Google   www kalachuvadu.com

 

தலையங்கம்
'செல்'லும் கொல்லும்?
பள்ளிகளுக்கு செல்போனை எடுத்துவரக் கூடாது எனத் தமிழக அரசு விதித்துள்ள தடை நகரப் பகுதிகளில் உள்ள பெற்றோர்களால் வரவேற்கப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ், கேம்ஸ், பாட்டு போன்ற செல்போனின் கூடுதல் வசதிகளால் மாணவர்களின் கவனம் திசைதிருப்பப்பட்டு அவர்கள் சீரழிவதாகக் கவலைப்பட்டவர்கள் இப்போது நிம்மதிப் பெருமூச்சுவிடுகிறார்கள். சமீபத்தில் கர்நாடகாவிலும் இதேபோன்ற தடை நடைமுறைக்கு வந்துள்ளது. அங்கு மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுங்கூடப் பள்ளிகளுக்கு செல் போன்களைக் கொண்டுவரக் கூடாது எனத் தடைபோட்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்காவில்கூடப் பள்ளிகளில் இவ்விஷயங்குறித்துத் தடை உள்ளது. அங்கே பள்ளி நுழைவாயிலில் 'மெட்டல் டிடெக்டரை' வைத்து செல்போன்களைக் கைப்பற்றுகிறார்கள். இந்தக் கட்டுப்பாட்டை இரண்டுமுறை மீறினால் செல்போன் பறிமுதல் செய்யப்படும் என்கிறது நியூயார்க் மாகாணச் சட்டம்.

இந்தியாவில் செல்போன் உபயோகம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. 2006 மே மாதத்தில் 10 கோடியாக இருந்த செல்போன் இணைப்பு செப்டம்பர் 2007இல் 20 கோடியைத் தாண்டிவிட்டது. 2010ஆம் ஆண்டில் இது ஐம்பது கோடியை எட்டிவிடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. புதிதாக செல்போன் இணைப்புப் பெறுபவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள், மாணவர்கள். ஆகஸ்ட் 2007 புள்ளி விவரப்படி தமிழ்நாட்டில் உள்ள செல்போன் இணைப்பு ஒரு கோடியே முப்பத்து இரண்டு லட்சமாகும். இது தவிர சென்னை மாநகர எல்லைக்குள் மட்டும் சுமார் 54 லட்சம் இணைப்புகள் உள்ளன.

செல்போன்களில் காமிரா வசதி ஏற்படுத்தப்பட்ட பிறகு அதனால் புதிது புதிதாகப் பிரச்சினைகள் முளைத்துவருகின்றன. மெமரி கார்டில் 'ஆபாசப் படங்களை'ப் பதிவுசெய்து மாணவர்களுக்கு விற்பது ஒரு தொழிலாகவே உருவெடுத்துவருவதைச் செய்திகள் புலப்படுத்துகின்றன. இது பெற்றோர்களை மிகவும் கவலையடைய வைத்துள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரும்பாலான மாணவர்கள் கிராமப்புறப் பள்ளிகளில் படிப்பவர்கள்தான். அங்கே இந்த செல்போன் கலாச்சாரம் பரவியிருப்பதாகக் கூற முடியாது. பேனாகூட வாங்க முடியாத மாணவர்களே அங்கு அதிகம். எனவே இது பெரும்பாலும் நகர்ப்புறப் பள்ளிகளின் பிரச்சினைதான். எனினும் புறக்கணிக்க முடியாத பிரச்சினையாகும்.

செல்போனைப் பயன்படுத்துவதால் ஒழுக்கரீதியான பிரச்சினை மட்டுந்தான் உருவாகிறது என்று எண்ணுவது தவறு. அது உடல் நலத்தைப் பாதிக்கும் என்றும் பல்வேறு ஆய்வுகள் புலப்படுத்தியுள்ளன. உலக சுகாதார நிறுவனம் இது குறித்துத் தெளிவான முடிவு எதையும் சொல்லாவிட்டாலுங்கூட "எலக்ட்ரோ மேக்னடிக்" கதிர்வீச்சால் உடல்நலத்துக்கு ஏற்படும் தீங்குகள் குறித்து முன்னெச்சரிக்கையாகச் சில நெறிகளை உருவாக்கிக்கொள்ளுமாறு உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. அதனடிப்படையில் கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள், ஜப்பான், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நெறிமுறைகளை உருவாக்கியுள்ளன. ஆனால், இதுவரை இந்தியாவில் அப்படி எந்தவொரு நெறிமுறையும் உருவாக்கப்படவில்லை. இப்போதுதான் டெலிகாம் துறைக்கு உட்பட்ட "டெலிகம்யூனிகேஷன் என்ஜினியரிங் சென்டர்" (TEC) வழிகாட்டு நெறிமுறைகளுக்கான ஒரு வரைவைத் தயாரித்திருக்கிறது.

செல்போன்களை விடவும் செல்போன் டவர்கள்தான் மிகவும் ஆபத்தானவை. 'மேக்ரோ ஆன்டெனா' என அழைக்கப்படும் அந்த டவர்களைப் பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு அருகில் அமைக்கக் கூடாது; குடியிருப்புப் பகுதிகளில் அமைக்கக் கூடாது; அந்த டவர்களுக்கு அருகில் அதற்கான பணியாளர்கள்கூட அதிக நேரம் வேலைசெய்ய அனுமதிக்கக் கூடாது எனப் பல்வேறு நிபந்தனைகள் இந்த வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

செல்போன்களை உபயோகிப்பது குறித்தும் அதில் சில யோசனைகள் கூறப்பட்டுள்ளன. பதினாறு வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் மென்மையான திசுக்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதால் எளிதில் பாதிக்கப்படும். எனவே பதினாறு வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் மொபைல் போனைப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்று அந்த வரைவு அறிக்கை தெரிவிக்கிறது.

மொபைல் போனிலிருந்து வெளிப்படும் ரேடியோ அலைகளின் மதிப்பை ஒவ்வொரு மொபைல் போனின் திரையிலும் பதிவுசெய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இந்த நெறிமுறைகள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. அதற்குள்ளாகவே இதற்கு மொபைல் கம்பெனிகள் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளன.

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது பள்ளிகளில் மட்டுமல்லாது பொதுவாகவே சிறுவர்கள் செல்போன், ஐபோட் முதலான எலக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் விதமான கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவது நல்லது. அது குறித்தும் அரசு பரிசீலிக்க வேண்டும். டெலிகாம் என்ஜினியரிங் சென்டரின் வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு செல்போன் கம்பெனிகளின் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளனவா என்பதைக் கண்காணிக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் அந்த டவர்களை அகற்றிப் பாதுகாப்பான இடங்களில் அவற்றை அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழில்நுட்ப வளர்ச்சியின் அனுகூலங்களை மக்களிடம் கொண்டுவந்து சேர்ப்பது நல்லதுதான். ஆனால், அதில் உள்ள அபாயங்கள் குறித்த எச்சரிக்கை அரசுக்குத் தேவை. இன்றுள்ள மொபைல் கம்பெனிகளுக்கு லாபம் மட்டுந்தான் குறிக்கோள். இதில் கவனமாக இருக்க வேண்டியது அரசாங்கந்தான்.

பள்ளிகளில் மொபைல் போன் தடை என்பது இதில் முதல்படியாக இருக்கட்டும். மக்களின் உடல்நலத்தில் அக்கறைகொண்டு அடுத்தடுத்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். அதற்கான நிர்ப்பந்தம் விழிப்புணர்வுள்ள மக்களிடமிருந்துதான் வர வேண்டும்.

நோபல் பரிசுபெற்ற 11ஆம் பெண் படைப்பாளி

இவ்வாண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றிருக்கும் டோ ரிஸ் லெஸ்ஸிங், 1919ஆம் ஆண்டு அக்டோ பர் 22இல் பெர்ஷியாவின் (தற்போதைய ஈரான்) கெர்மான்ஷாவில் கேப்டன் ஆல்ஃப்ரட் டெய்லருக்கும் எமிலி மவுட் டெய்லருக்கும் மகளாகப் பிறந்தார். பெற்றோர் இருவரும் ஆங்கிலேயர்கள். பெண்களுக்கான ரோமன் கத்தோலிக்கப் பள்ளியில் படித்த லெஸ்ஸிங் தனது 13ஆம் வயதில் பள்ளியிலிருந்து வெளியேறிவிட்டார். அதன் பின்னர் தானாகவே கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். 1949இல் லண்டனுக்குக் குடிபெயர்ந்தார் அதே ஆண்டில் தனது முதல் நாவலான The Grass is singingஐ வெளியிட்டார். 106 வருட வரலாற்றில் இலக்கியத்துக்கென நோபல் பரிசு பெற்றவர்களில் அதிக வயதானவரான இவர் இப்பரிசு பெற்ற 11ஆம் பெண் படைப்பாளி. பெண்ணியத்தைப் பேசும் The Golden Notebook இவருடைய முக்கியமான நாவல். இவரது சமீபத்திய நாவல் The Cleft. கம்யூனிஸம், சுஃபி மற்றும் உளவியல் கோட்பாடுகளைத் தன் படைப்புகளில் கையாண்டுள்ள லெஸ்ஸிங் சில அறிவியல் புனைகதைகளையும் எழுதியுள்ளார். நோபல் பரிசு பெற்ற டோ ரிஸ் லெஸ்ஸிங் பாராட்டுக்குரியவர்.

உள்ளடக்கம்

 

 

Google