Google   www kalachuvadu.com

 

பத்தி
அகவிழி திறந்து
கண்ணன்

சுயம்பு

நண்பரிடம் ஒருமுறை சொல்லியிருந்தேன் என்றாலும் அவர் கவனத்தில் பதியவில்லை போலும். புனையப்பட்ட சில பிம்பங்களைக் கேள்விக்குள்ளாக்குவது எளிதல்ல.

நவீன இலக்கிய வரலாற்றில் ஒரு 'அதிசய'மாகப்பார்க்கப்பட்டவர் ப. சிங்காரம். எழுபதுகளில் தஞ்சை பிரகாஷ், கோணங்கி, முருகேச பாண்டியன், சி. மோகன் என இலக்கியத் தளத்திலிருந்து சிலர் அவரைச் சந்தித்தனர். ஒரு மதுரைக் கலைஞனுக்காக ஏங்கிக்கொண்டிருந்த அன்றைய மதுரைசார் இளைஞர்களுக்கும் ஒரு விடிவெள்ளிபோல, ஒரு நாட்டுப்புற அதிசயம்போல அவர் தோன்றியிருக்க வேண்டும். ஒரு இலக்கியவாதியைக் 'கண்டுபிடித்துவிட்ட' பெருமிதம் இன்னும் சில உதட்டோ ரங்களில் வழிந்துகொண்டேயிருக்கிறது.

தமிழ் நவீன இலக்கியத்தாக்கம் பெரிதும் இல்லாத 'எழுத்து' முதலான சிற்றிதழ் மரபின் பாதிப்பற்ற ஒரு நவீனக் கலைஞன்! படைப்பாளிக்கான தகுதிகளாகக் கூறப்படும் பல தகுதிகளும் இல்லாத ஒரு கலைஞன்!

இக்கதையைப் 'புதுயுகம்' காலத்தில் இருந்து பல முறை கேட்டிருக்கிறேன். ஆகஸ்ட் 2007 மதுரை புத்தகச் சந்தையில் ப. சிங்காரம் பற்றி முருகேச பாண்டியன் உரையிலும் இக்கதை மீண்டும் சொல்லப்பட்டது. ப. சிங்காரம் அவர்களும் தன்னைச் சந்திக்க வந்தவர்களிடம் தனது இலக்கிய பாதிப்புகளை முழுமையாகப் பகிர்ந்துகொள்ளவில்லையோ எனத் தோன்றுகிறது. நான் பாண்டியனிடம் முன்னர் கூறிய ஒரு விஷயம் அவர் மனத்தில் பதியவில்லை என்பது தெரிந்ததும், இக்குறிப்பை எழுதிவிட வேண்டும் எனத் தோன்றியது.

மேற்படி கதையைக் கேட்கும்போதெல்லாம் என் மனத்தில் ஒரு சிறிய உறுத்தல் இருக்கும்; நவீனத்துவ இலக்கிய இயக்கத்திற்கு வெளியில் நவீன இலக்கியம் சாத்தியப்பட்டுள்ளதா என. நவீன இலக்கிய மொழியின் தாக்கம் இன்றி நவீன இலக்கிய வாசகனைக் கவரும் படைப்பைத் தர முடியுமா?

'எழுத்து' தொகுதிகளைப் புரட்டிக்கொண்டிருந்தேன். இக்கடிதம் கண்ணில்பட்டது.

'எழுத்து' சிந்தனையைத் தூண்டும் வகையில் இருந்தது. தமிழ் வளர்ச்சிக்கு இன்று முதல் தேவையாக இருப்பது நேர்மையான, ஓரவஞ்சனை இல்லாத விமர்சனமாகும். அந்தத் தேவையை தங்கள் பத்திரிகை நிறைவேற்ற முடியுமானால் . . .

ப. சிங்காரம்
மதுரை
(எழுத்து - 3, மார்ச் 59)

மேற்படி கடிதம் பல விஷயங்களை உணர்த்துகிறது.

l கடிதம் 'எழுத்து' மூன்றாம் இதழிலேயே வெளியாகியுள்ளது. முதல் இரண்டு இதழ்களையுமே படித்துவிட்டு எழுதப்பட்டது என யூகிப்பதில் தவறில்லை. அதாவது 'எழுத்து' வெளிவந்த உடனேயே ப. சிங்காரம் கவனத்திற்கு வந்துவிட்டது.

l 'எழுத்து' சந்தாதாரர்களுக்கு மட்டுமே அனுப்பப்பட்ட இதழ். ப.சிங்காரம் சந்தாதாரரா?

l இன்றுபோலப் புதிய சிற்றிதழ்களுக்கு வெகுஜன இதழ்கள் வழி டமாரம் அடிப்பது, மெரினா பீச்சில் வசூல் வேட்டை, சுருட்டல் எல்லாம் நடைபெறாத காலம் அது. எழுத்துப் பற்றி ப. சிங்காரத்திற்குத் தெரிந்தது எப்படி? அன்றைய நவீன இலக்கிய உள்வட்டத்தோடு அவர் தொடர்புகொண்டிருந்தாரா?

l தமிழ் சமகால நவீன எழுத்துடன் பரிச்சயம் இல்லாமல் 'தமிழ் வளர்ச்சிக்கு இன்றைய தேவை' பற்றி அக்கறை கொள்ள முடியுமா? அல்லது 'எழுத்'தைப் படித்து உள்வாங்கிக்கொள்ளத்தான் முடியுமா? தீவிர இலக்கியம் பற்றிய அக்கறை இன்றி 'எழுத்து'க்கு ஆதரவாகக் கடிதம் எழுதும் உந்துதல் ஏற்படுமா?

ப. சிங்காரத்தின் படைப்புலகின் மீதான தாக்கங்கள் பற்றிய மறுபரிசீலனை அவசியம்.

செங்கமலமும் இலக்கியமும்

இலக்கிய அவதூறுகளில் சில கோபத்தையும் சில அருவருப்பையும் ஏற்படுத்தக்கூடியவை. சமீபத்தில் என் பெயர் குறிப்பிட்டு எழுதப்பட்ட ஒரு 'படைப்பை'ப் புரட்டிப் பார்த்தபோது, இரண்டாம் உணர்வே ஏற்பட்டது. அவதூறுப் படைப்புகளை எழுதுவதில் பெண் எழுத்தாளர்கள் ஆண்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்பதன் உதாரணம் இந்தப் 'படைப்பு'. பால் சமத்துவம் எந்நிலையிலும் வரவேற்கப்பட வேண்டியதுதான்.

அந்தப் 'படைப்பாளியை' ஓரிருமுறைகள் சந்தர்ப்பவசமாகச் சந்தித்திருக்கிறேன். முதல்முறை இவர் உலகக் கவிஞர் ஒருவருடன் மேற்கொண்டிருந்த பயணத்தில் இடையீடாக வீட்டிற்கு வந்திருந்தபோது. பின்னர் ஒருமுறை மதுரைக் கடைத் தெருவில். மூன்றாம்முறை, தனது திட்டங்கள் கடைசிவரை தனக்கே தெரியாதபடி செயல்படும் நண்பர், ஒரு பயணத்தின்போது முன் அறிவிப்பில்லாமல் என்னை அப்'படைப்பாளி' வீட்டு வாசலில் இறக்கியபோது. மூன்றுமுறையும் ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் பேசியதில்லை. கடிதம், மின்னஞ்சல், குறுஞ்செய்தி, தொலைபேசித் தொடர்பு எதுவும் எப்போதும் இருந்ததில்லை. ஓரிருமுறை அவர் காலச்சுவடுக்கு அனுப்பிய 'படைப்புகள்' அவற்றிற்கு உரிய இடத்திற்குப் போய்ச் சேர்ந்திருக்கின்றன. தமது படைப்புகளுக்கு இடமளிக்காத ஒரு தளத்தின்மீது எழுத்தாளர்கள் வருத்தம் கொள்ளலாம். ஆனால், எதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. காலச்சுவடுமீது சில எழுத்தாளர்கள் 'பிளாக் மெயில்' ரக முயற்சிகளை மேற்கொள்வது ஒரு தொடர்கதையாகவே இருந்து வருகிறது.

இந்தப் 'படைப்பு' என் பெயர் கொண்ட ஒரு கதாபாத்திரத்திற்கும் கதாசிரியருக்குமான அல்லது கதைசொல்லிக்குமான உறவையும் ஊடலையும் புனைகிறது. மேற்படி கதையில் என் பெயர் இடம் பெற்றிருப்பது வெறும் கற்பனை என்று ஒதுக்குவோம். பத்திரிகையாளர் எனத் தொழிற் பெயர் இடம் பெறுவதையும் மறந்துவிடுவோம். மேற்படி 'படைப்பாளி'க்கும் உங்களுக்கும் என்ன பிரச்சினை? ஏன் உங்களைத் திட்டிக்கொண்டே இருக்கிறார்? என்று சில நண்பர்கள் தில்லியிலிருந்து குமரிவரை அவ்வப்போது என்னை விசாரிப்பது இப்'படைப்பாளி'யின் மனப்பிராந்துக்கு ஆதாரமாக உள்ளது. சதா பாதாளச் சாக்கடை முன் நிற்பதுபோல முகபாவம் காட்டும் அப்'படைப்பாளி'யோடு எனக்கு ஒவ்வாமையைத் தவிர வேறு எந்த உணர்வும் ஏற்பட்டது இல்லை. ஆர்.எஸ்.எஸ். அரசாங்கம் ஏற்பட்டால், அதன் சென்சார் போர்டில் பணியாற்றத் தகுதியான ஆச்சாரமான கருத்துகள்கொண்ட இந்தப் 'படைப்பாளி', இங்கு 'முற்போக்கு' வட்டாரத்தில் உலாவுவது தமிழகத்தில் மட்டுமே சாத்தியம்.

கதையில் இவ்வாறு ஒரு கூற்று வருகிறது "நேரடியா படுக்க வர்றியா"னு கேட்பதே யோக்கியம் என்று. தமது படைப்புகள் வழி தமது ஆற்றாமையை வெளிப்படுத்தும் படைப்பாளிகள், தமது கதாபாத்திரத்தின் சில அறிவுறுத்தல்களையும் பின்பற்றுவது நல்லது.

மேற்படி கதை வெளிவந்த 'புதிய பார்வை' இணை ஆசிரியர் மணா அவ்விதழ் வெளிவந்து சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு என்னைத் தொடர்பு கொண்டார். அவர் குரலில் பதற்றமும் வலியும். மேற்படி சிறுகதையின் உள்சரடுகள் அவரது கவனத்திற்குத் தாமதமாகவே வந்திருக்கின்றன. தெரிந்தும் என்னிடம் ஏன் கூறவில்லை என்று என்னைக் கடிந்துக்கொண்டார். உதவி ஆசிரியர்கள் அச்சிறுகதையை வெகுளித்தனமாகத் தேர்வு செய்துவிட்டார்கள் என்று வருத்தம் தெரிவித்தார். 'புதிய பார்வை' இதழ் ஏப்ரல் 1-15, 2007இல் இக்குறிப்பு இடம்பெற்றுள்ளது.

சில இதழ்களுக்கு முன் 'புதிய பார்வை'யில் வெளிவந்த ஒரு சிறுகதை, சிறுபத்திரிகை சார்ந்த இலக்கியவாதிகள் மத்தியில் சலனத்தை உருவாக்கியிருக்கிறது. காரணம் - குறிப்பிட்ட சிறுகதையில் பாத்திரத்தின் பெயராகக் கருதப்பட்ட ஒரு பெயர் குறிப்பாக ஒருவரைச் சுட்டுகிற விதத்தில் எழுதப்பட்டிருப்பதுதான். படைப்பாளியின் படைப்புச் சுதந்திரத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையின் பேரிலேயே அதைப் பிரசுரித்திருந்தோம். ஆனால் தனிப்பட்ட ஒருவர் மீதான விமர்சனத்திற்கு அந்தச் சிறுகதை வடிவத்தைப் பயன்படுத்தியிருப்பதைப் பிறகே உணர்ந்தோம். தனிப்பட்ட தாக்குதல்களும் மோசமான வசைகளும் அவ்வப்போது நவீனமாக நிகழ்கிற தமிழ் இலக்கியச் சூழலில் - 'புதிய பார்வை'யைப் பொறுத்தவரை - கடந்த இரண்டாண்டுகளாக அதைக் கவனத்துடன் தவிர்த்துவந்திருக்கிறோம். எழுதப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்க -வார்த்தைகளின் மூலமாக வலியைப் பரப்பும் பிறாண்டல்களுக்கு இடமளிப்பது திரும்பத் திரும்பக் குழுவாதத்தையே கௌரவப்படுத்துவதாக அமையும் என்றிருந்த கவனத்தை மீறி, தனிப்பட்ட தாக்குதலை மையமாகக்கொண்ட சிறுகதையை வெளியிட்டதற்காக வருத்தத்தை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.

'புதிய பார்வை' குறிப்பு வெளிவந்த பிறகு ஒரு பன்மொழி எழுத்தாளர் நவீன சரோஜாதேவி ரகக் கதைகளும் டௌன்லோட் கட்டுரைகளும் எழுதி விண்புகழை எட்டியிருப்பவர் - பலருக்கும் கிளுகிளுப்போடு குறுஞ்செய்தி அனுப்பிவந்ததாக அறிந்தேன். காக்கை உகக்கும் பிணம்.

ஜீவநதி எனும் அதிசயம்
ஜனநாயகம் பற்றி மாணவருக்கு

தமிழ் நாளிதழ்கள், வார இதழ்கள் ஆகியவற்றைப் படிக்கும்போதும் அரசியல்வாதிகளின் பேச்சைக் கேட்கும் போதும் மிக அதிகமாகப் புழங்கும் வார்த்தைகளில் ஒன்று 'ஜனநாயகம்'. மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் சொல் என்பதாலேயே அதன் பொருளை நாம் துல்லியமாகப் புரிந்துகொள்வதில்லை. அகராதியில் ஜனநாயகத்திற்குக் கீழ்க்காணும் அர்த்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன:

1. மக்களாட்சி - அதிகாரம் மக்களிடமிருக்கிறது. அவர்கள் அந்த அதிகாரத்தை நேரடியாகவோ தங்கள் பிரதிநிதிகள் வழியாகவோ செலுத்தலாம்.

2. சமத்துவத்தை ஆதரிக்கும் சமூக அமைப்பு.

3. சிறுபான்மையினரின் கருத்துகளைச் சகித்துக் கொள்ளும் அமைப்பு.

ஜனநாயகத்தின் ஆங்கிலச் சொல்லான Democracy  கிரேக்க மூலச் சொல்லான Democratiaவிலிருந்து உருவானது. இச்சொல்லைக் கிட்டத்தட்ட 'மக்களாட்சி' என்னும் பொருளில் பிளாட்டோ பயன்படுத்தியிருக்கிறார். இருப்பினும் கிட்டத்தட்ட 19ஆம் நூற்றாண்டு வரை 'ஜனநாயகம்' என்பது கட்டுப்படுத்த முடியாத மக்கள் சக்தியைக் குறிக்கும் ஆபத்தான ஒரு விஷயமாகவே பொதுவாகப் பார்க்கப்பட்டது. 19, 20ஆம் நூற்றாண்டுகளில்தான் அரசியல் கட்சிகள் ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டன.

n

பல ஆண்டுக் காலம் போராடி, கடந்த நூற்றாண்டில் நாம் இந்தியாவில் பெற்ற ஜனநாயகத்தை இன்று இழந்துவருகிறோம். ஏனெனில் போராடிப் பெற்ற ஜனநாயகத்தைப் போராடித்தான் தக்கவைத்துக் கொள்ள முடியும். ஆனால், இன்று நாம் போராடத் தயாராக இல்லை. கேள்வி கேட்பதில்லை. எதையும் ஆழமாகச் சிந்திப்பதில்லை. ஆச்சரியப்படுவதோ அதிசயப்படுவதோ இல்லை.

உதாரணமாக, தாமிரபரணி என்னும் ஜீவநதி நெல்லையில் ஓடிக்கொண்டிருக்கிறது. அது எங்கே தொடங்கி எங்கே முடிகிறது என்பது நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரியாது. அது எப்படி வற்றாமல் ஓடுகிறது என்பதையும் நாம் சிந்திக்கவில்லை. அது வற்றாமல் ஓடுவது கண்டு நாம் அதிசயப்படுவதில்லை. நாம் அதிசயப்பட்டால், பின்னர் அறிந்துகொண்டால், அதைப் பாதுகாக்க முற்படுவோம். அது மாசடையாமல் காப்பாற்ற இயங்குவோம். 'நொய்யல்' என்னும் ஆற்றைக் காக்க கோவையில் ஒரு மக்கள் இயக்கம் நடப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அத்தகைய இயக்கங்கள் ஜனநாயகத்திற்கு இன்றியமையாத தேவை. ஓட்டுப்போடுவதும் அரசு அமைப்பதும் மட்டுமல்ல, தாமிரபரணி போன்ற நதிகள் தொடர்ந்து ஜீவநதிகளாகி ஓடிக்கொண்டிருப்பதை உறுதிப்படுத்திக்கொள்வதும் ஒரு ஜனநாயகத் தேவைதான்; செயல்பாடுதான்.

தாமிரபரணிக்குப் பல ஆபத்துகள் நிகழ்ந்துள்ளன. இன்றும் நிகழ்ந்துவருகின்றன. இவற்றை எதிர்கொண்டால் மேலே கண்ட வரையறைபடி இன்று நாம் ஒரு முழுமையான ஜனநாயக அமைப்பா இல்லையா என்பது தெரியவரும். எந்த அளவுக்கு ஜனநாயக உரிமைகளை இழந்திருக்கிறோம், எந்த அளவுக்குத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறோம் என்பதையும் அனுபவபூர்வமாக அறியலாம்.

தாமிரபரணியில் பல ரசாயன மாசுக்கள், நகரச் சாக்கடைகள், குப்பைகள் கலந்துவருகின்றன. இது நமது சமூகம் விழிப்பான நிலையில் இல்லை என்பதை உணர்த்துகிறது. விழிப்பான நிலையில் இல்லாத ஒரு சமூகம் ஜனநாயக உரிமைகளைத் தக்கவைத்துக் கொள்ளமுடியாது. சிறுபான்மையினர் குரலைச் சகித்துக்கொள்வது ஜனநாயகத்தின் லட்சணங்களில் ஒன்று என்பதைப் பார்த்தோம். தாமிரபரணியில் மாசு கலக்கக் கூடாது என்று நாம் பேச முற்படும்போது முதலில் நம் குரல் சிறுபான்மைக் குரலாக இருக்கும். அப்போது நமது குரலை அதிகார வர்க்கம் சகித்துக்கொள்கிறதா அல்லது அடக்க முற்படுகிறதா என்பதைப் பார்க்க வேண்டும். உள்ளூர்ச் சமூகம் நமது குரலைப் பொருட்படுத்துகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். ஊடகங்கள் நமது குரலுக்கு இடம் தருகின்றனவா என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். இவற்றிலிருந்து சிறுபான்மையினருக்கு இச்சமூக அமைப்பில் இருக்கும் இடத்தை அறிந்துகொள்ளலாம்.

அடுத்ததாக, தாமிரபரணியின் மணல் பெருமளவுக்குத் திருடப்படுகிறது. இது நதியை அழித்துவிடும். மணல் திருட்டானது அரசியல் மற்றும் அதிகாரவர்க்கத்தின் பின்புலத்தோடு நடப்பது என்பது அனைவரும் அறிந்த செய்தி. இதை நாம் எதிர்க்கும்போது, நமது பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிற அரசியல்வாதிகள் நமது சேவகர்களாகச் செயல்படுகிறார்களா அல்லது நம்மை அடக்கி ஆள்பவர்களாக மாறிவிட்டார்களா என்பதை அறிந்துகொள்ளலாம். ஜனநாயகத்தின் பிற லட்சணங்கள் என்று நாம் பார்த்த சமத்துவம், மக்களாட்சி இவற்றின் நிலை என்ன என்பதையும் அப்போது தெளிவுபடுத்திக்கொள்ள முடியும்.

தாமிரபரணியின் நீர் இன்று பன்னாட்டு நிறுவனங்களால் கொள்ளையடிக்கப்படுகிறது. இவற்றிற்கு எதிரான போராட்டமும் இங்கு நடைபெற்று வருகிறது. அதிகாரம் உண்மையிலேயே மக்களிடமிருந்தால், இங்குள்ள பெரும்பான்மை மக்கள் விருப்பப்படி இந்த நீர்க் கொள்ளை நிறுத்தப்படும். இல்லை என்றால், பன்னாட்டு நிறுவனத்தின் சுரண்டலைத் தடுக்கும் அதிகாரத்தை நாம் இழந்துவிட்டோ ம் என்பது பொருள். இன்று நமது ஜனநாயக அமைப்பு மட்டுமல்ல நமது இந்திய நாட்டின் இறையாண்மை (Sovereignity) என்பதே கேள்விக்குள்ளாகிவிட்டது என்பதும் அப்போது தெளிவுபெறும்.

அறிந்துகொள்ளாத, கேள்வி கேட்காத, வியப்படையாத, ஆத்திரங்கொள்ளாத, விவாதிக்காத, போராடாத குடிமக்களைக் கொண்ட நாட்டின் ஜனநாயகப் பண்பு சிறுகச் சிறுக அழிந்துவிடும்.

[பாளையங்கோட்டைப் புனித சவேரியார்
தன்னாட்சிக் கல்லூரி ஜனநாயக மன்றத்தின்
(மாணவர் கருத்துப் பரிமாற்றத்திற்கான களம்)
தொடக்க விழாவில் பேசியது.]

உள்ளடக்கம்

 

 

Google