சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனமும் காலச்சுவடு பதிப்பகமும் இணைந்து
வெளியிட்டுள்ள தாமஸ் டிரவுட்மனின் திராவிடச் சான்று: எல்லிஸும் திராவிட மொழிகளும் (தமிழாக்கம்
இராம. சுந்தரம்) நூலின் அறிமுக விழா 31 ஜூலை 2007 அன்று மாலை சென்னை வளர்ச்சி
ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆதிசேஷையா அரங்கத்தில் நடைபெற்றது. ஆங்கில நூலின் மொழி
பெயர்ப்புகள் எப்போதும் காலம் கடந்தே தமிழில் வெளிவருகின்றன. இந்நூலோ ஆங்கிலத்தில்
வெளிவந்து ஓரிரு மாதங்களுக்குள் தமிழாக்கம் செய்யப்பெற்று வெளிவருகிறது. நூலின்
உள்ளடக்கம் சார்ந்த சிறப்பு இதற்குக் காரணம். பேராசிரியர் பா. மதிவாணன் ஆற்றிய நூல்
அறிமுக உரையை இருபகுதிகளாகப் பிரித்துப் புரிந்துகொள்ள முடியும். முதல் பகுதி,
நூலின் உள்ளடக்கத்தைச் சுருக்கமாக, ஆனால் மிக ஆழமாக எடுத்துரைப்பதாக அமைந்தது.
நூலின் முதல் இரு அத்தியாயங்கள் தொல்காப்பியத்தையும் பாணினியத்தையும் மொழியின்
அறிவியலைப் பேசும் நூல்களாக நமக்கு அறிமுகப்படுத்துகின்றன. அடுத்து வரும்
அத்தியாயங்கள், திராவிட மொழிக் குடும்பம் என்கிற புதிய கருத்தாக்கத்தை இனங்கண்ட
எல்லிஸின் வாழ்க்கைப் பணிகளைச் சுவையாகச் சொல்லிச்செல்கின்றன. இறுதி அத்தியாயம்
இக்கருத்தாக்கத்தின் தொடரும் மரபுகளைப் பற்றிப் பேசுகிறது என்ற விவரிப்புகள் அவரது
உரையின் முதல் பகுதி என்றால், தமிழ்ச் சூழலில் இந்நூல் ஏற்படுத்த வேண்டிய விளைவுகள்
பற்றிய அவருடைய வேட்கை இரண்டாம் பகுதி.
தொல்காப்பியம், குறிப்பாக எழுத்து, சொல்லதிகாரங்கள் காட்டும் தனி இலக்கண மரபை,
இந்நூலின் துணைகொண்டு மேலும் துல்லியமாக்கலாம். வேத ஒலிப்பிலிருந்து தோன்றுவதாக
இலக்கணிகள் சொல்லும் வட மொழிகளின் ஒலியன் கோட்பாடு மரபிலிருந்து மாறுபட்டுத் தமிழின்
ஒலியன் கோட்பாடு இருப்பதாகத் தொல்காப்பியர் கருதுகிறார். இக்கருத்தை வளர்த்தெடுத்து
உறுதிசெய்ய இந் நூலின் வழிகாட்டல்கள் பயன்படும். தற்சமம், தற்பவம், தேசியம்,
கிராமியம் என்னும் சொல் பாகுபாடு வழக்கமாக மற்ற மொழியில் காணப்பட, இயற்சொல்,
திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் வைப்பு முறை தமிழில் அமைந்திருக்கிறது.
அந்நிய மொழிக் கலப்பை இயன்றவரை தடுக்கும் வளமான மொழி தமிழ் என்பதும் தமிழின்யாப்பு
மரபு, இசை அடிப்படையால் ஆனது என்னும் கருத்தும் இந்நூலின் வழி உறுதியாகிறது. மொழிக்
கட்டமைப்பில் சமஸ்கிருதம், பாலி ஆகியவற்றிலிருந்து தமிழ் வேறுபட்டது என்ற ஏ.சி.
பர்னெலின் கருத்தினை ஒட்டித் தொல்காப்பியம், பாணினி வழியினை ஒட்டிய காதந்திரம்
இவற்றை ஒப்பிட்டு ஆராயத் தூண்டுவது இந்நூலின் பயன்மிக்க விளைவுகளில் ஒன்று. இவை
மதிவாணன் உரையின் இரண்டாம் பகுதியின் சிறப்பான அம்சங்கள்.
அடுத்த நூல் அறிமுக உரையாளரான தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர் ம.
இராசேந்திரனின் பேச்சு, அவருக்குள் நூல் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றியதாக அமைந்தது.
ஒரு மொழியின் சிறப்பு பற்றிய சிலாகிப்பு, அதற்கு எதிராக நிகழும் சமூகச் சூழலின்
விளைவாகவே எப்போதும் இருக்கும் என்பதன் வரலாற்று அடையாளம் இப்புத்தகத்தின் இப்போதைய
வெளியீடு என்றார். ஒரு மொழியின் இலக்கண உருவாக்கம், அந்நியரான புதியவர்களுக்காகவே
இருந்திருக்கிறது; ஆளும் வர்க்கம் அடிமைகளின் இயல்பைப் புரிந்துகொள்ளும்
முயற்சிகளுள் ஒன்றாகவே பிரித்தானியர்களின் மொழி பற்றிய ஆய்வுகளைத் தன்னால் மதிப்பிட
முடிகிறது என்றார். இவ்வாறு பெரும் விவாதங்களைக் கிளப்பியிருக்கக்கூடிய தீக்கங்குகளை
வெளிப்படுத்திய இராசேந்திரன், ஏனோ உடனேயே சமரச உரையாடல் என்கிற குளிர்ந்த நீரால்
அவற்றை அணைத்துக்கொண்டே போய்த் தன் பேச்சை முடித்தார். பெரும் அறிவாளர்கள்,
எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சிக்குச் சென்னை
வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தலைவர் மு. ஆனந்த கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆ.இரா.
வேங்கடாசலபதி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இயக்குநர் பத்மினி சுவாமிநாதனின்
சுருக்கமான நன்றியுரையுடன் அறிமுகவிழா நிறைவுற்றது.
|