|
பேராசிரியர் இராமானுஜம் கைசிக நாடகத்தைப் பற்றி சுந்தர ராமசாமியுடன்
பேசிக்கொண்டிருந்தபோது, இடையில் பேராசிரியர் பத்மநாபனும் நானும் கலந்துகொண்டோம். அப்போது இராமானுஜம் அவரது மகளுடன் சு.ரா. வீட்டுக்கு வந்திருந்தார்.
முக்கியமாகப் பழைய கூத்துகளை ஆவணப்படுத்த வேண்டும் என்பதைத் தேவதாசி ஒழிப்புச்
சட்டம் அறிமுகமான சமயத்தில் யாரும் எழுப்பவில்லை; அப்போது தேவதாசிகள் நிகழ்த்திய
வட்டாரரீதியான புராணச் சார்புள்ள கூத்துகளை ஆவணப்படுத்தியிருந்தால், நம்முடைய பழைய
நாடக வடிவத்தை மீட்டுருவாக்கம் செய்திருக்க முடியும் என்று பேசிக்கொண்டேபோன
இராமானுஜம் ஏற்கனவே சுந்தர ராமசாமியிடம் பேசியதைப் பத்மநாபனிடம் மீண்டும் சொன்னார்.
நான்குநேரியில் அவரது அத்தையின் வாயைக் கிளறியபோது திருக்குறுங்குடி ஊரில் நடந்த
கைசிக நாடகத்தைப் பற்றிய செய்திகள் கிடைத்ததைச் சந்தோஷத்தோடு பகிர்ந்துகொண்டார்.
பேராசிரியர் இராமானுஜம் திருக்குறுங்குடி ஊரை அடுத்த நான்குநேரியில் பிறந்தவர்
என்றாலும் அவரது பால்யகால வாழ்க்கை அன்றைய தென்திருவிதாங்கூர் பகுதியிலேயே
கழிந்திருக்கிறது. அதனால் அவர் திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர்ப் பக்கம்
மகேந்திரகிரி மலை அடிவாரத்திலிருந்த திருக்குறுங்குடி நம்பி கோயிலில் நடந்த
கூத்தைப் பார்க்கவோ கேள்விப்படவோ இல்லை.
அத்தை சொன்ன கைசிக நாடகம் இராமானுஜத்திற்கு முக்கியமாகப்பட்டிருக்கிறது. அப்போது
அத்தைக்கு வயது 92. இராமானுஜம் கைசிக நாடகம் பற்றிய செய்திகளைச் சேகரிக்கத்
தொடங்கியது 1992இல். அதே ஆண்டில் திருக்குறுங்குடிக்கு அந்த நாடகத்தைப் பார்க்க
அவர் சென்றுவிட்டார்.
திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி வட்டத்திலுள்ள திருக்குறுங்குடி திருநெல்வேலி
நகரத்திலிருந்து 40 கி.மீ. தொலைவில் இருக்கிறது. மகேந்திரகிரி மலை அடிவாரத்தில்
உள்ள இந்த ஊர், 108 வைஷ்ணவ திவ்விய க்ஷேத்திரங்களில் ஒன்று. இவ்வூரின் பெரிய
கோயிலில் உள்ள தெய்வம் அழகியநம்பி (திருக்குறுங்குடி நம்பி) எனப்படுகிறார்.
இக்கோயில் கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது. நம்மாழ்வார் பாடிய தலம் இது.
12ஆம் நூற்றாண்டில் இராமானுஜர் இக்கோயிலுக்கு வந்திருக்கிறார் என்பது குரு
பரம்பரைச் செய்தி. விஜயநகர, நாயக்கர் கட்டடக் கலைக்குச் சான்றாக நிற்பது இக்கோயில்.
பேராசிரியர் இராமானுஜம் 1996இல் கார்த்திகை மாதம், கைசிக ஏகாதசியில்
திருக்குறுங்குடிக்கு நாடகம் பார்க்க மறுபடியும் வந்திருக்கிறார். கார்த்திகை மாதம்
சுக்கிலபட்ச ஏகாதசி, கைசிக ஏகாதசி எனப்படும். அன்று வைணவர்கள் இரவு முழுக்க
விழித்திருந்து விரதம் இருப்பார்கள். அடுத்த நாள் காலை விரதத்தை
முடித்துக்கொள்வார்கள். அன்று இரவு நடத்தப்படுவது கைசிக நாடகம்.
இராமானுஜம் இந்த நாடகத்தை முதலில் பார்த்தபோதும் (1992), தன் அத்தையிடம் இரண்டு
மூன்று நாள்கள் உரையாடியபோதும் கிடைத்த தகவல்களுக்கும் தான் 1997இல் பார்த்த நாடக
வடிவத்திற்கும் பெரும் வேறுபாடு இருந்ததைக் கண்டுகொண்டார். அப்போது அந்த நாடகத்தின்
மூலப் பகுதி சிதைக்கப்பட்டுக் கூர்மை இழந்து கலைத்தன்மையற்று இருந்ததாகச் சொன்னார்.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் விடிய விடிய நடந்த அந்த நாடகம் நூற்றாண்டின்
இறுதியில் (1997இல்) 45 நிமிடங்கள் மட்டுமே நடந்தது. கைசிக ஏகாதசியில் இரவு முழுக்க
விழித்திருக்க வேண்டும் என்பது நியதி. நாடகமோ 45 நிமிடங்களில் முடிந்துவிடும்.
அதனால் மற்ற நேரங்களில் வராக புராணம் பகுதியைப் பாராயணம் செய்துகொண்டிருந்தார்கள்.
நேரத்தை நீட்டும் வழியாக அது இருந்திருக்க வேண்டும்.
வராக புராணத்தில் விஷ்ணு பூமாதேவியிடம் சொல்வதாகக் கைசிக புராணக் கதை வருகிறது.
நம்பாடுவான் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவன். பெரும்பாலும் இவன் பாணர்
ஜாதிக்காரனாக இருக்கலாம். இவன் கார்த்திகை மாதம் கைசிக ஏகாதசியில் அழகியநம்பியைப்
பாடிப் பரவுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒருமுறை அழகியநம்பி கோயிலுக்கு
நம்பாடுவான் வந்த காட்டுவழியில் பிரம்மராட்சசன் ஒருவன் நின்றுகொண்டிருந்தான். அவன்
முற்பிறவியில் பிராமணன். பெரும் பாவம் செய்ததால் பிரம்மராட்சசன் ஆனவன். அவன்
நம்பாடுவானைத் தடுத்து நிறுத்தி, "உன் உடலைப் புசிக்கப்போகிறேன்" என்றான்.
நம்பாடுவானோ, "நான் அழகியநம்பியைப் பாடி சேவித்துவிட்டுத் திரும்பி இதே இடத்திற்கு
வருவேன், அப்போது நீ என்னைப் புசித்துக்கொள்ளலாம்" என்கிறான். உடனே ராட்சசனும்
நம்பாடுவான் சொன்னதை நம்பி, அவனை அனுப்பிவைக்கிறான்.
நம்பாடுவான் கோயிலில் இரவு முழுக்கப் பாடினான். நம்பியைச் சேவித்தான். பின்
ராட்சசனுக்கு வாக்களித்தபடி அவன் நின்ற இடத்தை நோக்கி நடந்தான். காட்டுவழியாக
நடந்தபோது, விஷ்ணு ஒரு முதியவர் உருவம் தாங்கி வந்தார். 'வழியில் பிரம்மராட்சசன்
ஒருவன் நிற்கிறான். உன்னைப் புசித்துவிடுவான். நீ வேறு வழியில் சென்று தப்பிவிடு'
என்று நம்பாடுவானைப் பார்த்துச் சொன்னார். அவனோ 'இல்லை, நான் அந்த ராட்சசனுக்கு
வாக்குக் கொடுத்துவிட்டேன். அவனிடம் செல்ல வேண்டும். அவனைச் சந்திக்கத்தான்
போகிறேன்' என்று சொல்லிவிட்டு நடந்தான்.
நம்பாடுவானைப் பார்த்தபோது, ராட்சசனின் மனநிலை மாறியிருந்தது. நம்பாடுவானைப்
புசிக்க அவன் விரும்பவில்லை. அழகியநம்பியின் முன் பாணன் பாடிய பாடலைப் பாடுமாறு
கேட்கிறான். நம்பாடுவானுக்கு அதில் விருப்பமில்லை. அவர்கள் தொடர்ந்து
உரையாடுகின்றனர். முடிவில் நம்பாடுவான் ராட்சசனின் பாவம் தீர அருள் வழங்குகிறான்.
இந்தக் கதை நாடகமாக நடந்தபோது, திருவடிவழகிய நம்பியே கண்ணுற்றார் என்பது வைஷ்ணவ
சம்பிரதாயம்.
கைசிக நாடகம் இராமானுஜர் காலத்துப் பழமையானது. அப்போது இது வழக்கில்
இருந்திருக்கவேண்டும். இராமானுஜர் வேத ரகசியத்தை எல்லாச் சமூகத்திற்கும்
பரகசியமாக்கியபோது, இந்த நாடகம் ஒருமைப்பாட்டை வலியுறுத்த உதவியிருக்கலாம். இது
வெறும் யூகந்தான்.
விஜயநகர ஆட்சிக்காலத்தில் இந்த நாடகம் நடந்ததற்குச் சான்று உண்டு. விஜயநகரப்
பேரரசரான கிருஷ்ணதேவராயர் அமுக்தமால்யா என்னும் தன் நூலில் நம்பாடுவானைப் பற்றிக்
குறிப்பிடுகிறார். அச்சுதராயர் என்ற அரசரின் இரண்டாம் மனைவி கைசிக நாடகம்
நடத்துவதற்கு நிபந்தம் கொடுத்திருக்கிறாள். இதைத் தஞ்சை சரஸ்வதி மஹாலில் பார்த்ததாக
அறிஞர் பண்டித விஸ்வநாதன் எடுத்துக் காட்டுகிறார்.
பேரா. இராமானுஜம் முதலில் பார்த்த கைசிக நாடகம் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
இரண்டாம் முறை பார்த்தபோதும் ஏமாற்றம் தொடர்ந்திருக்கிறது. அதில் பிரம்மராட்சசனாக
நடித்தவர் மட்டும் விதிவிலக்காக இருந்திருக்கிறார். அப்போது பெரும்பாலும் திரை
மறைவிலிருந்த prompter அந்த நாடகத்தின் பகுதிகளை நடிகர்களுக்குச்
சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார். நடிகர்களுக்கு அந்த நாடகம் தளபாடமாக
இருக்கவில்லை. அவர்கள் prompter எங்கே நிற்கிறார் என்று திரும்பித்
திரும்பிப் பார்த்துக்கொண்டே நடித்திருக்கிறார்கள். ஊர் மக்களுக்கும் இதன் தொய்வு
தெரியவில்லை என்கிறார் இராமானுஜம்.
இதன் பிறகு இராமானுஜம் தஞ்சாவூரில் தன் சக பேராசிரியரிடம் இது பற்றிக் கேட்டபோது
அவர், வெல்பர்ன் என்ற அமெரிக்கர் கைசிக புராணத்தை மொழிபெயர்த்த தகவலைச் சொன்னார்.
இராமானுஜம் அந்த மொழிபெயர்ப்பைத் தேடியபோது, அது வராக புராணப் பகுதி என்று
அறிந்துகொண்டார்.
கைசிக புராணம் முதலில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டு, பின்னர் மணிப்பிரவாளத்தில்
மொழி பெயர்க்கப்பட்டது. அதன் மூலப் பனுவல் கிடைத்துவிடும் என்னும் தகவல்கள் தெரிந்த
பின்புதான் இந்த நாடகத்தை மீட்டெடுக்கும் பணியில் இராமானுஜம் தீவிரமானார்.
இந்த நாடகத்தை மறுபடியும் மீட்டெடுத்து நடத்திக்காட்டுவது தன்னால் மட்டும் முடியாது
என்பதை ஆரம்பத்திலேயே உணர்ந்த இராமானுஜம் மறுபடியும் 1996இல் அந்த நாடகத்தைப்
பார்த்தபோது, சிறந்த பரதநாட்டியக் கலைஞரான திருமதி அனிதா ரத்தினத்திடம் அதைப்
பற்றிச் சொல்லியிருக்கிறார். அனிதாவின் பூர்வீகமும் திருக்குறுங்குடிதான். அவர்
இராமானுஜத்திற்கு உதவ முன்வந்திருக்கிறார்.
இராமானுஜம் 1996இல் கைசிக நாடகத்தை வீடியோவில் பதிவுசெய்துவிட்டார். ஓரளவு அது
பற்றிய செய்திகளைச் சேகரித்திருக்கிறார். பின்னர் அனிதாவின் உதவி கிடைத்தவுடன் முழு
நேரமாய்க் களத்தில் இறங்கினார். அந்த நேரத்தில் சுந்தர ராமசாமியின் வீட்டிற்கு
வந்தார். அந்த நாடகம் பற்றி சு.ரா.விடம் உற்சாகமாகப் பேசினார்.
கைசிக நாடகம் தொடர்பாக அறிந்த வயதான தேவதாசி ஒருவர் நாகர்கோவிலில் இருப்பதாகவும்
அவரைத் தேடிவந்ததாகவும் சொன்னார். 1996இல் பதிவுசெய்த நாடகத்தின் அடிப்படையில்
எழுதப்பட்ட மூலப் பிரதி கிடைக்குமா என்று தேடினார். வள்ளியூரில் தங்கியிருந்து,
திருக்குறுங்குடிக்கு அலைந்து கொண்டிருந்தார். அவர் சேகரித்த செய்திகள் அவருக்குத்
திருப்தி தரவில்லை. அந்த நாடகத்தின் நுட்பத்தைப் புரியவும் இசைத்தன்மையை அறியவும்
மூலப் பனுவல் தேவை என்பதை உணர்ந்த பின்பு அவரது தேடுதல் நீண்டது.
கைசிக நாடகத்தின் மூலப் பனுவல் மணிப்பிரவாள நடையிலிருந்தது. அதை வைத்திருந்த
திருக்குறுங்குடி ஊரைச் சார்ந்த, வைணவ சம்பிரதாயம் நன்கு அறிந்த அறிஞர் திரு.
நாராயண அய்யங்காரிடம் திருப்பித் தருவதாக வாக்குக்கொடுத்துவிட்டு அந்த ஏட்டுப்
பிரதியைப் பெற்ற பிறகுதான் இராமானுஜத்திற்கு முழுநம்பிக்கை வந்தது. தன்னுடைய
மீட்டுருவாக்க வடிவத்தில் மூலப் பனுவலின் மொழி நடையை மாற்றக் கூடாது என்பதில்
இராமானுஜம் உறுதியாக இருந்தார்.
கைசிக நாடகம் அபிநயமும் பாடலும் கலந்த நாடகம். ஏட்டுப் பிரதியில் 40 ராகங்கள்
இருப்பதும் இவையெல்லாமே அபிநயிப்பதற்கு ஏற்றவை என்பதும் மூலப் பனுவலைத் திரு.
நாராயண அய்யங்காரிடம் விவாதித்தபோது, இராமானுஜத்திற்குத் தெரியவந்தது. அதோடு அந்த
நாடகத்தின் ராகமான கைசிகம் என்பதை பைரவி என்று அடையாளம் காணவும் சிலர் உதவினார்கள்.
1996க்குப் பிறகு இராமானுஜம் ஆறு மாதம் தொடர்ந்து உழைத்தார். தஞ்சைத் தமிழ்ப்
பல்கலைக்கழக நாடகத் துறைப் பேராசிரியர், தமிழ் நாடக இயக்குநர், நாடக
மொழிபெயர்ப்பாளர், கிரேக்க லத்தீன் நாடகங்களைத் தமிழ் வாசகனுக்கு ஏற்றவாறு தந்தவர்,
ந. முத்துசாமியுடன் கூத்துப்பட்டறையில் நெருக்கமாக இருந்தவர் என்னும் நீண்ட பின்னணி
கைசிக நாடகத்தின் வடிவத்தை மீண்டும் கொண்டுவர எளிதான காரியமாக இருந்தாலும் நாடகம்
தொடர்பான செய்திகளைச் சேகரிப்பது அவருக்குச் சிரமமாக இருந்தது.
கைசிக நாடகம், நாடு விடுதலை பெற்ற பின்பு சில ஆண்டுகள் முழுவதுமாய்
நடிக்கப்பட்டிருக்கிறது. 1950இல்கூடத் தேவதாசி மரபினர் நடித்தனர். அந்த நாடகத்தைப்
பார்த்தவர்களின் நினைவில் நின்றதைத் தொகுத்துப் பார்த்தபோது, மூலத்தை அப்படியே
நடித்ததாக இராமானுஜம் புரிந்துகொண்டார். இதற்குப் பிற இசைக்கலைஞர்கள் அவருக்கு
உதவியிருக்கின்றனர். பின்னிரவில் ஆரம்பித்து விடியற்காலை 5 மணி வரை இது நடந்தது.
தமிழகத்தில் தேவதாசி ஒழிப்பு நடைமுறைக்கு வந்தபோது, தேவதாசிகளால் நடத்தப்பட்ட
நாடகங்கள் அதன் பிறகும் நடந்திருக்கின்றன. இது இரண்டு குழுக்களாக நடத்தப்பட்டது.
நாடு விடுதலை அடைந்த பின்பு இது முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. கோயில்
நிலங்களைப் பயிரிட்டவர்கள் நிலங்களில் உரிமைகொண்டாட ஆரம்பித்த பிறகு வட்டாரரீதியாக
மரபுவழிக் கலைகளைப் பேணும் நிபந்தச் செலவு நிறுத்தப்பட்டது. இதற்கான காராண்மை
நிலங்கள் அடையாளமில்லாமல் ஆயின.
இதனால் பரம்பரையாக நடிக்கப்பட்ட, நிகழ்த்தப்பட்ட கலைவடிவங்கள் நிறுத்தப்பட்டன.
சடங்கு சார்ந்தவை மட்டும் எஞ்சி நின்றன. அந்தச் சடங்குக் கூறுகளுடன் அவற்றின் கலைக்
கூறுகள் தொடர்ந்தன. தேவதாசி வழக்கம் இருந்தபொழுது நாடகங்களைக் கற்பித்த
குருமார்களின் மறைவும் இந்த அழிவுக்குக் காரணமானது. தமிழகத்தின் பொதுவான இந்த நிலை
கைசிக நாடகத்திற்கும் பொருந்தும்.
இராமானுஜம் கைசிக நாடகத்தில் நடித்த தேவதாசிகளையே மறுபடியும் நடிக்கவைத்து மாதிரி
வடிவத்தைப் பதிவுசெய்ய முயன்றதே இதன் வெற்றி என்று கூறலாம். அதோடு 1950க்குமுன்
நடிக்கப்பட்ட நாடகத்தின் பின்புலமாக இருந்த நட்டுவாங்கக்காரர்களும் தேவதாசிகளுடன்
பங்கேற்க விரும்பினர். அப்படித் தேடியதில் இருவரைக் கண்டுபிடித்தார் இராமானுஜம்.
அவர்கள் இந்த நாடகத்திற்கும் பின் புலமாக இருக்க வேண்டும் என வேண்டுகோள்
விடுக்கப்பட்டது. அந்தத் தேவதாசி மரபுப் பெண்களில் ஒருவருக்கு வயது 73.
இன்னொருவருக்கு 85 (1996இல்) இவர்களது மக்கள் நாகர்கோவிலிலும் திருநெல்வேலியிலுமாக
இருந்தனர். அந்தத் தேவதாசி மரபுப் பெண்ணை நாகர்கோவிலில் தேடியபோதுதான், இராமானுஜம்
சுந்தர ராமசாமி வீட்டிற்கு வந்தார். அவரது வீட்டிலிருந்துகொண்டே அந்தப் பெண்ணைத்
தேடி அலைந்தார். ஒரு சில இடங்களுக்கு நானும் அவருடன் போனேன்.
அந்தக் குடும்பத்தினர் தங்களைத் தேவதாசிக் குலமரபினர் என்று அடையாளப்படுத்திக்கொள்ள
விரும்பவில்லை. அதனால் ஒத்துழைக்க மறுத்துவிட்டனர். மேடையில் நிகழ்ச்சி நடத்த
அவர்கள் விரும்பவில்லை. என்றாலும் இராமானுஜம் விடாப்பிடியாக முயன்றபோது, நாடகம்
பற்றிய தகவல்களைச் சொல்லவும் பின்னணியை விளக்கிக் கூறவும் ஒத்துழைத்தார்கள்.
இவர்களில் நாகர்கோவிலில் இருந்த தேவதாசி மரபில் வந்த முதிய பெண்ணிடம் கைசிக
நாடகத்தின் கடைசிப் பதிவைக் கண்ணில் காட்டியும் காதில் சொல்லியும் செய்த முயற்சிகள்
பலனளித்தன. அவருக்குப் பழைய விஷயங்கள் நினைவில் வர ஆரம்பித்தன. கொஞ்சங்கொஞ்சமாக
அவரைத் தயாராக்கிக்கொண்டே வந்தார் இராமானுஜம். அதோடு ஏட்டில் இருந்த மூலப்
பாடல்களிலுள்ள ராகங்களின் ஏற்ற இறக்கங்களை அடையாளங்கண்டு திருத்தினார்.
இந்த நேரத்தில் தஞ்சாவூரில் துரைக்கண்ணு என்ற ரேவதி அம்மாளைச் சந்தித்தார்
இராமானுஜம். தேவதாசிக் குடும்பத்தில் பிறந்த அந்த வயதான பெண் தஞ்சையில் சபேந்திர
பூபால குறவஞ்சி நாடகத்தில் நடித்தவர். அவர் இராமானுஜத்தின் நாடகக் கட்டமைப்புக்கு
உதவினார். இப்படியாக ஏழு மாதங்கள் கழிந்துவிட்டன.
கோயில்களில் சுவர் ஓவியங்களை மீட்டெடுக்கும் பணி அண்மைக் காலமாக நிகழ்ந்து
வருகிறது. தாவரச் சாயத்தில் வரையப்பட்ட இந்த ஓவியங்களில் பெரும் பாலானவை
அழிந்துவருகின்றன. இந்த ஓவியங்களிருக்கும் கோயில்களின் குடமுழுக்கு விழாவில்
நடக்கும் மராமத்துப் பணியில் ஒன்றாகவே சுவர் ஓவிய மீட்டெடுக்கும் பணியும்
நடக்கிறது. கேரளத்தில் இதுபோன்ற பணியைத் துல்லியமாகச் செய்கின்றனர். பழைய
ஓவியங்களின் மாதிரியை டிஜிட்டல் கேமராவில் பதிவுசெய்து கணிப்பொறி வழி நுட்பமாக அதை
இனம் கண்டு பழைய வடிவத்தை அப்படியே சுவரில் பதித்துவிடும் முயற்சி நடக்கிறது.
இந்தச் செயல்பாட்டில் உள்ள உழைப்பு ஒருவிதத்தில் நவீனத் தொழில்நுட்பத்தால்
எளிமையாகிவிட்டது. ஆனால், இராமானுஜத்தின் நிலை அப்படியல்ல.
இந்த நாடகத்தை முதலில் பார்த்தபோது (1992), அதை மீட்டெடுக்க முடியாது என்னும்
நம்பிக்கையில் பேசிய இராமானுஜம் அதைப் பதிவுசெய்த பின்பு (1997) ஆறு மாதங்களில்
முழு நாடகத்தையும் மீட்டெடுக்க முடியும் என்ற நிலைக்கு வந்துவிட்டார். ஒருவகையில்
அதற்கு அனிதா முழுக்கக் காரணமாக இருந்தார். இராமானுஜம் பார்த்த உடைந்துபோன நாடக
உரையாடல் அவருக்கு முதலில் அவநம்பிக்கை அளித்தாலும் அதை நல்ல வாய்ப்பாகப்
பயன்படுத்திக்கொண்டார். நாடகம் தொடர்பான செய்திகள் அவருக்குக் கிடைத்தன. அதனால்
நாடக அமைப்பு பற்றிய பழைய சிந்தனைக்கு மூலப் பனுவல் வடிவத்தைத் தேட
வேண்டியிருந்தது.
ஓலைப் பனுவலிலிருந்து சரியான நாடகத்தைத் தயாரித்தது, அதன் இசைப் பின்னணியாகச்
சாலியமங்கலம் பரம்பரைப் பாகவத மேளாக்காரர்களின் உதவியைப் பெற்றது என்ற அவரது பெரும்
முயற்சியே இன்று நமக்குக் கிடைக்கும் கைசிக நாடக வடிவம். |