Google   www kalachuvadu.com

 

கடிதங்கள்
சு.ரா. 'கோவேறு கழுதைகள்' நல்ல நாவல்தான் எனச் சொன்னாலும் எத்தகைய கூர்மையான விமர்சனத்தையும் நல்ல வாசகன் வரவேற்பான். இமையத்தின் படைப்புகளில் நெருடல் இருப்பதை உணர முடிகிறது. கோடிட் டுக் காட்டிய அரவிந்தனின் கட்டுரை ரசிக்கத்தக்கது.

V.A. சரவணன்
கரூர்

"உயிர் தின்னும் மரணநதி" கவிதை காலச்சுவடு இதழில் வெளிவந்தது பெரு மகிழ்ச்சி. எமது நாட்டின் போர்க்காலச் சூழ்நிலை காரணமாகக் காலச்சுவடு யாழ்ப்பாண மண்ணிற்கு வருவதில்லை. இருந்தும் இணைய தளத்தினூடாகப் பலத்த நெருக்கடிகளுக்கு மத்தியில் காலச்சுவடு சஞ்சிகையினைப் படித்து வருகிறேன். எமது பிரதேசத்தில் துப்பாக்கி மனிதர்களின் அச்சுறுத்தல் காரணமாகவும் அச்சிடுவதற்குரிய மூலப் பொருள்களின் தடை காரணமாகவும் உரிய போக்குவரத்து வழங்கல் சேவையின்மையாலும் சஞ்சிகைகளின் உயிர் நின்றுவிட்டது. இங்குள்ள பத்திரிகைகளும் இதன் காரணத்தால் தடைபட்டுப் போனதும் சில பத்திரிகைகள் உயிருக்கான போராட்டத்திற்கு மத்தியிலும் வெளிவந்துகொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் எமது உணர்வுகளை வெளிக்கொணர முடியாத நிலையில் உள்ளோம். எப்போதும் நாய் குலைத்தால் பயம், மோட்டார் சைக்கிள் இரைந்தால் பயம், ஏழு மணிக்குப்பின் (ஊரடங்குச் சட்ட நேரம் மாலை 7.00 மணி முதல் காலை 5.00 மணிவரை) வெள்ளைவான் பயம் (ஆள்கடத்தல் ஊர்தி). இந்த நிலையில் எமது வாழ்வு நகர்கிறது.

விசித்ரா
யாழ்ப்பாணம்

வருமானம் வருகிறது என்பதற்காக அரசு குடியை ஏற்று நடத்தியது எவ்வளவு தவறோ அதே தவறுதான் வருமானம் வருகிறது என்பதற்காகக் கேபிள் டி.வி கார்ப்பரேசனை அரசு எடுத்து நடத்துவதும். அரசு தொலைக்காட்சி மட்டும் இருந்தபோது நாடு நன்றாக இருந்தது. கேபிள் வந்ததன் காரணமாகவே நாடு சீரழிந்தது ஒருவிதத் தொடர் போதை தந்து மக்களைச் சிந்திக்கவிடாமல் அடிமையாக்கி வருகின்றது. அரசு சட்டம் போட்டுக் கேபிள் டி.வி.யை ஒழித்தால் நல்லது. அரசே நடத்துவது நீங்கள் குறிப்பிட்டதுபோலக் 'குடியும் கும்மாளமும் அரசிடம் வந்து' சேரவே வழிவகுக்கும். எழுத்தும் எதிர்ப்பும் கட்டுரை எழுத்துரிமையைப் பறிக்கும் மதவாதிகளுக்குப் புத்தி புகட்டியது. கவிதைகள் புரியும்படி இருந்தது சிறப்பு.

இரா. இரவி
மதுரை

'காலச்சுவடு' செப்டம்பர் '07 இதழில் வெளியாகியுள்ள, எழுத்தாளர் இமையத்தின் 'நானும் என் எழுத்தும்' உண்மையான பதிவு. 'என்னுடைய வாழ்க்கைதான் என்னுடைய எழுத்துக்கள்' என்பதை அவரது படைப்புகளைப் படித்தவர்களால் நிச்சயமாக உணர்ந்துகொள்ள முடியும். 'எல்லா மனிதர்களுக்கும் வாழ்க்கை ஒரே மாதிரியாக ஏன் அமைவதில்லை?' என்று கேட்டிருக்கிறீர்களே! அந்த இரகசியம் நமக்குப் புரிந்துவிட்டால், இலக்கியப் படைப்புகள் ஏது? நீங்களும் நானுந்தான் ஏது? சொல்லுங்கள்.

'இமையத்தின் நாவல்கள்' குறித்த அரவிந்தனின் கட்டுரையும் சிறப்பாக அமைந்திருந்தது.

எஸ். டான்பாஸ்கோ ஃபெர்னாண்டஸ்
கோயம்புத்தூர்.

கருத்துக்கணிப்பு ஒன்று எழுதப்போக அதைப் படித்த அழகிரியின் ஆதரவாளர்கள் மதுரை 'தினகரன்' நாளிதழ் நிறுவனத்தைத் தாக்க, பொருள்சேதத்தோடு உயிர்பலியும் ஆனது. இதனால் மத்திய அமைச்சர் பதவியை இழந்தார் தயாநிதி மாறன். அரசின் வாய்மொழி உத்தரவிற்கிணங்க அரசு நூலகங்களுக்கு 'தினகரன்' நாளிதழ் வழங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது.

இத்தனை களேபரங்கள் நடந்தும் திருச்சி, மதுரை 'முரசொலி' பதிப்புகள் தினகரன் அச்சகத்தில் அச்சிடப்படுகின்றனவே அது எப்படி? Printed at Dinakaran Press என்று முரசொலியில் காணப்படுகிறதே! இது எப்படி நிகழ்கிறது? ஒருவேளை நான் அடிப்பதுபோல அடிக்கிறேன் நீ அழுவதுபோல் அழு! என்ற முறையில் இருக்கலாமோ?

பறம்பை இரா. சு. பிரகாசம்
காட்டுப்பரமக்குடி

'காஷ்மீர் இந்திய ஜனநாயகத்துக்கு ஒரு சவால்' கட்டுரை படித்தேன். வரம்புகடந்த அத்துமீறல்களால் துயரம் கசியும் காஷ்மீரின் நிலை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீர் பாரத பூமி என்பதைக் காட்டிலும் இராணுவ பூமி என்றே கூறப்பட வேண்டும். உடன் பாட்டு அணுகுமுறையில் அணுகுவதே சூழ்நிலையைச் சமாதானம் ஆக்கும். காஷ்மீர் என்னும் முள் காலில் குத்துமானால் அழுவது டெல்லி என்ற கண்களே! காஷ்மீரிகளின் துயர் நீக்க ஆவண செய்யும் எண்ணம் இன்றைய அரசியல் தலைவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. மனித உரிமை ஆர்வலர்களின் பயணம் பாராட்டப்பட வேண்டியது.

அழகு நிலாவின் ஐந்து கவிதைகளும் ஆற்றொழுக்காகச் செல்கின்றன. அழுத்தமாகவும் அமைந்துள்ளன. 'குழம்பித் தானாகத் தெளிகிறது சேறு' என்னும் வரி, வாழ்க்கையின் பிழிவாக உள்ளது.

பூ. அ. இரவீந்திரன்
கோவை.

செப்டம்பர் 2007 இதழில் ஒரு பிழையைச் சுட்டிக்காட்டிவிடத் தோன்றுகிறது. 'ஒரு அரசும் ஒவ்வொரு அரசும்" என்ற சொற்றொடர், 'ஓர் அரசும், ஒவ்வோர் அரசும்" என்பதே சரி. ஓர் உயிர் எழுத்துச் சொல்லுக்கு முன்பு, 'ஓர் என்றும் பிறசொற்களுக்கு 'ஒரு' என்றும் தொடர வேண்டுமென்பது இலக்கண நெறியாகும். இதை மீறுவது குறையாகும். "ஒவ்வோர் அரசும்" என்றிருந்தாலே போதுமே!

கோபி. ஜி. எஸ். லட்சுமண ஐயர், நேர்காணல் மிகநன்று. இதை 'ஒளிநகல்' எடுத்து, இன்றைய இளைஞர்கள் சிலருக்கு நான் வழங்கப்போகிறேன். ஒரு பொதுநல ஊழியர் எவ்வாறு இருக்க வேண்டும் என்னும் இலட்சியத்துடன் வாழ்பவர் லட்சுமண ஐயர். "இப்போதெல்லாம் எல்லாம் தலைவராகிவிடுகிறார்கள். மக்களுக்காக யாரும் வருவதில்லை என்ற அவர் கூற்று 'அட்சர லட்சம்' பெறும். 'காலச்சுவடு' சரியாகவே வாசகர் மனத்தில் பதிந்துவிட்டது.

மு. முரளிதரன்
சென்னை

இமையத்தின் 'நானும் என் எழுத்தும்' கட்டுரையில் கடந்த பதினாறாண்டுகளில் தமிழில் வெளிவந்த படைப்பிலக்கியங்களில் சாதிய ஒடுக்குமுறைகள், அவற்றால் ஏற்பட்ட பாதிப்புகள், அடிமைத்தனத்திற்கு எதிரான குரல் எனப் பல்வேறு கருத்துகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

கடவுளர் கதைகள், அவர்களுக்குப் பிறகு மன்னர்கள், பிராமணர்கள், இடை நிலைச் சாதிகள் என ஆதிக்கம் செலுத்தியவர்களின் வாழ்க்கை முறைகளே இலக்கியங்களாகப் பதிவுசெய்யப்பட்டன.

வரலாறும் இத்தகைய கோணத்திலேயே உருவாக்கப்பட்டது. 1990களுக்குப் பிறகு அடித்தட்டு மக்கள் தங்கள் வாழ்க்கையை முழு வீச்சோடு பதிவு செய்யத் தொடங்கியதன் விளைவாக உண்மையான சமூக வரலாறு வெளிவரத் தொடங்கியுள்ளது.

தமிழ்ச் சமூகத்தில் நிகழ்ந்ததை வெளிப்படையாக, யதார்த்தமாக, இமையம் படைத்திருப்பது அவருடைய படைப்பிலக்கியத் திறனை நன்கு வெளிப்படுத்துகிறது.

கோட்பாட்டின் அடிப்படையில் இலக்கியம் படைக்கவில்லை என்னும் இமையத்தின் கருத்து அதிகாரத்துவத்தைப் பலப்படுத்துவதாக அமைந்துவிடும். ஏனெனில் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே சாதியம் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.

வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், காவியங்கள் முதலானவை உருவாக்கப்பட்டு, அதனடிப்படையில் கோட்பாடுகளை, வருணங்களை உருவாக்கி, சாதியப் படிநிலைகள் உருவாக்கப்பட்டு அதற்குள் அடித்தட்டு மக்களை உட் செலுத்தி, ஆதிக்க அடிமை முறைகளைக் கட்டமைத்திருப்பதை இமையம் எவ்வாறு எதிர்கொள்கிறார்.

"ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம்" எழுதிய பஞ்சுவின் கூற்றுப்படி "கண்டதையும் கேட்டதையும் அனுபவித்ததையும் எழுதுகிறேன்" என்ற நுண் அரசியலை இமையம் கொண்டுள்ளார் என யூகிக்கலாமா?

அறிவியல் தொழில்நுட்பம் உச்சநிலை வளர்ச்சி அடைந்த இன்றைய சூழலில் கோட்பாடுகள் குறித்த தேவை என்னவென்று அறியாமல் அல்லது அறியாததைப் போன்று பாவனையோடு படைப்புகள் படைப்பது சாதிய மேலாதிக்கத்திற்குத் துணைபோவதாக அமைந்து விடும்.

இந்தியச் சமூக மரபில் உழைக்கும் மக்களின் வாழ்க்கைக் கோட்பாடுகளின் அடிப்படையில் திட்டமிட்டே கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது சமூக விஞ்ஞானம் அறிந்தவர்களுக்குத் தெரியும். எனவே கோட்பாடுகளின் அடிப்படைகளிலேயே மக்களின் வாழ்க்கையைப் படைப்பாக்க வேண்டிய நிலை இருக்கிறது. சாதிகள் தகர்ந்து ஏற்றத்தாழ்வற்ற நிலை ஏற்படும்போது கண்டதையும் கேட்டதையும் அனுபவித்ததையும் எழுதலாம்.

இரா. முருகன்
சென்னை - 600 059

கண்ணன் 'பத்தி'யில் வெளிவந்துள்ள படைப்பாளியின் எதிர்வினை உலகத் தமிழ் மீடியா, அறிவின் அதிகாரம், காபி கடை நிறபேதம் ஆகிய எல்லாமே ரசனையுடன் அனுபவித்து எழுதப்பட்டிருந்ததால், படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தது. இதற்கு முன் நான் அறிந்திராத பல புது விவரங்களை இப்பொழுது நான் அறிந்துகொண்டுள்ளேன்.

கே.எஸ். பட்டாம்பிராமையா
ராய்பூர்

சுயநலம் கருதா பொதுநலவாதியும் சேவையில் விளம்பரத்தையும் ஊதியத்தையும் விரும்பாமல் தன்னையும் தன் குடும்பத்தாரையும் ஒரு மனதோடு ஈடுபடச் செய்த தியாகச் செம்மலுமான, வறுமையில் செம்மையைக் கண்டும் ஜாதி, மத, இனப் பாகுபாடின்றித் தன் தொகுதி மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் நகர் மன்றத் தலைவர் பொறுப்பிலிருந்தபோது, போராடி அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்து அவர்களின் வாழ்க்கை தரத்தையும் சமூக மேம்பாட்டுக்குச் சாத்தியமான அனைத்துத் தளங்களிலும் சுழன்றுவரும் அபூர்வ மனிதரான ஜி.எஸ் லட்சுமண அய்யரின் நேர்காணல் ஒரு வித்தியாசமான முழு ஆளுமை படைத்த மனிதரை அடையாளம் காட்டியது அற்புதம்.

மனித மலத்தை மனிதர்களே அள்ளும் அவலத்திற்கு முற்றிலும் ஒரு முடிவு கட்டியது, காந்தியம், தலித்தியம், பெரியாரியம், பெண்ணியக் கோட்பாடுகளுக்கு விளம்பரமின்றி, பதவிச் சுகமின்றி நியாயத் தராசு ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு செயல்படுத்தியது வரலாற்றுச் சிறப்புடையதாகும்.

எஸ். முரளி
ஸ்ரீரங்கம்

ஆகஸ்ட் மாத 'காலச்சுவடு' இதழில் நான் மொழிபெயர்த்த 'வெளிச்சம் நிழலுக்குத் தெரியும்' மலையாள சிறுகதையில் பங்குத்தந்தை என்று எழுதியிருப்பதை மதப்புரோகிதர் என்று எழுதியிருக்க வேண்டும். தவறைச் சுட்டிக்காட்டிய மக்கள் கண்காணிப்பகம் தேவசகாயம் பிள்ளை அவர்களுக்கு நன்றி.

குளச்சல் மு. யூசுப்
 


தஸ்லிமா நஸ்ரீன் மீதான தாக்குதல் பற்றிக் களந்தை பீர்முகம்மது தமது கண்டனத்தைத் தெளிவாக எழுதியுள்ளார்.

எப்போது மாற்றுக்கருத்துகளை மக்கள் புரிந்துகொள்ளும்படி சொல்ல முடியவில்லையோ அப்போதெல்லாம் தாக்குதல் மட்டுமே அடிப்படைவாதிகளுக்குக் கைவந்தகலையாக இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

தஸ்லிமாவிற்குத் துணைபேச வந்த ஆசிரியர் கட்டுரையின் கடைசியில் பம்பாய் மற்றும் கோவை குண்டு வெடிப்பைப் பற்றியும் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புகளைப் பற்றியும் தனது 'மார்க்க'க் கருத்துகளையே வலியுறுத்துவது எப்படி?

'முஸ்லிம்கள்' எப்போது வெளி எதிரிகளைப் பார்ப்பார்கள்?' என வினா எழுப்புகிறார் ஆசிரியர்! அந்த எதிரிகள் யார்? அவர்களை அண்ணல் காந்தி காட்டிய வழியில் எதிர்கொள்ளாமல் பல்வேறு மத, மொழி, கலாச்சாரம்கொண்ட பாரத எளிய நடுத்தர மக்களை வெடிகுண்டுகளால் தகர்த்து அழிப்பது எப்படி முறையாகும்?

நமது ஜனநாயக நாட்டில் கொடுக்கப்பட்டுள்ள உரிமைகளைச் சரிவரப் பயன்படுத்திக்கொள்ளாமல் 'மதவெறி'யையே கோட்பாடாகக் கொண்டவர்கள் எவராயினும் அவர்களை நெறிப்படுத்த பீர்முகம்மது போன்றவர்கள் முயலவேண்டுமே தவிர 'எதிரிகளை'த் தேடிக்கொண்டிருப்பது எப்படி நியாயமாகும்?

பெரும்பாலான இந்தியர்கள் அனைவரோடும் இணைந்து வாழவே விரும்புகின்றனர். இதில் இணைந்துகொள்வதில் முஸ்லிம்கள் தயக்கம் காட்டுவதே, தொடர் வன்முறைகளாக உருக்கொள்கின்றன.

வைத்திய நாதேஸ்வரன்
தஞ்சாவூர்

தஸ்லிமா நஸ்ரீன் ஹைதராபாத்தில் தாக்கப்பட்டது ஆரோக்கியமான அணுகுமுறை என்று யாரும் கருதமாட்டார்கள். ஒரு மதச்சார்பற்ற நாட்டில் அமர்ந்துகொண்டு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதைச் சட்டமும் அனுமதிக்காது. இஸ்லாமிய ஆட்சியாக இருந்தாலுங்கூடக் குற்றவாளிக்குச் சட்டப்படி அரசுதான் தண்டனை வழங்க வேண்டுமே தவிர, தனி மனிதர்களோ குழுக்களோ சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள் வதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

முஸ்லிம்களின் சில தவறான நடை முறைகளுக்கு எதிராகத் தஸ்லிமா குரல் கொடுத்திருப்பதாகக் கட்டுரை கூறுகிறது. முஸ்லிம்கள் மத்தியில் உள்ள வரதட்சிணை, குழந்தைத் தொழிலாளர் முறை, எழுத்தறிவின்மை, மூடப் பழக்க வழக்கங்கள் போன்ற சமூகத் தீமைகளை எதிர்த்து அவர் குரல் கொடுத்திருந்தால் அனைவரும் இல்லாவிட்டாலும் முற்போக்கு முஸ்லிம்களாவது அதை வரவேற்றிருப்பார்கள்.

ஆனால், அவர் தமது நாவல் ஒன்றில் (லஜ்ஜா), "ஒரு பெண், தான் விரும்பும் எந்த ஆணுடைய கருவையும் சுமப்பதற்குச் சுதந்திரம் வேண்டும்" எனக் குறிப்பிடுகிறார்; அது திருமண உறவால் உண்டான கருவானால் என்ன? தவறான உறவால் உண்டான கருவானால் என்ன? என்று பெண்ணியம் பேசுகிறார்.

இதற்குப் பெயர்தான் பெண் விடுதலையா? இதைக்கூட 'தஸ்லிமா' என்ற தனி மனுசியின் கருத்தாக அவர் எழுதியிருந்தால், யாரும் கண்டுகொண்டிருக்கமாட்டார்கள். இந்தக் கருத்தை ஏற்காததால் குர்-ஆனையும் அதை நம்பும் முஸ்லிம்களையும் அவர் தரக்குறைவாக விமர்சித்திருப்பது எந்த வகையில் நியாயம்?

தஸ்லிமாவுக்கு எதிராக எழுதும் இன்னொரு பேனா முஸ்லிம் சமுதாயத்தில் இல்லாமலில்லை. மாற்றுக்கருத்துகளைக் குர்-ஆனிலிருந்தோ ஹதீஸிலிருந்தோ பெற முடியாமலும் இல்லை. பலர் எழுதியுமுள்ளனர். அவர்களது எழுத்தும் எதிர்ப்பும் வெகுசன ஏடுகளில் அங்கீ கரிக்கப்படுவதில்லை என்பதுதான் உண்மை.

பொதுவாகவே, மதத்துக்கு எதிரான கருத்துகளுக்கு முக்கியத்துவமும் முதலிடமும் அளிக்கின்ற ஊடகங்கள், மதத்தின் நியாயமான உணர்வுகளுக்குச் சிறிதளவும் மதிப்பு அளிப்பதில்லை.

அவ்வாறுதான், குடிக் கலாச்சாரத்தை ஹெச். ஜி. ரசூல் ஆதரிக்கிறார் என்றால், அது அவரது சொந்தக் கருத்து என்று விட்டுவிடுவார்கள். ஆனால், இஸ்லாம் மார்க்கமே மிதமான குடியை அனுமதிக்கிறது என்று அவர் வாதிடும்போது, அது மதத்தைப் பற்றிய மதிப்பீடாகவோ விமர்சனமாகவோ மாறிவிடுகிறது. அதற்கு அவர் தக்க பதில் சொல்லியே ஆகவேண்டும். குடியை இஸ்லாம் ஆதரிக்கிறது என்பதற்கு நம்பத் தகுந்த எந்த ஆதாரத்தையும் அவர் காட்டவில்லை. அரைகுறையாகப் புரிந்துகொண்டு அவர் காட்டும் ஆதாரங்கள் எதுவும் மார்க்க அறிஞர்களால் ஏற்கப்படவில்லை.

ஆக, எந்தக் கருத்தானாலும் யார் வேண்டுமானாலும் சொல்வதற்கு இங்கு உரிமை உண்டு. ஆனால், அது மத உணர்வுகளைக் காயப்படுத்துவதாகவோ மதத்தின் மீது வலிய திணிக்கப்படுவதாகவோ இருக்கலாகாது. ஒன்றை எழுத உரிமை இருப்பதைப் போன்றே அதை எதிர்க்கவும் உரிமை உண்டு. எழுதுபவர்கள் அனைவரும் முற்போக்குவாதிகளும் அல்ல; எதிர்ப்பவர்கள் அனைவரும் பிற்போக்குவாதிகளும் அல்ல. அதே நேரத்தில், கருத்தைக் கருத்தால்தான் எதிர்க்க வேண்டும் என்பதை மறுக்க முடியாது.

அ. முஹம்மது கான் பாகவி
சென்னை - 4

மாற்றுக்கருத்துகளைத் தன் கருத்துகளால் எதிர்கொள்வதைத் தவிர்க்கும் மனிதன் மாற்றுக்கருத்தாளரையே ஒழித்துக்கட்டும் விபரீதப் போக்கிற்கு ஆளாகிவிட்டான். அண்மையில் ஹைதராபாத்தில் தஸ்லிமா நஸ்ரீன் தாக்கப்பட்ட விவகாரம் மனிதத்திற்கான தாக்குதல். எந்த மதமும் வன்முறையை ஆதரிக்கவில்லை. ஹமீத் அன்சாரி, களந்தை பீர்முகம்மது போன்ற மனித நேயர்களின் குரல் நமக்கு ஆறுதலளிக்கிறது. இஸ்லாம் என்றால் சகோதரத்துவம் என்பதாகும். தன் சகோதரன் தவறு செய்யும்போது மன்னிப்பதும் அவனைத் திருத்த முனைவதுமே உண்மையான சகோதரனின் செயலாகும். இஸ்லாமின் உள்ளார்ந்த அர்த்தத்தைப் புரிந்துகொண்டு மனித நேயத்தைப் பேணி வளர்ப்பதால் மட்டுமே எதிர்கால உலகம் அமைதிப் பூங்காவாக விளங்க முடியும். மேலும் ஒரு கோரச் சம்பவம் ஹைதராபாத்தில் நிகழ்ந்துள்ளது. அப்பாவி மக்கள் லும்பினிப் பூங்காவில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மனித இனமே பட்டுப்போனபின் பகவத்கீதையும் பைபிளும் குர்-ஆனும் எத்தகைய இடத்தைப் பெறமுடியும்? முதலும் முடிவும் மனிதர்களே. இந்த எளிய அடிப்படை உண்மையைப் புரிந்துகொள்வதால் மட்டுமே நம் மனித இனத்தை அழிவிலிருந்து காக்க முடியும்.

அண்மையில் பீகாரில் ஒரு பெண்ணின் கழுத்துச் சங்கிலியைத் திருடியதற்காகத் திருடியவன் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளான்; மேலும் ஒரு காவலரால் மோட்டார் சைக்கிளின் பின்புறம் அவன் கட்டப்பட்டு இரத்தம் சொட்டச் சொட்ட இழுத்துப் போகப்பட்டிருக்கிறான்! என்ன வன்கொடுமை இது!

மனிதனின் விலங்கியல் இயல்பூக்கம் (Animal instinet) தன் கோர இருப்பைப் பறை சாற்றத் தொடங்கிவிட்டதையே இந்நிகழ்வு காட்டுகிறது. தொழு நோயாளிக்கு அந்நோய் கண்ட இடத்தில் உணர்ச்சியே இருக்காது என்பார்கள். நம் மனமும் இத்தகைய நிலைப்பாட்டை அடைந்துவிட்டதுதான் பெருந்துயரம்.

முனைவர் இரா. சத்தியமூர்த்தி
புதுக்கோட்டை

'எழுத்தும் எதிர்ப்பும்' கட்டுரையின் கடைசிப்பகுதி ஏற்றுக்கொள்ளத்தக்கது. தன் நிழலையே எதிரியாக்கிப் பொது எதிரியை மறந்து உள்முரண்களுக்கு ஒன்றுகூடி அதள பாதாளத்தில் கிடக்கும் சமூகத்தை மறந்து அதன் மேம்பாடு, முன்னேற்றம் இது குறித்தெல்லாம் கவலையே படாமல் மதம் அதன் வழிபாடுகள் தொழுகை, நோன்பு, கருத்து வேறுபாடுகள், உள்முரண்பாடுகள், தொழுகையில் விரல் நீட்டுவதா, ஆட்டுவதா, தொப்பி அவசியமா, இல்லையா இன்ன பிற விஷயங்களிலேயே குழாயடிச் சண்டையாக்கி வாழ்நாளைத் தொலைத்துக்கொண்டிருக்கிறது. கரையேற்ற ஒரு தலைவர் இல்லாமல் முஸ்லிம் சமூகம் திண்டாடிக்கொண்டிருக்கிறது.

அதற்காக... இஸ்லாத்துக்குள்ளேயே இருந்து இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தும் காட்டிக்கொடுக்கும் வேலையைச் செய்யும் தேவையில்லாத விஷயங்களைப் பெரிதுபடுத்தி, பிரச்சினையாக்கும் தஸ்லிமாக்கள், ரசூல்களுக்குக் களந்தை பீர்முகம்மது வக்காலத்து வாங்குவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. படைப்பாளிகள் என்றால் எதையும் எழுதலாமா... யோசிக்க வேண்டும்.

ஜென்னத்துல் ஃபிர்தவ்ஸ்
கோவை -8

களந்தை பீர்முகம்மது எழுதிய, 'எழுத்தும் எதிர்ப்பும்' என்னும் கட்டுரை கண்டேன். தஸ்லிமா நஸ்ரீனுக்கு எதிராக ஏவிவிடப்பட்ட கொடுந்தாக்குதலாக இருந்தாலும் சரி ஹெச்.ஜி. ரசூல் அவர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட ஊர்விலக்கமாக இருந்தாலும் சரி, இவை கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. இது தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள களந்தையாரின் வாதங்களைப் பெருமளவில் நான் ஏற்றுக்கொள்கிறேன். தனது சமூகம் சார்ந்த உயர்வான சுய அக்கறை காரணமாகவே அந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது என்றும் நான் நம்புகிறேன்.

இவற்றையும் தாண்டிச் சிலவற்றைச் சொல்ல எனக்கு முகாந்திரம் உண்டு என எண்ணுகிறேன்.

பொதுவாக, கருத்துச் சுதந்திரம் பெரிய-பரந்த எல்லைகளை உடையது. குறைந்தபட்சம் அந்த எல்லைகள் மீறப்படக் கூடாது என்பதில் நாகரிகமுடையவர்கள் ஒன்றுபடுவார்கள் என்றே நம்புகிறேன். நிச்சயம் இது குறுகிய மனப்பான்மை அல்ல. ஆனால் இன்றைக்குக் கருத்துச் சுதந்திரம் என்றால், அது இன்னொருவருடைய உணர்வுகளைப் புண்படுத்துவது என்றாகிவிட்டது. இது சரியான செயல்தானா? என்பதைச் சம்பந்தப்பட்டவர்களே சிந்தித்து, சீர்தூக்கிப் பார்க்கட்டும். இதை எதிர்த்துச் சில முரடர்கள் தாக்குதல் என்றும் ஊர்விலக்கம் என்றும் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளும்போது, அசல் பிரச்சினை பின்னுக்குத் தள்ளப்பட்டு, இந்த முரடர்களின் மூர்க்கமே பெரும் விவாதப்பொருள் ஆகிவிடுகிறது.

எனவே கருத்துரைப்போரும் சரி, அதை மறுத்துரைப்போரும் சரி, இரண்டு தரப்புமே தங்கள் தளங்களில் நின்று சரியாகச் செயல்படவில்லை என்பதே என் சிற்றறிவுக்கு எட்டிய அபிப்பிராயமாகும்.

விவாதத்திற்கோ விமர்சனத்திற்கோ அப்பாற்பட்டவை என உலகில் எதுவும் இல்லை. இஸ்லாம் உட்பட. ஆனால் அவற்றை அறிந்துகொள்ள வேண்டும் என்னும் அறிவுத்தாகத்தின் பாற்பட்டதாக இருக்க வேண்டுமே தவிர, அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகவோ (shock value) தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தின் பாற்பட்டதாகவோ ஒருபோதும் இருக்கக் கூடாது.

கே.எஸ். முகம்மத் ஷுஐப்
தூத்துக்குடி - 628 204

தஸ்லிமா நஸ்ரீன்மீதான தாக்குதல் பற்றிக் களந்தை பீர்முகம்மது எழுதிய எழுத்தும் எதிர்ப்பும் கட்டுரைமீதான மேலும் சில எதிர்வினைகள் இடமின்மை காரணமாக இவ்விதழில் இடம்பெறவில்லை. அடுத்து வரும் இதழ்களில் அவை பிரசுரம்பெறக்கூடும். விரிவாக எதிர்வினையாற்றிய வாசகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆசிரியர் குழு

உள்ளடக்கம்

 

 

Google