Google   www kalachuvadu.com

 

விவாதம்
ஊர் விலக்கம் தேவையா?
களந்தை பீர்முகம்மது
அண்மையில் மதுவருந்தல் குறித்த கட்டுரை எழுதியமைக்காக இஸ்லாத்திலிருந்தும் தக்கலை அஞ்சுவன்னம் முஸ்ஸிம் ஜமாத்திலிருந்தும் விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார் கவிஞர் ஹெச்.ஜி. ரசூல். அவரை இஸ்லாத்தில் இருந்தும் நீக்கி வைத்த குமரி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் முடிவினை, மாநில ஜமாஅத்துல் உலமா சபை உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இது குறித்து விசாரிப்பதற்காக மூன்று அறிஞர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை மாநில அமைப்பு நிறுவியுள்ளது. இந்தக் கட்டுரை எழுதப்படும் நாள்வரை, அந்தக் குழுவின் முடிவு தெரியவரவில்லை. எனவே, இந்தத் தருணத்தை நல்லதொரு வாய்ப்பாகக் கருதி மேலும் கொஞ்சம் பேசலாம் எனத் தோன்றுகிறது.

சர்வதேச அளவில் இஸ்லாமும் முஸ்லிம் சமூகமும் ஓரங்கட்டப்பட்டு வருகின்றன. வாழ்வுரிமையின் நியாயத்தை அவர்கள் பேச முடியவில்லை. அவர்களுக்குரிய நாடுகள்கூடப் பாதுகாப்பின்மையில் சிக்கியுள்ளன. அமெரிக்கா நினைத்துவிட்டால், அது ஐ.நா. சபையே முடிவெடுத்துவிட்டாற் போல! முஸ்லிம்களின் காலடிகளின் கீழே உள்ள கனிம வளங்களைக் கொள்ளையடித்துச் செல்ல இஸ்லாமியப் பயங்கரவாதம் அல்லது தீவிரவாதம் என்னும் கருத்து மிகவேகமாகப் பரப்பப்படுகின்றது. இந்தக் கருத்துக்கு இஸ்லாமிய ஆட்சியாளர்களும் உடன்படுகிறார்கள். அமெரிக்காவின் பாதுகாப்பில் மட்டுமே சுகபோகத்தையும் ஆட்சியதிகாரத்தையும் அனுபவிக்க முடியும் என்கிற நிலையில், அரபுலக மாமன்னர்கள் அடிமைப்பட்டுவிட்டார்கள். இஸ்லாம் மார்க்கத்தை அதன் சுதந்திர வெளியில் உலவிடச் செய்வதற்காக அரபுலக மன்னர்கள் தங்களை ஈகம் செய்துவிடுவார்கள் என்பது எட்டாத கற்பனை. முஸ்லிம் நாடுகளின் உண்மையான வளர்ச்சிக்காக உதவிய நாடுகள், இப்போது விலகிச் செல்கின்றன. இதில் இந்தியாவும் உண்டென்பது கவனத்திற்குரிய சேதி. பிறிதொன்று, முஸ்லிம்கள் இன்னமும் போதிய அரசியல் விழிப்புணர்வைப் பெறவில்லை. அவர்களுக்கு மார்க்க ரீதியான விழிப்புணர்வு மட்டுமே உண்டு. பல்வேறு சித்தாந்தப் பிரிவுகளால் பிளவுபட்டுள்ளனர். எனவே, சர்வதேச அளவில் முஸ்லிம்களுக்கான ஒட்டு மொத்தக் குரல் எதுவுமில்லை.

முஸ்லிம் நாடுகளின் நியாயமான இருத்தலுக்காக அயராது பாடுபட்ட சோவியத் யூனியனும் தகர்க்கப்பட்டுவிட்டது; சோசலிச முகாமும் மறைந்துவிட்டது. இதனைத் தொடர்ந்து ஏற்கெனவே கம்யூனிச அபாயத்தைப் பூச்சாண்டி காட்டிய மேற்குலகம், இப்போது இஸ்லாமியப் பூச்சாண்டியை முன்வைக்கின்றது. இவற்றை முஸ்லிம் சமூகம் இன்னமும் தர்க்கரீதியாக உணர்ந்துகொள்ளவில்லை. இஸ்லாமிய மார்க்க அறிவை மேலோட்டமான முறையிலேயே பரப்பிக்கொண்டிருப்பதால் ஆழத்தில் பொதிந்துள்ள அபாய முடிச்சுகளை இச்சமூகம் தொட்டுணரவில்லை, இது போன்ற ஏராளமான மவுடீகங்களால் முஸ்லிம் சமூகம் மெத்தனமாகவே இருந்துவருகின்றது. இந்தப் போக்குகளால் வெறுப்புற்ற, அரசியல் உணர்வு பெற்ற முஸ்லிம் இளைஞர்கள்தான் வேறுவழியின்றித் தீவிரவாத மனப்பான்மைக்கு ஆளாகியிருக்க வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது. மிகச் சுலபமாக அரசியல் உணர்வை முஸ்லிம்கள் மத்தியில் கொண்டுவந்துவிட முடியாது என்றும் இந்த இளைஞர்கள் கருதியிருக்கலாம். எனவேதான், தங்களையே வெடிகுண்டுகளாக மாற்றிக்கொள்கிறார்கள். இன்று ஈராக்கிலும் ஆப்கனிலும் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடுகிறவர்கள் உள்ளூர் முஸ்லிம்கள் மாத்திரமல்ல, வெளிநாட்டு முஸ்லிம்களும் சேர்ந்துதான். இதனை மேலும் பரிசீலித்தால் இன்னும் பல உண்மைகள் தெரியவரலாம். எனவே, இஸ்லாமியப் பயங்கரவாதம் ஒரு சுயம்புவாய் முளைத்ததல்ல; அமெரிக்கா முன்வைக்கும் அரசியல் - பொருளாதாரப் பயங்கரவாதத்திற்கு எதிரான மாற்றீடே அது.

ஆனால், இத்தகைய தீவிரச் செயல்பாடுகள் முஸ்லிம்களுக்கு நிலையான பாதுகாப்பைத் தரமாட்டா. இந்தப்போக்கு வளர்வதும் கடும் ஆபத்து. முஸ்லிம்களை ஜனநாயகப் பாதைக்கு அழைத்து வருவது கடுமையான பணி. இதற்கு உலகளாவிய முயற்சி தேவை. ஆனால், அது மலைப்பு தருவது. எனவே, வேறொரு வழி தேடலாம். இஸ்லாமிய மார்க்கத்தினுள்ளேயே அடங்கியிருக்கின்ற சிந்தனை மரபுகளை உள்வாங்கிக்கொள்வதால் நமக்குள்ளே ஒரு வெளிச்சக் கீற்று உருவாகும். அது தருவது இஸ்லாமிய சூஃபிகளின் ஞானமரபுதான். அது முஸ்லிம் சமூகத்தைப் பீடித்துள்ள பிணிகளுக்கான மாற்று மருந்து. இஸ்லாமியப் பண்பாட்டின் பன்முகத் தோற்றங்களை இணைக்கும் நல்ல ஒற்றுமைக்கயிறும் அதுதான்.

இஸ்லாமிய சூஃபிகள் பல அற்புதங்களை நிகழ்த்தியிருப்பதாக நம்பப்படுகின்றது. அவர்களின் அடக்கத் தலங்கள் பல்வேறு சமயத்தினரால் மட்டுமல்ல, முஸ்லிம்களாலும் வழிபடப்படுவது அவர்களில் ஒரு பகுதியினர்க்கு நிறைய மனச் சங்கடங்களை உருவாக்கியுள்ளது. மேலும் வாகாபியக் கொள்கைகளைத் தீவிரமாகச் கடைப்பிடிக்கும் அரபு நாடுகளில் பணியாற்றிவிட்டுத் திரும்புகிற முஸ்லிம் இளைஞர்களால் இந்தப் போக்குகளை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. (அதே சமயத்தில் அதே அரபுநாடுகள் அமெரிக்காவின் கைப் பாவைகளாய் இருந்து, முஸ்லிம் சமய ஒற்றுமைக்கே பெரும் ஆபத்தாய் விளங்குகின்றன என்கிற உண்மையை இதே இளைஞர்கள் உணர்ந்துகொள்ளவுமில்லை). சூஃபியிசத்தை ஏக இறைத் தத்துவத்திற்கு எதிரான ஒரு பண்பாட்டு நடவடிக்கை என்றும் அவர்கள் கருதுகிறார்கள். இதனால் சூஃபிகளான இறையடியார்களின் மீது என்னதான் மதிப்பு கொண்டிருந்தாலும், சூஃபிகளின் கருத்துகளை மக்கள் மத்தியில் கொண்டுவருவதில்லை. அதனால் அவர்களது இலக்கியங்களின் மீதான தேடல்கள் இல்லை; அந்த இலக்கியங்களை அவர்கள் இரு கைகளாலும் ஒதுக்கித் தள்ளுகிறார்கள்.

இந்த ஒதுக்கித்தள்ளுகிற கைகளுக்கு மாற்றான கைகள் ஹெச்.ஜி. ரசூலினுடையவை. மக்களின் அன்றாட அல்லற்பாடுகளைக் கவனம் கொண்டு, சமயசமரச மனப்பாங்கோடு இஸ்லாத்தினைப் பொருத்திவைத்த எண்ணற்ற இஸ்லாமியத் தமிழ் சூஃபிகளின் இலக்கியங்களில் தேர்ந்த ஞானம் படைத்தவர் ரசூல். அவருடைய சொந்த ஊர் தக்கலை. எனவே, தக்கலை பீர்முகம்மது அப்பாவின் ஞான இலக்கியங்களின் மீது அவர் இன்னும் தீவிர ஆர்வம் படைத்தவர். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்துடனான அவருடைய தொடர்பு தக்கலை பீரப்பாவின் மீதான சமூகப் பார்வையை இன்னும் செழுமைபெறச் செய்தது. தொடர்ந்து ஏராளமான கட்டுரைகளை எழுதிப் பழுத்திருக்கும் சூஃபித்துவச் சிந்தனையாளர் அவர். இன்று நிர்க் கதியாக்கப்படுவது நம்மீதே நாம் தாக்குதல் நிகழ்த்துவதற்கு ஒப்பானது.

ஓசமுதாயத்தில் காலங்காலமாகத் தொடர்ந்துவரும் விசயங்களை விமர்சனக் கண்ணோட்டமில்லாமல் ஒப்புக்கொள்ளாதவர் முகம்மது நபிகள்ஔ என்று முஸ்லிமல்லாதவரான ராகுலசாங் கிருத்தியாயன் தன்னுடைய இஸ்லாமியத் தத்துவ இயல் நூலில் கூறுகிறார். ரசூலும் நபிகள் நாயகத்தின் மரபுகளைப் பேணியே இத்தகைய ஆய்வுகளைச் செய்கிறார். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்குட்பட்டு அவருடைய ஞானத்தேடல் அமைந்ததில்லை. அது அழைத்துச்சென்ற பாதையை நோக்கிய பயணம் மாத்திரமே அது. ஓர் இலக்கியவாதியின் சமூகத் தரிசனம் என்பது விரிவான, நீளமான கிளைகளைக்கொண்டது. அவை அழகுக்காகக் கத்தரிக்கப்பட்ட அலங்காரச் செடிகளல்ல. ஒரு படைப்பின் மீது ஒரு வாசகனுக்குக் கிடைக்கின்ற பிரதி (ஒரு வசதியின் பொருட்டாக இதை ஒரு ஓபொருள்ஔ அல்லது ஓஅர்த்தம்ஔ என்பதாக நாம் விளங்கிக்கொள்வோம்.) அவனுடைய மனத்துக்கு இசைவானதாகவும் இருக்கலாம்; முரண்பாடுகளைத் தரக்கூடியதாகவும் இருக்கலாம். அவ்வாறான ஒரு பார்வையைத்தான் ஹெச்.ஜி. ரசூல் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். என்றாலுங்கூட, அவருடைய பார்வையை அப்படியே ஒப்புக்கொள்ள முடியவில்லைதான். ஏற்பதும் நிராகரிப்பதும் நமக்கான உரிமை. ஆனால், அது ஒரு விவாதத்திற்கான தளம் என்கிற அளவில் நாம் சுருக்கிக் கொள்ளலாம். இலக்கியமறியாப் பாமரர்களுக்கு மட்டுமே உண்டாகும் எண்ணப் போக்குகள் மார்க்க அறிஞர்களுக்கு உண்டாகலாமா?

ஒரு ஊரின் ஜமாத் என்பது மார்க்க அறிஞர்களால் நிரம்பியதல்ல. செல்வந்தர்கள் அல்லது செல்வாக்கு மிக்கவர்களின் அதிகாரச் சபையாகவே அது பெரும்பாலும் செயல்படுகின்றது. நுட்பமனம்கொண்ட ஒரு படைப்பாளியின் தேடலுக்கும் அதிகாரம் கட்டமைத்த தலைவர்களின் தேடலுக்கும் பொருந்திவரும் புள்ளிகள் எவையுமில்லை. மாநில ஜமாத்துல் உலமா சபை இதை நன்கு புரிந்துக்கொண்டுள்ளது என்பது நிம்மதியைத் தருகின்றது.

எனவேதான், இதில் இன்னும் பரவலான சிந்தனையைக் கோரி கடந்த 7.9.2007இல் சென்னையில் தமிழ்ப் படைப்பாளிகளின் முன்னணி ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தது. மூத்த எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் தலைமையேற்ற இக்கூட்டத்தில் அவரும் அதில் பங்கேற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் தோழர் சி. மகேந்திரன், கவிஞர் இன்குலாப், வ. கீதா, ஓஸ்டெப்ஸ்ஔ டி. ஷெரீஃபா பேகம், எழுத்தாளர் அழகிய பெரியவன் ஆகியோரும் பல விமர்சனங்களை முன்வைத்துப் பேசினார்கள். இதில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் முஸ்லிம்களின் நேசசக்திகள் என்பது வலிந்து கூறப்பட வேண்டிய முக்கிய விஷயமாகும். அவர்களின் விமர்சனங்கள் முஸ்லிம்களின் நடைமுறைக் கோளாறுகள் மற்றும் புரிதல்களில் உள்ள போதாமை பற்றியே இருந்தன. அவை இஸ்லாத்தின் மீதோ அதன் சமூகப் புரட்சியின் மீதோ தொடுக்கப்பட்ட விமர்சனங்கள் அல்ல. முஸ்லிம்களின் பாதுகாப்பு அரணாய்த் திகழும் அவர்களது ஆதங்கங்களையும் வருத் தங்களையும் மாநில ஜமாத்துல் உலமா சபை கவனத்தில் கொள்ள வேண்டும். முஸ்லிம்களின் சமூகநிலை குறித்த சச்சார் கமிட்டி அறிக்கையின் விளைவுகளில் இருந்து எழுந்துவந்த விமர்சனக் குரல்கள் அவை.

நம்மை மிகவும் ஆத்திரப்படுத்தி வைத்துள்ள இந்த மதுவும் போதையும் இன்றைய இஸ்லாமிய நாடுகளில் எந்த அளவிற்குத் தடுக்கப்பட்டுள்ளன என்பது முக்கியமான கேள்வி. இதுபற்றி அஸ்கர்அலி எஞ்சீனியர் எழுதியுள்ளவற்றையும் பரிசீலிக்க வேண்டும். என்னவாய் இருந்தபோதிலும் ஊர் விலக்கம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை; அதற்கு இஸ்லாத்தில் வழிமுறையில்லை. ஓஅல்குர்ஆனை அதன்மீது உங்கள் உள்ளங்கள் ஒற்றுமைப்பட்டிருக்கும்வரை ஓதுங்கள்; நீங்கள் கருத்து வேறுபாடுற்றால் எழுந்துவிடுங்கள்ஔ என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள் (ஆதாரம்: ஸஹீஹ் புஹாரி, முஸ்லிம்.)

முஸ்லிம்களின் ஒரே வேதம் குர்ஆன்தாம். ஆனால், அதன்மீது கருத்து வேறுபாடு உண்டாகுமேயானால் எழுந்துவிடுங்கள் என்று இறைத்தூதரே கூறுகிறார்கள். வேதத்தையே முதலும் முடிவுமாய் ஏற்றுக்கொண்டு மனத்தையும் வாழ்வையும் அதற்கே ஒப்படைத்துவிட்ட ஒரு முஸ்லிம், அந்த வேதத்திலேயே கருத்து வேறுபாடு கொள்ள முடியுமா? அதை இறைத்தூதரே சொல்லவும் கூடுமா? நபித் தோழர்கள் மற்றும் தாபிஈன்கள் மத்தியிலேயும் கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளன. ஓஇஃலாமுல் முவக்கயீன்ஔ என்ற இமாம் இப்னுல் கையும் அவர்களின் நூலில் நபித் தோழர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் சொல்லப்பட்டுள்ளன. இங்கே நாம் சொல்ல விரும்புவது கருத்து வேறுபாடுகள் பற்றி மாத்திரமல்ல; எவ்வளவு கருத்து வேறுபாடுகள் தோன்றியபோதும் ஒருவருக்கொருவர் பிளவுபட்டுப் போய்விடவில்லை. அவர்கள் இஸ்லாமிய உணர்வின் மீதூறி நின்ற சகோதரத்துவ மனப்பான்மையுடன் தொடர்ந்து நேசம் பூண்டவர்களாகவே திகழ்ந்தார்கள். கருத்து வேறுபாடுகளை முஸ்லிம் சமூகத்துக்கான அருள் எனக் குறிப்பிடுவோரும் உண்டு. அதனை எவ்வாறு அணுக வேண்டும் என்பதே கவனத்திற்குரியது. இது போன்ற விளக்கங்கள், இஸ்லாத்தில் ஊர் விலக்கத்திற்கு அனுமதியில்லை என்பதாகவே பொருள் கொள்ளப்பட வேண்டும். அதிகாரப் புள்ளியுடன் இழைந்தோடும் ஒரு ஊர் ஜமாஅத்திற்கு இத்தனை ஆய்வுகளும் பரிசீலனைக்குப் போயிருக்கமாட்டா என்பது நிச்சயம். எனவே, மாநில ஜமாஅத்துல் உலமா சபை குமரி மாவட்ட ஜமா அத்துல் உலமாவிற்கும் தக்கலை ஜமாத்தார்க்கும் தக்க அறிவுரை வழங்கி வழிகாட்டுவது, அது இதுகாறும் கடைபிடித்த பொறுமைக்கான பலனாகும்.

உள்ளடக்கம்

 

 

Google