பேசத் தொடங்கும் இசைக் கலைஞர்கள் மீதான அபிப்ராயம் 'கச்சேரி குறைஞ்சிடுத்தில்லையா
அதான் பேச ஆரம்பிச்சுட்டான்' என்பதாக வெளிப்படும் யதார்த்தத்தைக் குறிப்பிட்டுப்
பேச்சினை ஆரம்பித்த சஞ்சய் சுப்பிரமணியன் தனது பேச்சு முழுவதும் அங்கங்கே அன்றைய
அற்றைத்திங்களில் கலகலப்புகளை உண்டாக்கியவாறே தனக்குரிய தனித்துவத்தை
வெளிப்படுத்தினார்.
பெரிய மீசை, முகத்தில் ஆளுமையின் கம்பீரம் என்று கச்சேரிகளிலும் புகைப்படங்களிலும்
பார்த்தவர்களுக்கு நகரத்து இளைஞன் போன்று வந்த இந்த சஞ்சயின் தோற்றம் கணநேர
வித்தியாசத்தை உணரச் செய்தது.
இன்றைக்கு ஒரு பாட்டாவது பாடுவாரா எனக் கேட்ட இசை ஆர்வலர்களுக்கு இந்த
நிகழ்ச்சியில் பாடச் சொன்னாக்கூடப் பாடமாட்டார் என்று விளையாட்டாக வந்த பதில் சற்றே
ஏமாற்றத்தைத் தந்தாலும் அப்பொழுது திரையிடப்பட்ட ப்ரஸன்னா ராமஸ்வாமியின் ஆவணப்படம்
அந்த ஏமாற்றத்தைப் போக்கியது.
சஞ்சய் சாதகம் செய்யும் இடங்களில் தொடங்கிச் சமையலறை வரையிலும் கேமிரா
ஒளிபாய்ச்சுகையில் இசையின் அதிர்வுகள் அந்த வீடெங்கும் நிறைந்து கிடப்பதை
ரசனையோடுகாண முடிந்தது.
ஆலாபனைகளில் உச்சகட்டத்தை எட்டும்போது அவரது முகபாவமும் உடல் மொழியும் இசையைக்
கடந்து நமக்குள் ஏற்படுத்தும் உணர்வுபூர்வமான மாற்றத்தை இந்த ஆவணப் படமும்
கண்டுகொள்ளச் செய்திருந்தது.
தனது ஒவ்வொரு மேடையேற்றத்திலும் தன்னைத்தானே வியக்கவைக்கும்படியான இசை
தன்னிடமிருந்து வெளிப்பட வேண்டும். அது நிச்சயமாகப் பார்வையாளர்களையும் அதிசயிக்கச்
செய்யும் என்று நினைத்துத் தனது முயற்சிகளை மெருகூட்டும் அவரை எழுத்தாளர் யுவன்
சந்திரசேகர் அறிமுகப்படுத்தினார்.
காலச்சுவடு நேர்காணலுக்காகச் சந்தித்ததும் அதன்பிறகு தொடர்ந்த நட்பும்
பன்முகத்தன்மைகளையும் இசையில் புதிய பரிமாணங்களையும்கைக்கொண்டு தனித்துவத்தைச்
சாத்தியமாக்கியிருக்கும் இந்தக் கலைஞனைத் தனக்கு நெருக்கமானவராக்கியிருக்கிறது
என்று தனது உரையில் குறிப்பிட்டார் யுவன்.
கிரிக்கெட், செஸ் என்று விளையாட்டுகளில் ஆர்வங்காட்டிய வயதில் வயலின்
கற்றுக்கொண்டதும் அதைப் பாதியில் விட்டுவிட்டுத் தற்செயலாக வாய்ப்பாட்டு
கற்றுக்கொள்ளத் தொடங்கியதுமாக இளமைப் பருவத்தின் திட்டமிடாத செயல்பாடுகளைப்
பகிர்ந்துகொண்டார் சஞ்சய். இசைதான் தனக்கான விஷயம் என்று தீர்மானித்த பிறகு அதன்
களங்களில் தேடலைத் தொடர முனைந்தும் புதிய முயற்சிகளைச் செய்துபார்க்க
நினைப்பதுமாகத் தொடர்கிற அவரது இசைப்பயணம் தனித்துவமிக்க இசைக்கலைஞராக அவரை
அடையாளங் காட்டியிருக்கிறது.
தமிழ்ப் பாடல்களை அதிகமாகப் பாடும் இந்தக் கலைஞருக்கு ஒரே பாணியில் பாடி
அரங்கத்தில் கைதட்டல்களைப் பெறும் நோக்கமில்லை. மாறாக, அதிக வரவேற்பினைத் தரும்
இசைப் பாணியைப் பின்பற்றிப் பார்வையாளர்களின் அமோக எதிர்பார்ப்பினைப்
பெற்றுவிட்டால் அதே எல்லைகளுக்குள் மீண்டும் மீண்டும் பாடல்களைத் தர
வேண்டியிருக்கும். ஒரு கட்டத்தில் இந்தப் பாணி பெரும் அலுப்பைத் தந்துவிடும் என்கிற
சஞ்சய் ஒவ்வொரு மேடையேற்றத்திலும் ஏதாவது ஒரு இசைப் பகுதியையாவது மிகச் சிறப்பாகத்
தந்துவிட முயற்சிப்பதாகச் சொல்கிறார்.
கோயில்களிலும் திருவிழாக்களிலும் கர்நாடக இசைக்கான இடம் குறைந்துபோனதும் சபாக்கள்
மட்டுமே கர்நாடக இசை நிகழ்ச்சிகளை நடத்தும் இடங்களாக மாறிப்போனதும் இந்த இசை
எல்லோருக்குமானதாக இல்லாமலிருப்பதற்கு மிக முக்கியமான காரணங்கள். பிராமணர்கள்
கர்நாடக சங்கீதத்தை நலிவடையாமல் ஏற்றிப் பிடித்துக்கொண்டிருப்பதால் சாஸ்திரிய
சங்கீதத்திற்கான முக்கியத்துவமிக்க இடம் இன்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதை
நிறைவேற்றுவதில் தவறில்லை. என்றாலும் தமிழ்ப் பாடல்களுக்கு உரிய அங்கீகாரத்தைத்
தரவேண்டும் என்றார் சஞ்சய்.
காலச்சுவடுடன் ஏற்பட்ட தொடர்பிற்குப் பிறகு தன் நவீன இலக்கிய வாசிப்பு
விரிவடைந்திருப்பதாகச் சொன்னதோடு பிராமணர்/பிராமணர் அல்லாதோருக்கு இடையிலான
முரண்கள் குறித்த ஒரு கேள்விக்கு இந்தப் போட்டிகள் பிராமணரல்லாதோரிடமிருந்தும்
திறன்மிக்க கலைஞர்கள் உருவாகக் காரணமாக இருக்கும். இசைக்கும் வளம் சேர்க்கும் என்று
பதிலளித்தார் தற்போது மூத்த நாதஸ்வரக் கலைஞர் ஒருவரிடம் தனது இசையறிவிற்குச்
செழுமையூட்டிக்கொண்டிருக்கிறார்.
குழந்தைகளுக்குப் புரியும்படியான ரசிக்கும்படியான பாடல்களை இசை வடிவாக்கம் செய்தல்,
இசை நாடகம் ஒன்றை உருவாக்குதல் போன்ற எதிர்காலச் செயல்பாடுகளுக்கான விஷயங்கள்
அவரிடம் நிறைய இருக்கின்றன, கூடவே மிக நீண்ட தேடலும்.
இந்நிகழ்வை ஸ்ரீதேவி தொகுத்து வழங்கினார். |