Google   www kalachuvadu.com

 

மூன்றாவது கண்
தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளால் ஓட்டுப்போட முடியாது
பிரதமர் மன்மோகன் சிங் 2006இல் விதர்பா விவசாயிகளுக்கு நிவாரண நிதியாக ரூ. 4,000 கோடியை அறிவித்ததிலிருந்து விவசாயிகளின் தற்கொலை அதிகரித்திருக்கிறது என்று சமூக ஆர்வலரான வந்தனா சிவா கூறுகிறார். விதர்பாவில் தற்கொலை அதிகம் நிகழும் பிரதேசமான யவத்மால் பகுதிக்குச் சென்று வந்த பிறகு அவர் விவசாயிகளின் தற்கொலைக்கான இரண்டு அடிப்படைக் காரணங்களைக் குறிப்பிடுகிறார்.

1. மிக அதிகச் செலவிலான முதலீடு.

2. உற்பத்திப் பொருள்களின் விலை குறைந்து போனமை.

பிரதமருடைய நிவாரண நிதியில் இப்பிரச்சினைகளுக்கான முடிவு எதுவும் இல்லையென்று அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

விவசாயிகள் நம்பிப் பயிர்செய்ய முடியாத விலையுயர்ந்த விதைகளைப் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து வாங்கிப் பயிரிடும் படியான நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறார்கள். இந்த விதைகள் அதிக வேதிப் பொருள்கள் நிறைந்த உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் அதிகம் வேண்டுபவையாக இருக்கின்றன.

அரசு அதனை வாங்கிக்கொள்ளாததால் பருத்தியின் விலை வீழ்ச்சியடைந்தது. பிரதமர் மகாராஷ்டிராவுக்குச் சமீபத்தில் வருகை தந்தபோது, விவசாயிகளுக்கான நிதியாக ரூ. 25,000 கோடியை அறிவித்ததையும் நவ்தான்யாவின் தலைவரான சிவா குறிப்பிடுகிறார். ஆனால், இதைவிடப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அதிக மானியம் வழங்கப்படுகிறது. போதுமான அளவு கோதுமை உள்நாட்டிலேயே உற்பத்தியான போதிலும் இரண்டுவகைகளில் கிடைக்கக்கூடிய மானியத்திற்காகக் கோதுமையை இறக்குமதி செய்யும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்திய விவசாயிகளுக்கு ஒரு டன் கோதுமைக்கு ரூ. 8,500 ஆதரவு விலையாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அரசு சர்வதேசச் சந்தையில் ஒரு டன்னுக்கு ரூ. 16,000 முதல் 17,000வரையிலான விலையில் கோதுமையை வாங்கிக்கொண்டிருந்தது. இந்த விலையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அரசாங்கம் செலவு செய்த அதிகப்படியான தொகையானது, கார்கில் போன்ற பன்னாட்டு நிறுவன இறக்குமதியாளர்களுக்கு மானியமாகச் சென்றடைகிறது. அடுத்த வருடமும் இந்த இறக்குமதி தொடரும் என விவசாயத் துறை அமைச்சர் அறிவித்துள்ளதால் அதற்கான மானியத் தொகையும் உயர்ந்துகொண்டிருக்கும். குறைந்த விலையில் உயர்தரக் கோதுமையை வாங்கத் தவறிவிட்ட அரசு பொது விநியோகத் திட்டத்திற்காக அதிகமான விலை கொடுத்துத் தரமற்ற கோதுமையை வாங்குகிறது என்கிறது நவ்தான்யா. இவ்வகையில் இறக்குமதி செய்யப்பட்ட கோதுமையை விநியோகித்தபோது, மகாராஷ்டிராவின் பழங்குடியினர் நோய்வாய்ப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏழைகளுக்குக் கோதுமை கிலோ ரூ. 5 விலையில் தரப்படுகிறது. டன்னுக்கு ரூ. 17,000 கொடுத்து வாங்கப்படும் கோதுமை டன்னுக்கு 5,000 ரூபாய் என ஏழைகளுக்கு வழங்கப்படுவதால், இறக்குமதி செய்யப்படும் கோதுமைக்கென 60,000 கோடி ரூபாய் வரை மானியச் சுமை அரசுக்குச் சேர்கிறது என்கிறார் சிவா.

m m m

கூட்டுறவு மற்றும் பிற வங்கிகளில் விதர்பா விவசாயிகள் பெற்றுள்ள கடன் குறைந்தபட்சம் ஒருமுறையாவது தள்ளுபடி செய்யப்படாத வரையிலும் அவர்களது நெருக்கடி நிலையில் மாற்றம் வராது என விதர்பா பகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார். விவசாயிகளின் தற்கொலை வேறு மூன்று மாநிலங்களிலும் நடந்திருந்தாலுங்கூட விதர்பாவில் மட்டும் பருத்தி விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை குறையாதது கவலையளிப்பதாக உள்ளது.

சமீபத்திய தனது மும்பை வருகையின்போது, விவசாயிகளுக்கான சிறப்பு நிவாரண நிதியைப் பிரதமர் மன்மோகன் சிங் மறுபரிசீலனை செய்தார். ஆனால், இதிலிருந்து சாதகமான எந்தத் தாக்கத்தையும் எதிர்பார்ப்பதற்கில்லை என்கிறார்கள் எம்பிக்கள். பிரதமரின் திட்டம், கடன்கள்மீதான வட்டி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஐந்து தவணைகளாகத் திருப்பித் தரப்பட வேண்டும் எனக் கூறுகிறது. இருந்தபோதிலும், வங்கிகளோ தங்களுக்குச் செலுத்தப்பட வேண்டிய வட்டியினை முதல் தவணையிலேயே எடுத்துக்கொள்வதோடு, புதுக்கடன்களையும் வழங்குவதில்லை. சிறப்பு நிவாரண நிதி விவசாயிகளுக்கு அல்லாமல், வங்கிகளுக்கும் நீர்ப்பாசன வசதிசெய்யும் ஒப்பந்தக்காரர்களுக்கும் சென்றடைவதே இத்திட்டத்தின் தோல்வி என்கின்றனர் எதிர்க்கட்சி எம்பிக்கள்.

- டெக்கான் க்ரானிக்கிள்
03.09.2007

சில நேரங்களில் வெறுங்கோபம் மட்டும் போதாது. அக்டோ பர் இரண்டாந்தேதி மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தன்று ஏழைகளுக்காகவும் அஹிம்சைக்காகவும் அதிகார வர்க்கத்தின் நலனுக்காகச் செயல்படும் அரசியல் தலைவர்கள் வெறுமனே உளறுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், மகாராஷ்டிர முதல்வரும் மத்திய அமைச்சர் ஷங்கர்சிங் வகேலாவும் ஒன்றாகக் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில், வகேலா விவசாயிகளின் தற்கொலையைக் கேலிசெய்ததைக் கேட்டபோது, அது கீழ் நிலையிலும் வறுமையிலும்வாடும் இந்திய மக்களை உண்மையிலேயே முற்றிலுமாக அழித்தொழிக்கக் கூடிய கடைசி தினமாகத் தோன்றியது எனக்கு.

அரசியல்வாதிகளுக்குத் தேர்தல் சமயத்தில்தான் ஏழைகள்மீது அன்பும் நம்பிக்கையும் பெருகுகிறது. அப்போதுங்கூட அவர்கள் வாக்கு வங்கிகளாக இருக்க வேண்டும். சமீபத்திய பீகாரின் வெள்ளச் சேதத்திற்காகத் தேசிய நிவாரண நிதி எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஹைதராபாத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்தது. அதில் இறந்தவர்கள் குறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை. விதர்பா விவசாயிகளின் இறப்புக் குறித்த வருத்தம் இல்லை. இறந்தவர்கள் வாக்கு வங்கிகளல்ல. எனவேதான் அமைச்சர் வகேலாவாலும் மகாத்மா காந்தியின் கட்சியைச் சார்ந்த முதல்வராலும் சிரிக்க முடிகிறது.

என்னுடைய நீண்ட நாள் வாழ்க்கையில் இந்தியனாகவோ அயலில் வாழும் இந்தியனாகவோ தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளைக் கிண்டல் செய்யும் ஓர் அமைச்சரைப் பார்ப்பேன் என ஒருபோதும் எண்ணியதில்லை. பிரிட்டனில் எந்த அமைச்சருக்கும் மனித வெடிகுண்டாக இருந்தவரின் சாவைக்கூடக் கிண்டல் செய்யத் துணிவு வராது. டோ னிபிளேர் அமைச்சரவையில் இருந்த ஓர் அமைச்சர் ராணுவத்தில் இருக்கும் கறுப்பினத்தவர்கள் தங்களை 'நீக்கர்' என அழைப்பதை விரும்புவார்கள் எனக் கூறியதால் பதவியிழந்தார். தான் அமைச்சராக இருக்கையில் நேர்ந்த ஒரு ரயில் விபத்துக்காகத் தனது பதவியைத் துறந்த லால்பகதூர் சாஸ்திரியின் காலம் கடந்துவிட்டது.

சாவு என்பது கிண்டலான விஷயம் அல்ல. குறிப்பாக நூற்றுக்கணக்கான விவசாயிகளின் சாவு 'வழக்க'மான போதும் அரசு சாவு எண்ணிக்கையைக் குறைத்துக் காண்பிக்கப் போலியான புள்ளிவிவரங்களைத் தரும்போதும் இறப்பு எண்ணிக்கையைக் குறைத்துக் காண்பிக்க முடிந்ததே ஒழிய முற்றிலுமாக இல்லாமல் ஆக்க முடியவில்லை. இறப்பின் எண்ணிக்கையும் குறையவில்லை. பிரதமர் விவசாயிகளின்மேல் அக்கறைகொண்டு விதர்பாவுக்குச் சென்று ரூ. 3,750 கோடிகள் தருவதாக வாக்களித்துள்ளார். விவசாயிகளுக்குக் கொடுத்த ரூபாய் 350 மதிப்புக்கொண்ட காசோலைகள்கூடத் திரும்பத் திரும்ப வங்கிகளில் சமர்ப்பிக்கப்பட்டும் செல்லுபடியாகாமல் திரும்பி வந்துவிட்டன. 350 ரூபாய் பற்றியெல்லாம் நமது அமைச்சர்கள் கவலைப்படுவதில்லை. விதர்பாவில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் வரிப்பணத்தில் சுற்றுப்பயணம் செய்யும் அமைச்சர்களுக்கு இது மிகச் சிறிய தொகை. மக்களின் நலனுக்காகப் பேசுவதாய்க் காட்டிக்கொண்டு இந்தப் பிரச்சினையைப் பாராளுமன்றத்தில் எழுப்பி அவை நடவடிக்கைகளைத் தடைப்படுத்தி மக்களது வரிப்பணத்தை வீணாக்கும் எதிர்க்கட்சியினருக்கு ரூ. 350 அதைவிடவும் சிறிய தொகை. இதனால்தான் அமைச்சரால் விவசாயிகளைச் சோம்பேறிகள் எனவும் அவர்களின் பிரச்சினைக்கு அவர்களேதான் காரணம் எனவும் குற்றஞ்சாட்ட முடிகிறது. டெல்லியில் இருக்கும் லூட்டியஸ் பங்களாவில் வசிப்பதும் ஆடம்பரமான கார்களில் செல்வதும் விமானத்தில் எங்கும் பறப்பதுமாக இருப்பதால்தானே இந்த அமைச்சர்களால் எளியோரைப் பார்த்துச் சிரிக்க முடிகிறது? பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத இந்த விவசாயிகளின் நிலைமை மந்திரிகளுக்குக் கேளிக்கைப் பொருளாகிவிட்டது. முப்பத்தியெட்டு வருடங்களுக்கு முன்பு வங்கிகளைத் தேசியமயமாக்கிய காந்தி குடும்பத்தைச் சார்ந்த இன்னொருவர் சொன்னார் "அவர்கள் கூறுகிறார்கள் இந்திராவை வெளியேற்றுங்கள். நான் கூறுகிறேன் மொரார்ஜியை வெளியேற்றுங்கள் (மன்னிக்கவும் ஏழ்மையை வெளியேற்றுங்கள்)". விவசாயிகள் பெரிய ஒரு தொகையை வங்கிகளிடம் இருந்து கடனாகப் பெற்று அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டி அதைக் கள்ளச் சந்தைகளில் விற்றுக் கிடைக்கும் பணத்தின் ஒரு பங்கை ஆட்சியாளருக்குத் தரத் தயாராக இருப்பார்கள் எனில் என்றோ தங்கள் ஏழ்மையிலிருந்து வெளியே வந்திருப்பார்கள்.

இல்லையென்றால், அரசியல் பின்னணியைச் சார்ந்திராதபோதும் ஏதேனும் ஒரு கட்சியில் சேர்ந்து வெற்றி பெற வேண்டும். அவ்வாறு வெற்றிபெற்றால் மக்களுக்காகப் பணிவுடன் சேவை செய்வார்கள்; கதர் அணிவார்கள்; காந்தி சமாதிக்குச் சென்று கதறுவார்கள். ஆனால், துயரத்தில் இருக்கும் மக்களை ஒருபோதும் கிண்டல் செய்யமாட்டார்கள்.

- லார்ட் மெக்னாட் தேசாய்
டெக்கான் க்ரானிக்கிள், 11.09.2007.

தொகுப்பும் மொழிபெயர்ப்பும்:
ந. செல்லப்பா, ந. கவிதா

உள்ளடக்கம்

 

 

Google