Google   www kalachuvadu.com

 

கட்டுரை
சேதுக் கால்வாய்:
பாதையை மறிக்கும் பாலம்
தேவிபாரதி
தமிழர்களின் 150 ஆண்டுகாலக் கனவு என வர்ணிக்கப்படும் சேதுக் கால்வாய்த் திட்டத்தை மையப்படுத்தி எழுந்துள்ள விவாதங்கள் அத்திட்டம் செயல்படுத்தப்படுவதைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றன. பெரியாரால் முன்னெடுக்கப்பட்டு, அவரது மறைவுக்குப் பின்னர் கிட்டத்தட்டக் கைவிடப்பட்டுவிட்ட பகுத்தறிவுக்கும் மூடநம்பிக்கைக்குமிடையிலான போராட்டங்கள் இவ்விவாதங்களின் மூலம், இன்னும் சரியாகச் சொல்லப்போனால், திமுகவுக்கும் பாரதிய ஜனதா மற்றும் அதிமுகவின் தலைமையிலான இந்துத்துவ இயக்கங்களுக்குமிடையிலான தெருச்சண்டைகளின் மூலம் புத்துயிர் பெற்றிருப்பதுபோன்ற தோற்றம் தமிழக அரசியல் அரங்கில் உருவாகியுள்ளது. இதிகாச நாயகன் ராமன் இந்துத்துவ மீட்டுருவாக்கத்தின் அடையாளமாக முன்னிறுத்தப்பட்டிருப்பதுபோல் பெரியாரிய மீட்டுருவாக்கத்தின் அடையாளமாகத் தமிழக முதல்வர் மு. கருணாநிதி முன்னிறுத்தப்பட்டிருக்கிறார் எனச் சொல்லலாம்.

17 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இலங்காபுரியின் அரசன் இராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட தன் மனைவி சீதையை மீட்பதற்காக வனவாசத்திலிருந்த அயோத்திச் சக்ரவர்த்தி தசரதனின் மூத்த குமாரன் ராமனால் வானரச்சேனையின் உதவியுடன் கட்டப்பட்டதாக இந்துக்களால் நம்பப்படும் - ஆடம்ஸ் பிரிட்ஜ் என அழைக்கப்படும் - ராமர் பாலத்தைச் சிதைத்துச் சேதுக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற முற்படும் இந்தியக் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் முயற்சிகளுக்குத் தடைகோரி 'ஜனதாக் கட்சி'த் தலைவர் சுப்பிரமணிய சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததுதான் சர்ச்சையின் தொடக்கப்புள்ளி. அறிவியல் ஆதாரமற்ற, ஒரு புராணக் கதையாடலின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட இவ்வகை வாதங்களை எதிர்கொள்வதற்கு ஒருவர் பகுத்தறிவின் மீது நம்பிக்கைகொண்டவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லைதான். ஆனால், அவர் கண்டிப்பாக இந்தியத் தொல்லியல் துறையினரைப் போல் வெகுளியாக இருக்கக் கூடாது.

இந்திய அரசியல் அரங்கில் ஒரு கேலிச் சித்திரமாக அசைந்து கொண்டிருக்கும் சுப்பிரமணிய சுவாமியால் தொடரப்பட்ட அந்த வழக்கில் அவர் மனுவுக்கெதிராக, மத்திய அரசின் தொல்லியல் துறை அறிவியல்ரீதியிலான பதில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தபோது, அதை பாரதிய ஜனதா உள்ளிட்ட இந்துத்துவ இயக்கங்கள் அரசியல் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திக்கொள்ளும் என அனுமானிக்க முடியாததை அறிவியல் அணுகு முறையின் வெகுளித்தனம் என்றுதான் சொல்ல வேண்டும். வெகுளித்தனம் இல்லையென்றால் அப்படியொரு அறிக்கையைத் தாக்கல் செய்த 'குற்றத்'திற்காக அரசு தன் துறையின் அலுவலர்கள் இருவரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்ததற்கு எதிராகத் தன் கண்டனத்தைத் தொல்லியல் துறை பதிவுசெய்திருக்கும். அரசியலரங்கில் உருவான புயலுக்குக் காரணமான அந்த அறிக்கையை ஆதரிப்பது அரசியல்ரீதியில் ஆபத்தானது எனக் காங்கிரஸின் தலைமை முடிவெடுத்ததை விவேகமானது எனப் பாராட்டுமளவுக்குத்தான் நம் அறிவியல் அணுகுமுறை இருக்கிறது.

காங்கிரஸின் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஓர் அங்கமாக இருக்கும் திமுகழகத்தின் தலைவர் தொல்லியல் துறையின் அறிக்கைக்கு எதிரான இந்துத்துவ அமைப்புகளின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் காட்டமாகக் குரல் கொடுத்ததைப் பகுத்தறிவுவாதத்தை மீட்டுருவாக்கம் செய்யும் நடவடிக்கை எனச் சொல்வது பொருத்தமற்றதாக இருக்க முடியாது அல்லவா? ஆனால், தொடரும் நிகழ்வுகள் இச்சர்ச்சைகளை முன் குறிப்பிட்டதுபோல் வெறும் பகுத்தறிவுக்கும் மூடநம்பிக்கைக்குமிடையிலான போராட்டம் எனத் தீர்மானிப்பதை மறுபரிசீலனை செய்யத் தூண்டுகின்றன. மிகச் சிக்கலான, மர்மமான வேறு பல காரணிகள் இந்தப் 'போராட்டங்களி'ன் போக்கை வழி நடத்திக்கொண்டிருக்கின்றனவோ என எண்ணத் தோன்றுகிறது.

நகைச்சுவை உணர்வு நிரம்பப் பெற்ற, சிக்கலான பல தருணங்களைப் புன்னகையோடும் மன உறுதியோடும் எதிர்கொள்ளும் கவிஞர், எழுத்தாளர், முத்தமிழறிஞர் எனப் பன்முக அடையாளங்களைக்கொண்ட முதுபெரும் தலைவரான கலைஞர் கருணாநிதி எதற்காக இவ்வளவு உணர்ச்சிவசப்பட வேண்டும்?

150 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு விவாதங்களுக்கும் மறுபரிசீலனைகளுக்கும் உள்ளாக்கப்பட்டுத் தள்ளிப்போடப்பட்டுக்கொண்டிருந்த, பல தருணங்களில் கைவிடப்பட்டிருந்த ஒரு திட்டத்தை வழக்கமானதொரு நீதிமன்ற நடவடிக்கை தற்காலிகமாகத் தடைசெய்த நிகழ்வு ஏன் முதல்வருக்கு இவ்வளவு ஆத்திரமூட்ட வேண்டும்? தன் கட்சி மைய அரசின் அங்கமாகவும் சேதுக் கால்வாய்த் திட்டத்திற்குப் பொறுப்பான தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சரே தன் கட்சியைச் சேர்ந்தவராகவும் உள்ள நிலையில், சுவாமி தொடர்ந்த வழக்கைச் சட்டரீதியில் எதிர்கொள்வதற்கான அதிகார பலமுடைய ஒரு கட்சியின் தலைவர், 'ராமர் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார்?' என்பதைப் போன்ற எதிர்ப்பாளர்களின் ஆத்திரத்தைத் தூண்டும் வகையான கேள்விகளை ஏன் கேட்க வேண்டும்? வேதாந்தி போன்ற மனப்பிறழ்வுக்குள்ளான நான்காம்தர அரசியல்வாதிகளை முன்னிறுத்தி எதற்காக வன்முறையில் இறங்க வேண்டும்? அறிஞராகவும் எழுத்தாளராகவும் போற்றப்படும் நம் முதல்வருக்கு அறிவியல் அடிப் படையற்ற ஒரு மூடக்கருத்தை அறிவார்ந்த தளத்தில் எதிர் கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கும்போது அவர் ஏன் அதை உணர்வு சார்ந்த தளங்களுக்கு நகர்த்திச் சென்றார்?

முன்புபொருமுறை, மற்றவர்களைக் காட்டிலும் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களுக்குக் கூடுதல் பொறுப்புணர்வு தேவை என்பதை வலியுறுத்தும் பொருட்டுக் குட்டிக்கதை ஒன்றைச் சொன்னார் கருணாநிதி.

கதை இதுதான்.

இரண்டு பெண்கள் ஆளுக்கொரு கரண்டியைக் கையில் வைத்துக்கொண்டு அவற்றை ஆட்டி ஆட்டித் தெருச்சண்டை போடுகிறார்கள். அவர்களில் ஒருத்தி வேகமாகக் கரண்டியை ஆட்டுகிறாள். மற்றொருத்தியின் கையிலுள்ள கரண்டியோ நிதானமாக அசைந்துகொண்டிருக்கிறது. சண்டையைப் பார்த்துக்கொண்டிருப்பவர்கள் கரண்டியை மெதுவாக ஆட்டுபவளை மெத்தனமானவள் என இளப்பமாகக் கருதி விமர்சனம் செய்கிறார்கள். ஆனால், அவளுடைய கையில் உள்ள கரண்டியில் சிறிதளவு உளுந்து இருக்கிறது என்னும் உண்மை அவர்களுக்குத் தெரியாது. சண்டை போடும்போது கரண்டியில் இருக்கும் உளுந்து சிந்திவிடக் கூடாதே என்னும் பொறுப்புணர்வு காரணமாகத்தான் அவளால் தன் எதிராளியைப் போல் கரண்டியை அவ்வளவு வேகமாக ஆட்ட முடியவில்லையே தவிர ஆவேசத்தில், கோபத்தில் அவள் எவ்விதத்திலும் எதிராளிக்குக் குறைந்தவளல்ல என்பதைக் கழக உடன்பிறப்புகள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் அந்தக் குட்டிக்கதையின் மூலம் கருணாநிதி சொன்ன நீதி.

இப்போது அவர் தன் கையில் உள்ள கரண்டியில் 'உளுந்து' இருப்பதையே மறந்துவிட்டார் எனத் தோன்றுகிறது. 'கரண்டி'யின் ஆட்டம் அதிகமாகவே இருந்தது. வேதாந்தியின் 'ஃபத்வா' அறிவிப்புக்குப் பிறகு கரண்டி 'கத்தி'யாக உருவெடுத்தது. திமுக தொண்டர்கள் பாரதிய ஜனதாக் கட்சியின் தலைமை அலுவலகத்தின் மீது தாக்குதல் தொடுத்ததும் அக்கட்சிக்குப் போன உயிர் திரும்பிவந்துவிட்டது. சுப்பிரமணிய சுவாமியின் வழக்கமான பூச்சாண்டி வேலை அரசியல் பூகம்பமாக உருவெடுப்பதற்கான வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்ததில் அத்தாக்குதலுக்கு ஒரு பெரும் பங்கு இருக்கிறது.

ஜெயலலிதாவுக்கு இதைவிட நல்ல தருணம் கிடைத்திருக்க முடியாது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்னும் வழக்கமான பல்லவியைப் பாடுவதற்கு அவர் அதிகம் யோசிக்கவேண்டிய தேவைகூட ஏற்படவில்லை. 'மூன்றாவது அணி'க் கனவுகள் மிகக் குறுகிய காலத்திற்குள் பொய்த்துப்போய்விட்ட நிலையில் தேசிய அரசியலில் இடம் பிடிக்க மாற்றுவழிகளைத் தேடிக்கொண்டிருந்த ஜெயலலிதா உடனடியாகச் செயலில் இறங்கினார். அவரைப் பொறுத்தவரை 'மாற்று வழி' என்பது பாஜகவோடு கைகோர்த்துக்கொள்வதுதான்.

தமிழக பாஜக அலுவலகத் தாக்குதல் தொடர்பான காட்சிப் பதிவுகளை ஜெயா தொலைக்காட்சியில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பியதோடு அவற்றையே ஆதாரமாக்கித் தமிழக அரசைக் கலைப்பதற்கான கோரிக்கையை முன்வைத்துப் பிரச்சாரத்தில் இறங்கியது அதிமுக. மாநில அமைச்சர்களும் சென்னை நகர மேயரும் தாக்குதலில் நேரடியாக ஈடுபட்ட காட்சிப் பதிவுகளைப் பார்த்தபோது, திமுக இது போன்ற 'பூச்சாண்டி'களுக்குப் பயப்பட்ட காலம் மலையேறிப் போய்விட்டதோ எனத் தோன்றியது.

முன்பு 1991இல் சந்திரசேகர் தலைமையிலான பொம்மை அரசு, அதிமுகவின் தூண்டுதலின் பேரில் சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டிப் பேரவையில் முழுப்பலம் பெற்றிருந்த அப்போதைய திமுக அரசைக் கலைத்ததை முதல்வர் மறந்திருக்கமாட்டார்தான். ஆனால், தற்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அது போன்ற ஒரு காரணத்தைக் காட்டிக் கருணாநிதி அரசைக் கலைப்பதற்கான வாய்ப்புகளைப் பற்றி ஜெயலலிதாவேகூடக் கற்பனை செய்யமாட்டார்.

எனவேதான், ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் முழு அடைப்புப் போராட்டத்திற்குத் தடைகோரி நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியது அதிமுகத் தரப்பு. உயர் நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்தவுடன் உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. மின்னல் வேகத்தில் செயல்பட்ட உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவின் ஆசைகளைப் பூர்த்திசெய்யும் விதத்தில் அதிரடியாக வழங்கிய தீர்ப்புகளுக்குப் பின்னர் மிகத் தாமதமாகச் சுதாரித்துக்கொள்ளும் முயற்சிகளில் இறங்கியது திமுக. முழு அடைப்பு என்பது உண்ணாவிரதம் எனப் பெயர் மாறியது. தன் கையில் உள்ள 'கரண்டி'யில் 'உளுந்து' இருக்கும் விஷயம் அப்போதுதான் நினைவுக்கு வந்திருக்க வேண்டும். உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்துவிட்டு அவசர அவசரமாகத் தலைமைச் செயலகத்திற்குச் சென்று 'பொறுப்புணர்வுடன்' பணிகளைக் கவனிக்கத் தொடங்கினார். ஆனால், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தா. பாண்டியன் உச்ச நீதிமன்றத்தின் தடையைப் பொருட்படுத்தாமல் திட்டமிட்டபடி முழு வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவித்தார். அவரிடம் 'கரண்டி' இல்லை. 'உளுந்து' பற்றிய பயமும் அவருக்கு இருக்க வாய்ப்பில்லை.

மன்னனின் வழியைப் பின்பற்றி 'மந்திரிகளு'ம் கோட்டைக்குப்போய்த் தத்தம் இருக்கைகளில் அமர்ந்துகொண்டனர். பாழாய்ப்போன 'சட்டம் ஒழுங்கு'ப் பிரச்சினை உருவாகாதவாறு சமாளிக்க முயன்றது அரசு. முற்பகல் 11 மணிக்கு மேல் பெருநகரப் போக்குவரத்துக் கழகம் ஒரு சில வழித்தடங்களில் பேருந்துகளை இயக்கத் தொடங்கியது. குறிப்பிடத் தகுந்த வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. ஆனால், இவை போன்ற நடவடிக்கைகளால் உச்ச நீதிமன்றத்தின் கண்டனங்களிலிருந்து தமிழக அரசால் தப்பித்துக்கொள்ள முடியவில்லை. தமிழக அரசைக் கலைக்குமாறு ஏன் மத்திய அரசுக்கு உத்தரவிடக் கூடாது எனக் கேள்வியெழுப்பிய உச்ச நீதிமன்றம் தமிழக அரசின்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடருமாறு அதிமுகவுக்கு யோசனை கூறியது. உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய கடுமையான அணுகுமுறை திமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியபோதிலும், அக்கட்சி அமைதியாகவே இருந்தது. மாநில சுயாட்சி கோரிப் போராடிய ஒரு கட்சியால் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்குப் பின்னால் இயங்கும் அரசியல் குறித்து எதுவுமே சொல்ல முடியவில்லை. அண்மைக் காலமாக நீதிமன்றங்கள் தம் தீர்ப்புகளின் வாயிலாக எல்லா வகையான மக்கள் போராட்டங்களுக்கும் தடைவிதித்து வருகின்றன. அதை விமர்சிப்பதற்கும் ஒரு விவாதத்தை உருவாக்குவதற்குமான வாய்ப்பை 'ஜனநாயக முற்போக்குக் கூட்டணி'த் தலைவர்கள் தவறவிட்டதன் பின்புலத்தில் உள்ள அரசியல் என்னவெனத் தெரியவில்லை.

ராமர் பாலத்தைச் சிதைக்காமல் மாற்றுவழியில் சேதுக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற முடிந்தால் மகிழ்ச்சியடைவேன் என்றதோடு திமுக ராமருக்கு எதிரானதல்ல என்று நிரூபிக்கவும் முயன்றுகொண்டிருக்கிறார் முதல்வர். தான் பங்கேற்கும் எல்லாக் கூட்டங்களிலும் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை ஆன்மீகத்திற்கு ஆற்றிய தொண்டுகளை மேற்கோள் காட்டித் தாங்கள் கடவுளுக்கு எதிரானவர்கள் அல்ல என 'வாக்குமூலம்' கொடுக்க வேண்டிய நிலை பகுத்தறிவுப் பாசறையிலிருந்து வந்த ஒரு முதல்வருக்கு உருவானதற்காக உண்மையில் வருத்தப்படத்தான் வேண்டும்.

நம் முதல்வருக்கு எந்த அளவுக்குப் 'பொறுப்புணர்வு' வந்திருக்கிறது என்பதற்குச் சமீபத்தில் நடைபெற்ற தமிழக அரசுத் திரைப்பட விருது வழங்கும் விழாவில் அவர் ஆற்றியதாகக் கூறப்படும் உரையை உதாரணமாகச் சொல்லலாம். விழாவில் கலந்துகொண்ட ரஜினியிடம் இமையமலையில் உள்ள சாமியார்களுக்குச் சேதுக் கால்வாய்த் திட்டத்தின் நல்ல அம்சங்களை எடுத்துச்சொல்லி அவர்களைத் திருத்தும்படி சொன்னாராம் முதல்வர். எல்லாவற்றையும்விடத் 'தன் கட்சி' ராமருக்கு எதிரானதல்ல என்பதை நிறுவுவதற்குக் கருணாநிதி முன்வைத்த ஒரு வாதத்தை நினைத்தால்தான் புல்லரிக்கிறது. 'நாங்கள் ராமருக்கு எதிரானவர்கள் அல்ல. எங்களுடைய தலைவர் ஈ. வெ. ராமசாமி. ராம-சாமி என அவருடைய பெயரிலேயே ராமன் இருக்கும்போது, அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ள எங்களை ராமருக்கு எதிரானவர்கள் என எப்படிச் சொல்ல முடியும்' எனக் கேட்டாராம். இது கருணாநிதியின் சொல் விளையாட்டுதான் என நம்புவதைத் தவிர திமுக ஆதரவுப் பகுத்தறிவுவாதிகளுக்கு வேறு வழியில்லை.

n

ஆனால், முதல்வர் எழுப்பியுள்ள கேள்விகள் அரசியல்ரீதியில் முக்கியமானவை. அதிமுக தன் தேர்தல் அறிக்கையில் சேதுக் கால்வாய்த் திட்டம் பற்றிக் குறிப்பிட்டிருந்ததையும் அதை முன்வைத்து முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தொடங்கிய நடவடிக்கைகளையும் குறித்து முதல்வர் எழுப்பிய எட்டுக் கேள்விகளை யாருமே பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. அவற்றுக்குப் பதிலளிப்பது புத்திசாலித்தனம் அல்ல என எதிர்ப்பாளர்கள் கருதியிருக்கக்கூடும். உணர்ச்சிபூர்வமாக நடைபெறும் இப்போராட்டத்தில் அறிவார்ந்த கேள்விகளுக்கு எந்த முக்கியத்துவமும் இருக்கப்போவதில்லை. அதேபோல் சூழலியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் கடல் ஆய்வாளர்களிடமிருந்து வந்த எதிர்வினைகளை முதல்வரோ மைய அரசோ பொருட்படுத்தவில்லை. இத்திட்டம் முற்றாகக் கைவிடப்பட வேண்டும் என இரண்டாண்டுகளுக்கும் மேலாகக் குரல் கொடுத்து வருபவர்கள் அவர்கள். எதிர்ப்பாளர்களை ஒடுக்குவதற்குப் பகுத்தறிவின் துணையை நாடிய முதல்வர் சூழலியலாளர்களின் அறிவியல்ரீதியான கேள்விகளைப் பொருட்படுத்தாததன் மூலம் பகுத்தறிவையும் அறிவியலையும் எதிரெதிராக நிறுத்துகிறார் என்றுதான் கருத வேண்டியிருக்கிறது.

இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் தூத்துக்குடி, நாகப்பட்டிணம் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான மீனவர்களின் எதிர்காலம் சரிசெய்யப்பட முடியாத அளவுக்குப் பாதிக்கப்படும் எனச் சொல்கிறார் மனித உரிமை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் இயக்குநரும் மனித உரிமைப் பாதுகாவலருமான ஆசி பெர்னாண்டஸ். இந்தியாவுக்குச் சொந்தமான சுமார் 5,500 சதுரக் கிலோ மீட்டர் பரப்பும் 50 மீட்டர் ஆழமும் கொண்ட பாக் நீரிணை மற்றும் மன்னார் வளைகுடாப் பகுதிகளில் உள்ள மீன்வளம் அடியோடு அழிந்துவிடும் என எச்சரிக்கிறார் பெர்னாண்டஸ். இந்தியக் கடல் பகுதியில் வாழும் 2,200 மீனினங்களில் 441 மன்னார்ப் பகுதியில் வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மீன்கள் மற்றும் பல அரியவகைக் கடல்வாழ் உயிரிகளின் இனப்பெருக்கத்துக்கு இசைவான சூழல் நிரம்பிய மன்னார்ப் பகுதியில் 3,600 வகையான கடல்வாழ் உயிரிகளும் தாவரங்களும் தென்படுவதாகக் காலச்சுவடுக்கு அளித்த பேட்டியில் பெர்னாண்டஸ் குறிப்பிட்டார். அவற்றில் 377 வகை உயிரினங்கள் அந்தப் பகுதியில் மட்டுமே வசிப்பவை. சேதுக் கால்வாய்த் திட்டம் அவற்றை முற்றாக அழித்துவிடும். உயிரியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இக்கடல் பகுதியில் மட்டுமே மொத்தமுள்ள 117 வகைப்பட்ட பவளப்பாறைகளில் 37 வகைகள் தென்படுகின்றன என்கிறார்கள் கடல்சார் ஆய்வாளர்கள். உலக அளவில் உள்ள 52 வகையான கடல் தாவரங்களில் 12 வகைகள் மன்னார்ப் பகுதியில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தவிர அரியவகைக் கடல் ஆமைகளும் கடல் குதிரைகளும் வாழும் இப்பகுதியின் உயிரியல் சூழலை இத்திட்டம் அடியோடு அழித்துவிடும் அபாயம் இருக்கிறது.

இதன் விளைவாக நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 60,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும். மீன்வளம் பாதிக்கப்படுவதால் தூத்துக்குடி, நாகப்பட்டிணம் மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான மீனவக் குடும்பங்கள் தம் வீடுவாசல்களைத் துறந்து வெளியேற வேண்டியிருக்கும். இடப்பெயர்வினால் இப்பகுதியின் மனிதவள ஆற்றல் பெருத்த சேதத்திற்குள்ளாகும். இவையெல்லாம் உடனடி பாதிப்புகள்தாம். நீண்ட கால அடிப்படையில் இடம்பெயரும் மீனவக் குடும்பங்கள் சமூக, பண்பாட்டுரீதியிலும் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என்கிறார் பெர்னாண்டஸ்.

இத்திட்டம் வணிக நோக்கிலும் பலனளிக்கக் கூடியதல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். பாக் நீரிணைக்கும் தலைமன்னாருக்குமிடையிலான கடல் பகுதியை ஆழப்படுத்தி, இலங்கையைச் சுற்றிக்கொண்டு செல்லும் 400 கடல் மைல் தொலைவு கொண்ட தற்போதைய கடல்வழிப் பயணத்தின் தூரத்தை 44.9 கடல் மைல் தூரமுடையதாகக் குறைப்பதன் வாயிலாக நேரத்தையும் எரிபொருளையும் மிச்சப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம். இது அடிப்படையற்ற ஆசை என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதே போன்ற நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட சூயஸ் கால்வாய் முந்தைய பயண நேரத்தில் 24 நாள்களை மிச்சப்படுத்த உதவியது. ஆனால், சேதுக் கால்வாய்த் திட்டம் வெறும் 21 மணி நேரத்தையே மிச்சப்படுத்தும். அமைக்கப்படவிருக்கும் கால்வாயின் வழியே பயணம் செய்வது பாதுகாப்பானதல்ல எனச் சொல்கிறார் ஓய்வுபெற்ற இந்தியக் கடற்படைத் தலைவர் எச். பாலகிருஷ்ணன். பாக் நீரிணைப் பகுதியில் அடிக்கடி நடக்கும் மணல் நகர்வு மற்றும் புயலினால் ஏற்படும் சுற்றுச்சூழல் காரணிகள் கப்பல்களைக் கடுமையாகப் பாதிக்கும் என எச்சரிக்கிறார் அவர். தவிர அதிகமாக மணல் நகரும் தன்மையுடைய இப்பகுதியின் ஆழத்தைத் தக்கவைக்க ஒவ்வொரு வருடமும் அகழ்வுப் பணியைத் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டிவரும் எனச் சொல்கிறார் பாலகிருஷ்ணன். இவை போன்ற காரணங்களால் கால்வாயைப் பராமரிப்பதற்கு ஆகும் செலவு திட்டமிடப்பட்டதைவிடப் பல மடங்காக உயரலாம். அதை ஈடுகட்டுவதற்குக் கப்பல் நிறுவனங்களிடமிருந்து மிக அதிகக் கட்டணம் கோருவதைத் தவிர வேறு வழியில்லை. சேதுக் கால்வாய்த் திட்டத்தின் குறிப்புகள் 32,000 ஞிகீஜி திறன்வரை உள்ள கப்பல்கள் இதன் வழியாகப் பயணம் செய்ய முடியும் எனக் குறிப்பிடுகிறது. ஆனால், நவீனக் கப்பல்கள் கப்பல் துறையின் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு 60,000 பீஷ்tக்கும் மேற்பட்ட திறன்கொண்டவையாக உருவாக்கப்பட்டுவருகின்றன. இவ்வகைப் பெரிய கப்பல்கள் சேதுக் கால்வாய்த் திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளப்போவதில்லை என எச்சரிக்கிறார் பாலகிருஷ்ணன்.

சுனாமித் தாக்குதலுக்குப் பிறகு, கடலில் ஏற்பட்டுள்ள அபாயகரமான மாற்றங்களைக் குறித்து ஆய்வாளர்களும் சூழலியல்வாதிகளும் தெரிவித்த கருத்துகளைப் பரிசீலித்த பிரதமர் அலுவலகம் 2005ஆம் ஆண்டு இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தன் மறுப்பைத் தெரிவித்ததாகச் சொல்கிறார் பத்திரிகையாளர் எஸ். ஆனந்த். இத்திட்டம் குறித்துத் தனக்கு அனுப்பப்பட்ட கோப்புகளில், 'திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் எதிர்காலத்தில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய பெரிய நெருக்கடிகள் உருவாகும்' எனப் பிரதமர் அலுவலகம் தன் மறுப்பை மிக உறுதியாகப் பதிவுசெய்திருக்கிறது. ஆனால், மைய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சரான டி. ஆர். பாலுவின் தலைமையிலான திமுகவினரின் லாபி, பிரதமர் அலுவலகத்தின் மறுப்பை மீறி இத்திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்திருக்கிறது என ஆங்கில வார இதழான தெஹல்காவில் இது குறித்து எழுதியுள்ள ஒரு குறிப்பில் ஆனந்த் சொல்லியுள்ளார்.

இவ்வளவு எதிர்ப்புகளையும் அலட்சியப்படுத்தி விட்டுச் சேதுக் கால்வாய்த் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு 150 ஆண்டு காலக் கனவுத் திட்டத்தை நிறைவேற்றிய அரசியல் பெருமை தவிர வேறு பல ஆதாயங்களும் இருக்கக் கூடும். சுமார் 3,000 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இத்திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் அதிகாரத்தில் உள்ளவர்களுக்குக் கமிஷனாகவும் ஒப்பந்தங்கள், துணை ஒப்பந்தங்களின் வழியாகவும் பெரும் தொகை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆட்சிப் பொறுப்பிலுள்ளவர்களுக்கு இவ்வகை ஆசைகள் இருப்பது ஒன்றும் 'சிதம்பர' ரகசியம் அல்ல.

உச்ச நீதிமன்றம் இவ்வழக்கைக் கையாளும் விதத்தைப் பார்த்தால் திட்டம் முழுமையாகக் கிடப்பில் போடப்பட்டுவிடும் எனத் தோன்றுகிறது. அப்படி நடந்தால் திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் தமிழர்களின் கனவுத் திட்டத்தை நிறைவேற்றவிடாமல் தடுத்ததாக அதிமுக, பாஜக மற்றும் அவற்றின் தோழமைக் கட்சிகளின் மீது குற்றம் சுமத்தும். இது அடுத்ததாகத் தமிழகம் சந்திக்கும் எந்தவொரு தேர்தலிலும் அந்த அணிக்குப் பெரும் சேதத்தை விளைவிக்கலாம். இதை உணர்ந்துதான் சேதுக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றக் கோரி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியவர்களில் ஒருவரான மதிமுக தலைவர் வைகோ போன்றவர்கள் இத்திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் எனப் பட்டும்படாமல் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

எதிர்காலத்திலுங்கூடத் தமிழகத்தைச் சேர்ந்த எந்தவொரு கட்சியும் தேர்தல் அறிக்கையில் இத்திட்டம் பற்றிய தன் நிலைபாட்டை விளக்காமல் இருக்க முடியாது. வெற்றி பெற்றால் சேதுக் கால்வாய்த் திட்டத்தை 'ராமர் பால'த்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பில்லாமல் நிறைவேற்றுவதாக ஒரு வாக்குறுதியையும் அது அளிக்க வேண்டி வரும். பணம் கொழிக்கும் இத்திட்டத்தை முற்றாகக் கைவிடுவது பைத்தியக்காரத்தனம் என்பது எல்லா அரசியல் கட்சிகளுக்குமே தெரிந்த விஷயந்தான். ஜெயலலிதாவுக்கு இத்திட்டத்தைத் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் நிறைவேற்ற முடியாமல் போனது குறித்த வருத்தம் இருக்கத்தான் செய்யும். அதை நடைமுறைப்படுத்துவதன் மூலம் கிடைக்கப்போகும் ஆதாயங்களைப் பற்றி அவருக்கும் ஒரு கணக்கு இருக்கக்கூடும். ஒவ்வொரு தருணத்திலும் ஒரு தர்க்கத்தின் துணையோடு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை ஒவ்வொரு கட்சியும் மேற்கொண்டபடிதான் இருக்கும்.

ஆனால், நம் அரசியல் தலைவர்கள் ஒருபோதும் சூழலியல் சார்ந்து தற்போது எழுந்துள்ள கேள்விகளையும் எதிர்ப்புகளையும் பொருட்படுத்தப்போவதில்லை. அவர்களுக்கு யாருடைய ஆலோசனைகளும் தேவையில்லை. அவர்களில் யாருமே அல்கோரைப் போல் ஓர் ஏமாளி அரசியல்வாதியாக இருக்க நிச்சயம் விரும்பமாட்டார்கள். எல்லாத் துறைகளையும் போல் அரசியலும் தொழில்ரீதியான ஒன்றாக ஆகிவிட்டதால் இதைக் குற்றம் சொல்லவும் முடியாது.

ஆனால், நம் தலைவர்கள் விதிவிலக்கான ஒரு தருணத்திலாவது சூழலியல் சார்ந்த சிறப்பான செயல்பாடுகளுக்காகச் சென்ற ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ள அமெரிக்காவின் முன்னாள்துணை அதிபரும் An Inconvenient Truth என்னும் புவி வெப்பமடைதல் குறித்த ஆவணப்படத்தை எடுத்தவருமான அல்கோரிடமிருந்து சிறிதளவாவது கற்றுக்கொள்ளலாம். அரசியலில் ஈடுபடும் ஒருவர் நல்ல நோக்கங்களையும் அறிவியல் அணுகுமுறையையும் கொண்டிருக்க முடியும் என்பதை அவர் நிரூபித்திருக்கிறார்.

n

கார்ட்டூன்: கலை

உள்ளடக்கம்

 

 

Google