ஆண் பாலியல் தொழிலாளர்கள் நிச்சயமாக இருக்க வேண்டும். ஆண்களுக்கும் பெண்களுக்குமான
விருப்பங்களில் எந்த வேறுபாடும் இல்லை.
தெஹல்கா 6.10.2007 இதழில் எழுத்தாளரும் பாலியல் தொழிலாளியுமான நளினி ஜமீலா.
பாலியல் தொழிலாளர்களை மையப்படுத்தித் தமிழில் வந்துள்ள முதல் படம் அல்ல, அம்முவாகிய
நான். பிறகு ஏன் இந்த முற்போக்கு ஆர்ப்பாட்டங்கள்? பல ஊடகங்கள் படத்தைப் பாராட்டித்
தள்ளியிருக்கின்றன. படத்தின் விளம்பரங்களிலும் முற்போக்குச் சாயல்கள்
ஒட்டிக்கொண்டிருக்கின்றன. நான் மிகவும் மதிக்கிற சில நண்பர்கள்கூட, இந்தப் படம்
பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கையைக் கதாநாயகியின் வழி பேசுவதாகக் கூறியது, படம்
பார்க்க நேர்ந்தபோது மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது.
படத்தின் கதை இதுதான்: எழுத்தாளரான கதாநாயகன், இந்திய இலக்கிய உலகின் உயரிய விருதை
வாங்கவேண்டும் என்னும் கோளாறான நோக்கத்துடன் 'தங்களைத் தேய்த்துக்கொண்டு பிறரை
உயர்த்தும் கடைநிலை மனிதர்களின்' வாழ்க்கையைப் படைப்பாகப் பதிவுசெய்ய விரும்புகிறான்.
அதன் பொருட்டு 'ராணி மடத்துக்கு'ப்போகும் அவன் அங்குள்ள அம்முவை மணக்கிறான். (அம்முவுக்கு
இந்தத் திருமணத்தில் பெரிதாக விருப்பமோ ஆர்வமோ இல்லை.) இலக்கிய விருது கிடைக்க
வேண்டுமானால் மனைவியைத் தன்னுடன் அனுப்ப வேண்டும் என விருதுக் குழுத் தலைவர் சொல்ல,
கணவனுக்குத் தெரியாமல் அவனிடம் போகும் அம்மு இறுதியில் அவன் தொடும்போது பொறுக்க
இயலாமல் அவனைக் கொல்வதுதான் கதை (கொலையும் செய்வாள் பத்தினி!). கதாநாயகனுக்கு விருது
கிடைக்கிறது.
கற்பு போன்ற விஷயங்களில் சர்ச்சைகள் வெடிக்கும்போது, அதன் 'புனித'ப் பிம்பங்களைப்
பாதுகாக்கும் பொருட்டு முற்போக்குவாதிகள் மவுனம் காப்பதோ அல்லது அவற்றை உயர்த்திப்
பேசுவதோ தமிழ்நாட்டில் சகஜந்தான். அந்த நோக்கிலேயே பாலியல் தொழிலாளியை இந்தப்
படத்தில் பிரதான கதாபாத்திரமாக வைத்திருப்பதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. பாலியல்
தொழிலாளர்களுக்குச் சட்டப் பாதுகாப்பும் சமூக அங்கீகாரமும் வேண்டும் என்கிற
யதார்த்தவாதம், இங்குள்ள முற்போக்குவாதிகளால் ஏற்றுக்கொள்ள முடியாதது. பாலியல்
தொழிலாளர்களை 'நல்வழிப்படுத்தி' அவர்களைக் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுத்துவதுதானே
இந்தப் பிரச்சினைக்குச் சரியான முற்போக்குத் தீர்வாக இருக்க முடியும்? அதற்கு இந்தக்
கதாநாயகனைப் போல(?) எத்தனை ஆண்கள் முன்வருவார்கள் என்பதை இப்போது
விவாதத்துக்குட்படுத்த வேண்டியதில்லை.
படம் பாலியல் தொழிலாளி ஒருவரது பார்வையில் செல்கிறது என்பது படத்தைப் பற்றி
முன்வைக்கப்படும் முற்போக்குவாதங்களில் ஒன்று. ஆனால், பெண் பார்வையை முற்றிலுமாகப்
புறந்தள்ளுகின்றன என நாம் விமர்சிக்கும் கமர்ஷியல் படங்களைவிட இந்தப் படம் ஆண்
பார்வையை அதிகமாக வலியுறுத்துகிறது.
முற்போக்கு எழுத்தாளன், சர்ச்சைகளில் சிக்கிக்கொள்பவன், கடைநிலை மனிதர்களின்
வாழ்க்கையைப் பதிவு செய்ய விரும்புகிறவன் தாலிக்கும் அது சார்ந்த பண்பாடுகளுக்கும்
தரும் முக்கியத்துவம் அலாதியானது. அம்முவின் கழுத்தில் அவன் தாலி கட்டும்போது, அவள்
தலையைக் குனிந்துகொண்டிருக்க வலியுறுத்துகிறான். அப்போது அவளது குழந்தைத்தனம் அவனை
உறுத்துகிறது. அதேபோல 'ராணி மடத்தில்' கதாநாயகன் முதலில் தேர்ந்தெடுக்கும் பாலியல்
தொழிலாளியின் கழுத்தில் உள்ள தாலி அவனை உறுத்துகிறது. அவள் அதைக் கழற்ற
யத்தனிக்கும்போது மறுத்து வெளியேறுகிறான் ('கௌரிதான் எனக்குத் தாலியின்
முக்கியத்துவத்தை உணர்த்தினார்' என்று பின்னால் அந்தத் தொழிலாளி பேசுவது போல ஒரு
வசனம் வேறு). அவளுடைய கணவன்தான் அவளை அங்குச் சேர்த்தான் என்றும் மாதா மாதம் அவன்
தவறாமல் கலெக்ஷனுக்கு வந்துவிடுவான் என்றும் அந்த இடத்தின் தலைவி சொல்வது அவனுக்கு
அதிர்ச்சியாக இருக்கிறது.
ஆனாலும், கடைநிலை மனிதர்களின் வாழ்க்கையைப் பதிவுசெய்ய வேண்டும் என்று விரும்பும்
கதா நாயகன் இந்தத் தொழிலாளியைத் தனது கதையின் நாயகியாகத் தேர்ந்தெடுக்காததில்
ஆச்சரியம் எதுவும் இல்லை. அவனைப் பொறுத்தவரை குளித்து பூஜைமுடித்துத் தனது
நெற்றியில் திருநீறு பூசும் அம்முதான் கதையின் நாயகியாக இருக்க முடியும்.
அம்முவுக்குப் பாலியல் தொழிலாளியாக வாழ்வதில் எந்தச் சிக்கலும் இல்லை. 'இதில் நான்
சந்தோஷமாகவே இருக்கிறேன்' என அவள் இயல்பாகப் பேசுகிறாள். அந்த இடத்திலுள்ள
மற்றவர்களைப் போல அவள் சூழ்நிலை நெருக்கடிகளால் அங்கு வந்து சேரவில்லை. அந்த
இடத்திலேயே வளர்ந்ததால் அவள் பாலியல் தொழிலாளியாக மாறுகிறாள். அப்படி மாறுவதால்
அவளது இயல்புகளும் சிதைந்துவிடவில்லை. அவளது குழந்தைத்தனம் படத்தில் அடிக்கடி
பிரதிபலிப்பதும் முக்கியமான விஷயம்.
கலெக்ஷனுக்காகத் தன் மனைவியைப் பாலியல் தொழிலுக்கு அனுப்பும் கணவனிடம் 45 லட்சம்
ரூபாய் பெறுமானமுள்ள வீட்டைக் கொடுத்திருந்தால் அவன் மனைவியைக் கதாநாயகனுடன்
நிரந்தரமாக அனுப்பிவைக்க ஒப்புக்கொண்டிருப்பான். அப்படிச் செய்யாமல் அம்முவுக்காக
அந்த வீட்டை ராணி மடத்திடம் ஒப்படைப்பதற்குப் பின் என்ன நோக்கம் இருக்க முடியும்?
பாலியல் தொழிலாளி ஒருவருக்கு வாழ்வு கொடுக்க முன்வரும் எழுத்தாளன், திருமணமான
பாலியல் தொழி லாளிக்கு வாழ்வுகொடுக்க முன் வருமளவுக்கு ஏன் 'முற்போக்காக
இருக்கவில்லை?'
எல்லாவற்றுக்கும் ஒரே பதில்தான் இருக்க முடியும். கணவனால் பாலியல் தொழிலுக்கு
அனுப்பிவைக்கப்படும் பெண் கதாநாயகியாக இருந்தால், நாவலை வாசிப்பவர்களின் கவனம்
அவள்மீது விழும். (ஒரு முன்முடிவோடுதான் கதாநாயகன் மடத்துக்குப் போகிறானோ எனத்
தோன்றுகிறது.) ஆனால், எந்தவிதப் பரிதாபப் பின்புலமும் இல்லாத அம்முவை நாயகியாகக்
கொண்டால், பாலியல் தொழிலாளியை மணந்த எழுத்தாளக் கதா நாயகனின் மேன்மைகளைச் சுற்றியே
நாவல் இருக்கும் (அம்முவைப் பற்றி எழுதத்தான் என்ன இருக்கிறது?). நாவலை
வாசிப்பவர்கள் அம்முவின் மீது பெரிதாகக் கரிசனப்படாமல் நாயகனின் மேன்மையைச்
சிலாகித்துப் பேசுவார்கள்.
படத்தின் ஒவ்வொரு காட்சியமைப்பும் கதாநாயகன் பாலியல் தொழிலாளிக்கு வாழ்வு கொடுப்பதை
உரக்கப் பறைசாற்றிக்கொண்டிருக்கிறது. படம் முழுக்கக் கதாநாயகனின் இந்தத்தயைகாட்டும்
(condescending) அணுகு முறை விரவியிருக்கிறது.
"எங்கேயோ எப்படியோ பேர் தெரியாத நோயால் காணாமப் போயிருக்க வேண்டிய நான், இன்னிக்கு
உன்னால இப்படியொரு வாழ்க்கை வாழ்ந்துக் கிட்டிருக்கேன்" எனக் கதாநாயகனிடம் அம்மு
கூறுகிறாள்.
"ஹிஸ்டிரியில ஏதோ ஒரு எடத்துல நின்னுட்டீங்க சார்" என அம்முவை மணந்த கதாநாயகனிடம்
அம்முவின் முன்னாள் கஸ்டமர் ஒருவர் சொல்கிறார். இவை கதாநாயகனைப் பாராட்டிப்
பேசப்படும் வசனங்கள். இன்னும் எத்தனையோ பேசப்படாத இடங்களிலுங்கூடக் கதாநாயகனின்
மேன்மைகள் படத்தில் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றன.
படத்தின் கதாநாயகன் பார்த்திபன், பெண்களை நேரடியாக இழிவுபடுத்தும் புதிய பாதை, உள்ளே
வெளியே போன்ற திரைப்படங்கள் மூலம் தன் பயணத்தைத் தொடங்கியவர். இலக்கியவாதிகள்மீது
இவருக்கு என்ன கோபமோ தெரியவில்லை, சமீபகாலமாக எழுத்தாளராக நடிக்க
ஆரம்பித்திருக்கிறார். முற்போக்கு எழுத்தாளராக இவர் நடித்த தென்றல் படத்திலும் இதே
போலத்தான்.
ஆனால், அம்முவாகிய நான் பார்த்திபனின் முந்தைய எல்லாப் படங்களையும் அடித்துவிடுகிறது.
பாலியல் தொழில்செய்யும் இடத்தை விரசமில்லாமல் காட்டுகிறார்கள், பாலியல் தொழிலாளிகளை
ஆபாசமாகக் காட்டவில்லை என்று இந்தப் படத்துக்குப் பாராட்டுகள் வேறு. உண்மையில்
படத்தை இயக்கியவருக்குப் பாலியல் தொழிலாளிகள் பற்றியோ அவர்கள் தொழில் செய்யும்
இடங்கள் பற்றியோ எந்த அறிவும் இருப்பதாகத் தெரியவில்லை. படத்தில் காமெடி இல்லையாம்.
கதாநாயகன் கௌரி சங்கர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும், பெண்களுக்கு எதிரான
அநீதிகளைக் கண்டு பொங்கியெழும் எழுத்தாளராக இருப்பது எவ்வளவு பெரிய காமெடி!
படத்தின் அசலான நோக்கம் பாலியல் தொழிலாளிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதோ அவர்களது
பிரச்சினைகளைப் பேசுவதோ அல்லது அதற்குத் தீர்வு சொல்ல வேண்டும் என்பதோ அல்ல.
அம்முவாகிய நான், கதாநாயகனையும் இயக்குநரையும் ஹிஸ்டிரியில் ஏதோ ஒரு இடத்தில்
நிறுத்திவிட வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட படம். |