Google   www kalachuvadu.com

 

பதிவு: 'சுந்தர ராமசாமி விருது' வழங்கும் விழா
14.10.2007, நாகர்கோவில்
கண்மணி குணசேகரன்:
மண் சார்ந்த எழுத்து
மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் நினைவாக நாகர்கோவிலில் உள்ள நெய்தல் அமைப்பு இளம் படைப்பாளிகளுக்கான சுந்தர ராமசாமி விருதினை 2007ஆம் ஆண்டு முதல் வழங்குகின்றது. இவ்வாண்டின் விருதுக்குரிய படைப்பாளியாகக் கண்மணி குணசேகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். எழுத்தாளர்கள் பாவண்ணன், சுகுமாரன், அரவிந்தன் ஆகிய மூவரடங்கிய நடுவர் குழு விருதுக்குரியவரைத் தேர்வுசெய்தது.

கண்மணி குணசேகரனின் படைப்புகள், மண் சார்ந்த வாழ்வியல் யதார்த்தத்தைத் தம் அழகியலாகக் கொண்டுள்ளன. கண்மணி குணசேகரன் தலைமுறைக் கோபம், காற்றின்பாடல் என்னும் இரண்டு கவிதைத் தொகுப்புகளையும் உயிர்த் தண்ணீர், ஆதண்டார் கோயில் குதிரை, வெள்ளெருக்கு என மூன்று சிறுகதைத் தொகுப்புகளையும், கோரை, அஞ்சலை ஆகிய இரண்டு நாவல்கயையும் எழுதியிருக்கிறார்.

விருத்தாசலத்திற்கு அருகிலுள்ள மணக்கொல்லை கிராமத்தில் பிறந்த கண்மணி குணசேகரனின் வயது முப்பத்தி ஆறு.

14.10.07 அன்று நாகர்கோவிலில் இவ்விருது வழங்கும் விழா நடைபெற்றது. பத்தாயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் பாராட்டிதழும்கொண்ட இவ்விருதினைக் கண்மணி குணசேகரனுக்கு நாஞ்சில்நாடன் வழங்கினார். மலையாளக் கவிஞர் வினயன் சிறப்புரை ஆற்றினார். தேர்வுக்குழுவின் அறிக்கையைக் கவிஞர் சுகுமாரன் வாசித்தார். விருது குறித்தும் தன் வாழ்வு மற்றும் படைப்புகள் குறித்தும் பேசிய கண்மணி குணசேகரனின் ஏற்புரை பலரையும் கவர்ந்தது.

நிகழ்வில் இந்த விருது உருவான பின்னணி பற்றியும் விருதுக்குரிய படைப்பாளியைத் தேர்ந்தெடுக்க நடுவர் குழு பின்பற்றிய விதிமுறைகள் குறித்தும் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது.

அதிலிருந்து சில பகுதிகள்:

சுந்தர ராமசாமியின் பங்களிப்பு எழுத்தாளர் என்னும் நிலையில் மட்டும் ஒதுங்கிவிடுவதல்ல. இலக்கியத்தின் வெவ்வேறு பிரிவுகளிலும் கலாச்சாரச் செயல்பாடுகளின் பல தளங்களிலும் அவரது ஆழமான அக்கறைகள் படர்ந்திருந்தன. சக மனிதனைப் பற்றிய பரிவுகொண்ட எவரும் வெறும் எழுத்தாளனாக மட்டுமே தன்னை முடக்கிக்கொள்வது இயலாது என்னும் சமகால உண்மையை அதிகம் உணர்ந்தவராகவும் அதற்கிசையச் செயல்பட்டவராகவும் சுந்தர ராமசாமி இருந்தார். இந்த உணர்வின் விளைவாகப் புதிய தலைமுறை இலக்கியவாதிகளுடனும் வாசகர்களுடனும் தொடர்ந்து உரையாடல் நடத்துபவராக இருந்தார். மூத்த எழுத்தாளர் ஒருவர் சமகால எழுத்துடனும் பண்பாட்டு நடவடிக்கைகளுடனும் கொள்ளும் உறவாக இதைக் குறிப்பிட வேண்டும். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கத் திரண்டவர்களில் பெரும்பான்மையோர் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள் என்பது இந்த உறவின் நிரூபணம்.

எனவே, சுந்தர ராமசாமியின் நினைவைப் போற்றும் விதத்தில் நிறுவப்படும் விருதைப் புதிய தலை முறையைச் சேர்ந்த படைப்பாளி ஒருவருக்கு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இன்றைய தலைமுறையைச் சேர்ந்த நாற்பது வயதுக்குட்பட்ட படைப்பாளி ஒருவருக்கு வழங்கலாம் என்றும் முதல் இரண்டு ஆண்டுகளுக்குப் படைப்பாக்கங்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மட்டும் விருது வழங்கலாம் என்றும் திருத்தங்கள் சேர்க்கப்பட்டன. நெய்தல் அமைப்பின் நிறுவனரான கிருஷ்ணன் விரும்பியதற்கிணங்க மூன்று பேர்கொண்ட நடுவர் குழு உருவானது. மூவரும் தனித்தனியாகவும் இலக்கிய நண்பர்களுடனும் கலந்து உரையாடி விவாதங்கள் நடத்திய பின்னர் சுந்தர ராமசாமி விருது பற்றிய அறிவிப்பு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. அதில் இரண்டு மாதக் காலத்துக்குள் பரிந்துரைகளை அனுப்பும்படி கேட்டுக்கொண்டிருந்தோம். இலக்கியத்தை சீரிய செயல்பாடாகக் கருதும் எழுத்தாளர்கள், வாசகர்கள், இலக்கிய ஆர்வலர்கள் எவரும் விருதுக்காகப் பரிந்துரை செய்யலாம் என்றும் அறிவித்திருந்தோம். இலக்கிய இதழ்களிலும் இணையதளங்களிலுமாக வெளியிடப்பட்ட இந்த அறிவிப்புக்குக் கிடைத்த எதிர்வினை உற்சாகமூட்டக்கூடியதாகவே இருந்தது. கடிதங்கள் மூலமாகவும் குறுஞ்செய்திகளாகவும் தொலைபேசி வாயிலாகவும் வாய்மொழிப் பதிவாகவும் பரிந்துரைகள் செய்யப்பட்டன. அவை அனைத்தும் பதிவுசெய்யப்பட்டன.

விருது அறிவிப்பைத் தொடர்ந்து வந்த நாள்களில் பதிவுசெய்யப்பட்ட எல்லாப் பரிந்துரைகளும் தேர்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. வாசகர்களும் ஆர்வலர்களும் பதிப்பாளர்களும் நண்பர்களும் பரிந்துரைத்திருந்தனர். ஓரிரு எழுத்தாளர்கள் தங்களைத் தாங்களே பரிந்துரைத்துக்கொண்டார்கள். சிலர் நண்பர்கள் வாயிலாகப் பத்துக்கு மேற்பட்ட பரிந்துரைக் கடிதங்களை அனுப்பியிருந்தனர். பத்தும் ஒரே கையெழுத்தில் இருந்தது குறிப்பிடத்தகுந்த செய்தி. இதுவரை நிறைய கவிதைகளை எழுதிவைத்துள்ள கவிஞர் ஒருவர் இந்த விருது தனக்கே வழங்கப்பட வேண்டும் என்று கேட்டிருந்தார். விருதுத்தொகை மூலம் தன்னுடைய வறுமை நீங்குமென்றும் தமிழுக்குப் புதிய கவிஞர் ஒருவர் கிடைப்பாரென்றும் உத்தரவாதமளித்திருந்தார். எழுதி வெளியான படைப்புளை முன்னிருத்தியே விருதுக்கான படைப்பாளியைத் தேர்ந்தெடுப்பது என்னும் நடுவர் குழுவின் விதிமுறை புதிய கவிஞர் ஒருவரைத் தமிழுலகுக்கு அறிமுகம் செய்யும் வாய்ப்பைத் தடைசெய்துவிட்டது.

நெய்தல் அமைப்புக்குக் கிடைத்திருந்த 41 பரிந்துரைகளுடன் நடுவர் குழுவின் பரிந்துரைகளும் சேர்த்து முதற்கட்டத் தேர்ந்தெடுப்பு நடைபெற்றது. இந்தக் கட்டத்தில் தேர்வுக்குரியவையாக இருந்த பெயர்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அவை: யூமா. வாசுகி, ஜே.பி. சாணக்யா, திலகபாமா, ஃபீனிக்ஸ், மாலதி மைத்ரி, சல்மா, என். ஸ்ரீராம், குமரி தேவன், பிரேம் - ரமேஷ், சு. வேணுசக்தி, பிரான்சிஸ் கிருபா, கண்மணி குணசேகரன், மாரம்பாடி பாஸ்கர், மனுஷ்யபுத்திரன், ஆ. இரா. வேங்கடாசலபதி, ஜோ. டி. குரூஸ்.

இந்த வரிசையிலிருந்து நாற்பது வயதைக் கடந்த சிலரது பெயர்கள் நீக்கப்பட்டன. மிக அதிகமானவர்களால் பரிந்துரைக்கப்பட்டும் யூமா. வாசுகியின் பெயர் விலக்கப்பட்டதற்கு இந்த விதி காரணம். படைப்பிலக்கியத்துக்கு வழங்கப்பட்டிருந்த முன்னுரிமை விதியால் ஆ. இரா. வேங்கடாசலபதி உள்ளிட்ட ஓரிரு பெயர்கள் விலக்கப்பட்டன. அச்சேற்றப்பட்டு வெளியாகாத படைப்பைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதில்லை என்ற விதியின் கீழ் ஒரு பெயர் நீக்கப்பட்டது. இதிலிருந்து இரண்டாம் கட்டப் பரிசீலனைக்கான புதிய பட்டியல் உருவாக்கப்பட்டது. அதில் இடம்பெற்றிருந்த பெயர்கள் வருமாறு. ஜே.பி. சாணக்யா, பிரான்சிஸ் கிருபா, மாலதி மைத்ரி, சல்மா, என். ஸ்ரீராம், ஜோ.டி. குரூ, கண்மணி குணசேகரன், மனுஷ்ய புத்திரன்.

கிடைக்கப்பெற்ற பரிந்துரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் மூன்றாம் பட்டியல் உருவானது. அதில் இடம்பெற்றிருந்தவர்கள் சல்மா, மனுஷ்யபுத்திரன், பிரான்சிஸ் கிருபா, கண்மணி குணசேகரன் ஆகியோர் பரிந்துரைகளின் மதிப்பீட்டின்படி பெற்றிருந்த புள்ளிகள் சார்ந்து இந்த வரிசை உருவானது. இந்தக் கட்டத்தில் மூவர் அடங்கிய நடுவர் குழுவின் பரிந்துரையும் கணக்கில் கொள்ளப்பட்டது. நடுவர் குழுவிலிருந்த இருவரின் பரிந்துரையில் ஜே.பி. சாணக்யாவின் பெயரும் என். ஸ்ரீராமின் பெயரும் இடம்பெற்றிருந்தன. அதைத் தவிர விருதுக்குரியவர்களாக முன்வைக்கப்பட்ட பெயர்களில் மாறுதல் எதுவும் இருக்கவில்லை. இதுவரையிலான படைப்பாக்க முயற்சிகள், படைப்புகளில் வெளிப்படும் பன்முக அக்கறைகள், படைப்பாக்கச் செயல்பாட்டுக்கான முனைப்பு ஆகியவற்றை முன்னிருத்தி விவாதம் நடத்தியதில் கண்மணி குணசேகரன் முன்னிலை பெற்றார். அவரையே விருதுக்குரியவராகத் தேர்ந்தெடுப்பது என்னும் தீர்மானத்தை மூவரும் ஏக மனதாக மேற்கொண்டோ ம். அந்த அடிப்படையில் கண்மணி குணசேகரனை 2007ஆம் ஆண்டுக்கான 'சுந்தர ராமசாமி விருது' பெறுபவராகத் தேர்வுசெய்திருப்பதை நடுவர் குழுவின் சார்பில் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.

கடலூர், விருத்தாசலம் பகுதிகளை உள்ளடக்கிய நடுநாட்டு மனித வாழ்க்கையே கண்மணி குணசேகரனின் புனைகளம். அவர் விவசாயிகளின் எழுதித் தீராத துன்பத்தையே தன் படைப்புப் பொருளாக்குகிறார்.

அறியப்படாத களத்தையும் சூழலையும் சமகால இலக்கியத்தில் முதன்மை பெறச்செய்யும் படைப்பாற்றலுக்காகக் கண்மணி குணசேகரன் இந்த ஆண்டுக்குரிய 'சுந்தர ராமசாமி விருதை'ப் பெறுகிறார். அவருக்கு வாழ்த்துகள்.

உள்ளடக்கம்

 

 

Google