பாகிஸ்தானில் நடந்துள்ள குண்டுவெடிப்புகள் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை
ஏற்படுத்தியுள்ளன. முன்னாள் பிரதமர் பெனாஸிர் புட்டோ சுமார் எட்டு ஆண்டுகளுக்குப்
பிறகு அக்டோ பர் 18ஆம் தேதி நாடு திரும்பியபோது, நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில்
139 பேர் கொல்லப்பட்டுள்ளனர், இருநூறுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கின் காரணமாக அதிபர் தேர்தலில் அதிக
வாக்குகளைப் பெற்றுங்கூட அதிகாரபூர்வமாக அதிபராக அறிவிக்கப்படாமல் 'திரிசங்கு'
நிலையில் இருக்கும் முஷாரபுக்கு இந்தக் குண்டுவெடிப்பில் பெனாஸிர் உயிர் பிழைத்தது
பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. முஷாரப்பின் தேர்தல் தொடர்பாக அக்டோ பர்
இறுதிக்குள் நீதிமன்றம் தனது முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடி அதிகரித்துவந்த நிலையில் மீண்டும் அதிபர் பதவிக்கு
வரும் நோக்கத்தோடுதான் பெனாஸிர் புட்டோ வுடன் முஷாரப் ரகசிய ஒப்பந்தம் ஒன்றைப்
போட்டுக்கொண்டார். நவாஸ் ஷெரீப் காலத்தில் பெனாஸிர்மீது போடப்பட்ட ஊழல் வழக்குகளைத்
திரும்பப்பெறுவதற்கான அவசரச் சட்டம் ஒன்றையும் அவர் கொண்டுவந்தார். அடுத்த
ஜனவரியில் நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் பெனாஸிர் கலந்துகொண்டு மீண்டும் பிரதமர்
ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்காகவே பெனாஸிர் நாடு திரும்பினார். அவரை
வரவேற்று அழைத்துவந்த ஊர்வலத்தில்தான் இந்தக் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன.
பாகிஸ்தானில் இப்படியான குண்டுவெடிப்புகள் நடப்பது சகஜந்தான் எனினும் இது மிகவும்
கோரமானதாகும்.
1999 அக்டோ பரில் அதிரடியான ராணுவப் புரட்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய
முஷாரப் கடந்த எட்டு ஆண்டுகளாக ராணுவம், சிவில் நிர்வாகம் இரண்டையும் தனது
கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். பாராளுமன்ற முறையைப் பின்பற்றுவதாகக்
கூறிக்கொண்டாலும் சுமார் பதினாறு கோடி மக்கள்தொகைகொண்ட பாகிஸ்தான், பெரும்பாலும்
ராணுவத் தளபதிகளாலேயே ஆளப்பட்டு வருகிறது. தளபதி முகமது அயூப்கான் என்பவரே அங்கு
ராணுவ ஆட்சிக்கு விதை போட்டவர். 1969இல் அவர் ராணுவத் தளபதி யாகியாகானிடம் ஆட்சியை
ஒப்படைத்தார். அதற்குப் பிறகு நடத்தப்பட்ட தேர்தலில் கிழக்குப் பாகிஸ்தானில்
எதிர்பாராதவிதமாக ஷேக் முஜிபுர் ரஹ்மானின் ஆவாமி லீக் வெற்றி பெற்றது. அதை ஏற்க
மறுத்த யாகியாகானின் கொடூரமான அடக்குமுறை காரணமாக இந்தியாவின் ராணுவத் தலையீட்டால்
கிழக்குப் பாகிஸ்தான் துண்டாடப்பட்டு வங்கதேசம் என்னும் தனிநாடு உருவெடுத்தது.
அதன்பின் பாகிஸ்தானின் ஆட்சி அதிகாரம் புட்டோ விடம் கையளிக்கப்பட்டது. ஆனால், அது
வெகுகாலம் நீடிக்கவில்லை. தளபதி ஜியா உல் ஹக் தலைமையிலான ராணுவப் புரட்சி புட்டோ
வின் பதவியைப் பறித்தது மட்டுமின்றி அவரைத் தூக்கிலிட்டுக்கொன்றது. 1988இல் ஜியா
உல் ஹக் சென்ற விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதற்குப் பிறகு பெனாசிர் புட்டோ
பொறுப்புக்கு வந்தார்.
பெனாசிர் புட்டோ வின் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்காததால்
அவர் சிறுசிறு கட்சிகளின் உதவியோடு ஆட்சி அமைத்தார். அப்போது தற்காலிக அதிபராக
இருந்த குலாம் இஷாக் கான் என்பவர் ராணுவத்தின் ஆதரவைப் பெற்றிருந்தார். தன்னை
அதிபராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற முன்நிபந்தனையோடுதான் பெனாஸிரை அவர்
ஆட்சியமைக்க அழைத்திருந்தார். ஜனநாயக முறையிலான ஆட்சி நடப்பதாகத்
தோற்றமளித்தாலுங்கூட ராணுவந்தான் அப்போது அதிகாரத்தைக் கையில் வைத்திருந்தது.
அதிபர் குலாம் இஷாக் கான் மூலமாக அடிக்கடி ஆட்சி மாற்றங்களை ராணுவம் நிகழ்த்தி
வந்தது. நீதி அமைப்புங்கூட அப்போது ராணுவத்தின் செல்வாக்குக்கு உட்பட்டதாக
மாறிவிட்டது. பெனாசிர் புட்டோ வும் நவாஸ் ஷெரீபும் பாகிஸ்தான் ராணுவத்துக்குப்
பிடித்தமானவர்களாக இல்லை. அவர்கள் இருவரையும் பிரித்தாளும் சூழ்ச்சி மூலமாக ராணுவம்
தனது விருப்பத்துக்கு ஏற்பக் கையாண்டு வந்தது. அதைச் சமாளிக்க 1997இல் பெனாசிர்
புட்டோ வும் நவாஸ் ஷெரீபும் ஒரு உடன்பாட்டுக்கு வந்தனர். மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைப்பதற்கு அதிபருக்கு அதிகாரமளிக்கும் அரசியலமைப்புச்
சட்டப்பிரிவை நீக்குவதற்கு அப்போது ஆட்சியிலிருந்த நவாஸ் ஷெரீபுக்குப் பெனாசிர்
புட்டோ வின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆதரவளித்தது. இதனால் ஆத்திரமடைந்த ராணுவம்,
நாவஸ் ஷெரீபைக் கவிழ்க்க நேரம் பார்த்துக்கொண்டிருந்தது. இறுதியாக 1999 அக்டோ பரில்
அப்போது ராணுவத் தளபதியாக இருந்த முஷாரப் அதிரடிப் புரட்சியை நடத்தி ஆட்சியைக்
கைப்பற்றினார்.
முஷாரப் அதிகாரத்துக்கு வந்ததற்குப் பிறகு பாகிஸ்தானின் மிதவாத அரசியல் தலைவர்களாக
இருந்த பெனாசிர் புட்டோவும் நவாஸ் ஷெரீபும் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.
இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சிகள் ஊக்குவிக்கப்பட்டன. 2002ஆம் ஆண்டு ஒரு
பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில் பத்து சதவீதம் பேர்தான் வாக்களித்தனர் என்று
எதிர்க்கட்சிகள் கூறின. அந்தத் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்பே முஷாரப் ஒரு
ஆணையைப் பிறப்பித்தார். இரண்டுமுறை பிரதமராக இருந்தவர்கள் மூன்றாம் முறை பதவி
வகிக்க அதன் மூலம் அவர் தடை விதித்தார். பெனாசிரும் நவாஸ் ஷெரீபும் திரும்பவும்
ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே அந்த ஆணையை முஷாரப் பிறப்பித்தார்.
அதிபராகத் தொடர்ந்து பதவியில் நீடிக்க முஷாரப் பல்வேறு தந்திரங்களை
முயற்சித்துவருகிறார். இதற்காக அவர் பெனாஸிர் புட்டோ வை அபுதாபியில் சந்தித்துப்
பேச்சுவார்த்தை நடத்தினார் எனச் செய்திகள் வந்தன. அதிபராக மீண்டும் அவர்
தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்றால் ராணுவத் தளபதி என்னும் பொறுப்பை ராஜினாமா செய்ய
வேண்டுமென்று பெனாஸிர் அப்போது வலியுறுத்தியதாகக் கூறப்பட்டது. பாகிஸ்தான்
அரசியலில் ராணுவத் தலைமைப் பொறுப்பே சக்தி வாய்ந்தது என்பதை உணர்ந்துதான் பெனாஸிர்
இந்த நிபந்தனையை முன்வைத்தார். ஆனால், முஷாரப் அதற்கு உடன்படவில்லை. மீண்டும்
தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பிறகு தளபதி பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வதாக
அறிவித்து வேறுவிதமான சமரசம் ஒன்றை அவர் செய்துகொண்டார்
பாகிஸ்தான் அதிபரைப் பொதுமக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுப்பதில்லை. செனட் மற்றும்
நேஷனல் அசெம்பிளி எனப்படும் பாராளுமன்றத்தின் உறுப்பினர்களும் அங்குள்ள நான்கு
மாகாணங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்களும் சேர்ந்துதான் அதிபரைத்
தேர்ந்தெடுப்பார்கள். 2002இல் நடத்தப்பட்ட தேர்தலில் உருவாக்கப்பட்ட இந்த
அமைப்புகளின் ஐந்தாண்டு ஆயுள்காலமும் டிசம்பரில் முடிவடைய உள்ளது. அதற்குள் அதிபர்
தேர்தலை நடத்தி அந்த உறுப்பினர்களைக் கொண்டு மீண்டும் அதிபராகத் தன்னை
அமர்த்திக்கொள்வதற்காகவே இப்போது அவர் தேர்தலை நடத்தினார். அதன் முடிவைத்தான்
நீதிமன்றம் இப்போது நிறுத்தி வைத்துள்ளது.
அமெரிக்காவைத் திருப்திப்படுத்துகிற அதேவேளை தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்ள மதத்
தீவிரவாத அமைப்புகளையும் முஷாரப் ஆதரித்துவருகிறார். பாகிஸ்தானின் வடமேற்கு எல்லை
மாகாணத்தில் ஆட்சி நடத்தும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகளுக்கு
அல்கய்தாவுடன் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதுபோலவே பாகிஸ்தான் முழுவதும்
பரவியுள்ள பத்தாயிரத்துக்கும் அதிகமான மதரஸாக்களும் முஷாரப்புக்குத் தலைவலியை
ஏற்படுத்திவருகின்றன. பாகிஸ்தானில் உள்ள முஸ்லீம்களில் எண்பது சதவீதம் பேர் சன்னிப்
பிரிவைச் சேர்ந்தவர்கள், எஞ்சியவர்கள் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள். இந்த இரு
பிரிவினருக்கிடையே நடக்கும் மோதல் இன்னொரு சிக்கலாகும்.
வடமேற்கு எல்லை மாகாணத்தில் பெரும்பகுதியாக இருக்கும் பஷ்டூன் இனத்தவர் இப்போது
முஷாரப்பின் கட்டுப்பாட்டில் இல்லை. அவர்கள் தங்களுக்கென்று தனிநாடு வேண்டும் என்று
கோரிவருகின்றனர். அப்படித் தனிநாடு ஒன்று அமைந்தால் அது பயங்கரவாதிகளின் புகலிடமாக
மாறிவிடும் என்று அமெரிக்கா அஞ்சுகிறது.
பாகிஸ்தானில் பழங்குடியினர் வாழும் வடக்குப் பகுதிகளில் நேரடியான அரசாங்கம்
கிடையாது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்க அமைப்பு அந்தப் பகுதிகளை நிர்வகிப்பதில்லை.
நியமிக்கப்பட்ட சில நபர்களே அதை நிர்வகிக்கின்றனர். பாகிஸ்தானின் சட்டங்களோ
நீதிமன்றங்களோ அங்கே செல்லு படியாவதில்லை. பழங்குடியினரின் சட்டங்களே அந்தப்
பகுதிகளில் நடைமுறையில் உள்ளன. மதத் தீவிரவாதக் குழுக்களின் 'லஷ்கர்' என்னும்
படைகளே அங்கு ஆதிக்கம்செய்கின்றன. 'ஆப்கானிஸ்தானில் நடந்ததுபோலத் தாலிபான்களின்
செல்வாக்கு அந்தப் பகுதிகளில் அதிகரித்துவருகிறது. வடக்கு வஸாரிஸ்தானின் தலைநகராக
இருக்கும் மிரம்ஷா என்னும் ஊரில் சிறு குற்றம் இழைத்தாலும் அவர்களைச் சுட்டுக்
கொன்று அவர்களின் சவங்களை விளக்குக் கம்பங்களில் கட்டித் தொங்கவிட்டுவிடுகிறார்கள்.
பெண்கள் படிக்கக்கூடாது என்பதால் பெண்கள் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன.
முடிதிருத்தும் கடைகளும் மூடப்பட்டாயிற்று. போலியோவுக்குச் சொட்டுமருந்து போடுவதும்
ஊசி போடுவதும் மதவிரோதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்களின் தாடியின் நீளத்தையும்
பெண்கள் அணியும் சல்வாரின் அளவையும் அவ்வப்போது பரிசோதிக்கவும் பொதுமக்கள் ஒழுங்காக
மசூதிக்கு வருகிறார்களா எனச் சோதிக்கவும் கண்காணிப்புக் குழுக்கள்
அமைக்கப்பட்டுள்ளன' என்று இஸ்லாமாபாதில் உள்ள காயிதே இ ஆஸம் பல்கலைக்கழகத்தில்
பேராசிரியராயிருக்கும் பர்வேஸ் ஹூத்பாய் என்பவர் கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார்
(http://www.dawn.com/2007/10/21/op.htm) பஜோர் மாவட்டதில் கார்
என்னும் ஊரிலும் மிரம்ஷாவிலும் பெண்கள் பள்ளிகளைத் தாலிபான் ஆதரவாளர்கள் குண்டு
வைத்து தகர்த்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச் சூழலில் தனது பதவியைக்
காப்பாற்றிக் கொள்வதற்காக மதத் தீவிரவாதிகளோடு முஷாரப் சமரசஞ்செய்து
கொண்டிருக்கிறார் என்ற விமர்சனம் பரவலாக உள்ளது.
வாஷிங்டனைச் சேர்ந்த 'டெர்ரர் ஃப்ரீ டுமாரோ' என்னும் அமைப்பு அண்மையில்
பாகிஸ்தானில் ஆய்வு ஒன்றை நடத்தியது. 63 சதவீத பாகிஸ்தானியர்கள் பெனாஸிர் புட்டோ வை
ஆதரிப்பதாக அதில் தெரிய வந்தது. அதுமட்டுமின்றி ஒசாமா பின்லேடனை 43 சதவீத மக்கள்
பகிரங்கமாக ஆதரிப்பதும் அந்த ஆய்வில் வெளிப்பட்டது.'அமெரிக்காவின் வெளியுறவுக்கான
கவுன்சில்' சமீபத்தில் பாகிஸ்தான் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலும் இதுபற்றிப்
பேசியுள்ளது. ''அல்கய்தா மற்றும் தாலிபான் ஆதரவாளர்களை ஒடுக்குவதில் பாகிஸ்தான்
ராணுவம் தோல்வியடைந்துவிட்டது. அவர்கள் பழங்குடியினரின் ஆதிக்கத்தில் உள்ள
எல்லைப்புற மாகாணங்களில் தமது செல்வாக்கை விரிவுபடுத்திவருகிறார்கள். அதைத்
தடுப்பதற்கு முஷாரப் அரசு தவறிவிட்டது'' என அந்த அறிக்கையில்
சுட்டிக்காட்டியுள்ளனர். பாகிஸ்தானியர்களைப் போலவே பாகிஸ்தான் ராணுவத்தின் ஒரு
பகுதியினரும் பின்லேடன் ஆதரவாளர்களாக உள்ளனர் என்றும் அந்த அறிக்கை
குறிப்பிட்டுள்ளது. தீவிரவாதிகளுக்குப் பணிந்துபோகும் முஷாரப் ''பயங்கரவாதத்துக்கு
எதிரான போரில்'' இனி அவ்வளவு பயன்படமாட்டார் என்று முடிவு செய்துவிட்டதால்தான்
பெனாஸிர் புட்டோ வைப் பாகிஸ்தானுக்கு அனுப்ப அமெரிக்கா தீர்மானித்தது. இதை
முஷாரப்பும் அறிவார், அல்கய்தா ஆதரவாளர்களுக்கும் இது புரியும்.
இப்போது பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு அமெரிக்காவே பெரிதும் காரணம்.
ஆப்கானிஸ்தானில் இருந்த ஆட்சியை அகற்றுவதற்காகப் பாகிஸ்தானில் மத அடிப்படைவாதத்தை
அமெரிக்கா ஊக்குவித்தது. ஆயுதக் குழுக்களை உருவாக்கியது. அப்படி அமெரிக்காவால்
வளர்க்கப்பட்ட 'பூதம்' ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றத்தை நடத்தியதோடு
ஓய்ந்துவிடவில்லை. இப்போது அது அமெரிக்காவையே காவுகேட்கும் அளவுக்கு விஸ்வ ரூபம்
எடுத்துவிட்டது.
தனது வரத்துக்குத் தானே பலியாவதிலிருந்து தப்பித்து ஓடும் நிலைக்கு அமெரிக்கா
இப்போது ஆளாகியுள்ளது. பாகிஸ்தானில் மத அடிப்படை வாதத்தையும் தாராளமயத்தையும்
சேர்த்து முடிச்சுப்போட அமெரிக்கா செய்த முயற்சி தோற்றுப்போனதால்தான் இப்போது
மிதவாத ஆட்சியொன்றை அங்கே ஏற்படுத்துவதற்கு அது திட்டமிடுகிறது. அடிப்படை
வாதத்துக்கு எதிரான சக்திகளை அங்கே பலப்படுத்தி எதிர்ப்பின் இலக்கை மாற்றிவிட
அமெரிக்கா முயற்சிக்கிறது. ஆனால், அமெரிக்காவின் இந்தத் திட்டத்தை அங்குள்ள
அடிப்படைவாத சக்திகள் அனுமதிக்கப்போவதில்லை. அதன் அடையாளந்தான் இந்தக்
குண்டுவெடிப்புகள்
பாகிஸ்தானின் அரசியலை உற்றுநோக்கினால் அங்கே முஷாரப் மட்டுமல்ல, பெனாசிரும்
தாக்குப்பிடிக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ளலாம். அமெரிக்காவைச் சார்ந்து
இருந்தாலும் இந்திய எதிர்ப்பு அரசியலின் மூலமாகத்தான் அங்குள்ள அரசியல்வாதிகள்
பிழைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஜனவரி மாதத்தில் நடக்கவுள்ள பொதுத்தேர்தலில்
வெற்றிபெற்று பெனாஸிர் பிரதமரானாலும் நிலைமை பெரிதாக மாறிவிடப்போவதில்லை. அதன்பிறகு
உருவெடுக்கும் முஷாரப், பெனாசிர் கூட்டணியும் இந்திய எதிர்ப்பு என்கிற அதே அரசியல்
ஆயுதத்தைத்தான் பயன்படுத்த வேண்டியிருக்கும். இதனால் தென்னாசியப் பிராந்தியத்தில்
பதற்றம் அதிகரிக்கும். அது பாகிஸ்தானைப் பாதிப்பது மட்டுமின்றி இந்தியாவின் உள்
நாட்டு அரசியலிலும் எதிரொலிக்கும்.
(கட்டுரையாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்) |