தோழர் பொ. வே. பக்தவச்சலம் அவர்களை 1989ஆம் ஆண்டு முதல் நான் அறிவேன். மாணவர்
அமைப்பில் நான் செயல்பட்ட காலம் அது. தோழர்கள் சந்தித்துக்கொள்ளும் மையமாக அவர் வீடு
இருந்தது. அப்போது எங்கள் அமைப்பிற்கு மூன்று வேலைகள் இருந்தன. கேடயம், மனஓசை ஆகிய
இதழ்களைப் பேருந்தில் விற்பனை செய்வதுதான் முதலாவதும் முக்கியமானதுமான வேலை.
பாரிமுனைப் பேருந்து நிலையம், வள்ளலார் நகர் (மிண்ட்) பேருந்து நிலையம் ஆகியவை
எங்கள் விற்பனைக்கான இடங்கள். பேருந்தில் ஏறி 'அன்பார்ந்த பயணிகளே' என்று தொடங்கி
ஓரிரு நிமிடங்கள் பேசுவோம். சமகால அரசியலைக் கடுமையாக விமர்சனம் செய்வதோடு எங்கள்
அரசியலைப் பிரச்சாரம் செய்வதாகவும் பேச்சு அமையும். பேசி முடித்தபின் சில இதழ்கள்
நிச்சயம் விற்பனை ஆகிவிடும்.
அடுத்த வேலை சுவரொட்டிகள் ஒட்டுவது. பிரச்சினைகளைச் சார்ந்து அமைப்பு வெளியிடும்
சுவரொட்டிகளை எங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பகுதியில் ஒட்டுவோம். அமைப்பு நடத்தும்
கூட்டங்களுக்கும் பிறர் நடத்தும் கூட்டங்களுக்கும் செல்வது மூன்றாம் வேலை. இத்தகைய
வேலைகளின்போது ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டுத் தோழரின் வீட்டுக்குச் செல்ல
நேரும். தொடக்கத்தில் அங்கே செல்வது சங்கடம் தரும் விஷயமாக இருந்தது.
மிகவும் பிரபலமான வழக்கறிஞர் அவர். வீடும் மிகப் பெரிது. எப்போதும் கூட்டம்
இருந்தபடியே இருக்கும். அவர் அலுவலகத்தில் பணியாற்றும் இளம் வழக்கறிஞர்கள்,
அமைப்புத் தோழர்கள், உறவினர்கள், அவரது குடும்ப உறுப்பினர்கள் அல்லாது குறைந்தது
பத்துப் பேராவது அன்றாடம் அவர் வீட்டில் சாப்பிடுவார்கள். சாப்பிடும் நேரத்தில்
இருப்பவர்கள் அனைவரும் உட்கார ஒன்றாகவே பந்தி நடக்கும். நேரங்கழிந்து போனாலும் பசி
என்றால் கேட்டுச் சாப்பிடலாம். திடுமென ஒன்றிரண்டு விருந்தினர்கள் வந்துவிட்டாலே
தடுமாறிப் போய்விடும் வீடுகள்தான் அநேகம். ஒவ்வொரு வேளையும் ஒரு கூட்டத்திற்குச்
சமைக்கும் வேலையை எப்படிச் செய்ய முடிந்தது? அவர் துணைவியார் தோழர் சுனந்தா
அவர்களின் இயல்பு அதற்கு முக்கியக் காரணம்.
சில நண்பர்களின் வீடுகளுக்குச் செல்லும்போது என்ன சாதி என்பதை நேரடியாகவோ
மறைமுகமாகவோ விசாரித்துத் தெரிந்துகொண்ட பின்னரே வீட்டுக்குள் அழைக்கலாமா வெளியே
நிறுத்தியே அனுப்பிவிடலாமா என்று தீர்மானிப்பார்கள். சாதியைப் பொறுத்துத்தான்
தட்டில் சாப்பாடா இலையில் சாப்பாடா என்பதும் முடிவாகும். தோழர் பொ. வே.பவின்
வீட்டில் இத்தகைய கேள்விகளுக்கு இடமே இல்லை. இத்தனை பேரை ஆதரிக்க ஆதாரம் என்ன?
பொருளாதாரப் பலம் மட்டும் போதாது.
அரசியல் உணர்வை வாழ்முறையாகக் கொண்ட குடும்பம் அது. அவருடைய சகோதரர்கள் உள்ளிட்ட
உறவினர்களில் பெரும்பாலானோர் அரசியல் உணர்வு கொண்டவர்களாகவும் அமைப்பு சார்ந்த
செயல்பாடு உடையவர்களாகவும் இருந்தனர். அவருடைய மகள்கள் தோழர் கீதா, தோழர் அஜிதா
ஆகியோர் மாணவர் அமைப்பில் அப்போது செயல்பட்டனர். பெரும் குடும்பம் ஒன்று இத்தகைய
ஒத்துணர்வோடு இயங்கும் விதம் வியப்பானது.
தோழர் பொ.வே.ப., மக்கள் உரிமைக் கழகத் தலைவராக இருந்தார். சட்ட உரிமைகள் தொடர்பான
பல பிரச்சினைகளில் ஈடுபட்டவர். மார்க்சிய-லெனினிய இயக்கத் தோழர்கள் தொடர்பான
வழக்குகள் பலவற்றில் அவர்களுக்காக வாதாடியவர். 1980களின் தொடக்கத்தில் வடார்க்காடு,
தருமபுரி மாவட்டங்களில் தேவாரம் தலைமையிலான காவல் துறை மார்க்சிய-லெனினிய இயக்கத்
தோழர்களை நரவேட்டை ஆடியபோது அங்கு நடந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப்
போராடியதோடு தோழர்கள் பலரைப் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட்டார். காவல் துறை
குறிவைத்துக் கொல்ல முனைந்தபோதும், பின்வாங்காமல் சட்டரீதியான செயல்பாடுகளில்
தொடர்ந்து போராடினார். கொத்தடிமை மீட்புப் பணிகளிலும் முன்னின்று செயல்பட்டார்.
தொடக்கத்தில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் இணைந்திருந்த அவர் பின்னர்
மார்க்சிய-லெனினிய இயக்கச் சார்பு கொண்டார். தலித் இயக்கங்களை ஆதரித்ததோடு புதிய
தமிழகம் கட்சியின் சார்பாக 1999 நாடாளுமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில்
போட்டியிட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றார். தலித் இயக்கங்கள்
ஒன்றுபட வேண்டும் என்னும் கருத்துக் கொண்டவர் அவர்.
முறுக்கு மீசை கொண்ட அவரை முதலில் சந்தித்தபோது தோன்றிய அச்சம் அவருடன் பேசப்பேச
எளிதாக விலகியது. அவர் வீட்டுக்கு அடிக்கடி சென்று சந்தித்தும் பேசிக்கொண்டும்
இருந்த நாள்களில் நடந்த சில நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருகின்றன. அவருடைய மகள்கள்
மூவருக்கும் பள்ளிக் கூடத்தில் சாதி மதம் இல்லை என்று கொடுத்துச் சேர்த்தார்.
அப்படிக் கொடுப்பதற்கே போராட வேண்டியிருந்தது. ஒருமுறை அவரைச் சந்தித்துப் பேசிய
எழுத்தாளர் கி. ராஜநாராயணன் இந்த விஷயத்தைத் தனது கட்டுரை ஒன்றில் எழுதியிருந்தார்.
அப்போது அதற்குக் கடும் விமர்சனம் ஒன்று வந்தது.
தோழர் பொ.வே.ப. முற்பட்ட சாதியைச் சேர்ந்தவர். ரெட்டியார். சாதிப் பெயரைக்
கொடுத்தாலும் இடஒதுக்கீடு கிடைக்காது. ஆகவே, அவர் சாதி மதம் இல்லை என்று
கொடுத்திருக்கிறார். இடஒதுக்கீடு தேவைப்படும் சாதியைச் சேர்ந்தவர்கள் அவ்வாறு
கொடுக்க முடியாது. இதுதான் அந்த விமர்சனம். இந்த விமர்சனத்தில் நியாயம் இருக்கிறது.
ஆனால், முற்பட்ட சாதியைச் சேர்ந்த அனைவரும் சாதியையும் மதத்தையும் துறக்க
முயல்வதில்லையே. சாதி இல்லாத வாழ்வியலைக் கொண்ட அவர் சான்றிதழ்களில் சாதிமதங்களைத்
துறக்கப் போராடியதோடும் தம் குடும்பத் திரு மணங்களிலும் அவற்றைப் புறந்தள்ளினார்.
எத்தகையோரையும் மதிக்கும் பண்பு கொண்டவர். அதன் காரணமாக அவர் சந்திக்க நேர்ந்த
பிரச்சினைகள் பல. மனத்திடம் இல்லாத மனிதராக இருந்தால் 'மார்க்சியமாவது பொதுநலமாவது'
என்று தீர்மானித்துத் 'தன் பெண்டு தன் பிள்ளை தன் குடும்பம்' என்பவற்றுக்குள்
சுருங்கித் தொழிலோடு நின்று போயிருப்பார். பிரச்சினைகளை அவர் எதிர்கொண்ட முறைகள்
அனுபவம் வழியாக வாழ்வைக் கற்றுக்கொள்ளும் திறன் மிக்கவர் என்பதை உணர்த்தின. இளம்
வயதில் வறுமையிலும் கல்வி பயில்வதற்கான போராட்டத்திலும் உழன்றவர்.
துயரங்களுக்கிடையே மேலெழுந்து வரும் ஒருவருக்கு மார்க்சியம் எதையும் திறந்த
மனத்தோடு அணுகும் பயிற்சியை வழங்கும். அத்தகைய பயிற்சி உடையவர் அவர் என்பதைப் பல
சந்தர்ப்பங்கள் காட்டின.
இளம் தோழர்கள் சிலரோடு அவர் உரையாடிக்கொண்டிருந்தபோது அங்குச் சென்ற முன்னாள் தோழர்
ஒருவர் அந்த உரையாடலைக் கேட்டு அதைத் திரித்து மனஓசை இதழுக்குக் கட்டுரை எழுதிக்
கொடுத்துவிட்டார். சமூக மாற்றத்திற்குப் போராடத் தூண்டும் விஞ்ஞானப் பார்வையாகிய
மார்க்சியத்தைத் தனிமனித முன்னேற்றத்திற்கு உதவும் கருவியாக அவர் விளக்குகிறார்
என்பதுதான் அந்தத் தோழரின் விமர்சனம். பொ.வே.பவின் பெயரைக் குறிப்பிடாமல் திரிபுவாத
மார்க்சியர் ஒருவரைப் பற்றி எழுதுவது போன்ற பாவனையில் குரூரத்துடன் எழுதப்பட்ட
கட்டுரை அது. உடனிருந்து பல ஆண்டுகள் பழகிய அந்தத் தோழர் தன்னைச் சரியாகப்
புரிந்துகொள்ளவில்லையே என்றுதான் மிகவும் வருத்தப்பட்டார். தன் சொந்த துவேசங்களை
இப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறார்களே என்னும் வேதனையை அவர் பேச்சில் கண்டேன்.
மார்க்சிய இயக்கங்கள் வளராமைக்கு மிக முக்கியமான காரணமாக நான் கருதுவது இப்படியான
குரூர மனப்பான்மை நீக்கமற நிறைந்திருப்பதைத்தான். இயக்க வளர்ச்சிக்குத் தேவை
அடிப்படை நேர்மை. செழுமையான மனம். மனிதர்களின் உளவியலுக்கு மார்க்சிய இயக்கங்கள்
கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது மிகப் பெரும் குறையாகவேபடுகிறது.
ஆகவேதான் சற்றே கருத்து மாறுபடும் சக தோழரைக்கூட உடனே எதிரியாக முத்திரை குத்தி
ஓரங்கட்டிவிடும் நிலை. எல்லா உறவுகளையும்விட உயர்ந்த உறவு தோழமைதான் என்பது வெறும்
பேச்சாகவே இருக்கிறது.
தோழர் பொ.வே.ப. புதிய தமிழகம் கட்சியில் இணைந்து தேர்தல்களில் போட்டியிட்டார்.
1999ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திருநெல்வேலியிலும் 2001 ஆம் ஆண்டு
சட்டமன்றத் தேர்தலில் சேடப்பட்டியிலும் நின்றார். இருமுறையும் தோல்விதான். அத்தோடு
கடும் விமர்சனங்களையும் அவர் எதிர்கொள்ள நேர்ந்தது. புரட்சி பேசியவர் சாதிக்
கட்சியில் போய்ச் சேர்ந்துவிட்டார் என்றனர். புரட்சிகர இயக்கங்கள் தேங்கிப்போன
சூழலில், செயல்திறம் மிக்க தோழர் ஒருவர் தலித் இயக்கங்களைச் சார்வதை
ஆரோக்கியமானதாகவே பார்க்க வேண்டும். 'புதிய தமிழகம்' கட்சி தன் வேட்பாளராகத் தலித்
அல்லாத ஒருவரை நிறுத்த முடிவுசெய்ததோடு அதற்குத் தகுதியானவராகத் தோழர் பொ.வே.பவைத்
தேர்வு செய்தது மிகவும் பொருத்தமானது என்றே எனக்குத் தோன்றியது. ஒடுக்கப்பட்டவர்கள்
பக்கமே நின்ற அவருக்குக் கிடைத்த சரியான அங்கீகாரம் அது. |