|

ஜரதுஷ்ட்ரா
இவ்வாறு கூறினான்
இலக்கியம் / தத்துவம்
நீட்ஷே
தமிழில்: ரவி
முதல் பதிப்பு: அக்டோபர் 2006
பக். 424. ரூ. 225 |
சைவ சித்தாந்தம் பற்றிய கருத்தரங்கு ஒன்று 1944இல் நடந்தது. அதில் தலைமை
தாங்கிப் பேசிய பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை, தமிழர்கள் ஐரோப்பியத்
தத்துவஞானத்தைப் பற்றிச் சரியாகத் தெரிந்துகொள்ளாத வரையில் தத்துவஞானம் என்று
பேசுவது இறையியல் பற்றிய பேச்சாகவே அமைந்துவிடுகிறது என்றும் இதற்கு உடனடியாக
வில்டூரண்ட் எழுதிய தத்துவஞானத்தின் வரலாறு போன்ற நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்க
வேண்டும் என்றும் கூறினார். அவருடைய நோக்கம் 60 ஆண்டுகள் கழிந்த பின்னும்
நிறைவேற்றப்படவில்லை. என்றாலும், மேலைநாட்டுத் தத்துவம் தொடர்பான சில சிறிய
நூல்களும் கட்டுரைகளும் வௌதவந்துள்ளன. ஆனாலும், தத்துவ இயலுக்கும் இறையியலுக்கும்
வேறுபாடு காணத் தெரியாத சூழல்தான் இன்றும் நிலவி வருகின்றது.
இந்நிலையில் உலக அறிஞர்களால் பல வகையில் விமர்சிக்கப்பட்ட ஜெர்மன் நாட்டுத்
தத்துவவாதி நீட்ஷேவால் எழுதப்பட்ட ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான் என்னும் புகழ்பெற்ற
நூல் தமிழில் முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டு வௌதவந்துள்ளது. முதலில் இது பெரிதும்
வரவேற்கப்பட வேண்டிய விஷயம். ஆயினும், இத்தகைய நூல்களைப் புரிந்துகொண்டு
வாசிப்பதற்கான ஒரு பின்புலம் வேண்டியுள்ளது. அத்தகைய பின்புலம் தமிழ்ச் சூழலில்
இல்லை. இந்த நூலை மொழிபெயர்த்தவர் அத்தகைய சூழலைப் பற்றிய சிறுகுறிப்புகளையும்
நீட்ஷேயின் மற்ற நூல்களைப் பற்றிய கருத்துகளையும் சுருக்கமாகத் தொகுத்துத்
தந்திருக்க வேண்டும். அப்படிக் கொடுத்திருந்தால் இத்தகைய ஆழமான நூலைப் பயில்வதற்கு
அது ஒரு விளக்காக நின்று துணைபுரிந்திருக்கும்.
தமிழில் நீட்ஷேயைப் பற்றி எழுதப்பட்டுள்ளவை மிகவும் குறைவே. ராகுல
சாங்கிருத்தியாயன், ஆனந்த குமாரசுவாமி, ஸிஸிர் குமார் மைத்ரா போன்றவர்களின் சிறிய
மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும் பிரேமா பிரசுரம் வௌதயிட்டுள்ள சிந்தனையாளர் நீயெட்ஸே
என்னும் மலர்மன்னன் எழுதிய நூலும் உள்ளன. இவற்றில் மலர்மன்னன் எழுதிய நூல்
சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பாவில் 15, 16ஆம் நூற்றாண்டுகளில் தோன்றி வளம்பெற்ற 'மறு மலர்ச்சி'ச்
சிந்தனைகள்தான் மேல் நாட்டுத் தத்துவஞான வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமைந்தன.
அதற்கு முந்தைய காலத்தில் மனிதர்களைப் பற்றிக்கொண்டிருந்த தரவரிசையான மேல், கீழ்
என்பது அடித்து நொறுக்கப்பட்டு அனைவரும் சமம் என்னும் கொள்கையின் பிறப்பே நவீன
சமுதாய நாகரிகமாகக் கருதப்பட்டது. கொள்கை அளவில் புரட்சிகரமான இத்தகைய கருத்துகள்
நடைமுறையில் முழுமை பெறாமல் சிதைவுகளை நோக்கி நகர்ந்தன. அது மதவாதம், தேசிய வாதம்,
மொழிவாதம், நிறவாதம் போன்ற பிரச்சினைகளின் ஊடாகத் தன்னுடைய கோரமான முகத்தைக்
காட்டியது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற ஜனநாயக முழக்கங்கள்
சொல்லளவில் பேரொலியாக வெடித்துக் கிளம்பினாலும், செயலளவில் அது நொடித்துப்போனது.
19ஆம் நூற்றாண்டின் ஐரோப்பா இதைத்தான் வெளிப்படுத்தியது. புரட்சிகரமான சிந்தனைகள்
மக்கள் சமூகத்தைப் புதிய திசையில் பயணிக்க வைத்தாலும், தொடர்ந்துவரும் காலங்கள்
மக்கள் மனங்களின் மீது இழிவுகளையும் அவமானத்தையும் மகிழ்வுடன் சுமந்து செல்லும் மன
அமைப்பை ஏற்படுத்துவது எது? என்னும் கேள்வி அடுத்து வந்த சிந்தனையாளர்களைத்
திகைப்புடன் எதிர்கொண்டது. இதற்கான விடையைத் தேடியவர்களில் ஷோபன்ஹாரும் நீட்ஷேயும்
குறிப்பிடத்தக்கவர்கள்.
இந்தப் பிரச்சினைகளை இவர்கள் எதிர்கொண்ட காலத்தில் வேதங்களும் உபநிடதங்களும்
பகவத்கீதை, மனுநீதி போன்ற நூல்களும் ஜெர்மன், ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகளில்
அச்சிடப்பட்டு வெளிவந்துவிட்டன. (இந்த நூல்கள் சமஸ்கிருத மொழிகளிலும் அச்சுருவம்
பெறுவதற்கு அடுத்து நூறு ஆண்டுகளாகக் காத்திருக்க வேண்டியிருந்தது. சுருக்கமாகக்
கூறினால் நவீனமயப்பட்ட இந்தியர்கள் இந்த நூல்களைப் பார்ப்பதற்கு வெகுகாலத்திற்கு
முன்பாகவே ஐரோப்பிய அறிஞர்கள் இவற்றைப் படித்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்
தக்கது.)
ஷோபன்ஹாரும் நீட்ஷேயும் தங்கள் காலத்து நெருக்கடிகளைத் தீர்க்கும் ஆற்றல் இந்தியத்
'திருநூல்'களில் நிறைய இருப்பதாகவே நம்பினார்கள். கிறித்துவப் போதனைகள் போன்று
பொதுமக்களுக்கு அறிவுரை கூறுவதாக அமையாமல் தனி நபர்களின் ஈடேற்றத்தை வலியுறுத்தி
இந்திய நூல்கள் பேசுவதை நடைமுறைச் சாத்தியமானதாகப் பார்த்தனர். ஒரு நாளும்
நடைமுறைக்கு வராத ஈவு, இரக்கம், அன்பு போன்றவற்றைப் பேசும் பைபிளைவிடத் தங்களுடைய
காலத்திலும் நடைமுறையில் இருந்துகொண்டிருப்பதைப் பேசுகின்ற இந்திய நூல்கள்
சிறப்பானவை என்றனர்.
இத்தகைய நூல்களைப் பற்றி ஷோபன்ஹார் கூறுகின்றார், "மேலும் ஒருவன் வேதங்களால்
விளைகின்ற நலன்களைப் பெறுவானானால் அந்நலன்களைப் பெறுமாறு வழிவகுத்துத் தந்த
உபநிடதங்களை நினைத்தல் வேண்டும். சமஸ்கிருத இலக்கியத் தொடர்பால் விளைய இருக்கும்
பலன்கள் மிகவும் போற்றத்தக்கனவாக அமையும். 15ஆம் நூற்றாண்டில் கிரேக்க இலக்கிய
மறுமலர்ச்சியினால் விளைந்த பலன்களைவிட ஆழமான பலன்களைச் சமஸ்கிருத இலக்கியத்
தொடர்பினால் இந்நூற்றாண்டு ஏனைய, கழிந்த நூற்றாண்டுகளைவிடப் பெரிதும் வாய்ப்பாகப்
பெற்றுத் திகழ்கிறது. இந்தியத் தொல்ஞானத்தை விளக்கும் திருநூல்களை நன்கு அறிந்து
தமது கருத்தோடு இக்கருத்துகளை இயையுமாறு அமைத்துக்கொள்வோர் சிறந்த நலன்களைப்
பெற்றவர்கள் ஆவார்கள். அவ்வாறு பெற்றவர்களே நான் சொல்வனவற்றைக் கேட்க
விரும்புவோர்களுள் தலைமையுடையவர்கள் ஆவார்கள்." (கீழை, மேலை நாடுகளின் மெய்ப்
பொருளியல் வரலாறு, தொகுதி - மிமி, பக்கம்- 470)
மனிதர்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவதே பரலோக ராஜ்யத்திற்கு வழிகாட்டும்
என்று கிறித்தவ மதம் இரண்டாயிரம் ஆண்டுகளாகப் போதித்துவந்தது. அதுதான் எங்கள் மதம்
என்று தூக்கிப்பிடித்துவந்த ஐரோப்பிய நாடுகளும் ரோமிலிருந்து மதத்தின் பெயரால்
மக்களை அரசாட்சி செய்துவந்த போப்பாண்டவர்களும் தங்களுக்குள் கொடிய விலங்குகளைப்
போலத் தாக்குதல்கள் நடத்திவந்தனர். கிறித்தவ மதத்தின் பெயரால் இத்தகைய கொடுமைகளைப்
புரிந்தவர்கள் உலகில் தோன்றிய ஒரே ஒரு கிறித்தவரான ஏசுநாதரைச் சிலுவையில் அறைந்து
கொன்றுவிட்டார்கள் என்றார். ஆகவே, கடவுள் இறந்துவிட்டான். எனவே, மதத்தின் ஆசிபெற்ற
நன்மை வூ தீமை, சொர்க்கம் வூ நரகம், கொடுமை வூ அன்பு, இரக்கம் வூ வன்மை போன்ற
சொற்களால் சுட்டப்படும் மனித விழுமியங்கள் அர்த்தமற்றவையாகிவிட்டன என்றார்.
உலக வரலாற்றில் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பது, அறிவும் ஆற்றலும்
நிறைந்த உயிரினங்கள் தன்னைவிடக் குறைந்த அறிவாற்றல் பெற்ற விலங்குக்
கூட்டத்திடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு உயர்ந்துவிட்டன என்பதுதான். ஆயினும்,
மனித விழுமியங்களுக்கு எதிரான நடவடிக்கைதான் வெற்றி பெற்ற மனிதர்களின் ஒழுக்கமாக
இருந்து வந்திருக்கிறது. ஒழுங்கின்மையையும் நேர்மையின்மையையும் வெற்றியின்
படிக்கட்டுகளாகக்கொண்டதுதான் யதார்த்த வாழ்க்கையாக உள்ளது. ஆகவே, பண்பும் ஒழுங்கும்
நேர்மையும் உண்மையும் சரியானது என்று நம்பிய மனிதர்கள் உலக வாழ்க்கையில்
அடிமைகளாகவே இருந்துவந்துள்ளனர். எனவே, இத்தகைய போதனைகளை அடிமைகளின் ஒழுக்கம் என்று
நீட்ஷே குறிப்பிடுகின்றார். "தயை, தாட்சண்யம், பண்பு என்பனவெல்லாம் வெறும்
கற்பிதங்களே - அவை இயற்கைக்கு முரண்பாடானவை. பரிணாம வளர்ச்சிக்குக் குறுக்கே
நிற்கின்ற தடங்கல்களே அவை" எனக் கூறி, கிரேக்கக் கலைக் கடவுளான டயோனிஸஸின் வன்மை
இயல்புகளைக்கொண்டு இளகிய சுபாவங்களையெல்லாம் தூர எறிந்துவிட்டு மனித சமுதாயம் தன்
உன்னத லட்சியமான மகாமனித சகாப்தத்தை நோக்கிப் புறப்பட வேண்டும் என்றார் நீட்ஷே.
இத்தகைய இலட்சியங்களை முன்னிலைப்படுத்தி ஒன்பது நூல்களை நீட்ஷே எழுதினார். இவற்றுள்
ஆறாம் நூலான ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான் என்னும் நூல் அவருடைய சிந்தனைகள்
முழுமையையும் உள்ளடக்கியது ஆகும்.
கிறித்தவ மத போதனைகளிலிருந்து விடுபட்டு, இந்திய மரபில் வந்த உபநிடதங்கள் போன்ற
நூல்களிலிருந்து எதார்த்த வாழ்க்கைப் போக்கில் மனிதர்களின் முன்னேற்றத்திற்கான
சிந்தனைகளைப் பெற்றுக்கொண்டதாக அவர் கூறுகின்றார். தான் பெற்ற இந்தச் சிந்தனைகளை
மற்றவர்களுக்கும் அளிக்க வேண்டும் என ஆசை கொண்டார். பெர்ஷிய மதத்தைத்
தோற்றுவித்தவரான, 'ஜரதுஷ்ட்ரா' என்பவர் ஜெண்ட் அவெஸ்தா என்னும் தன் நூலில் நீட்ஷே
கொண்டுள்ள கருத்துகளையே வெகுகாலத்துக்கு முன்பே கூறுகின்றார். எனவே, அவரையே தன்
நூலின் கதாநாயகனாக மாற்றி-அதாவது மகாமனிதனாக்கி அவன் வாயிலாகவே தன் போதனைகளை
வெளிப்படுத்துகின்றார்.
உலக மக்கள் அனைவரும் மகா மனிதர்களாக வேண்டும், ஆக முடியும் என்னும் நம்பிக்கையில்
அவருடைய போதனைகள் அமைந்துள்ளன. "மந்தையில் இருந்து அதிகமானவர்களை வசீகரித்து
வெளியேற்ற வேண்டும். அதற்காகத்தான் நான் வந்தேன். மக்களும் மந்தையும் என்மீது
கோபமாக இருக்கலாம்; மேய்ப்பர்கள் என்னைக் கொள்ளையன் என்று சொல்லலாம்" ஆனாலும்,
"படைப்பவன் சகாக்களைத் தேடுகிறான், சவங்களையோ மந்தைகளையோ நம்பிக்கையாளர்களையோ அல்ல.
படைப்பவன் சக படைப்பாளிகளைத் தேடுகிறான். புதிய அட்டவணைகளில் புதிய மதிப்பீடுகளைப்
பதிப்பவனைத் தேடுகிறான். எனவே, ஜரதுஷ்ட்ரா சக படைப்பாளிகளை, சக அறுவடையாளர்களை, சக
மகிழ்ச்சியாளர்களைத் தேடுகிறான்; மந்தைகளிடமும் மேய்ப்பவர்களிடமும் சவங்களிடமும்
அவனுக்குச் செய்வதற்கு என்ன இருக்கிறது!"
ஆசைகளிலிருந்து விடுதலை அடைவதுதான் துயரங்களிலிருந்து விடுபடுவதற்கான வழி என்னும்
இந்தியப் போதனையை ஏற்றுக் கொண்டவர் ஷோபன்ஹார். ஆனால், அவரைக் குருவாகக்கொண்ட
நீட்ஷேயோ அவர் கருத்துக்கு நேர்மாறாக "விருப்பம் கொள் (ஷ்வீறீறீ)" என்பதைக்
கைக்கொண்டு தன் தத்துவங்களைச் சொல்கின்றார். வானத்துக்குக் கீழ் உள்ள
அனைத்தைப்பற்றியும் தான் கொண்டுள்ள கருத்துகளையும் தான் மறுக்கும் கொள்கைகளையும்
ஜரதுஷ்ட்ரா நூலில் விளக்குகின்றார். தத்துவத்தைச் சொல்வதற்கு மாறான கவித்துவநடையில்
அமைந்துள்ள இந்த நூல் ஒரு கவிஞரின் கூற்றுகளைக் கொண்டதாகவும் காட்சி தருகின்றது.
நான்கு பாகங்களாக உள்ள இந்நூல் கற்பு, திருமணம், குழந்தைகள், அறிஞர்கள், கவிஞர்கள்,
தீர்க்கதரிசிகள், உயர் மனிதன், விஞ்ஞானம் ஆகியவற்றைக் குறித்து 82 தலைப்புகளில்
எழுதப்பட்டுள்ளது. நீட்ஷேயை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கான இந்த நூல் காலங்
கடந்தாவது தமிழில் கிடைப்பது சிந்திப்பவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடியது.
இந்நூலை மொழிபெயர்த்துள்ள ரவிக்குமாரும் வெளியிட்டுள்ள காலச்சுவடு பதிப்பகத்தினரும்
பாராட்டுக்கு உரியவர்கள்.
|