Google   www kalachuvadu.com

 

மூன்றாவது கண்
அல் கோருக்குக் கிடைத்த கவித்துவ நீதி
கோவிந்த் தல்வால்கர்
முன்னாள் அமெரிக்கத் துணை அதிபரான அல் கோர், 2006ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசைப் பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவின் தலைவரும் இந்தியாவைச் சேர்ந்தவருமான ராஜேந்திர பச்சோரியுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். அப்பரிசுக்கு அவர்கள் தகுதியானவர்களே. எப்பொழுதும் அமெரிக்க ஊடகங்களால் ஏளனமாகவே பார்க்கப்பட்ட அல் கோர் 2000இல் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றும் நியாயமற்ற தேர்தல் முறையின் காரணமாக அதிபராகும் வாய்ப்பை நழுவவிட்டார். அமெரிக்க அதிகார வர்க்கத்தின் சூழ்ச்சியும் அதற்கு வளைந்துகொடுத்த உச்ச நீதிமன்றமும் அதற்குக் காரணம். அதிபர் பதவிக்குத் தகுதியற்றிருந்தபோதிலும் ஜார்ஜ் புஷ் அமெரிக்க அதிபரானார்.

அல் கோர் அமெரிக்க செனட்டின் உறுப்பினராகவும் எட்டாண்டுகள் அமெரிக்கத் துணை அதிபராகவும் இருந்துள்ளார். இந்தக் காலகட்டத்தில் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய பல திட்டங்களை அவர் ஆரம்பித்துவைத்தார். கோரின் தந்தையும் செனட்டராக இருந்தவர்; இந்தியாவின் மீது நல்லிணக்கப் பார்வை கொண்டவர். நோபல் பரிசோடு இந்த ஆண்டுக்கான ஆஸ்கார், எம்மி விருதுகளையும் கோர் பெற்றிருக்கிறார். அரசியலிலிருந்து ஓய்வுபெற்ற பின்பு புவி வெப்பமடைதல் குறித்த விழிப்புணர்வைப் பரப்பத் தொடங்கியவரல்ல கோர். துணை அதிபராக இருந்தபோதே, தேசிய நெடுஞ்சாலைகளில் ஓடும் கார்களின் வேகத்தைக் குறைந்தபட்சம் ஐந்து கிலோ மீட்டராவது குறைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அமெரிக்கப் பேர்வழிகளுக்கு உணர்த்த முயன்றார். அது பின்பற்றப்பட்டிருந்தால் எரிபொருள் சேமிப்பும் மாசுக் கட்டுப்பாடும் சாத்தியமாயிருக்கும். ஆனால், அவரது யோசனை நிராகரிக்கப்பட்டது.

மேலும், அதிகம் எண்ணெய் உட்கொள்கிற இயந்திரங்களைத் தயாரிப்பதை விட்டுவிட்டு எரிபொருளை அதிகச் செயல்திறனோடு பயன்படுத்தக் கூடிய இயந்திரங்களைத் தயாரிக்குபடி மோட்டார் வாகன உற்பத்தியாளர்களைக் கோர் கேட்டுக்கொண்டார். இவையெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குபோல் ஆகிவிட்டன. இப்பொழுது ஜப்பானியக் கார்களின் இறக்குமதியால் உள்நாட்டில் ஏற்பட்டிருக்கும் போட்டியைச் சமாளிக்க அமெரிக்க மோட்டர் வாகன உற்பத்தியாளர்கள் கோரின் வழிக்கு வந்துள்ளனர். கடந்த இருபது வருடங்களாகச் சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களில் அவர் ஈடுபட்டு வருகிறார். இது குறித்து அவர் எடுத்த An Inconvenient Truth என்னும் ஆவணப்படம், அவருடைய Earth in the Balance புத்தகத்தைப் போலவே உலகெங்கிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. எப்படியிருந்தபோதும் பெரும்பாலான அமெரிக்கப் பழமைவாதிகளும் 'சுய திருப்தி' அடைந்த பத்திரிகையாளர்களும் அல் கோரை விமர்சிக்கின்றனர்.

உலகெங்கிலும் குறிப்பாக அமெரிக்க ஊடகங்கள், திட்டமிட்டு எதிர்த்த காரணத்தால் அல் கோர் கண்ட தீர்வுகள் நிராகரிக்கப்பட்டன. இது அவர்களில் பெரும்பான்மையோருக்கு ஓர் அசௌகரியமான உண்மை. கோர் தனது ஜிலீமீ கிssணீuறீt ஷீஸீ ஸிமீணீsஷீஸீ என்னும் புத்தகத்தில் இது பற்றி விவாதித்துள்ளார். மற்ற எல்லாக் காரணங்களையும்விடக் குருட்டுத்தனமான நம்பிக்கைகளுக்கும் அவநம்பிக்கைகளுக்கும் முடிவுகட்டினால்தான், புவி வெப்பமடைவதன் வெளிப்படையான காரணத்தைக் கண்டறிய முடியும் எனக் கோர் அப்புத்தகத்தில் கூறுகிறார்.

அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவர்களின் வழிவந்தவர்கள் ஐரோப்பிய ஞானோதயத்தின் தாக்கமுடையவர்கள் எனக் கோர் தெரிவிக்கிறார். இந்தத் தாக்கம் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்தது. ஆனால், நிக்ஸன்- அவரைவிட ரொனால்ட் ரீகன்- பதவிக்காலத்தில் இதற்கு அரசு ஆதரவும் கிடைத்தது. ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சியிலோ அவர்கள் அரசை ஆட்டுவிக்கும் சக்தியானார்கள். புஷ்க்குக் கீழ் வந்த குடியரசுக் கட்சி ஜனநாயகத்தன்மையிலிருந்து பேரரசுத் தன்மைக்குள் உருமாறிச் சென்றது. இரட்டைக் கோபுரத் தாக்குதலின்போது, ஏற்பட்ட உளவியல் தாக்கத்தை வெற்றிகரமாகப் பயன்படுத்தித் தங்களைக் கண்டு பயப்படும்படியான சூழலைக் குடியரசுக் கட்சிப் பேணி வளர்த்தது. மேலும், தங்களை அதிக அதிகாரமிக்கவர்களாக ஆக்கிக்கொள்வதில் அக்கட்சியினர் முழுக்கவனம் செலுத்தினர்.

இதன்படி புஷ்ஷும் அவரது நிர்வாகமும் சர்வதேசச் சட்டங்களை, நிறுவனங்களைக் கண்டித்ததோடு அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்திற்கும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், இவை எல்லாவற்றுக்கும் நிர்வாகத்தை மட்டுமே குற்றவாளி எனச் சொல்ல முடியாது. இந்நிலைக்காக அமெரிக்கக் காங்கிரஸின் மீது குற்றஞ்சாட்ட வேண்டும். ஈராக்கின் பல்லாயிரக் கணக்கான குடிமக்களின் மரணம் குறித்தோ வெளி நாட்டுக் கைதிகளைத் துன்பறுத்தியது குறித்தோ கவலைப்படாத புஷ்ஷிற்கு அமெரிக்கக் காங்கிரஸ் கட்டற்ற அதிகாரத்தை வழங்கியது.

காங்கிரஸ் புஷ்ஷின் ஆட்சியைக் கண்காணிக்கும் உரிமையைக் கைவிட்ட அதே சமயத்தில் பெரும்பாலான அமெரிக்க ஊடகங்கள் நடப்பதை வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன. புஷ்ஷிற்குப் பதிலாகக் கோர் அதிபராகியிருந்தால் உலக நாடுகளின் நிலையும் அமெரிக்காவின் நிலையும் மேம்பட்டிருக்கும் என தி நியூயார்க் டைம்ஸும் இறுதியாக அவர் புஷ்ஷை வென்றுவிட்டாரென தி வாஷிங்டன் போஸ்ட்டும் நோபல் பரிசு பெற்ற கோரைப் பாராட்டி எழுதிய தலையங்கங்களில் தெரிவிக்கின்றன.

ஆனால், புஷ்ஷும் கோரும் பங்கேற்றிருந்த 2000ஆம் ஆண்டுத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, இந்த இரு பத்திரிகைகளும் மற்ற ஊடகங்களும் தரித்திருந்த வேடம் என்ன! தங்களுடைய நிருபர்கள் கோரை ஒரு வேண்டாத பொருளாக நினைத்து அவரது தோல்விக்குப் பெரிய அளவில் காரணமானதை அவை அனுமதித்ததோடு புஷ்ஷைத் தலைவராக ஆரவாரத்துடன் ஏற்றுக்கொண்டன. தான் இணையத்தைக் கண்டுபிடித்ததாகக் கோர் உரிமை கோரவில்லை. இணையத்துக்குத் தேவைப்பட்ட சட்டப்பூர்வ ஒப்புதல் பெறுவதைத் தொடங்கிவைத்ததாகவும் செனட்டில் அதற்காகப் போராடி அதைப் பெற்றதாகவும் மட்டுமே அவர் தெரிவித்தார். ஆனால், இணையத்தைக் கண்டுபிடித்ததற்கான உரிமையை அவர் கோருவதாகச் செய்தித்தாள்கள் எழுதின. இவ்விஷயத்தைத் தொலைக் காட்சிகளும் கையிலெடுத்துக்கொண்டு அவரை ஏளனம் செய்தன.

சமீபத்தில் வானிட்டி ஃபேருக்கு அளித்த பேட்டியில் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் தன்னை இருட்டடிப்புச்செய்த சம்பவங்களைக் கோர் குறிப்பிட்டுள்ளார். அவரைக் குறைத்து மதிப்பிட்ட சில பத்திரிகைகள் இப்போது கோர் அதிபர் தேர்தலில் போட்டியிட வேண்டுமா என்பது குறித்து விவாதித்து வருகின்றன. இதுவும் அவர்மீது கொண்ட அபிமானத்தின் காரணமாக அல்ல; ஹில்லாரி கிளிண்டன்மீதுகொண்ட ஆழமான வெறுப்பினால்தான். அதிதீவிரப் பழமைவாதிகள் நோபல் பரிசைக் கோருக்குக் கொடுத்ததற்காக சுவீடிஷ் அகாடமியின் மீது கோபம்கொண்டுள்ளனர். அவர்கள் அகாடமியையும் கோரையும் கிண்டல் செய்வதற்காக அமைதிக்கான நோபல் பரிசு நம்பகத்தன்மையற்றது, சமூக மதிப்பற்றது ஏனெனில் அராஃபத் போன்ற தீவிரவாதிகளுக்கே இப்பரிசு தரப்பட்டுள்ளது எனக் கூறுகின்றனர். கம்போடியாவில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் ரகசியங்களை நிக்ஸனோடு இணைந்து கண்டுபிடித்ததற்காக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற டாக்டர். ஹென்றி கிஸ்ஸிஞ்ஜரைச் சாமர்த்தியமாகக் குறிப்பிடாமல் மறைத்துவிடுகின்றனர். இது அருவருப்பான செயல் என்பதைப் பற்றிய கவலையின்றித் தொடர்ந்து கோரை இழிவுபடுத்திவருகின்றனர். இத்தகைய நியாயத்துக்குப் புறம்பான ஊடகங்களின் பிரச்சாரத்தை எதிர்கொள்ளும்போது, அதிபர் தேர்தலில் மீண்டும் பங்கேற்பது குறித்த எண்ணம் இயல்பாகவே கோருக்கு ஒருமுறைக்கு இருமுறை ஏற்படும்.

2000இல் அதிபர் தேர்தலில் கோர் வெற்றிபெறாதது குறித்து இப்போது நியூயார்க் டைம்ஸ் வருந்துவதில் எந்தப் பயனுமில்லை. ஜார்ஜ் புஷ்ஷின் சகோதரரும் அப்போதைய ஃப்ளோரிடா கவர்னருமான ஜேப் புஷ் தொடங்கிவைத்த அதிகார வர்க்கத்தின் இழிவான உத்திகளால் அமெரிக்க உச்ச நீதிமன்றம் தவறான தீர்ப்பைக் கொடுத்தது. புஷ் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்பட்டார். தகுதிவாய்ந்தவரும் படிக்கும் பழக்கமுள்ளவருமான கோருக்குப் பதிலாகப் புஷ் அதிபரானார். அதிபராகும் தகுதியற்ற, படிக்கும் பழக்கமற்ற புஷ் அமெரிக்க வரலாற்றில் அந்நாட்டைத் தோல்விப் பாதையில் செலுத்தக்கூடிய மிக மோசமான அதிபர்.

கோருக்குக் கிடைத்த நோபல் பரிசு புஷ்ஷின் முகத்தில் மட்டுமன்றி ஒட்டுமொத்த அமெரிக்க ஊடகங்களின் முகத்திலும் கரியைப் பூசியுள்ளது. இது கவித்துமான நீதி.

நன்றி: டெக்கான் க்ரானிக்கிள் - சென்னை, 19.10.2007.
மொழிபெயர்ப்பு: ந. கவிதா, செல்லப்பா.

உள்ளடக்கம்

 

 

Google