Google   www kalachuvadu.com

 

கட்டுரை
குஜராத் 2002: சுடும் உண்மை இந்துத்துவவாதிகளின் ஒப்புதல் வாக்குமூலங்கள்
இன்னும் மீதமிருக்கிற ஒரு வாக்கியம்
தேவிபாரதி
2002, பிப்ரவரி 27 குஜராத்தின் கோத்ரா நகரில், சபர்மதி விரைவு ரயிலின் எஸ். 6 கோச்சில் பயணம் செய்த கரசேவகர்கள் 59 பேர் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட நிகழ்வை யாராலும் பதற்றமில்லாமல் எதிர்கொள்ள முடியாது. இழப்பு உருவாக்கிய பெருந் துயரோடு அக்கொடிய நிகழ்வுக்குக் காரணமானவர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்கள்மீது வன்மமும் ஆத்திரமும் மூண்டெழுந்த தருணம் அது. குறிப்பாக 1992இல் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பின்னர் இந்தியாவின் மத நல்லிணக்கம் பெருத்த சேதத்திற்குள்ளாகியிருந்த ஒரு தருணத்தில் நடைபெற்ற அந்தக் கொடிய நிகழ்வால் உருவாகக்கூடிய பதற்றம் குறித்து அனுமானிப்பதற்கு ஒருவர் தீர்க்கதரிசியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. குறிப்பாகப் பதற்றம் மிகுந்த தன் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்பிலுள்ள ஒரு முதல்வர் அந்த நிகழ்வைப் பற்றிய தகவல் கிடைக்கப்பெற்றவுடன் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் எதுவுமறியாத அப்பாவியாய் இருக்க முடியாது.

பாபு பஜ்ரங்கி, பஜ்ரங் தள் அமைப்பின் உள்ளூர்த் தலைவர் கலவரத்தில் 80க்கும் மேற்பட்டவர்களைக் கொன்று குவித்தவன்.

"அவர்களைக் கொன்ற பிறகு மகாராணா பிரதாப் போல என்னை உணர்ந்தேன்" - பாபு பஜ்ரங்கி

செப்டம்பர் 1, 2007

பஜ்ரங்கி: கோத்ரா படுகொலைகளைப் பார்த்த எந்தவொரு மனிதனும் முஸ்லிம்களை உடனடியாகக் கொல்ல வேண்டும். கண்டதுண்டமாக வெட்டிப்போட வேண்டும் என்பதைத்தான் உணர்ந்திருக்க வேண்டும். அப்படியான உணர்வைத் தரக்கூடியதாயிருந்தது அங்கே நிகழ்ந்தது.

தெஹல்கா: நீங்கள் அங்கே இருந்தீர்களா?

பஜ்ரங்கி: ஆமாம், ஆமாம், அவர்களுடன் நானிருந்தேன். அதனாலேயே கோத்ரா படுகொலைகள் நிகழ்ந்தன. அங்கே நிகழ்ந்தவற்றைப் பார்த்த பிறகு (உடனடியாக) நான் நரோடாவுக்குத் திரும்பினேன். அடுத்து நாங்கள் பழிவாங்கினோம்.

தெஹல்கா: அவ்வளவு குறைந்த காலத்தில் எப்படி உங்களால் இவை எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்த முடிந்தது?

பஜ்ரங்கி: கொஞ்ச நேரந்தான்... நாங்கள் எல்லாவற்றையும் அந்த இரவிலேயே ஒழுங்குபடுத்தினோம். நாங்கள் இருபத்தி ஒன்பது, முப்பதுபேர் கொண்ட குழுவை ஒன்று திரட்டினோம். அங்கே நிகழ்ந்தது இதுதான்: நாங்கள் அவர்களைத் துரத்தினோம். அவர்களை அச்சுறுத்தி ஒரு பெரிய குழிக்குள் விழச் செய்தோம். அங்கே அவர்களைச் சுற்றி வளைத்து நின்றோம். பின்னர் எல்லாவற்றையும் நிறைவேற்றி முடித்தோம். பிறகு, 7 மணிக்கு அதை நாங்கள் அறிவித்தோம்.

தெஹல்கா: இது பாட்டியாவில். இதற்காகத்தான் அழைக்கப்பட்டிருந்தது அந்தக் கும்பல் இல்லையா?

பஜ்ரங்கி: ஆமாம் ஆமாம், பாட்டியா.

தெஹல்கா: தயவுசெய்து அப்பகுதி பற்றி விளக்குங்கள்

பஜ்ரங்கி: பாட்டியாவில் போக்குவரத்துக் கழகப் பணிமனை ஒன்றுள்ளது. அதன் பின்புறம் மிகப் பெரிய சுவர் உள்ளது. அச்சுவருக்கு அடுத்தபடியாகத்தான் பாட்டியா ஆரம்பமாகிறது. பாட்டியாவுக்கு எதிரே மசூதி உள்ளது. இதன் பின்புறந்தான் பாழடைந்த அந்தக் கிணறு உள்ளது. அங்கேதான் அவர்கள் அனைவரையும் கொன்றோம். ஏழு மணிக்கு நான் உள்துறை அமைச்சரையும் ஜெய்தீப் பாயையும் (ஜெய்தீப் படேல், விஎச்பி பொதுச்செயலாளர்) அழைத்து, எவ்வளவு பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பதைச் சொன்னேன். இனிமேல் ஆக வேண்டிய காரியம் அவர்கள் கையில் உள்ளதாகவும் தெரிவித்தேன். அவர்கள் ஏதாவது செய்தார்களா என்பது எனக்குத் தெரியாது. இருப்பினும், அதிகாலை இரண்டரை மணிக்கு எனக்கெதிராக எப்ஐஆர் போடப்பட்டது. நான் 'அங்கே' இருந்ததாக அந்த எப்ஐஆர் தெரிவித்தது. என்னைப் பார்த்த மாத்திரத்தில் சுட வேண்டி உத்தரவு பிறப்பித்திருந்தார் போலீஸ் கமிஷனர்.

தெஹல்கா: முஸ்லிம்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டனரா?

பஜ்ரங்கி : வெட்டினோம். எரித்தோம். நெருப்பிலிட்டுக் கொளுத்தினோம். நிறையக் காரியங்கள் செய்யப்பட்டன. நிறைய... அவர்களைக் கொளுத்துவதையே நாங்கள் விரும்பினோம். ஏனெனில் இந்த பாஸ்டர்ட்ஸ் தாங்கள் எரியூட்டப்படுவதை விரும்பவில்லை; அதைக் கண்டு பயந்தனர்; எனவே, அவர்களுக்கு இது நிகழ்ந்தது.

எனக்கு ஒரேயொரு விருப்பம் இருக்கிறது. கடைசி விருப்பம். எனக்கு மரணதண்டணை விதிக்கப்படலாம். நான் சிறையில் அடைபட்டிருப்பதை விரும்பவில்லை. நான் தூக்கிலிடப்பட்டாலும் எனக்குக் கவலை இல்லை. என்னைத் தூக்கிலிடும் முன்பு எனக்கு இரண்டு நாள்கள் கொடுங்கள். நான் ஜீஹபுரா (முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதி) சென்று 'அறுவடையை' நிகழ்த்திவிடுகிறேன். அங்கே ஏழெட்டு லட்சம் முஸ்லிம்கள் உள்ளனர். அவர்கள் அனைவரையும் முடித்துவிடுகிறேன். அவர்களில் இன்னும் கொஞ்சம் பேர் சாக வேண்டும். குறைந்த பட்சம் 25 முதல் 50 ஆயிரம் பேராவது சாக வேண்டும்.

தெஹல்கா: நீங்கள் முஸ்லிம்களைக் கொன்று முடித்த உடன் எப்படி உணர்ந்தீர்கள்?

பஜ்ரங்கி: ராணாபிரதாப் போல என்னை உணர்ந்தேன். அதாவது மகாராணா பிரதாப் செய்தது போன்ற காரியத்தைச் செய்திருந்தேன். அவரைப் பற்றிய கதைகளைக் கேட்டிருக்கிறேன். அந்த நாளில் அவர் என்ன செய்தாரோ அதையே நானும் செய்தேன்.

n

இந்துத்துவ இயக்கங்களின் கனவு நாயகனான நரேந்திர மோடியை நிச்சயமாக அப்படிச் சொல்லிவிடவே முடியாது. மோடி உடனடியாகக் கோத்ராவுக்கு விரைந்தார் அரசியல் சாசனப்படி குஜராத் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வராக அல்ல. ஒரு இந்துத்துவ வெறியராகப் பழியோடும் வன்மத்தோடும் கோத்ராவுக்கு வந்த மோடி அதற்கு முன்னதாகவே மாநிலத்தின் அப்பாவி முஸ்லிம்களை அழித் தொழிப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் கச்சிதமாகச் செய்துமுடித்துவிட்டே வந்திருந்தார். சங்கப்பரிவார அமைப்புகளின் நீண்ட காலத் திட்டங்களில் ஒன்றை நிறைவேற்றிக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகவே கோத்ரா நிகழ்வு இந்துத்துவ வெறியர்களுக்கு அமைந்தது.

'மோடி பாயைப் போல் வேறொருவரைப் பார்க்க முடியாது. அவர் மட்டும் இல்லாமலிருந்திருந்தால் எங்களால் கோத்ரா நிகழ்வுகளுக்குப் பழி தீர்த்திருக்க முடியாது. அவர் எங்களுக்கு 3 நாள்கள் அவகாசம் அளித்தார். அந்த 3 நாள்களில் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். காவல் துறையோ அரசின் மற்ற துறைகளோ எங்களுடைய நடவடிக்கைகளில் குறுக்கிடாது என்னும் உத்திரவாதத்தை அளித்தவர் நரேந்திர மோடிதான்' என 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற இனப்படுகொலைகளை முன்னின்று நடத்தியவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆங்கில வார இதழான தெஹல்காவின் அஷீஷ் கேத்தன் தலைமையிலான செய்தியாளர்கள் குழு கடந்த 6 மாதங்களுக்கு மேலாகக் குஜராத்தின் பல பகுதிகளிலும் பயணம் செய்து கலவரக்காரர்களையும் அதற்குத் துணைநின்றவர்களையும் பின்னணியில் இருந்து இயக்கிய சக்திவாய்ந்தவர்களையும் சந்தித்துப் பேசி அந்த உரையாடல்களை ரகசியக் காமிராவில் பதிவுசெய்திருக்கிறது. 2007 நவம்பர் 3ஆம் நாளிட்ட தெஹல்கா இதழ் பயங்கரமான அந்தத் தகவல் திரட்டுகளுக்கான சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. சங்கப்பரிவாரங்கள் குறித்த ஆய்வை மேற்கொள்பவர்களின் பாவனையில் தம்மை அணுகிய செய்தியாளர்களிடம் பேசிய கலவரக்காரர்கள் மோடியின் ஆசியோடு தாம் நிகழ்த்திய ஈவிரக்கமற்ற படுகொலைகளைப் பற்றிப் பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார்கள், 'அந்தத் தருணத்தில் நான் மகா ராணாபிரதாப் சிங்காக உணர்ந் தேன்' எனச் சொல்கிறான் நூற்றுக் கணக்கான அப்பாவி முஸ்லிம்களின் உயிர்களைச் சூறையாடியவனும் பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்தவனுமான பாபு பஜ்ரங்கி.

அவனைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 'நரேந்திர பாய்தான் என்னைக் காப்பாற்றினார்' என்கிறான் பஜ்ரங்கி. 'அப்பொழுது நான் எங்கள் பகுதியின் காவல் நிலையத்திற்குப் போனேன். என்னைத் தப்பி ஓடிவிடும்படி சொன்னார் அந்தக் காவல் நிலையத்தின் துணை ஆணையாளர். பிறகு நரேந்திர மோடிதான் எனக்கு அடைக்கலம் கொடுத்தார். மவுண்ட் அபுவிலுள்ள குஜராத் பவனில் என்னை நாலரை மாதங்கள் தங்க வைத்திருந்தார்' என்று சொல்கிறான் பஜ்ரங்கி. 'அதற்குப் பிறகு அவர் என்ன சொன்னாலும் செய்தேன். நரேந்திர பாய்போல் குஜராத்தில் எவரும் செய்ய முடியாது. அவர் இல்லாமல் போயிருந்தால் கோத்ரா நிகழ்வுகளுக்குப் பழி தீர்க்க முடிந்திருக்காது' என்கிறான் பஜ்ரங்கி. முதல்வராக இல்லாமலிருந்தி ருந்தால் தானே நேரடியாகக் கலவரத்தில் ஈடுபட்டிருப்பாராம் மோடி.

ரிச்சர்ட், சாரா பழங்குடி இனத்தைச் சேர்ந்த இந்தச் சிறுவியாபாரி கலவரத்தில் முக்கியப் பங்கு வகித்தவன்.

ரிச்சர்ட்: ஒரு ட்ரக்குக் கீழே தூங்கிக்கொண்டிருந்த பன்றிகளில் ஒன்றை நாங்கள் நான்கைந்து பேர் சேர்ந்து கொன்றோம். பன்றியின் உடலை மசூதியின் உச்சியில் தொங்கவிட்டோம். சஃரான் கொடி ஒன்றையும் பறக்கவிட்டோம். அதை எங்களால் தகர்க்க முடியவில்லை. தாக்கர் நகர் குறுக்குச் சாலையிலிருந்து ஒரு சகோதரர் முஸ்லிம்களைக் கொன்றுவிட்டு டாங்கரைக் கொண்டுவந்தார். டாங்கரைப் பின்னோக்கிச்செலுத்தி மசூதியில் மோதினோம். பெட்ரோலைப் பீய்ச்சியடித்துத் தீ வைத்தோம். உள்ளே இருந்தவர்கள் எல்லோரும் ஒழிந்தார்கள்.

தெஹல்கா: சாராக்கள் பாலியல் வன் முறையிலும் ஈடுபட்டதாகச் சொல்கிறார்கள்.

ரிச்சர்ட்: ஆயிரக்கணக்கானவர்கள் பசியுடன் உள்ளே நுழைகிறார்கள். அவர்கள் சில பழங்களை அல்லது வேறு எதையாவது சாப்பிடத்தான் செய்வார்கள். எப்படியிருந்தாலும் அந்தப் பழங்கள் கசக்கித் தூக்கி எறியப்படத்தான் போகின்றன. நம் ஆண்கள் அவற்றில் சில பழங்களையாவது சாப்பிட்டிருப்பார்கள்.

தெஹல்கா: இரண்டு பாலியல் பலாத்காரச் சம்பவங்கள் நடந்திருப்பதாகத் தெரிகிறது.

ரிச்சர்ட்: இன்னும் அதிகமாக இருக்கக் கூடும். எங்கள் சாரா சகோதரர்களைத் தவிர. நம் இந்துச் சகோதரர்கள், வி.எச்.பி.க்காரர்கள், ஆர்.எஸ். எஸ்காரர்கள் எல்லோருமே அதில் ஈடுபட்டிருப்பார்கள். உங்கள் முன்னால் பழங்கள் இருக்கிறபோது சாப்பிடமாட்டீர்களா என்ன? என் மனைவியைப் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு சொல்கிறேன். நானும் சாப்பிட்டேன். ஒரே ஒருமுறை மட்டும். பிறகு நான் அவளைக் கொன்றேன். ஊறுகாயைப் போலத் துண்டு துண்டாக வெட்டினேன்.

n

கலவரத்தின்போது இந்துத்துவ வெறியர்கள் அப்பாவி முஸ்லிம்களின் வாழிடங்களை ஈவிரக்கமின்றிச் சூறை யாடிய கதைகளை, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என யாரையும் விட்டுவைக்காமல் அவர்களைத் துண்டுதுண்டாக வெட்டி நெருப்பிலிட்டுக் கொளுத்திச் சாம்ப லாக்கிய கொடுஞ்செயல்களை, முஸ்லிம் பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சிக்குள்ளாக்கி ஊறுகாய்களைப் போல் வெட்டி வீசிய குரூரத்தை விவரித்திருக்கும் விதம் இந்தத் தேசம் பற்றிய ஜனநாயகவாதிகளின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் காலில் போட்டு மிதித்து நசுக்கியிருக்கிறது.

பாஜக, விஸ்வ ஹிந்து பரிக்ஷத், ஆர்எஸ்எஸ். மற்றும் பஜ்ரங்தள் தலைமையிலான இந்துத்துவப் பயங்கரவாதிகள் நடத்திய வெறியாட்டங்கள் குறித்த தெஹல்காவின் பதிவுகள் நாம் நாகரிகச் சமூகத்தில்தான் வாழ்கிறோமா என்னும் சந்தேகத்தையும் பதற்றத்தையும் தோற்றுவிக்கின்றன. முஸ்லிம்கள்மீதான சங்கப்பரிவாரங்களின் வன்மம் அவர்களை நாஜிக்களைவிடவும் அபாயகரமான சக்திகளாக அடையாளங்காட்டியிருக்கின்றன. திட்டமிடப்பட்ட வன்முறை தன்னெழுச்சியானதைப் போல் நம்ப வைக்கப்பட்டிருக்கிறது. அரசியல் தலைமையும் வழக்கறிஞர்கள், நீதிபதிகள் முதலான அறிவுஜீவிகளும் அதிகாரவர்க்கமும் குண்டர்படையும் கைகோர்த்துக்கொண்டு அரங்கேற்றிய இந்த வன்முறைக்கு முன்னுதாரணங்களே இல்லை என நம்பத் தோன்றுகிறது. கலவரத்தைப் பற்றி விசாரித்து வரும் நீதிபதிகள் நானாவதியையும் கே.ஜி.ஷா இருவரையும் எதிர்கொள்வதில் சங்கப்பரிவாரங்களுக்கோ கலவரக்காரர்களுக்கோ எந்தப் பதற்றமும் இல்லை, 'ஷா எங்களுடைய ஆள்' என்கிறார் கமிஷனின் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பாண்டியா, 'அவரைப் பற்றிப் பிரச்சினை இல்லை, அவர் எங்களுடைய அனுதாபி. நானாவதியுங்கூடப் பிரச்சினையில்லாதவர்தான். அவருக்குப் பணத்தில்தான் குறி' என்கிறார் பாண்டியா.

திலீப் திரிவேதி

இவர் விஎச்பியின் பொதுச் செயலாளர். மூத்த வழக்கறிஞரான இவரது கூற்றுப்படி, இவர்தான் கலவரம் சம்பந்தமான அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்து நடத்தியவர். மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் இதற்கான ஒத்துழைப்பை மற்ற வழக்கறிஞர்களிடமிருந்து பெற்றதாகக் கூறுகிறார்.

ஜூன், 15, 2007

திரிவேதி: குஜராத்தில் உள்ள அனைத்து வழக்குகளையும் நான்தான் ஒன்றிணைத்தேன். விஸ்வஹிந்து பரிஷத்தின் பொதுச்செயலாளர் என்னும் முறையில் அனைத்து நீதிமன்றங்களிலும் இது பற்றிய அனைத்து விஷயங்களையும் நான்தான் ஒருங்கிணைத்தேன். இதனால் எல்லா வழக்கறிஞர்களும் தங்களது சேவையை அளித்தனர். அதனாலேயே இவர்கள் அனைவரும் எனக்கு நெருக்கமானவர்களாக ஆனார்கள்.

தெஹல்கா: அதனால்தான் அரவிந்த் பாய் பாண்டியா (நானாவதி ஷா கமிஷனில், அரசுத் தரப்பு வழக்கறிஞர்) உங்களது பெயரைத் திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தாரா?

திரிவேதி: கடவுளின் கருணையால் அரவிந்த்பாய் பாண்டியா வழக்கறிஞர்கள் என்மீது நம்பிக்கையும் மதிப்பும் வைத்திருந்தனர். இந்த விஷயத்தில் நான் சொன்னபடியே அவர்கள் செயலாற்றினார்கள்; எல்லாம் கடவுளின் கருணைதான்.

பப்ளிக் பிராசிக்யூட்டர், பிரதிவாதிகளின் வழக்கறிஞர்கள் எல்லோரும் நான்தான் பேச்சுவார்த்தை, ஏதோ ஒரு வகையில் சமாதானம் போன்ற அனைத்தையும் நானேதான் செய்ய வேண்டியிருக்கிறது.

தெஹல்கா: எவ்வளவு மாவட்டங்களை நீங்கள் பார்த்துக்கொள்கிறீர்கள்?

திரிவேதி: குஜராத் முழுவதுந்தான். சம்பந்தப்பட்டவர்களை நான் தொலை பேசி மூலம் அழைப்பேன். இப்போது நான் குறிப்பிட்ட மாற்று வழக்கறிஞர் ஏற்பாட்டின் பேரில், அதன்பின், வேண்டியவர்கள் அவர்களைச் சென்று சந்திப்பார்கள்.

தெஹல்கா: ஆக, பிரதிவாதிக்கு வழக்கறிஞர் ஏற்பாடாகிவிடும் இல்லையா?

திரிவேதி: ஆமாம், எல்லாமே சரியாக நடக்கும். யாருக்காவது, ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், என்னைத் தொலைபேசி மூலம் தொடர்புகொள்வார்கள். அதைத் தீர்ப்பதற்குச் சரியான நபர் யார் என்பதை யோசித்து முடிவுசெய்து, சம்பந்தப்பட்டவர்களுக்குச் சொல்லுவேன். டிஐஜி மற்றும் அவருக்குக் கீழ் பணிபுரியும் ஏஐஜி, ஏஜிபி. ஆகியோரைச் சந்திப்பது, பேசுவது போன்ற அனைத்தையும் நான்தான் செய்கிறேன்.

நானாவதி கமிஷனில், கே.ஜி. ஷாவிடமிருந்து பல விதங்களில் ஆதரவு எங்களுக்கு இருக்கிறது. இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், இந்துக்களைப் பாதுகாப்பதற்குச் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகள். இதற்காகப் பிஜேபி தனி ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது. சங் தனியான ஏற்பாடுகளையும் பரிஷத் அதே போல... இம் மாதிரியான பிரிவுகள் பிரயோசனப்படாது...

தெஹல்கா: மெஹசாருவில் எவ்வளவு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன?

திரிவேதி: மொத்தம் 182 புகார்கள் பதிவுசெய்யப்பட்டன. இதில் 78 வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. இன்னும் இரண்டு வழக்குகள், பின்னர் தாக்கல் செய்யப்பட்டன. இந்த 80 வழக்குகளில், மூன்று அல்லது நான்கு வழக்குகள்தான் முடிவு பெறாமல் இன்றும் நடந்துவருகின்றன. மற்றுமுள்ள 76 வழக்குகள் நடந்து முடிந்துவிட்டன.

தெஹல்கா: அனைத்தும் இந்துக்களுக்குச் சாதகமாக முடிந்தனவா?

திரிவேதி: இரண்டே இரண்டு வழக்குகளில்தான், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தண்டனை கிடைத்தது. மீதமுள்ள 74 வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். இதில் ஒரு வழக்கில் நாங்கள் மேல் முறையீடு செய்தோம். அதில் அந்த நபர் விடுதலையானார். இரண்டாவது வழக்கில், உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுத்தாக்கல் செய்தோம். அதை உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. அவர் குற்றவாளி என்ற முடிவே தவறானது. சில மாவட்டங்களில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிலர் இன்றும் சிறையில்தான் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 3000 இந்துக்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 100 - 150 பேர்களுக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை.

இந்திராகாந்தி கொலைசெய்யப்பட்டபொழுது சீக்கியர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குஜராத் கலவரத்திலிருந்து பெரிய அளவில் வேறுபட்டவையல்ல. இந்துத்துவத்தை மென்மையாகக் கடைபிடிப்பதாகக் கூறிக்கொள்ளும் காங்கிரஸ் கட்சியின் புதிதாக முடிசூடிக்கொண்ட இளவரசர் ராஜீவ்காந்தி' தலைமையிலான காங்கிரஸ் தொண்டர்கள் 'மரம் வேரோடு சாயந்ததன் பின்விளைவு'களைக் குறித்து நடத்திய பாடத்தை யாரும் அவ்வளவு சுலபத்தில் மறந்திருக்கமாட்டார்கள். நாடெங்கிலும் மத அடிப்படைவாதிகளாலும் சாதிய அமைப்புகளாலும் தொடர்ந்து கட்டவிழ்த்துவிடப்பட்டுவரும் இது போன்ற கொடுஞ்செயல்களுக்கு நாம் பழக்கப்படுத்தப்பட்டுவிட்டோ ம். தார்மீக உணர்வுகள் மரத்துப்போனவையாக நம் மனங்கள் சுருங்கிவிட்டன.

தெஹல்கா அம்பலப்படுத்திய உண்மைகளுக்குப் பெரிய அளவிலான எதிர்வினைகள் உருவாகாததற்கு நம் மரத்துப்போன மனசாட்சியைத்தான் குறைசொல்ல வேண்டியிருக்கும். லாலு தவிர அரசியல் அரங்கில் வேறு யாரும் இதற்கு எதிர்வினை புரியவில்லை. மோடியைக் கைதுசெய்ய வேண்டும் எனக் குரலெழுப்பியிருக்கும் லாலு அவர்மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கும்படி குடியரசுத் தலைவரைக் கோரியிருக்கிறார். சென்ற ஓரிரு மாதங்களுக்கு முன்னர் லைவ் தொலைக்காட்சி நடத்திய போலி வீடியோ ஆதாரத்தைக்கொண்டு உமா குரானா என்னும் ஆசிரியை மீது கடும் நடவடிக்கை எடுத்த நீதிமன்றங்கள் இப்பொழுது மவுனம் சாதிக்கின்றன. மோடியின் மீதுள்ள அச்சத்தாலோ இந்துத்துவ அமைப்புகளின் மீதுள்ள அனுதாபத்தினாலோ இது நடக்குமெனில் அதைவிட அபாயகரமான சமிக்ஞை இந்திய ஜனநாயகத்திற்கு வேறு இருக்க முடியாது.

டிசம்பர் இறுதியில் குஜராத்தில் நடைபெறவிருக்கும் தேர்தல் தொடர்பான தனியார் தொலைக்காட்சி ஒன்றின் சமீபத்தியக் கருத்துக்கணிப்பு மோடி தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறியிருக்கிறது. அப்படி நடக்குமானால் இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து மட்டுமல்ல இந்தியா என்னும் கருத்துருவம் சார்ந்துங்கூட எந்த நம்பிக்கையையும் தக்கவைத்துக்கொள்வதற்கு ஒரு காரணமும் இல்லை. இதுபோன்றதொரு கையறு நிலையில் நாம் சொல்வதற்கு ஒரே ஒரு வாக்கியந்தான் எஞ்சியிருக்கிறது. அது முன்குறிப்பிட்ட தெஹல்கா சிறப்பிதழின் முகப்புக் கட்டுரையில் அதன் முதன்மை ஆசிரியர் தருண் தேஜ்பால் சொல்லியிருக்கும் எல்லாவற்றையும் 'படியுங்கள், அச்ச மடையுங்கள்' என்பதுதான்.

 


தெஹல்காவின் இந்தப் பதிவுகளின் தமிழ் மொழிபெயர்ப்பைக் காலச்சுவடு பதிப்பகம் விரைவில் புத்தக வடிவில் வெளியிடவிருக்கிறது. இவ்விதழில் கலவரங்களில் ஈடுபட்டவர்களின் வாக்கு மூலங்கள் சிலவற்றை வாசகர்களின் பார்வைக்குத் தந்துள்ளோம்.

- ஆசிரியர்

ஹரீஷ்பத், கோத்ராவின் பிஜேபி எம்.எல்.ஏ. கலவரத்துக்கான ஆயுதங்களைத் தன் தொழிற்சாலையில் தயாரித்து விநியோகித்தவர் இவர்தான்.

தெஹல்கா: 2002இல் கோத்ரா சம்பவம் நடந்தபோது இந்துக்களுக்கு ஆயுதம் எப்படி வந்தது?

ஹரீஷ்பத்: என்னிடம் சொந்தமாக ஒரு வெடிமருந்துத் தொழிற்சாலை உள்ளது. பட்டாசு தயாரிப்பேன். வெடி குண்டு தயாரிப்பேன். வெடிகுண்டுகள் எல்லாம் அங்கேதான் தயாரிக்கப்பட்டன. டீஸல் வெடிகுண்டு, குழாய் வெடிகுண்டு எல்லாம் அங்கே தயாரித்தோம். அங்கிருந்தே விநியோகமும் நடைபெற்றது. பஞ்சாபிலிருந்து இரண்டு லாரி நிறைய வாள்களை நேராக இங்கே கொண்டுவந்தோம். தரியா (ஞிலீணீக்ஷீவீஹ்ணீ) என்னும் குக்கிராமத்தில் பதுக்கினோம். எல்லாம் அங்கே தயாராக இருந்தது. அங்கிருந்து பின்னர் விநியோகிக்கப்பட்டன. அப்போது தேவையாக இருந்தது இந்தச் சாதனங்கள் மட்டுமே.

தெஹல்கா: ஆயுதங்களை எங்கிருந்து வரவழைத்தீர்கள்?

பத்: நாட்டுத் துப்பாக்கிகளை மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய இடங்களிலிருந்து பெற்றோம். எல்லா இடத்திலிருந்தும் வாங்கினோம். பிறகு இங்கிருந்து நான் விநியோகம் செய்தேன்.

விதவிதமான ஆயுதக் குவியல்களைப் பார்த்து அவர்கள் திகைத்து உறைந்துபோய்விட்டார்கள். நாங்கள் தொழிற்சாலையில் தயாரித்து, பின்னர் சோதனை செய்வோம். ஒரு குழாய் (றிவீஜீமீ றீணீuஸீநீலீமீக்ஷீ) ஏவுகணையை இங்கேதான் தயாரித்தோம். ஒரு பக்கம் லாஞ்சர் இருக்கும். மறுபக்கம் குழாய் இருக்கும். நான்கு குழாய்கள் கொண்டது அது. குழாய் வாயை மூடியபின் வெடிமருந்துகளை நிரப்பினோம். பிறகு ஆணி அடித்து மூடினோம். அதனுள் 595 ரக வெடிகுண்டு வெடிக்கத் தயாராக இருந்தது. இயக்குவதற்கு வேறு தடையில்லை. ஒன்பது இஞ்ச் கனமுள்ள சுவரைத் துளைத்துவிட்டுச் செல்லும் அளவுக்கு அதில் சக்தி இருந்தது.

'வேறு எந்த முதல்வரும் செய்யாததை அவர் செய்தார்'

தெஹல்கா: இனப்படுகொலை நடைபெற்ற அன்று நரேந்திரபாய் பாட்டியாவிற்கு வந்தாரா?

பஜ்ரங்கி: நரேந்திரபாய் பாட்டியாவிற்கு வந்தார். சம்பவ இடத்திற்கு வரமுடியவில்லை. அவருடன் கமான்டோ வோ - பமோன்டாவோ, காவலர்கள் இருந்தனர். ஆனால் அவர் பாட்டியாவிற்கு வந்தார். எங்கள் உற்சாகத்தைக் கண்டார். பின்னர், திரும்பிச் சென்றுவிட்டார். அவர் ஒரு நல்ல இதமான சூழலைத் தமது வருகையால் ஏற்படுத்திவிட்டார்.

பஜ்ரங்கி: கமிஷனர், வீட்டை விட்டு ஓடிவிட வேண்டும் எனக் கூறினார். நான் ஓடிவிட்டேன். நரேந்திரபாய் மவுண்ட் அபுவிலுள்ள குஜராத்பவனில் என்னை 41/2 மாதங்கள் வைத்திருந்தார். அதன் பிறகு அவர் என்ன கூறினாலும் நான் அப்படியே செய்தேன் . . . அவரைப் போல எவரும் குஜராத்தில் செய்ய முடியாது. நரேந்திரபாயின் உதவி இல்லாமலிருந்தால் பழிக்குப் பழிவாங்க முடியாமல் போயிருக்கும். அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். மக்களுக்கும் மகிழ்ச்சிதான். நாங்களும் மகிழ்ச்சியில் திளைத்தோம். நான் சிறைக்குப் போனேன். திரும்பினேன். எனது பழைய வாழ்க்கையை மீண்டும் தொடங்கினேன்.

பஜ்ரங்கி: நரேந்திரபாய் சிறையிலிருந்து என்னை வெளியே கொண்டுவந்தார். நீதிபதிகளை அடிக்கடி மாற்றினார். என்னை விடுவிப்பதென்ற ஒரே முடிவிலிருந்தார். அவரில்லை எனில் நான் இன்றும் வெளியே வந்திருக்க முடியாது. முதலில் இருந்த நீதிபதி பாபு பஜ்ரங்கி தூக்கிலிடப்பட வேண்டும் என்றார். அந்தக் கோப்பு தூக்கி எறியப்பட்டது. அடுத்து வந்தவரும் தூக்கிலிட வேண்டும் என்பதுடன் நிறுத்திக்கொண்டார். அடுத்து மூன்றாவது ஒருவர் வந்தார். இதற்குள் 41/2 மாதம் சிறையிலிருந்துவிட்டேன். அடுத்து ஒரு நீதிபதியை நியமித்தார். அவர் "ஜாமீன் வழங்கப்படுகிறது" என்று மட்டும் கூறினார். நாங்கள் அனைவரும் வெளியே வந்துவிட்டோம்.

அரவிந்த் பாண்டயா, குஜராத்தின் அட்வகேட் ஜெனரல். நானாவதி கமிஷனிலிருந்து குற்றவாளிகள் தப்பிப்பதற்குச் சட்டரீதியாக உதவியவர்.

அரவிந்த் பாண்டயா: மோடி மந்திரியாக இல்லாதிருந்தால் அவரும் வெடிகுண்டை வீசி எறிந்திருப்பார். குஜராத் முதல்வர் இந்து சமூகத்தின் இரட்சகர் என்று நானாவதிஷா கமிஷனில் அரசு வழக்கறிஞர் கூறினார். இம்முறை அவர்கள் செமத்தியாக அடி வாங்கினார்கள். இப்போது இந்துக்கள் ஆட்சி. குஜராத் முழுவதும் இந்து ஆட்சிதான். விஸ்வ ஹிந்து பரிஷத் ஆட்சியுங்கூட.

பழிவாங்குங்கள் என்று அவர் சொன்னதும் நான் தயாராகிவிட்டேன். அவர் மட்டும் அமைச்சராக இல்லா விட்டால் அவரே வெடிகுண்டுகளை வீசியிருப்பார். அவரிடம் சக்தி இருந்திருந்தால் (முஸ்லீம் மக்கள் அதிகம் வசிக்கும் அகமதாபாத் பகுதியான) ஜுகபுராவில் வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்திருப்பார்.

n

ஹரீஷ்பத்: அவர் எங்களுக்கு மூன்று நாள்கள் தந்தார் . . . என்ன முடியுமோ அதை நாங்கள் செய்துகொள்ளலாம். அதற்குப்பின் அனுமதியில்லை. தரமுடியாது என்று கூறினார். இதனை அவர் வெளிப்படையாகவே தெரிவித்தார். மூன்று நாள்கள் முடிந்ததும், நிறுத்திவிடுங்கள் என்று எங்களிடம் கேட்டுக்கொண்டார். அதோடு அனைத்தும் நின்றுவிட்டன.

தெஹல்கா: அது மூன்று நாள்களில் நின்றுவிட்டது. ராணுவங்கூட வரவழைக்கப்பட்டதே.

பத்: முழு ராணுவமே வந்தது . . . எங்களுக்கு மூன்று நாள்கள் கிடைத்தன . . . என்ன செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம் இந்த நாள்களில் செய்துமுடித்து விட்டோம்.

தெஹல்கா: அவர் அப்படியே சொன்னாரா?

பத்: ஆம். அதனால்தான் நான் சொல்கிறேன். அவர் செய்ததுபோல இன்னொரு முதல்வரால் செய்யவே முடியாதென்று . . .

n

இராஜேந்திர வியாஸ், விஎச்பியின் அகமதாபாத் நகரத் தலைவர், சபர்மதி எக்ஸ்பிரஸில் சென்ற கரசேவகர்களுக்குப் பொறுப்பாளி: 'நாம் பழிவாங்க வேண்டும்' என்று முதலில் கூறினார். இதனை நான் மக்கள் மத்தியில் வெளிப்படையாகவே கூறினேன். ஒரு துளித் தண்ணீர்கூடக் குடிக்கவில்லை. ஏராளமான மக்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தி என்னை மிகவும் ஆத்திரப்படுத்தியிருந்தது. எப்போது எனக்கு மீண்டும் பலம் வந்ததோ அப்போதே தரக்குறைவான வார்த்தைகள் என்னிடமிருந்து வெளிவந்தன. "இராஜேந்தரா பாய், நிதானமாயிருங்கள். எல்லாம் நன்கு கவனிக்கப்படும்" என்று அவர் (மோடி) கூறினார். எல்லாம் நன்கு கவனிக்கப்படும் என்று அவர் எந்த அர்த்தத்தில் சொன்னார்? யாருக்கெல்லாம் புரிய வேண்டுமோ அவர்கள் புரிந்துகொண்டனர்.

n

சுரேஷ் ரிச்சர்ட்: (இனப்படுகொலை) நடந்த அன்று மாலை முடியும்வரை என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் கச்சிதமாகச் செய்து முடித்தோம். 7:15 அல்லது 7:30 மணி இருக்கும்போது மோடி பாய் வந்தார். நேராக இங்கேதான். . . இந்த வீட்டிற்கு வெளியே. என் சகோதரிகள் ரோஜா மாலை அணிவித்தார்கள்.

தெஹல்கா: நரேந்திர மோடி . . .

ரிச்சர்ட்: நரேந்திர மோடி . . . கறுப்புப் பூனை கமோண்டோ க்களுடன் அவர் வந்தார். அம்பாசிடர் காரிலிருந்து இறங்கி இங்கே நடந்துவந்தார். என் சகோதரிகள் அனைவரும் மாலையணிவித்தார்கள். என்ன இருந்தாலும் பெரிய மனிதர் பெரிய மனிதர்தான். அங்குள்ள இடங்களையெல்லாம் சுற்றிப்பார்த்தார். எங்கள் இனம் ஆசீர்வதிக்கப்பட்டது என்றார். எங்கள் அன்னையார் எங்களைப் பெற்றுவிட்டதற்காக. சுமார் 7 அல்லது ஏழரை மணிக்கு வந்தார். அப்போது மின்சாரம் இல்லை. கலவரத்தில் எல்லாமே எரிந்து சாம்பலாகிவிட்டன.

n

மொழிபெயர்ப்பில் உதவி: அரவிந்தன், செல்லப்பா, ந. கவிதா

நன்றி: தெஹல்கா, 3.11.2007

 

உள்ளடக்கம்

 

 

Google