Google   www kalachuvadu.com

 

கட்டுரை
'வரையறைக்குள் சிக்காத உறவு'
நெய்தல் கிருஷ்ணன்
வாசகராக அவரைச் சந்தித்தவர்கள் உண்டு. எழுத்தாளராகச் சந்தித்தவர்கள் உண்டு. அவரைச் சந்தித்துவிட்டுத் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் எண்ணத்தில் வந்து அவரைச் சந்தித்த பின்பு வாழ்க்கையைத் தொடர்ந்தவர்கள் உண்டு. ஜே.ஜே: சில குறிப்புகள் படித்து நிலைகொள்ளாமல் தங்கள் கனவுகளைத் தொலைத்தவர்களாக, வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கைகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, வாழ்க்கையைப் புரட்டிப்போட வேண்டும் என்னும் வேகத்தில் அவரைச் சந்தித்தவர்கள் உண்டு. ஆனால், சுந்தர ராமசாமியை நான் முதன்முதலாகச் சந்தித்தது வேறொரு எண்ணத்தில்.

என் கல்லூரித் தோழி புனிதாவின் எம்.ஃபில், ஆய்வேட்டிற்காக எம்.வி. வெங்கட்ராமின் வேள்வித் தீ நாவல் குறித்த நேர்காணலை யாரிடம் எடுக்கலாம் என அவளுடைய பேராசிரியரிடம் கேட்டபோது, (பேராசிரியர் தம் பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என்று சொன்னதால் பெயரைத் தவிர்க்கிறேன்), "நம்ம ஊரில் ஒரு முக்கியமான எழுத்தாளர் இருக்கிறார். அவர் மட்டும் பேட்டி தந்தால் அது போன்ற வேறொரு பேட்டி அமையாது. பன்றி பல குட்டிகளைப் போட்டதுபோல் எழுதியவரல்ல, யானை போல் இரண்டே குட்டிகள்தான் போட்டிருக்கிறார். ஒன்று ஒரு புளியமரத்தின் கதை, இன்னொன்று ஜே.ஜே: சில குறிப்புகள்" என்றார்.

"அப்படியானால் அவரிடமே பேட்டி எடுக்கலாம்" என்றேன்.

"ஆனால் அவர் இலகுவாக யாரையும் சந்திக்கமாட்டார்" என்றார்.

"ஏன்?" என்றேன்.

"அவர் ஒரு கர்வம் பிடித்த மனிதர்" என்றார்.

அதுவரை இயல்பாகக் கேட்டுக்கொண்டிருந்த எனக்கு அவரைக் கண்டிப்பாகச் சந்திக்க வேண்டும் எனத் தோன்றியது. அதற்குக் காரணம், நாகர்கோவிலில் நம்மைவிடவும் கர்வம் பிடித்த மனிதன் இருக்கிறானா என்னும் எண்ணம்தான்.

முக்கியமான எழுத்தாளர் என்றபோது, அவரைச் சந்திக்கத் தோன்றவில்லை. காரணம், என் எண்ணங்களில் கலைஞரே நிறைந்திருந்தார். தமிழில் அவரைப் போன்ற எழுத்தாற்றல் உள்ளவர் எவரும் இல்லை. உலகத் தமிழர்களின் ஒரே தலைவர், கடுமையான உழைப்பாளி, சூழ்ச்சிகளுக்கிடையே கட்சியைக் கட்டிக் காத்துச் செல்பவர் என்பன போன்ற எண்ணங்களில் உறுதியாகவும் ஆவேசமாகவும் இயங்கிய காலம் அது.

m

அன்று வகுப்பறையில் இருப்புக்கொள்ளவில்லை. மாலை வீட்டிற்குச் சென்றதும் அவரைச் சந்திப்பதற்காக உடனே சைக்கிளில் கிளம்பினேன். அவர் வீடு எங்கள் வீட்டிலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம். பார்வதிபுரம் சாலையில் வேட்டாளி அம்மன் கோயில் எதிர்ப்புறம். வீட்டின் முன்புறம் ஒரு போஸ்ட் பாக்ஸ். சிறுவயதில் அந்த இடத்தைக் கடந்து சென்றபோது அது ஒரு போஸ்ட் ஆபீஸ் என்று நினைத்திருந்தேன். வீட்டு மாடியில் புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் சிலை, காம்பவுண்டில் நீண்ட இரும்புக் கதவுகள். கதவுகளுக்கிடையே இடைவெளிகள். இடை வெளி வழியாக வீட்டின் முன்பகுதி தெரிந்தது. கதவின் சிறிய பகுதியைத் திறந்துகொண்டு உள்ளே சென்றேன். வீட்டின் முன்னால் முற்றம். அடுத்து வராந்தா. வராந்தாவின் இருபுறமும் சிறிய திண்டு. வீட்டின் வெள்ளைநிறக் கதவுகள் சாத்திக் கிடந்தன. ஆள் அரவம் இல்லை. எப்படிக் கூப்பிடுவது? யோசித்துக்கொண்டே அங்குமிங்கும் பார்த்தேன். கதவுக்கு அருகில் அழைப்புமணி இருந்ததைக் கண்டேன். அழுத்தினேன். சிறிது நேரத்தில் கதவைத் திறந்து கொண்டு சிவப்பு நிறத்தில், உயரமான தோற்றத்தில், முகத்தை அடைத்தது போன்ற சதுரவடிவக் கண்ணாடியும் வெள்ளைநிற பனியனுமாக, காவிநிற ஒற்றை வேஷ்டி கட்டிய ஒருவர் வெளிப்பட்டார்.

"என்ன விஷயம்?" என்று கேட்டார்.

"சுந்தர ராமசாமியைப் பார்க்க வேண்டும்."

"இதில் உட்காருங்கள்" என்று நாற்காலியைக் காட்டினார்.

நான் உட்கார்ந்தேன். அவரும் உட்கார்ந்தார்.

"என்ன விஷயம்?" என்று மீண்டும் கேட்டார்.

"சுந்தர ராமசாமியைப் பார்க்க வேண்டும்."

"நான்தான். விஷயத்தைச் சொல்லுங்கோ."

"எம்.வி. வெங்கட்ராமின் வேள்வித் தீ நாவல் பற்றி உங்களிடம் பேட்டி எடுக்க வேண்டும்."

"வெங்கட்ராம் கும்பகோணத்தில் இருக்கிறார். அவரிடமே நீங்கள் பேட்டி எடுக்கலாமே."

"அவரை எனக்குத் தெரியாது."

"அவர் முகவரியைத் தருகிறேன். நாவல் எழுதியவரிடமே பேட்டி எடுங்கள்."

"உங்களிடந்தான் பேட்டி எடுக்க வேண்டுமென்று வந்திருக்கிறேன்."

"இப்போது பேட்டி தருவது சிரமம். நிறைய வேலை இருக்கிறது."

"உங்களுக்கு எப்போது வசதிப்படும் என்று சொல்லுங்கள் அப்போது உங்களைச் சந்திக்கிறேன்."

"இன்று வெள்ளிக்கிழமை. அடுத்த வெள்ளிக்கிழமை இதே நேரத்தில் வாருங்கள்."

எழுந்து விடைபெறும் முன் என் பெயரைக் கேட்டார். சொன்னேன்.

அங்கிருந்து நேராகப் பேராசிரியர் வீட்டிற்குச் சென்றேன். "சுந்தர ராமசாமியைச் சந்தித்தேன். மிகக் குறைவாதான் பேசினாரு, அடுத்தவாரம் வரச் சொன்னாரு" என்றேன்.

m

அடுத்தவாரம் வெள்ளிக்கிழமை மாலை அவர் சொன்ன நேரத்திற்குப் போனேன்.

"உட்காருங்கள் கிருஷ்ணன்" என்றார்.

எனக்கு ஆச்சரியம். சந்தோஷம்.

உட்கார்ந்தோம்.

"என்ன செய்கிறீர்கள்?"

"கல்லூரியில் படிக்கிறேன்."

"எந்தக் கல்லூரியில் படிக்கிறீர்கள்?"

"எஸ்.டி. இந்துக் கல்லூரியில் படிக்கிறேன்."

"தமிழ்ப் பேராசிரியர் யாரெல்லாம் உங்களுக்குப் பாடம் நடத்துகிறார்கள்?"

"நான் காமர்ஸ் படிக்கிறேன்."

ஆச்சரியம் கலந்த முகபாவத்துடன், "காமர்ஸ் படிக்கிறீர்கள், வெங்கட்ராமின் நாவல் பேட்டி எதற்கு?"

"என்னுடைய தோழி தமிழில் எம்ஃபில் ஆய்வு செய்கிறாள். அவளுக்காகத்தான்."

ஆய்வுத் தலைப்பைக் கேட்டார். சொன்னேன்.

"என்னைப் பார்க்கும்படி உங்களிடம் யார் சொன்னார்கள்?"

"தமிழ்த் துறைப் பேராசிரியர்."

"நான் நினைத்ததுபோல் வேலை முடியவில்லை. இழுத்துக்கொண்டே செல்கிறது. அடுத்த வெள்ளிக் கிழமை வாருங்கள். எப்படி என்று சொல்கிறேன்."

அவர் சொன்னது எனக்கு ஏமாற்றம் தருவதற்குப் பதிலாக அவரை விடாமல் சென்று சந்திக்க வேண்டும் என்ற எண்ணந்தான் என்னுள் வலுப்பெற்றது.

m

மூன்றாம் வெள்ளிக் கிழமை அவரைச் சந்தித்தேன்.

வேள்வித் தீ நாவல் பற்றி பேட்டி தருவதற்குச் சம்மதித்தார். என் மனத்தில் எழுந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

"என்றைக்குப் பேட்டியை வைத்துக்கொள்ளலாம்" என்று கேட்டேன்.

"நாவலைப் படிக்க வேண்டும். இப்போது என் நூலகத்திலிருந்து நாவலைத் தேடி எடுப்பது சிரமம். உங்களிடம் இருந்தால் கொடுங்கள்."

"என்னிடம் இப்போது இல்லை."

"உடனே தர வேண்டுமென்று சொல்லவில்லை. இரண்டொரு நாளில் கொடுங்கள்."

புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டா என்று என்னிடம் கேட்டதுதான் தாமதம், "கலைஞர், அண்ணா எழுத்துக்களைப் படித்திருக்கிறேன். முரசொலியைத் தொடர்ந்து படித்துவருகிறேன். இன்று காலையில் வந்த முரசொலியைக்கூடப் படித்து விட்டேன். எதைப் படிக்கிறேனோ இல்லையோ கண்டிப்பாக முரசொலியைப் படித்துவிடுவேன். கலைஞரைப் போல எவனும் எழுத முடியாது" என்று சொன்ன நான், எப்படியாவது இவரையும் நம்ம கட்சியில் இழுத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில், "நீங்கள் கலைஞரைப் படித்திருக்கிறீர்களா?" என்று கேட்டேன்.

"கிருஷ்ணன். . . கலைஞரும் அண்ணாவும் ஒவ்வொரு வட்டங்கள். அதுபோல ஏராளமான வட்டங்கள் இருக்கின்றன. அவற்றின் உள்ளேயும் நீங்கள் நுழைந்து பார்க்கலாம்" என்றார்.

கலைஞரைப் படித்திருக்கிறாரா என்று கேட்டதற்கு நம்மை வட்டத்துக்குள் நுழையச் சொல்கிறாரே. ஒருவேளை இவர் கலைஞரைப் படிக்கவில்லையோ எனத் தோன்றியது. இது பற்றிப் பின்னால் அவரிடமே கேட்க வேண்டுமென்று முடிவு செய்தேன்.

மிகுந்த மகிழ்ச்சியில், பெயர் சொல்ல விரும்பாத அந்தப் பேராசிரியரைச் சந்தித்தேன். சுந்தர ராமசாமி பேட்டிக்குச் சம்மதித்துவிட்டார் என்றேன். அவரால் நம்ப முடியவில்லை. இது ஒரு பெரிய விசயம் என்றார், மகிழ்ச்சியோடு. ஏதோ பெரிதாகச் சாதித்தது போன்ற உணர்வை என்னுள் உணர்ந்தேன்.

m

அடுத்த நாளே வேள்வித் தீ நாவலை சுந்தர ராமசாமியிடம் கொடுத்தேன். "நீங்கள் வேலையில் இருப்பதாகச் சொன்னீர்களே" என்று கேட்டேன்.

"காலச்சுவடுன்னு ஒரு பத்திரிகை தொடங்கியிருக்கிறேன். இரண்டாவது இதழ் வரப்போகிறது. அது தொடர்பான வேலையில்தான் ஈடுபட்டிருந்தேன்" என்றார்.

அதுவரை ராணி, இதயம் பேசுகிறது, கல்கண்டு, குமுதம், ஆனந்த விகடன் என்று கேட்ட காதுக்கு, காலச்சுவடு என்னும் பெயர் வித்தியாசமாகத் தோன்றியது. "காலச்சுவடு எந்தக் கடையில் கிடைக்கும்?" என்று கேட்டேன்.

"கடைகளில் கிடைக்காது. சந்தாதாரர்களுக்குத் தபாலில் அனுப்புகிறோம்" என்றவர், இருங்கள் என்று சொல்லிவிட்டு எழுந்து வீட்டினுள்ளே சென்றார். திரும்பி வரும்போது கையில் சிறிய புத்தகத்துடன் வந்தார். அதை என்னிடம் கொடுத்தார்.

வாங்கிப் பார்த்தேன். சந்தன நிற அட்டையில் சாக்லேட் நிறத்தில் காலச்சுவடு பெயர் நேர்வரியில் இல்லாமல் மேலும் கீழுமாக வித்தியாசமான வடிவத்தில் இருந்தது. வீட்டிற்கு வந்ததும் அதைப் புரட்டிப் பார்த்தேன். உள்ளே படங்கள் எதுவும் இல்லை. முழுவதும் எழுத்துகளாகவே இருந்தன. இருப்பினும் படிக்க வேண்டும் எனத் தோன்றியது. அட்டையின் பின்பக்கம் 'கனவுகளும் காரியங்களும்' என்னும் தலைப்பில் இருந்ததைத்தான் முதலில் படித்தேன். யார் எழுதியது என்று தெரியாமலே, முதலில் இருந்ததால் அதைப் படித்தேன். வாரப் பத்திரிகைகளைப் படித்ததைவிட வித்தியாசமாகத் தோன்றியது. ஆனால், என்ன வித்தியாசம் என்று சொல்லத் தெரியவில்லை. முகப்பு அட்டையின் பின்புறத்திலிருந்து படிக்கும் பழக்கம் காலச்சுவடிலிருந்துதான் தொடங்கியது.

m

வேள்வித் தீ நாவல் பேட்டியின்போது புனிதா கேட்ட கேள்விகளுக்கு சுந்தர ராமசாமி அளித்த பதில்கள், வேள்வித் தீ நாவலை நான் புரிந்துகொண்டதற்கு மாறுபட்டு இருந்தது. ஒரு நாவலை இன்னொரு கோணத்தில் பார்க்க முடியும் என்பதையும் மற்றொருவருடைய பார்வையைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தையும் என்னுள் உருவாக்கியது.

m

காலச்சுவடு மூன்றாம் இதழில் வெளிவந்த அம்ருதா பிரீதத்தின் 'எச்சில் நாய்' என்னும் மொழிபெயர்ப்புக் கவிதையை வாசித்தேன். கவிதையின் முதல்பகுதி புரிந்தது. கடைசிப்பகுதி புரியவில்லை. கல்லூரித் தமிழ்த் துறைக்குச் சென்று பேராசிரியரிடம் கேட்டேன். வேறுசில பேராசிரியர்களும் படித்துப் பார்த்தார்கள். ஹோட்டல் எச்சிலைத் தின்னும் நாய், தெருவிலுள்ள எச்சிலைப் பொறுக்கும் நாய், வீட்டு எச்சிலை மட்டுமே தின்னும் நாய் என்று தங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார்கள். எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது. கவிதை எச்சில் நாயைப் பற்றியது அல்ல. வகுப்பு முடிந்ததும் சுந்தர ராமசாமியைச் சந்தித்து கவிதையின் புரியாத பகுதியைப் பற்றிக் கேட்டேன். கவிதையைப் பற்றிய பேராசிரியர்களின் கருத்துகளையும் தெரிவித்தேன்.

"கவிதையின் முதல் பகுதியைப் புரிவதில் சிரமமில்லை. இந்தக் கவிதையைப் பொறுத்தவரை கடைசிப் பகுதிதான் முக்கியம். கவிதை நாயைப் பற்றியது அல்ல. கணவனும் மனைவியும் விவாகரத்துப் பெற்றுப் பிரிந்து இருப்பதைப் பற்றியது. பிரீதத்தின் வாழ்க்கையைத் தெரிந்தவர்களுக்கு இது இலகுவாகப் புரிந்திருக்கும். கவிதையைப் புரிந்துகொள்வதற்கு அதை ஒரு முறைக்குப் பலமுறை வாசித்துப் பார்க்கலாம்" என்றார்.

m

கல்லூரியில் படிக்கும்பொழுது எங்கள் வணிகவியல் துறையின் மாணவர் பேரவைத் தொடக்கவிழாவில் பேச வேண்டுமென்று சுந்தர ராமசாமியை அழைத்தேன். தொடர்ந்து அழைத்ததன் காரணமாக வருவதாக ஒப்புக்கொண்டார். என்ன தலைப்பில் பேசவேண்டுமென்று கேட்டார். எனக்குச் சொல்லத் தெரியவில்லை. பேராசிரியர் அ.கா. பெருமாளிடம் சென்று கேட்டேன். 'ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை' என்னும் தலைப்பைத் தந்தார்.

பேரவைத் தொடக்கவிழாவில், வாசிப்பின் அவசியம், துறை சார்ந்த சமாளிப்பு, தமிழர்களின் தாழ்வு மனப்பான்மை, ஆங்கில மொழிமீது தமிழர்களுக்கு இருக்கும் மோகம் போன்ற விசயங்களை முன்வைத்து சுந்தர ராமசாமி பேசினார். பேச்சு மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பிடித்திருந்தது. பேச்சை முடிக்கும்பொழுது தான் பேசிய விசயத்தை முன்வைத்து ஒரு விவாதத்தைத் தொடங்கலாம் என்று அவர் கூறியது, அதுவரை சவால் விடுத்து உணர்ச்சி கொப்பளிக்கும் பேச்சை மட்டுமே கேட்டுவந்த எங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்திற்று. சில மாணவர்களும் சில பேராசிரியர்களும் விவாதத்தில் பங்கெடுத்தனர். இது சுந்தர ராமசாமிக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்தது. (சுந்தர ராமசாமியின் இவை என் உரைகள் புத்தகத்தின் முன்னுரையைப் படித்தபோதுதான், அவர் கூட்டங்களில் பேசுவதை அப்போது தவிர்த்து வந்ததாகவும் பல வருடங்கள் கழித்து முதன்முறையாகப் பேசியது எங்கள் மாணவர் பேரவையில்தான் என்பதும் தெரிந்தது.)

m

சுந்தர ராமசாமியின் மூலம் பல நண்பர்களின் பழக்கம் ஏற்பட்டது. நண்பர்களைச் சந்திக்கும்பொழுது புத்தகங்கள் பற்றியும் வேறு விஷயங்கள் பற்றியும் பேசினோம். நண்பர்கள் அனைவரும் ஓர் இடத்தில் கூடிப் பேசினால் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்னும் எண்ணம் தோன்றியது. இது குறித்து சுந்தர ராமசாமியிடம் தெரிவித்தேன். காகங்கள் என்னும் பெயரில் தன்வீட்டு மாடியில் கூட்டங்கள் நடந்ததாகவும் நாளடைவில் அந்தக் கூட்டம் நின்று போனதாகவும் தெரிவித்தார். "அதை மீண்டும் நடத்தலாமே" என்றேன். "நீங்களே அதுபோன்ற கூட்டத்தை நடத்தலாமே" என்று கூறினார். அப்பொழுது என்னிடம் இருந்த உற்சாகத்தின் காரணமாகக் கூட்டம் நடத்த முடிவு செய்தேன். அதன் விளைவுதான் நெய்தல் அமைப்பு. நெய்தல் கூட்டத்திற்கு யாரை அழைப்பது, எப்படிக் கூட்டம் நடத்துவது என்பவை குறித்து சுந்தர ராமசாமியிடம் ஆலோசிப்பேன். நெய்தலுக்காகத் தன்னுடைய பெயரை எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அவர் சொன்னது எனக்கு மிகுந்த வியப்பையும் மகிழ்ச்சியையும் அளித்தது. நெய்தல் தொடங்கிய பின்னர் சுந்தர ராமசாமியைச் சந்திப்பது அதிகரித்தது. அவருடன் நெருங்கிய உறவு உருவாக அதன் கூட்டத் தொடர் காரணமாக அமைந்தது.

m

செம்மீன் நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பைப் படித்துவிட்டு அதுபற்றி சுந்தர ராமசாமியிடம் பேசினேன். நாவலில் வரும் நம்பிக்கைகளைப் பற்றிக் கேட்டேன். அந்த நம்பிக்கைகள் பற்றித் தனக்கும் பல கேள்விகள் இருப்பதாகவும் தகழியைச் சந்தித்தால் என்ன என்ன கேள்விகளை எழுப்புவார் என்பதையும் என்னிடம் கூறினார்.

"ஒரு நாவல் முதலில் படிக்கும்பொழுது முக்கியமான நாவலாகப்படும். சில ஆண்டுகள் கழித்துப் படிக்கும் பொழுது அப்படித் தோன்றுவதில்லை. சில நாவல்கள் முதலில் படிக்கும்பொழுதும் பல வருடங்கள் கழித்துப் படிக்கும்பொழுதும் முக்கியமானதாகப்படும். செம்மீன் எனக்கு இப்பொழுது முக்கிய நாவலாகப் படவில்லை" என்றார்.

"செம்மீன் நாவலின் முடிவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்டேன்.

"விருப்பம் இல்லா ஆணும் பெண்ணும் ஐம்பது வருடங்கள் வாழ்வதைவிட விரும்பிய ஆணும் பெண்ணும் ஐந்து நிமிடங்கள் வாழ்வதுதான் வாழ்க்கை" என்றார்.

இது என்னைப் பெரிதும் பாதித்தது. இந்தப் பதில் என் வாழ்க்கையில் ஒரு முக்கிய முடிவை எடுப்பதற்குக் காரணமாக அமைந்தது. நான் விரும்பிய பெண்ணையே மணந்துகொண்டேன். தோழி புனிதா என் மனைவியானாள்.

m

தன் மகன் கண்ணன் திருமணத்திற்கு என்னையும் புனிதாவையும் நண்பர்களையும் சென்னைக்கு அழைத்துச் சென்றார். திருமணத்தன்று தன் அருகில் நிற்கவேண்டுமென்று என்னிடம் கூறினார். எழுத்தாளர்கள் பலரையும் பார்க்கவேண்டுமென்ற ஆர்வத்தில் அவர் அருகில் நிற்கவில்லை. ஊர் திரும்பியதும் அவரைப் பார்க்கச் சென்றேன். "திருமணத்தன்று உங்களை என் அருகில் ஏன் நிற்கச் சொன்னேன் என்று தெரியுமா?" என்று கேட்டார்.

"தெரியாது" என்றேன்.

"திருமணத்திற்கு வருபவர்கள் என்னை வந்து பார்ப்பார்கள். அப்பொழுது அவர்களிடம் உங்களை அறிமுகம் செய்து வைக்கலாம் என்று நினைத்திருந்தேன்" என்றார். அப்போதுதான் ஒரு முக்கிய வாய்ப்பை இழந்துவிட்டதை உணர்ந்தேன்.

m

ஒருமுறை அவரது அறையில் அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, "கிருஷ்ணன், நீங்கள் எழுதிப் பார்க்கலாமே" என்றார்.

"என்னால் எழுத முடியுமா?" என்று கேட்டேன்.

அறையிலிருந்த பெரிய மேசையைச் சுட்டிக்காட்டி, "பலபேர் சேர்ந்து தூக்கினால்தான் இதைத் தூக்க முடியுமென்று தெரியும். அதனால் இதைத் தூக்க முயற்சி செய்யுங்கள் என்று சொல்லமாட்டேன். ஆனால், எழுதுவது அப்படி அல்ல. முதலில் நீங்கள் படித்த புத்தகத்தைப் பற்றிய உங்கள் அபிப்பிராயத்தை ஒரு நோட்டில் எழுதுங்கள், முக்கிய நிகழ்வுகளை டைரியில் குறித்து வையுங்கள். உங்களுக்குப் பிடித்த விஷயத்தை எழுதுங்கள். பத்திரிகைகளுக்குக் கடிதம் எழுதுங்கள். இப்படியே பயிற்சி செய்து பாருங்கள். எழுத வரும். உழைப்புதான் முக்கியம்" என்றார்.

m

பெரியார், புரோட்டா, காந்தி பற்றிய கட்டுரைகள் எழுதினேன். காந்தியின் சத்திய சோதனை என்னைப் பெரிதும் பாதித்திருந்த நேரம். சுந்தர ராமசாமியிடம் "நான் தொடர்ந்து எழுத நினைக்கிறேன்" என்றேன்.

"அது நல்ல விஷயம்" என்றார்.

"தொடர்ந்து எழுதும்பொழுது உங்களுக்கும் எனக்குமான உறவு சீராக இருக்குமா என்பதைச் சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டுமென்று நினைக்கிறேன்" என்றேன்.

"நீங்கள் எதை மனத்தில் வைத்துச் சொல்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். நீங்கள் சுயபரிசோதனை பண்ணிப் பாருங்கள், உங்களுக்கும் எனக்குமான உறவு சீர்கெடாது என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும்" என்றார் சுந்தர ராமசாமி.

"எதை வைத்துச் சொல்கிறீர்கள்?" என்று கேட்டேன்.

"என்னைச் சந்திக்க வருபவர்களுடன் பழக ஆரம்பித்து, பழக்கம் தொடரும்போதே அவர்களுடைய உறவு எப்படிப் போகும் என்பது எனக்குத் தெரிந்துவிடும். ஆனால், அதை முன் முடிவாக வைத்து நான் யாருடனும் பழகுவதில்லை" என்றார்.

m

நான் நிறைய வாசிக்க வேண்டும், கூட்டங்கள் நடத்த வேண்டும் என்பதைவிடவும் என் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டு தன் கவலையை என்னிடமும் நண்பர்களிடமும் அடிக்கடி கூறுவார்.

m

சுந்தர ராமசாமிக்கும் எனக்குமுள்ள உறவு எத்தகையது என்று இதுவரை நான் யோசித்துப் பார்த்ததில்லை. யோசிக்கும்பொழுது 'குரு-சிஷ்ய' உறவாகக் கொள்ளலாமா எனத் தோன்றியது. அவரைக் 'குரு' என்று சொன்னவர்கள் உண்டு. ஆனால், அவர் எவரையும் 'சிஷ்ய'னாக ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம், அவர் தன்னை ஒருபோதும் குருவாகப் பாவித்துக்கொண்டதில்லை.

ஆலோசகராக, நண்பராக, தந்தையின் பரிவு கொண்டவராக, வழிகாட்டுபவராக, மனிதாபிமானியாக, ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவராக, வாசகத் தன்மையை விரிவடையச் செய்தவராக . . . இப்படிப் பல்வேறு நிலைகளில் என்னிடம் உறவு கொண்டவர். இந்த உறவை உணர்த்தும் ஒரு சொல்லை நாடி என் தேடலைத் தொடங்கியுள்ளேன். இந்தத் தேடல் எளிமையானது அல்ல. யோசித்துப் பார்க்கையில் அப்படி ஒரு சொல் தேவையில்லையோ என்றும் தோன்றுகிறது. சொல்லால் அடையாளப்படுத்தவோ விவரிக்கவோ முடியாத உறவாகவே இது எனக்குப்படுகிறது.

அப்படியே இருக்கட்டும்.

m

2005ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் நாள் சு.ரா. மறைந்தார்.

நெய்தல் கிருஷ்ணனின் இந்தக் கட்டுரை சு.ரா.வின் நினைவாக இங்குப் பிரசுரிக்கப்படுகிறது.

உள்ளடக்கம்

 

 

Google