Google   www kalachuvadu.com

 

பதிவு: மீண்டும் காகங்கள், 5.8.2007, நாகர்கோவில்
தன் பிரதிபலிப்புடன் உரையாடல்
மா. சுப்பிரமணியன்
'மீண்டும் காகங்கள்' ஒன்பதாம் கூட்டத்தில் (5.8.2007) சக்கரியா உரையாற்ற எடுத்திருந்த புத்தகங்களின் ஆளுமை/எதேச்சதிகாரம் என்னும் தலைப்பே வந்திருந்தோரை நிமிர்ந்து உட்காரச் செய்தது. ஊடகங்கள்-குறிப்பாகத் திரைப்படமும் தொலைக்காட்சியும்-மட்டுமே மக்களைத் திசை திருப்புகின்றன, புத்தகங்கள் அறிவுப் பாதையில் பயணம் செய்வன என்னும் நமது நம்பிக்கையைத் தகர்த்துவிடும் அளவில் அவரது உரை இருந்தது.

எழுத்தை நேசிக்கும் நாம் படித்து உணர்ந்த அனைத்தையும் உண்மை என ஏற்றுக்கொள்வதில்லை. சிலவற்றை அப்படியே ஏற்றுக்கொள்கிறோம். பெரும்பான்மையானவற்றை நமது அடிப்படை அறிவின் மூலம் ஆராய்ந்து ஒரு சிலவற்றை ஒதுக்கிவிடுகிறோம். மருத்துவரின் பரிந்துரைகளை நம்பி ஏற்கிறோம். இருப்பினும் உயிரின் மதிப்பை உணர்ந்து கவனமாக மருந்து மாத்திரைகளை ஒப்பிட்டு உட்கொள்கிறோம்.

இலக்கியம் குறித்து சுந்தர ராமசாமி எழுதியதையும் தமிழ்நாட்டின் முன்னேற்றம் குறித்து முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எழுதியவற்றையும் படிக்கும்போது, திறந்த மனத்துடன் வாசிக்கிறோம். நம் மனத்தில் எதிர்வினைகள் தோன்றும். இலக்கியக் கொள்கைகளையும் அரசியல் கருத்துகளையும் கேள்விக்குட்படுத்துகிறோம். நோம் சோம்ஸ்கி, டெரிடா ஆகியோரைப் படிக்கும்போது, அவர்களின் கருத்துகளை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம் அல்லது நிராகரிக்கிறோம். அவர்கள் எழுத்தை ஆய்வுக்குட்படுத்தி எதிர்வினையாற்றுகிறோம். இப்புத்தகங்களின் மேல் ஏற்கனவே ஑ஏற்றிவைக்கப்பட்டுள்ளஒ கருத்துகள் நம்மைப் பாதிப்பதில்லை. நமது அணுகுமுறையில் சுதந்திரம் இருக்கும். புரிதலில் பிறர் தலையீடு இருப்பதில்லை.

ஆனால், புனித நூல்களையோ அரசியல், மதம் சார்ந்த சித்தாந்த நூல்களையோ கையாளும்போது, நம் சுதந்திரம் செயல்திறனை இழந்துவிடுகிறது. கேள்வி கேட்கும் மனநிலை மறைந்துவிடுகிறது. ஆய்வு மனப்பான்மை அடியோடு ஒதுங்கிவிடுகிறது. புனித நூல்களின் சொற்கள் சராசரி மனிதனுக்கு உயர்வும் மதிப்பும் மிக்கதாகத் தோன்றுகின்றன. அறிவுக்கு அடைபடாத நிலையில் அவை உள்ளதாக நம்புகிறான். இறைவனின் சொற்களை ஆராய்வதும் கேள்விக்குட்படுத்துவதும் தண்டனைக்குரிய செயல்கள் எனக் கருதுகிறான். அதனை மீறிச் செயல்படும்போது, இறைவனைவிட்டு விலகிச் செல்லும் உணர்வும் பாவம் புரிந்து தண்டனைக்குக் காத்திருக்கும் அச்ச உணர்வும் அவனை ஆட்கொள்கின்றன. எனவே, திறந்த மனத்துடன் புனித நூல்களைப் படிப்பதில்லை. இந்நூல்கள் சிறுவயதிலேயே நமக்கு அறிமுகமாகிவிடுகின்றன. பெற்றோர்கள், ஆசிரியர்கள், மதகுருமார்கள் ஆகியோர் கூறிய கருத்துகள் சிறுவனின் ஆழ்மனத்தில் பதிந்து உறைந்து விடுகின்றன. அவர்கள் உண்மை எனக் கூறியவற்றை நம்பி வளர்கிறான். முன்னோர்கள் கூறியவை காலங்காலமாய்த் தலைமுறைகளுக்கு வழங்கப்பட்டு இன்றும் தொடர்கின்றன.

புனித நூல்களில் கூறப்பட்டுள்ள வலிமையான பகுதிகள் மிகைப்படுத்தப்பட்டுச் சுட்டிக்காட்டப்படும் அதே வேளையில், ஏற்றுக்கொள்ள முடியாத நலிந்த பகுதிகள் நம் பார்வையிலிருந்து மறைக்கப்படுகின்றன, அல்லது நம் புரிதலுக்கு அப்பாற்பட்ட இறைத் தன்மையுடைவை என ஒதுக்கப்படுகின்றன. பைபிள், குரான், பகவத்கீதை என அனைத்து மத நூல்களும் குருமார்களின் வரையறுக்கப்பட்ட நோக்கங்களின் அடிப்படையில் உரையளிக்கப்பட்டு, விளக்கப்பட்டு, நம் புரிதலை அவர்கள் வழியிலேயே செல்லும் வகையில் மாற்றிவிடுகின்றன.

இயேசுபிரான் மனிதராகப் பிறந்தவர். அவருக்குச் சகோதரர்களும் சகோதரிகளும் இருந்தனர். பைபிளில் கூறப்பட்டுள்ள இவ்வுண்மையினை நாம் அறிந்துகொள்வதற்கு அந்நூல் குறித்த முன்முடிவுகள் நமக்குத் தடையாகின்றன. இயேசுபிரான் ஆண்டவரின் புதல்வர், இறைவனின் அருளால் மேரி அன்னையின் வயிற்றில் அவதரித்தார் எனக் கூறப்பட்டவை நமக்கு பைபிளை ஆராயத் தடை ஏற்படுத்தி விடுகின்றன.

நம்மால் திறந்த மனத்துடன் படிக்க முடியாத இன்னொரு நூல், பகவத்கீதை. கிருஷ்ணபகவான் அர்ஜுனனுக்குக் கூறிய அருளுரை ஆய்வுக்கு அப்பாற்பட்டது என முன்னோர்களால் கூறப்பட்டுவருகிறது. ஓநான் முழுமையானவன். அனைத்திற்கும் அதிபதி. நீ வேறு எங்கும் செல்ல வேண்டாம். என்னிடம் சரணடைஔ எனக் கூறுகிறார் கிருஷ்ண பகவான். அவர் கூறியன அனைத்தும் இறைவாக்கு. எனவே, கேள்விக்கு அப்பாற்பட்டவை.

குரானும் விதிவிலக்கல்ல. நபிநாயகத்தின் அருளுரைகள் அவர் வாழ்க்கை அனுபவத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டுள்ளன. இருப்பினும் அந்நூலின் மேல் ஏற்றிவைக்கப்பட்டுள்ள முன்முடிவுகள் நம்மைக் கேள்வி எழுப்ப இயலாமல் தடுக்கின்றன.

அரசியல் சிந்தனை நூல்களும் இதில் அடங்கும். கார்ல் மார்க்ஸின் எழுத்தைப் புரிந்துகொள்ள முற்படும் நம்மை ஑உதவுகிறோம்ஒ என்னும் போர்வையில் நம் தலைவர்கள் அவர்கள் புரிதலை நம் சிந்தனையில் ஏற்றிவிடுகின்றனர். அந்நூலின் மேல் அவர்கள் ஏற்றிவிட்ட ஒளிவட்டம் இறைத் தன்மை பெற்று நம் ஆய்வுக்கு அப்பாற்பட்ட நூலாக அதனை மாற்றிவிடுகிறது.

பழமைக்கும் பாரம்பரியத்திற்கும் உலகம் முழுவதும் மதிப்பு அளிக்கும் ஢மனநிலை உள்ளது. ஓஅதாவது 5000 வருடப் பழமையானது எனில் உண்மையானதாகத்தான் இருக்கும், கேள்விக்குரியதல்லஔ என்னும் மனப்போக்கு நம்மிடமுள்ளது. 5000 வருடங்களுக்கு முன்பு சொல்லப்பட்ட சில கருத்துகள் இன்று பொருத்தமில்லாதவையாக இருக்கும். ஆனால், அவற்றை நாம் கேள்வி கேட்க முடியாது.

இயேசுபிரான் ஏழை மக்களுக்குக் கூறிய எளிய சொற்களுக்கு இறைத் தன்மையோடு இலக்கிய மதிப்பும் அளிக்கிறோம். இந்து, இஸ்லாம், பவுத்தம் என அனைத்து மத நூல்களும் மிகப் பழமையானவையே. அந்நூல்கள் இன்றும் நிலைத்திருப்பதற்கு என்ன காரணம்? அவற்றில் கூறப்பட்டுள்ள சில கருத்துகள் பொதுவான உண்மைகளைத் (uஸீவீஸ்மீக்ஷீsணீறீ tக்ஷீutலீ) தாங்கி நிற்கின்றன. அவை மட்டுமே நமக்கு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்படுகின்றன. பல பகுதிகள் நம்பகத்தன்மையைச் சீர்குலைத்துவிடும் அளவிலானவை. அவற்றைப் படிப்பதற்கு நமக்குப் பலவிதமான தடைகள்.

உலகம் தட்டையானது; சொர்க்கம், பூமி, கிரகங்கள் ஆகியன குறித்துச் சமய நூல்கள் கூறுவனவற்றை இன்று ஏற்றுக்கொள்ள இயலாதபடி அறிவியல் அறிவு நம்மிடம் வளர்ந்துள்ளது. ஆனால், புனித நூல்களைப் படிக்கும்போது இம்மாற்றங்களை நாம் கண்டு கொள்வதில்லை. ஒதுக்கிவிடுகிறோம்.

இங்கிலாந்தில் புதிய ஏற்பாடு - பைபிளை மாணவர்களுக்கு அளிக்கும்போது, ஒரு முன்னுரையோடு தருகிறார்கள். அந்நூலில் கூறப்பட்டுள்ள பல நிகழ்வுகள் மத நம்பிக்கையை வளர்க்கக் கூறப்பட்டனவாகும். அறிவியல்பூர்வமாக அந்நிகழ்வுகள் சாத்தியமானவையல்ல என்று முன்னுரையில் கூறுகின்றனர். ஆனால், இங்கோ சமய நூல்களில் கூறப்பட்டுள்ளவற்றை அப்படியே ஏற்கிறோம். பாலைவனப் பிரதேசத்தில் மணலிலிருந்து விடுபடப் பரிந்துரைக்கப்பட்ட ஆடைகளை மத நம்பிக்கையின் அடிப்படையில் இந்தியாவில் பயன்படுத்துகிறோம். பெண்களைப் பாதுகாக்கும்படி புனித நூல்கள் கூறியுள்ளதாக நம்புகிறோம்.

புனித நூல்களைக் கண்மூடித்தனமாக நம்பும்படி குழந்தைப் பருவத்தில் இருந்தே பல நிலைகளில் நிர்ப்பந்திக்கப்பட்டு வருகிறோம். மதம், கடவுள், பாரம்பரியம் ஆகியவற்றின் மீதான கண்மூடித்தனமான நம்பிக்கை நமது கேள்விப் புலத்தை மழுங்கடித்துவிடுகிறது. புனித நூல்களைக் கேள்வி கேட்பது, ஆய்வுக்குட்படுத்துவது தவறு என அறிவுறுத்தப்படுகிறது. நாளடைவில் கடவுள், மதம், பாரம்பரியம் ஆகியவற்றின் பெயரால் நடத்தப்படும் வன் முறைகளும் கேள்விக்கு அப்பாற்பட்டவையாக மாறிவிடுகின்றன. அயோத்தி இடிப்பும் செப்டம்பர் 11 தாக்குதலும் நியாயப்படுத்தப்படுகின்றன.

மதத்தை நம்பும் சிறுவன் கேள்வி கேட்பதை மறந்துவிடுகிறான். மதத்திலிருந்து மக்களாட்சிக்கும் மறதிநிலை வந்துவிடுகிறது. கேள்விக்கு அப்பாற்பட்ட இறைவனைப் போன்றே அரசியல் தலைவர்களும் மக்கள் மனத்தில் உருமாறிவிடுகின்றனர். தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளுடைய காலில் விழுவதும் கேரளாவில் நேதாக்களுக்குத் ஑தாலப்பொலிஒ அளிப்பதும் மதத்திலிருந்து கொண்டுவரப்பட்டனவாகும். மூடநம்பிக்கைகள் வளர்ந்துவிட்டன. நரபலியும் தேவையற்ற சடங்கு, சம்பிரதாயங்களும் மலிந்து காணப்படுவதற்குக் காரணம் மதமே! மூடநம்பிக்கையை ஒழிக்க நினைக்கும் நாம் அதன் சிருஷ்டிகர்த்தாவான மதத்தைக் கண்டுகொள்வதில்லை.

எனவே, புனித நூல் பாரம்பரியம், உயர்ந்த சிந்தனை மரபு போன்றவற்றைக் கண்மூடித்தனமாக நம்பவும் கூடாது, தேவையில்லை என்று ஒதுக்கிவிடாமல் திறந்த மனத்துடன் கேள்விக்கும் ஆய்வுக்கும் அனைத்தையும் உட்படுத்த வேண்டும். திருமணம் குறித்து நபிகள் மாறுபட்ட கருத்தை ஏன் கூறுகிறார்? காவலர்களிடமிருந்து இயேசுபிரான் ஐந்துமுறை மனிதர்களைப்போல் ஏன் ஓடித் தப்பித்தார் என அனைத்தையும் கேள்வி கேட்க வேண்டும்.

உலகம் முழுவதும் பல கடவுள்கள் தோன்றியுள்ளனர். ரோம், கிரேக்க நாட்டுக் கடவுள்கள் இன்று இல்லை. அவர்களது நாகரிகத்தின் அழிவோடு மறைந்துவிட்டனர்.

எனவே, இறைவன் குறித்த உண்மைகளை நாம் நமது குழந்தைகளுக்குச் சரியாகச் சொல்லித்தர வேண்டும். கண்மூடித்தனமாக நம்பத் தேவையில்லை என உணர்த்த வேண்டும். அனைத்து மதக் கடவுள்களும் உயர்ந்தவர்கள் என்று அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். மதமும் கடவுளும் மனித சமுதாயத்திற்குத் தேவை. அவை உயர்ந்த பண்பாட்டின் அடையாளச் சின்னங்கள் என அவர்கள் உணர வேண்டும்.

஑நமது மதமே சிறந்ததுஒ என்னும் எண்ணம் அவன் மனத்தில் ஒரு போதும் வரக்கூடாது. மதத்தின் சிறப்புகளையும் பாரம்பரியத்தின் பெருமைகளையும் சுட்டிக்காட்டி அவற்றின் குறை, நிறைகளைச் சிறுவனுக்குக் கற்றுத்தர வேண்டும்.

புத்தகங்களின் ஆளுமையால் சமுதாயத்தில் மதவாதமும் தீவிரவாதமும் தோன்றுகின்றன. அதற்குத் தீர்வு, திறந்த மனத்துடன் கூடிய வாசிப்பு மட்டுமே. சமய நூல்கள், அரசியல் சிந்தனை நூல்கள், பாரம்பரியத்தைக் கடைபிடிக்கத் தூண்டும் நூல்கள் போன்றவற்றை ஒதுக்க வேண்டியதில்லை. அவற்றின் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை வைக்காமல், திறந்த மனத்துடன் வாசிக்க வேண்டும்.

இவ்வாறு சக்கரியா தமது உரையை முடித்துக்கொண்டார்.

பின்னர் நடைபெற்ற கேள்வி அரங்கில் முனைவர் ராஜாராம், மைதிலி சுந்தரம், எஸ்.வி. ஷாலினி, பெர்னார்ட் சந்திரா, செல்லப்பா, ஸ்ரீதர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

உள்ளடக்கம்

 

 

Google