன்முறைகளிலும் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. இடது முன்னணி அரசில்
இடம்பெற்றுள்ள பிற இடதுசாரிக் கட்சிகள் மார்க்ஸிஸ்ட் கட்சியையும் புத்ததேவையும்
வெளிப்படையாகக் கண்டிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
கொல்கத்தாவில் அம்மாநில அரசு நடத்திய திரைப்பட விழாவொன்றில் பங்கேற்பதற்காக
வந்திருந்த திரைப்படத் துறைக் கலைஞர்கள் நந்திகிராம் நிகழ்வுகளுக்குத் தம்
எதிர்ப்பைத் தெரிவிக்கும் பொருட்டு அமைதி ஊர்வலம் செல்ல முற்பட்டபொழுது தடுத்து
நிறுத்திக் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.
புத்ததேவ் அரசின் இந்த நடவடிக்கைகள் அதன் மீதும் மார்க்ஸிஸ்ட் கட்சியின் நோக்கங்கள்
மீதும் பல சந்தேகங்களை உருவாக்கியிருக்கின்றன. உயர்ந்தபட்ச ஜனநாயகம் பற்றிப்
பேசிவந்த மார்க்ஸிஸ்ட்கள் இப்பொழுது மார்க்சியத்தைக் கைவிட்டுவிட்டு ஸ்டாலினிச
அராஜகவாதத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார்களோ எனத் தோன்றுகிறது. அல்லது புத்ததேவ்
நரேந்திர மோடியின் வழியைப் பின்பற்றத் தொடங்கிவிட்டார் எனக்கூடச் சொல்லலாம்.
குஜராத்தில் 2002இல் இந்துத்துவ வெறியர்களால் நடத்தப்பட்ட வன்முறைகளுக்கும்
தற்பொழுது நந்திகிராமில் நடைபெற்றுவரும் வன்முறைகளுக்கும் பண்புரீதியில் நிறைய
ஒற்றுமைகள் தென்படுகின்றன. இரண்டு வன்முறைகளுமே அந்தந்த மாநில அரசுகள் மற்றும் ஆளும்
கட்சிகளின் ஆதரவோடு திட்டமிட்டு நடத்தப்பட்டவை.
குஜராத்தின் பல பகுதிகளிலும் நடைபெற்றதைப் போலவே இங்கும் மக்கள் தம்
வீடுகளிலிருந்து துரத்தியடிக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்கள் குழந்தைகள் என
500க்கும் மேற்பட்ட கிராம மக்களைப் பிணையக் கைதிகளாகப் பிடித்துவைத்துக்கொண்டு
அவர்களைக் கேடயமாகப் பயன்படுத்திக் கலவரத்தில் ஈடுபடுகிறார்களாம் மார்க்ஸிஸ்ட்கள்.
பாலியல் வன்முறையில் ஈடுபடுவதில் சங்கப்பரிவாரங்களுக்குத் தாங்கள் எந்தவிதத்திலும்
குறைந்தவர்களல்ல என நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள் மார்க்ஸ், லெனின் வழியில்
வந்தவர்கள் எனத் தம்மைப் பற்றிக் கூறிக்கொள்ளும் மார்க்ஸிஸ்ட்கள். கூட்டணிக்
கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களைப் புத்ததேவோ மார்க்ஸிஸ்ட் கட்சியோ
பொருட்படுத்தவே இல்லை. பத்திரிகையாளர்களை நந்திகிராம் பகுதிக்குள் நுழையவிடாமல்
தடுத்துத் துரத்தியிருக்கிறது புத்ததேவின் 'புரட்சிப்படை'. நந்திகிராமில் வன்முறைச்
சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை எனவும் விவசாயிகள்தான் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்
எனவும் பொய் சொல்லி அப்பட்டமாக மக்களை ஏமாற்றுகிறார் புத்ததேவ். ஊடகங்கள் குஜராத்
கலவரங்களைப் பதிவுசெய்ததை மோடியால் தடுக்க முடியவில்லை. மோடியிடம் பாடம்
கற்றுக்கொண்ட புத்ததேவ் அதை வெற்றிகரமாகச் செய்து குருவை மிஞ்சிய சீடனாகிவிட்டார்.
விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் கட்சி என்னும் மார்க்ஸிஸ்ட் கட்சியின் வேடம்
இதன் மூலம் அம்பலப்பட்டுள்ளது. ஏழை விவசாயிகளிடமிருந்து அவர்களுடைய பிழைப்புக்கு
ஆதாரமான நிலங்களைப் பறிமுதல் செய்து பெருமுதலாளியான டாட்டாவுக்குத் தாரை வார்க்கும்
பணியில் முழுமூச்சுடன் இறங்கியிருக்கிறது புத்ததேவ் அரசு.
சுதந்திரத்திற்கு முன் பி.டி. ரணதிவேயின் தலைமையில் ஒன்றுபட்டிருந்த கம்யூனிஸ்ட்
கட்சி தெலுங்கானா விவசாயிகளின் நில உரிமைக்காக ஆயுதம் தாங்கிப் போராடியது.
சுதந்திரத்திற்குப் பிந்தைய காங்கிரஸ் அரசு அப்போராட்டத்தை ஒடுக்கியதுடன்
கம்யூனிஸ்ட் கட்சியையும் தடை செய்தது. கட்சியின் பல தலைவர்கள் தலைமறைவானார்கள்.
தலைமறைவு இயக்கமாக இருந்துகொண்டு போராடிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பிறகு
பாராளுமன்ற ஜன நாயகத்தை ஏற்றுக்கொண்டு மைய நீரோட்ட அரசியலில் தஞ்சம் புகுந்தது.
அப்பொழுதிலிருந்தே காங்கிரஸின் செல்லப் பிள்ளையாக விளங்கிவந்த கம்யூனிஸ்ட்கள்மீது
திரிபுவாதிகள் என்னும் விமர்சனங்கள் எழுந்தன. 1964இல் கட்சி சந்தித்தப் பிளவுக்கு
இந்தத் திரிபுவாதப் போக்கே காரணம்.
மார்க்சியத்தின் மீது பற்றுக்கொண்டவர்களுக்குப் புதிதாக உருவான மார்க்ஸிஸ்ட் கட்சி
நம்பிக்கையூட்டும் இயக்கமாக இருந்தது. ஆனால், மேற்கு வங்கத்தில் பங்களா காங்கிரசின்
தலைமையில் உருவான புதிய கூட்டணி அரசில் பங்கேற்கத் தொடங்கியவுடன் கட்சி விவசாயிகள்
மற்றும் தொழிலாளர்களின் நலன்களைக் கைவிடத் தொடங்கியதாகக் குற்றஞ் சாட்டப்பட்டது.
1970களின் தொடக்கத்தில் மேற்கு வங்காளத்தின் சிலிகுரி மாவட்ட விவசாயிகள் தம் நில
உரிமைக்காகப் போராடியபொழுது அப்பொழுது ஆளும் கட்சி வரிசையில் இருந்த
மார்க்ஸிஸ்ட்கள் தம் சொந்தக் கட்சியைச் சார்ந்த விவசாயிகளின் போராட்டங்களைக்
கடுமையாக ஒடுக்கினர். அப்பொழுது கட்சி மீண்டுமொரு பிளவைச் சந்தித்தது.
சாரு மஜும்தார் தலைமையில் உருவான மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட் இயக்கம் மார்க்ஸிஸ்ட்
கட்சிக்குப் பெரும் சவாலாக உருவெடுத்தது. அப்பொழுதிலிருந்து கம்யூனிஸ்ட்களின்
சந்தர்ப்பவாத நிலைபாடுகளைக் கடுமையாக எதிர்த்துவரும் மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட்
இயக்கத்திற்குப் பெருகிவரும் செல்வாக்கைக் கண்டு இடதுசாரிகள் பீதியடைந்துள்ளனர்.
நந்திகிராம் போராட்டங்களில் மாவோயிஸ்ட்களின் பங்கேற்பு காரணமாகவே அதைக் கடுமையாக
ஒடுக்க முனைகிறது மேற்குவங்க இடதுசாரிக் கூட்டணி அரசு.
கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அதன் தொண்டர்களில் பலருக்குக்
கடந்த காலத்திய கட்சியின் வரலாறோ தியாகங்களோ தெரியாது என்கிறார் பழம்பெரும்
கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரும் பங்களாக் காங்கிரசின் தலைமையிலான கூட்டணி அரசில்
ஜோதிபாசுவுடன் பங்கு பெற்றிருந்த 4 இடதுசாரி அமைச்சர்களில் ஒருவருமான அசோக் மேத்தா.
நந்திகிராம் தொடர்பாக ஆனந்தபஜார் பத்திரிகா என்னும் வங்கமொழி இதழில் அவர் எழுதிய
கட்டுரையில் கம்யூனிஸ்ட்களின் அதிகார மனோபாவத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தற்போது கட்சியில் இருக்கும் புதியவர்கள் அதிகாரத்தின் பலன்களை அனுபவித்துப்
பழக்கப்பட்டுவிட்ட தலை முறையினர். அதனால்தான் கட்சி டாட்டாவைக் காப்பாற்றுவதற்காக
விவசாயிகளின் போராட்டங்களை ஒடுக்குகிறது.
நந்திகிராம் நிகழ்வுகளைக் கொண்டு ஆதாயம் தேடுவதற்காகப் பல அரசியல் கட்சிகளும்
களத்தில் குதித்திருக்கின்றன. பிஜேபிக்கும் இது அருமையான வாய்ப்புதான்.
இடதுசாரிகளால் இனி மோடியைக் குறித்தோ குஜராத் கலவரங்களைக் குறித்தோ பேச முடியாது
அல்லவா? புத்ததேவ் அரசைக் காப்பாற்றுவதற்காக மார்க்ஸிஸ்ட் கட்சி, இந்திய அமெரிக்க
அணுசக்தி ஒப்பந்தத்தில் தன் நிலைபாட்டை மாற்றிக்கொண்டுள்ளதாகவும் ஒரு தகவல்
ஊடகங்களில் உலவிக்கொண்டிருக்கிறது. அது உண்மையானால் கார்த் தொழிற்சாலை அமைப்பதற்கான
நிலம் நிச்சயமாக டாட்டாவுக்குக் கிடைத்துவிடும். நந்தி கிராம் விவசாயிகளில் 60 சதம்
பேர் முஸ்லிம்களாகவும் தலித்துகளாகவும் இருப்பதால் கொல்கத்தாவில் அதன் எதிரொலிகள்
வலுவாகக் கேட்கின்றன. நந்திகிராம் விவசாயிகளுக்கு ஆதரவாகக் கொல்கத்தாவின்
சிறுபான்மையினரும் தலித்துகளும் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
நந்திகிராம் விவகாரங்கள் பெற்ற தேசிய கவனத்திற்குத் தலைநகரில் நடைபெறும் இத்தகைய
போராட்டங்களுக்கு முக்கியப் பங்குண்டு.
நந்திகிராம் வன்முறைகளுக்குக் கண்டனம் தெரிவித்துச் சிறுபான்மையினர் நடத்தும்
போராட்டம் ஒன்று கொல்கத்தாவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது. நவம்பர்
மூன்றாம் வாரத்தில் அந்த அமைப்புகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது.
கொல்கத்தா நகரில் பெருமளவிலான கத்திக் குத்துகளும் தீ வைப்புச் சம்பவங்களும்
நடந்துள்ளன. நந்திகிராம் நிகழ்வுகளுக்கான கண்டனம் தவிர அவர்களது மற்றொரு முக்கியமான
கோரிக்கை நாடு கடத்தப்பட்டுத் தற்பொழுது கொல்கத்தாவில் வசித்துவரும் பிரபல
வங்கதேசப் பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கொல்கத்தாவிலிருந்து வெளியேற்றப்பட
வேண்டுமென்பது. அவர்களது கோரிக்கைக்குப் பணிந்துள்ள புத்ததேவின் 'முற்போக்கு' அரசு
தஸ்லிமாவை அவசர அவசரமாக 'இந்துத்துவவாதி'களின் ஆட்சி நடைபெறும் ராஜஸ்தானுக்கு
அனுப்பி வைத்தது. சரியான ஆவணங்கள் இலலை எனக் கூறி அவரை டெல்லிக்கு அனுப்பி
வைத்துவிட்டது ராஜஸ்தான் அரசு. இந்தியாவின் மதச்சார்பின்மைக் கொள்கையின் மீதும்
அதன் ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை வைத்த தஸ்லிமாவுக்கு இது நல்ல பாடம்தான்.
இடதுசாரிகளின் கோட்டையான மேற்கு வங்காளத்தில் டாட்டா போன்ற பெருமுதலாளிகளைத் தவிர
வேறு யாருக்கும் பாதுகாப்பு இருக்காது போலிருக்கிறது. |