Google   www kalachuvadu.com

 

பத்தி
கலைஞரின் கேள்விகள்
சக்கரியா
தமிழாக்கம்: சுகுமாரன்
Neelakash Kshetrimayam
Courtesy:Tehelka, 20, October 2007

தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி தீரமான பாவ பரிகாரத்தை நடத்தியிருக்கிறார். குஜராத் கூட்டப் படுகொலை காலத்தில்கூட இந்துத் தீவிரவாதிகளுடன் கூட்டணி உறவை நிலைநிறுத்திக்கொண்டிருந்தவர் அவர். நரேந்திர மோடியும் சங்கப் பரிவாரங்களும் நடைமுறைப்படுத்திய மனிதப் படுகொலை பற்றிச் சொல்ல அன்று கருணாநிதிக்கு எதுவுமில்லாமலிருந்தது. என்.டி.ஏ. ஆட்சிக் காலம் முழுவதும் இந்துத்துவ அரசுக்குள்ளும் வெளியிலுமிருந்த பயங்கர சக்திகள் இந்தியா முழுவதும் திட்டமிட்ட குண்டு வெடிப்புகளையும் 'மோதல்' கொலைகளையும் இதர பயங்கரவாத நடவடிக்கைகளையும் கட்டவிழ்த்துவிட்டபோதும், மு. கருணாநிதி ஒரு மவுனச் சாட்சியாக மட்டுமே இருந்தார். தமிழ்நாட்டிலேயே கோயம்புத்தூரில் சிலர் அரங்கேற்றிய குண்டுவெடிப்புகளின் பின்னணியிலிருந்த உண்மை தெரிந்திருந்தும், ஜெயலலிதாவைப் போலவே கருணாநிதியும் மவுனத்தையே கடைபிடித்தார். தன்னுடைய மவுனம் ஏராளமான நிரபராதிகளை ஒன்பது ஆண்டு காலம் விசாரணை இல்லாத சிறைவாசத்துக்கு உள்ளாக்கியது என்பது அவரை வேதனைப்படுத்தியதாகவும் தெரியவில்லை. இந்த வகையில் ஈ.வெ. ராமசாமியின் வாரிசு என்றும் அண்ணாத்துரையின் வாரிசு என்றும் பாராட்டப்படும் கலைஞர் இந்துத் தீவிரவாதத்துக்கு வழங்கிய திடமான ஆதரவு தமிழ் மறுமலர்ச்சியை, தமிழ்த் தேசியத்தை, மனிதாபிமானத்தை மதிக்கும் ஒவ்வொருவரையும் திடுக்கிடச்செய்தது. ஜெயலலிதாவுடனான அரசியல் போராட்டத்தின் ஒரு பகுதி அது என்று நம்ப நாம் தயாராகலாம். அப்படி நம்பினாலும் இந்துத் தீவிரவாதத்துக்குத் தி.மு.க. அளித்த ஆதரவு, குறிப்பாகத் தமிழ்ப் பண்பாட்டின் மீதும் பொதுவாகத் தென்னிந்திய முற்போக்குச் சிந்தனைமீதும் ஏற்படுத்திய தாக்குதல் கடுமையானதாகவே இருந்தது என்பதை மறுக்கவியலாது. கலைஞர் கருணாநிதியின் பொதுவாழ்வில் மிக இருண்ட அத்தியாயங்கள் அவை என்பதிலும் சந்தேகமில்லை. அந்த இழந்துபோன மானங்களுக்கு இன்று அவர் திருப்புமுனை உருவாக்கியிருக்கிறார்.

தலைமன்னார் வளைகுடாவில், இந்தியக் கண்டத்தையும் இலங்கைத் தீவையும் ஒரு பாலம்போல இணைக்கும் புவியியல் அமைப்பை 'ராமர் சேது' என்று இன்றைக்குச் சிலர் அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் பெரும் பூகம்பங்களால் இந்தியக் கண்டத்தின் முனை பெயர்ந்து விலகி இன்றைய இலங்கையானது. அதன் எச்சமாக உள்ள ஆழ்கடல் திட்டை இராமாயணக் கதையில் வரும் இராமன் கட்டிய பாலமென்று விவரிப்பது குழந்தை இலக்கியம் எழுதுபவர்களுக்குப் பயனளிப்பதாக இருக்கும். அடிப்படைப் பொது அறிவுள்ள ஒருவரும் அதன் தேவதைக் கதைத்தன்மையைப் புரிந்துகொள்ளாமல் இருக்கமாட்டார்கள். பரசுராமர் கோகர்ணத்திலிருந்து கன்னியாகுமரியை நோக்கித் தன்னுடைய மழுவை வீசியெறிந்தபோது, கடல் பிளந்து உருவானதுதான் கேரளம். எனவே, அது புனிதமான பூமி. அந்த மண்ணில் மலையாளிகள் விவசாயம் செய்வதையும் வீடு கட்டுவதையும் கைவிட வேண்டும் என்னும் வாதத்தைக் கொண்டுவந்தால் எப்படி இருக்கும்? (சந்தர்ப்பவாதிப் பெருமாள்களான மலையாளிகள் பரசுராமனைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை என்று அறிவிப்பதுதான் ஒரே வழி). பழைய காலங்களில் வாழ்ந்த மேதைமையுள்ள கதையாளர்கள் எழுதிய கதைகள் எல்லாம் உண்மையானவை என்று வாதாடத் தொடங்கினால், அதே அளவுகோலை வைத்து அசோகமித்திரன், ஓ.வி. விஜயன், பிரேம் சந்த், கஸான்த்சாக்கீஸ் ஆகியவர்களின் கதாபாத்திரங்களும் நிஜமானவை என்று வாதாட நேரும். ஆயிரம் ஆண்டுகள் கழித்து அவர்களுடைய கதைகளின் நாயகர்களும் நாயகியரும் புதிய கடவுளர்களாக ஆகமாட்டார்கள் என யாருக்குத் தெரியும்? காலத்தைத் திரும்பிப் பார்க்கும்போது, இது போன்ற பரிணாமங்களைக் காண முடியும். அதிபிரதாபசாலிகளும் உலகப் புகழ்பெற்ற ஆலயங்களில் லட்சக்கணக்கானவர்களால் வழிபடப்பட்டவர்களுமான எகிப்தியக் கடவுள்கள் எங்கே போனார்கள்? அதைப் போன்ற கிரேக்கத் தெய்வங்கள் எங்கே போயின? மாபெரும் ரோமானிய சாம்ராஜ்யத்தின் சுக்கான் பிடித்திருந்த கடவுளர்களான ஜூபிடரும் அப்போலோவும் மற்றவர்களும் என்ன ஆனார்கள்? அவர்களுக்குப் பின்னாலும் பெரும் அரசியல் இருந்தது. அன்றைய உலகத்தில் மிகவும் வலிமை வாய்ந்த சக்ரவர்த்திகள்தாம் அந்தக் கடவுளருக்கு முன்னால் தலைவணங்கி நின்றவர்கள். அன்றைய உலகின் மிகப் பெரும் படைகள்தாம் அந்தக் கடவுளரின் பெயரால் போர் செய்தன. ஆனால், இன்று அவர்களின் பெயர்கள்கூட மனித மனத்திலிருந்து மறைந்து போயிருக்கின்றன.

புராணிகங்களை (myth) வரலாறாக்க முயல்வதன் கபடத்தை நாம் இனங்காண வேண்டும். அதன்மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்குப் புராணிகம் மதிப்புக்குரியது. அந்த நம்பிக்கையை நாமும் மதிக்க வேண்டும். ஆனால், புராணிகத்தை வரலாற்று உண்மையாக ஒப்பனை செய்துவைக்கும்போதுதான் பாபர் மசூதி இடிப்பு போன்ற கொடூர நிகழ்ச்சிகள் உருவாகின்றன. இராமனைத் தெய்வமாகவும் சீதையைத் தேவியாகவும் வழிபடும் கோடானுகோடி இந்தியர்கள் உள்ளனர். அவர்களுடைய நம்பிக்கையை மதிப்பது என்பது அந்தக் கற்பனைகளின் மீது வரலாற்று உண்மையின் சாயத்தைப் பூசி அவற்றை அரசியல் துடைப்பமாக்குவதல்ல. மாறாக, அந்த நம்பிக்கைச் சுதந்திரத்தைக் காப்பாற்றுவதும் அந்த நம்பிக்கையின் இடத்தில் அத்துமீறி நுழையாமலிருப்பதுந்தான் அதை மதிக்கிறோம் என்பதற்கான அடையாளங்கள்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நடுவிலுள்ள கடல் திட்டைத் தகர்ப்பதனால் ஏற்படும் சூழலியல் விளைவுகளைக் குறித்துத்தான் உண்மையில் நாம் ஆராய வேண்டும். மத உணர்வைப் புண்படுத்துகிறது என்று அரசியல் கட்சிகள் சொல்லுவது செயற்கையானது, திட்டமிட்ட பொய் என்று நமக்குத் தெரியும். அப்பாவி விசுவாசிகள் சிலரிடமாவது தங்களுடைய பொய்யை அவை திணிக்கவுஞ்செய்யும் (ஐரோப்பிய நாடுகளில் வழிபாட்டுக்காக வைத்திருந்த யேசுகிறிஸ்துவின் நிஜமான சிலுவையின் துண்டுகளைச் சேர்த்துவைத்தால் அது ரோமாபுரியிலிருந்து சீனாவரைக்கும் நீண்டு செல்வதாக இருக்குமாம்). இந்திய - இலங்கைப் புவியியலின் முதன்மையான உறுப்பு என்று விவரிக்கப்படும் இந்தக் கடல் திட்டின் ஒரு பகுதியை இடிப்பதால் என்ன நேரும்? அது நிலவியல் - சூழலியல் அமைப்புகளுக்கு எந்த வகையில் ஊறு விளைவிக்கும்? இந்தக் கேள்விகள் செயற்கையானவையல்ல. அந்தப் 'புண்படுத்தல்' உண்டாக்கக்கூடிய பின்விளைவுகள் இந்தப் புராணத்துக்காகச் சிந்தப்படும் கண்ணீராக முடிவடையாது. நம்மால் சமாளிக்க முடியாத சுற்றுச்சூழல் பிரச்சினைகளாகவே இருக்கும். எனவே, கடல் திட்டை இடிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த நினைப்பவர்கள் செய்ய வேண்டியவை, உண்மையாகவும் அறிவியல் பூர்வமாகவும் சூழலியல் உணர்வுடனும் ஓர் ஆய்வை நடத்துவதும் அதன் அடிப்படையில் மேற்கொண்டு செயல்படுவதுந்தான்.

கலைஞர் இராமாயணத்தைக் கேள்விக்குட்படுத்திய முறை ஒருவேளை கடுமையானதாக இருக்கலாம். இராமாயணம் என்னும் 'மித்தை' அரசியல் துடைப்பமாக மலினப்படுத்தும் செய்கைக்கு முன்னால் கலைஞரின் கடுமையான அணுகுமுறை முதன்மை கொண்டதுதான். திட்டமிடப்பட்ட பைத்தியக்காரத் தனங்களைப் பொய் சொல்லிச் சமாளிப்பது சாத்தியமற்றது. அப்பட்டமான உண்மையின் வலியால்தான் அதைச் செய்ய முடியும். கலைஞர் நடத்திய விசாரணையின் அரசியல் நோக்கம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அதன் மூலம் அறிந்தோ அறியாமலோ அவர் ஒரு பாவபரிகாரத்தை நிறைவேற்றியிருக்கிறார். தென்னிந்தியாவின் அறிவார்ந்த மதச்சார்பற்ற மரபை மீண்டும் ஒளிரச்செய்திருக்கிறார்.

உள்ளடக்கம்

 

 

Google