Google   www kalachuvadu.com

 

பதிவு: அற்றைத் திங்கள் 29.07.07, சென்னை
ஆவணமாகும் அனுபவங்கள்
ந. கவிதா
காலச்சுவடு அறக்கட்டளை, மாஃபா, ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், புக் பாயிண்ட் ஆகியவற்றோடு இணைந்து மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் நடத்திவரும் அற்றைத் திங்கள் நிகழ்ச்சி 29.07.07 அன்று மாலை புக் பாயிண்ட் அரங்கில் நடைபெற்றது.

நடிகரும் இயக்குநருமான நாசர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். அவரை இயக்குநர் சொர்ணவேல் அறிமுகப்படுத்திப் பேசினார். நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் நல்ல கலைஞனாகவும் திரையுலகிற்கும் நாடக உலகிற்கும் பங்களித்து வரும் நாசரின் ஆளுமை குறித்த தனது கவனிப்பைப் பகிர்ந்து கொண்டார் சொர்ணவேல். நாசரிடம் வியப்பிற்குரியதும் பிடித்ததும் என்று சிலவற்றைக் குறிப்பிட்ட அவரது பேச்சு தமிழ்த் திரையுலகம் குறித்த ஆழ்ந்த சிந்தனையை வெளிப்படுத்தியது.

நாசர் நடித்த திரைப்படங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகளாலும் நாசரின் குடும்பத்தார் அவரைக் குறித்தும் அவரது நடிப்பு குறித்தும் பேசுவதாக அமைந்த காட்சிகளாலும் வடிவமைக்கப்பட்ட ஆவணப்படம் திரையிடப்பட்டது. தேவிபாரதியும் கிரிதரனும் இணைந்து மிகக் குறுகிய காலத்தில் வடிவமைத்த அப்படம் நாசரின் நடிப்புத் திறனில் பல பரிமாணங்களைக் காட்டுவதாக இருந்தது.

செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்திலிருந்து வந்த இளைஞனுக்கு நகரத்திடமிருந்தும் அதன் மனிதர்களிடமிருந்தும் முற்றிலும் புதிதாகக் கற்றுக்கொள்ளப் பல விஷயங்கள் இருந்தன. ஐந்து நட்சத்திர உணவகமொன்றில் பணியாளராகச் சேர்ந்தபோது, வாடிக்கையாளர்களிடமிருந்து கற்றுக்கொண்ட கூறுகள், தனது வெளியுலக அனுபவத்தின் போதாமையை உணர்த்தின என உரையைத் தொடங்கினார் நாசர்,

'இதுவரை என்ன சாதித்துவிட்டேன்' என என்னை நானே கேட்டுக்கொள்ளும்போது, இந்தக் கணத்தில் உங்கள் முன்னால் பேச அழைக்கப்பட்டிருப்பதும் இந்தப் பகிர்தல் சாத்தியமாகி இருப்பதும் பதிலாகத் தோன்றி நிறைவைத் தருகின்றன எனக் குறிப்பிட்டார் நாசர்.

நடிப்பின் மீதிருந்த ஈடுபட்டால் புகைப்படங்களைக் கையில் வைத்துக்கொண்டு இயக்குநர்களைப் பார்க்கக் காத்துக் கிடந்ததையும் பிறகு நண்பரின் மூலம் நம்மை அழைத்து வாய்ப்புத் தரும்படியும் நம்மீது கவனத்தை ஈர்க்கும்படியும் தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் வலுப்பெற்றதையும் சொன்னார். பிலிம் சிட்டியில் பயின்றதற்குப் பிறகு சினிமா குறித்த புரிதல் வேறுபட்டது எனவும் உலக சினிமா குறித்த அறிதல் விரிவடைந்தது எனவும் சொன்ன நாசர், மணிரத்னத்தின் நாயகன் படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பைச் சுவாரஸ்யத்தோடு பகிர்ந்துகொண்டார்.

தனது நடிப்புப் பயணத்தின் சில முக்கியமான அனுபவங்களை எடுத்துக்கூறிய நாசர், தனக்குக் கூத்தின்மீது ஏற்பட்ட ஆர்வத்தையும் குறிப்பிட்டார்.

தமிழகத்தின் வட மாவட்டங்களில் மரபாக இருந்துவந்த கூத்து தற்பொழுது தனது முகத்தை இழக்கத் தொடங்கியிருப்பது குறித்த சிந்தனை, ஒரு களப்பணியாளனைப் போல் கலைஞர்களுடனான சந்திப்பு அனுபவத்தைச் சாத்தியப்படுத்தியது எனவும் எந்தச் சூழலுக்கும் எந்தப் பாத்திரத்திற்கும் தங்களை உடனடியாகப் பொருத்திக்கொள்கிற கூத்துக் கலைஞர்களின் கலை உணர்ச்சி அசாதாரணமானது எனவும் சொன்னார் நாசர்.

இந்த அனுபவமும் கூத்து சார்ந்த தேடலுந்தான் அவதாரத்தை இயக்கச் செய்தது என்ற நாசர் தனது தேவதை, மாயன், பாப்கார்ன் போன்ற படங்களின் மூலம் பெற்ற வேறுபட்ட அனுபவங்களை விவரித்தார். ஓவியர் மருதுவுடன் இணைந்து ஒரு கனவினைப் போலச் செய்து முடித்த தேவதை படம் தந்த கலாபூர்வமான கணங்களையும் பார்வையாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

வெகுசன சினிமா பொழுதுபோக்கு என்னும் ரீதியில் மட்டும் தொடர்ந்து அணுகப்படுவதன் ஆதங்கம் தொனித்த நாசரின் உரையைத் தொடர்ந்து பார்வையாளர்களிடமிருந்து கேள்விகள் எழுந்தன.

'தொடர்ந்து எதிர்மறையான கதா பாத்திரங்களிலேயே நடிக்கிறீர்களே? மறுப்பதில்லையா?' எனவும் தமிழில் உலகத் தரத்திற்குத் திரைப்படங்கள் எடுக்கப்படும் சூழல் குறித்தும் வெகுசன சினிமாவின் தரம் குறித்தும் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

'நடிப்பு என்பது எனது தொழில், அதைத் தொழிலாக மட்டுமே பார்க்கிறேன்' என்ற நாசர் தமிழ்த் திரையுலகில் நாயகர்களுக்காகக் கதைகள் உருவாக்கப்படுகின்றன. இடையே பாடல்கள், சண்டைகள், காதல் காட்சிகள் எல்லாம் இருந்தால் போதும் என்னும் ரீதியில் படங்கள் உருவாவது ரசனை சார்ந்த மாற்றம் நம்மிடம் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது என்றார்.

இந்த நிகழ்வைக் காலச்சுவடின் முன்னாள் நிர்வாக ஆசிரியர் அரவிந்தன் தொகுத்து வழங்கினார். காலச்சுவடின் பொறுப்பாசிரியர் தேவிபாரதி நன்றி கூறினார். இலங்கை எழுத்தாளர் உமா வரதராஜன் நினைவுப் பரிசை அளித்தார்.

உள்ளடக்கம்

 

 

Google