Google   www kalachuvadu.com

 

பதிவு: மீண்டும் காகங்கள், 14.7.2007, நாகர்கோவில்
தன் பிரதிபலிப்புடன் உரையாடல்
நெய்தல் கிருஷ்ணன்
'ஒன்றுமில்லை', 'பெயரிடவில்லை', 'தலைப்பே தேவை இல்லை' என்று சொன்னாலும் தனித்துவ இயல்பினை அவருடைய வண்ணங்களிலிருந்தும் உருவாக்கங்களிலிருந்தும் உணர முடிந்தது. மீண்டும் காகங்கள் எட்டாம் சந்திப்பில் (14.07.2007) உள்நோக்கிய தேடல் என்னும் தலைப்பில் பெனிட்டா பெர்ஷியால் கடந்த ஐந்தாண்டுகளாகத்தான் உருவாக்கியவற்றைத் திரையிட்டுப் பேசினார்.

சென்னை ஓவியக்கல்லூரியில் பயின்ற பெனிட்டா பெர்ஷியால் திருவண்ணாமலையில் பிறந்தவர். Images மூலம் பேசுவதே தனக்கு விருப்பம் எனத் தன் பேச்சைத் தொடங்கினார். திரையில் அவர் காண்பித்தவற்றில் பெரும்பான்மையும் அவர், அவரது வகுப்பறை, வீடு, அம்மா, சூழல் ஆகியவற்றின் உருவாக்கங்களாக இருந்தன. அவர் ஓவியக் கல்லூரியில் படித்தபோது, தைல வண்ணங்களில் இயற்கைக் காட்சிகள் வரைதல், உருவச் சித்திரங்கள் வரைதல் போன்றவற்றைக் கற்றாலும் அவற்றில் பெரிய ஈடுபாடு கொள்ளவில்லை. கல்லூரியில் படித்தவர்கள், நண்பர்கள் மற்றும் பலரின் உருவாக்கங்களைப் பார்த்தபொழுது எதைச் செய்ய வேண்டும் என்பதில் குழப்பமே தோன்றியிருக்கிறது.

கல்லூரி இறுதி ஆண்டில் படைப்பு உருவாக்க வகுப்பில் பாடம் நடந்தபோது, வெளிப்பொருள்கள்மீது கவனம் சிதறாமல் இருப்பதற்காகக் கதவும் ஜன்னல்களும் மூடப்பட்டு அதில் கறுப்பு அட்டை ஒட்டப்பட்டிருந்த தாம். வகுப்பு முடிந்ததும் ஜன்னலைத் திறந்து வெளியே விலகியபொழுது, கறுப்பு அட்டை ஒட்டிய ஜன்னலின் கண்ணாடியில் பிரதிபலித்த உருவத்தைத் தன்னுடைய உருவமென உணர்ந்திருக்கிறார்.

தனக்கும் தன் உருவத்திற் கும் உரையாடல் தொடங்கி ஜன்னலைத் திறந்தபோதெல்லாம் உரையாடல் தொடர்ந்ததாகவும் அந்த உருவத்தையே தன்னுடைய படைப்புப் பொருளாகக் கொண்டதாகவும் அதன் தொடர்ச்சியாகவே வகுப்பறை, வீடு, அம்மா, தன்னைச் சுற்றி நடப்பவை போன்றவற்றை உருவாக்கிவருவதாகவும் பெனிட்டா கூறினார். தன்னுடைய உருவம் எங்குப் பிரதிபலிக்கிறது என்பதைத் தொடர்ந்து தேட ஆரம்பித்துத் தன் உருவத்தையே அதிகமாகத் தீட்டியிருப்பதாகவும் சொன்னார்.

தைல ஓவியங்களில் விருப்பம் இல்லாததால் கிரையான்ஸில் படைப்புகளைத் தீட்டிவருகிறார். கான்வாஸைவிடக் காகிதத்தில் தீட்டுவதுதான் அவருக்கு உகந்த விஷயம். காகிதத்தோடு உறவு ஏற்பட்டதற்குச் சிறுவயதிலிருந்தே அதைப் பயன்படுத்தியதுதான் காரணம் என்றார். வரைவது மட்டுமின்றித் தன்னுடைய சூழலில் கிடைக்கக்கூடிய பொருள்களையும் காகிதத்தில் ஒட்டிவருவதாகவும் அதனால் எங்குச் சென்றாலும் பொருள்களைத் திரட்டுவது இன்றும் தொடர்வதாகக் கூறினார்.

வரைவதற்கு வாட்டர் கலர்களை மட்டுமின்றி, டீ, காப்பி டிக்காஷன், மருதாணி போன்றவைகளைப் பெனிட்டா பயன்படுத்தியிருப்பதை அவரது விளக்கத்திலிருந்து தெரிந்துகொள்ள முடிந்தது. காரணம் அவையும் ஓவியத்திற்குரிய வண்ணங்களாகவே அவருக்குத் தோற்றமளிக்கின்றன.

ஓவியங்களை விலகி நின்று பார்ப்பதைவிட உருவாக்கங்களைத் தொட்டுப் பார்ப்பதை விரும்பியதால் ஒரு சட்டத்துக்குள் உருவாக்குவதிலிருந்து installation மீது அவர் கவனம் திரும்பியது. பொம்மைகளை installation பண்ணியவர் அதன் தொடர்ச்சியாகத் தன்னுடைய முழு உருவத்தையே பொம்மையாக வடிவமைத்து அதை அந்தரத்தில் அமைத்திருந்தார்.

வீண் என நாம் ஒதுக்கும் பொருள்களைக்கூடப் பயன்படுத்த முடியும் என்பதைத் திராட்சை சாப்பிட்ட பின்பு இருக்கும் வெறும் காம்பினை உருவகமாகப் பயன்படுத்தியிருந்தது, பனங்காயைத் தள்ளுவண்டியாக வடிவமைத்து அதை டெரகோட்டாவில் பெரிதாக அமைத்திருந்தது, ஐந்து தென்னம்பாளைகளை இணைத்துக் கைவடிவமாக உருவாக்கி ஒவ்வொன்றிலும் வெவ்வேறு விதைகளையும் சோழிகளையும் நிரப்பிவைத்திருந்தது, இலவங்காயைக் கோணிப்பையில் போட்டுக் குவித்துவைத்திருந்தது, மரத்தடியில் இலவங்காய்களைப் பரப்பி வைத்து ஒரு வடிவத்தை உருவாக்கியது போன்றவை அவரது பார்வையையும் அக்கறையையும் காட்டி நம்மை மற்றொரு தளத்திற்கு அழைத்துச் சென்றன. அவரது படைப்புகள் புகைப்படக் கலைஞர் பிரசன்னாவின் கேமராவால் மேலும் மெருகு பெற்றன.

பெண்ணிய ஓவியராகவோ பெண் ஓவியராகவோ தன்னை அடையாளப்படுத்தியதில்லை, தான் வளர்ந்தவிதமும் வாழ்க்கை முறையும் அவ்வாறு அமைந்திருக்கவில்லை, தன்னை ஓர் ஓவியராக மட்டுமே அடையாளப்படுத்த விரும்புவதாகவும் கூறினார். அவருடைய உருவாக்கங்களிலும் அது வெளிப்பட்டது.

விவாதத்தில் பேரா. ஸ்ரீகுமார், கண்ணன், ஸ்ரீதர், செல்லப்பா, பேரா. பாபு ராஜேந்திரன் மற்றும் நண்பர்கள் பங்கெடுத்தனர்.

உள்ளடக்கம்

 

 

Google