Google   www kalachuvadu.com

 

தலையங்கம்
மீடியாவின் சூதும் வாதும்
 

படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்,
போவான் போவான், ஐயோ என்று போவான்

                                                                 -பாரதி

தில்லியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை உமா குரானா, தன் மாணவிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாகக் குற்றஞ்சாட்டி ஒரு 'புலனாய்வு' செய்தித் தொகுப்பை வீடியோ ஆதாரத்துடன் லைவ் இந்தியா தொலைக்காட்சி ஒளிபரப்பியது. உமா குரானா அவரது பள்ளி மாணவியுடன் 'பேரம் பேசும்' காட்சிகளும் அதில் இடம்பெற்றிருந்தன. செய்தித் தொகுப்பு ஒளிபரப்பானதும் தர்யாகஞ்ச் பகுதியிலும் குரானா பணிபுரியும் பள்ளியிலும் கொந்தளிப்பு உருவானது. உமா குரானாமீது மாணவிகளும் அப்பகுதி மக்களும் தாக்குதல் தொடுத்தனர். அவர் கைது செய்யப்பட்டார். மீடியா வழியே நடத்தப்பட்ட இந்த 'விசாரணை'யில் உமா குரானா குற்றவாளியாக 'நிரூபண'மானதும் தில்லி முதலமைச்சர் ஷீலா தீக்ஷித் அவரை உடனடியாகப் பணி நீக்கம் செய்தார்.

சில நாள்களுக்குப் பிறகு வழக்கில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது. தில்லி போலீசார், ரகசியக் காமிராவின் உதவியோடு புலனாய்வை மேற்கொண்ட லைவ் இந்தியா தொலைக்காட்சியின் செய்தியாளர் பிரகாஷ் சிங்கைக் கைது செய்தனர். அவரது காட்சிப் பதிவில் உமா குரானாவால் விபச்சாரத்திற்கு அழைக்கப்படும் மாணவியாக 'நடித்த'வர் மாணவியே அல்ல என்பதும் அவர் இந்திப் பத்திரிகையாளர் ரஷ்மி சிங் என்பதும் வெளிப்பட்டது. செய்தியாளர் பிரகாஷ் சிங்கின் நண்பர் விரேந்திர அரோராவிற்கும் உமா குரானாவுக்கும் கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை ஏற்பட்டதால், பழிவாங்கும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட 'புலனாய்வு' அதுவென இப்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றமும் இந்தப் 'புலனாய்வு'ப் பிரச்சினை பற்றித் தீர விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு தில்லி அரசுக்கும் போலீசுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேற்படி வழக்கு மீடியாவின் செயல்பாடுகள் பற்றிப் பரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது. 24 மணி நேரச் செய்தித் தொலைக்காட்சிகள் பல ஏற்பட்ட பிறகு செய்தி வேட்கையும் போட்டியும் ஜிஸிறி ரேட்டிங்கில் (பார்வையாளர் அளவீடு எனக் குறிப்பிடப்படும் இது நடைமுறையில் நகர்ப்புறப் பார்வையாளர் அளவீடு. இதன் அடிப்படையிலேயே விளம்பரங்களின் அளவும் கட்டணமும் தீர்மானிக்கப்படுகின்றன.) முன்னேற்றத்திற்கான துடிப்பு, பல சாதனைகளையும் அதைவிட அதிகமான சீரழிவுகளையும் ஏற்படுத்தியிருப்பது பலரும் உணர்ந்த விஷயம். சில மீடியா ஆய்வாளர்கள் இப்போக்கின் ஆபத்தைத் தொடர்ந்து சுட்டியும் வந்துள்ளனர்.

மத்திய அரசு ஏற்கெனவே மீடியாவின் மீது சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவரும் திட்டத்தை முன்வைத்திருந்தது. இதை மீடியா நிறுவனங்கள் எதிர்த்துவந்தன. அவர்களின் எதிர்ப்புகள் இச்சம்பவத்தால் பலவீனப்பட்டுள்ளன.

நமது வெகுஜன மீடியா பற்றிய மயக்கங்களை நீக்கிக்கொள்ளாமல் இப்பிரச்சினையைச் சரிவர அணுக முடியாது. மீடியா இன்று நமது ஜனநாயகத்தின் நான்காம் தூண் அல்ல. இந்திய ஜனநாயகத்தை, மனித உரிமையை, சமூக நீதியைப் பாதுகாக்கும் எந்த உயரிய விழுமியங்களும் அதனிடம் இல்லை. மீடியா ஒரு வணிக அமைப்பு. அதிக லாபத்தையும் அதிகாரத்தையும் விரும்பும் முதலாளிகளால், பங்குதாரர்களால் நிர்வகிக்கப்படும் வணிக நிறுவனங்கள் அவை. இதுவே பொதுவிதி. விதிவிலக்குகளைப் பேச இது தருணமல்ல.

அதிக லாபத்தை அடைய மீடியா எதையும் செய்யத் தயங்காது என்பது மீடியா கவனிப்பாளர்கள், மீடியா பணியாளர்கள் அனைவரும் அறிந்த உண்மை. வன்முறையைத் தூண்ட, தனிநபர்களை அழிக்க, 'பரபரப்பிற்காக'ப் போலிச் செய்திகளை உருவாக்க, செய்தியில் மசாலாவைத் திணிக்க என விற்பனையைப் பெருக்கவும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் எதையும் செய்ய மீடியா தயங்காது. பல ஊடகவியலாளர்கள் அரசியல்வாதிகளிடம், ரௌடிகளிடம், பணக்காரர்களிடம், உளவுத் துறையினரிடம் பணத்திற்கும் பாட்டிலுக்கும் சல்லாபங்களுக்கும் விலை போகக்கூடியவர்கள்தான். மீடியா அதிகாரம் பல பிளாக் மெயில் முயற்சிகளுக்கும் துணைபோவது பெரிய ரகசியமல்ல.

பத்திரிகைச் சுதந்தரம் - கருத்துச் சுதந்திரம் போன்ற உயரிய விழுமியங்களில் நின்று தம்மீதான கட்டுப்பாடுகளை எதிர்க்கும் மீடியா அந்த விழுமியங்களுக்கு நியாயம் செய்வதில்லை. மனித உரிமை மீறல் மீடியா செயல்பாட்டின் ஓர் அம்சமாகிவிட்டதென்பதற்கு உமா குரானா ஒரு சாட்சி. தமிழகத்தில் எண்ணற்ற உதாரணங்கள் உண்டு. ஆனால், எந்த ஊடகவியலாளரும் நிறுவனமும் தமது மீறல்களுக்காக இதுவரை இங்கு தண்டிக்கப்பட்டதில்லை.

உமா குரானா வழக்கின் மிக நம்பிக்கையூட்டும் அம்சங்கள் என, குற்றமிழைத்த பத்திரிகையாளர் அம்பலப்படுத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டிருப்பது, அவர்மீது வழக்குத் தொடரப்பட்டிருப்பது, உயர் நீதிமன்றம் தீவிர விசாரணையைக் கோரியிருப்பது போன்ற நடவடிக்கைகளைக் குறிப்பிடலாம். தவிர லைவ் இந்தியா அலை வரிசையைத் தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் ஒரு மாத காலத்திற்கு தடை செய்திருக்கிறது.

தமக்கான சுயகட்டுப்பாடுகளை உருவாக்கிக்கொள்ளத் திராணி இல்லாத மீடியா நிறுவனங்களுக்கு அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளைக் கேள்வி கேட்கும் உரிமை இல்லை. நியாயமான ஊடகக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தும் சட்டங்கள் இப்போது கட்டாயமாகியிருக்கின்றன. அவை கருத்துச் சுதந்திரத்தைப் பாதிப்பவையாக அல்லாமல் 'அவதூறுச் சுதந்திர'த்தைத் தடை செய்பவையாக இருக்க வேண்டும். மீடியா ஆதிக்கத்திலிருந்தும் அராஜகத்திலிருந்தும் சிவில் சமூகத்தைக் காக்கும் சட்டங்களாக இருக்க வேண்டும். மீடியா மீதான வழக்குகளை விசாரிக்கத் தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்.

ஊடகங்கள்மீது ஏற்றப்பட்டிருக்கும் புனிதப் பிம்பங்களைக் கலைத்துப்போட வேண்டிய காலகட்டம் இது. அவை தீவிரமான கண்காணிப்புக்கும் விவாதங்களுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்படுத்தப்பட வேண்டும். மீடியா குற்றங்களிலிருந்து, தம்மைக் காத்துக்கொள்ளும் உரிமை தனி மனிதனுக்கும் சமூகத்திற்கும் உண்டு.

அறவியலும் அறிவியலும்

சேதுக் கால்வாய்த் திட்டம் தொடர்பான சர்ச்சைகள் வசைகளைத் தாண்டி விபரீதமான பரிமாணங்களை அடைந்துகொண்டிருக்கின்றன என்பதைப் பெங்களூரில் இரண்டு உயிர்களைப் பலிகொண்ட பேருந்து எரிப்பும் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி வீட்டின் மீது நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டுத் தாக்குதலும் உணர்த்துகின்றன.

அரசியல் ரீதியிலான வேறுபாடுகளைப் பயங்கரவாத நடவடிக்கைகளின் மூலம் எதிர்கொள்ளும் அபாயகரமான இடத்தை நோக்கி நகர்ந்து செல்வதை இச்செயல்கள் உணர்த்துகின்றன. ராமர் பாலம் விஷயத்தில் முதல்வர் அறிவியல் சான்றுகளை முன்வைப்பதோடு விவாதத்தை மட்டுப்படுத்திக்கொள்வதே ஆக்கப்பூர்வமான அணுகுமுறை.

சேது சமுத்திரத் திட்டம் இந்துத்துவச் சக்திகளுக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குமான மோதலாக மாறியிருப்பதில் இத்திட்டம் பற்றிய சுற்றுச்சூழல் சார்ந்த கேள்விகள் பின் நகர்ந்துவிட்டன.

ராமர் பாலத்தை மறுக்க அறிவியலை ஆதாரமாகக் கொள்ளும்போது, சுற்றுச்சூழல் சார்ந்த கேள்விகளையும் அதே அறிவியல் அணுகுமுறையுடன் பரிசீலிக்கக் கோருவதில் தவறில்லை. சேதுக் கால்வாய்த் திட்டம் பற்றி, சுற்றுச்சூழல் சார்ந்து விஞ்ஞானிகள் எழுப்பியுள்ள கேள்விகளும் மீனவச் சமூகத்தினரின் போராட்டங்களும் நியாயமான முறையில் எதிர்கொள்ளப்படவில்லை. இத்திட்டத்தின் சாதகபாதகங்கள் அரசியலைத் தாண்டிய அறிவியல், சமூகவியல் தளத்தில் ஆராயப்பட்டு முடிவுசெய்யப்பட வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.

n

அட்டை ஓவியம்: S.G. வாசுதேவ்

உள்ளடக்கம்

 

 

Google