Google   www kalachuvadu.com

 

கடிதங்கள்
கவிதா எழுதிய "மனத்தின் அழைப்பு" வாசித்தேன். நாடகம் அரவானிகளின் வாழ்க்கைச் சிக்கல்களை விவரித்துக்கொண்டு போகிற விஷயங்களைச் சரியாகப் படம்பிடித்துள்ளார். "பெண்மையைக் கொண்டாடுவது அவ்வளவுதப்பா? நாங்கள் அதற்காகத்தானே உயிரைப் பணயம் வைத்தோம்" என்று ஒருமுறை நர்த்தகி சொன்னதை நினைவு கூர்கிறார். "என்னுடைய அடிப்படை நம்பிக்கைகள் சிலவற்றைப் புரட்டிப் போட்ட வார்த்தைகள் அவை" என்று முடித்திருக்கிறார் கட்டுரையாளர் கவிதா. மிகுந்த கவனிப்பிற்குரிய பகுதி.

நரனின் கவிதைகள் நல்ல ரசனைக்குரியவை.

இரா. இராஜேந்திரன்
மயிலாடுதுறை - 609 001

'நீதிமன்றங்கள் இழைக்கும் அநீதி' என்ற தலையங்கம், 'அடிப்படை உரிமை' என்றதோர் அடிப்படையில் நிகழ்கல்விக் கொள்ளைக்கு நம் நாட்டு நீதிமன்றங்கள் வழிவிட்டு வேடிக்கை பார்க்கும் இழிநிலையை நன்றாகவே வெளிப்படுத்தியுள்ளது. 'இந்து' மொழியாக்கங்கள் - '1857 கிளர்ச்சி' குறித்ததும் குடியரசுத் தலைவர் தேர்வு பற்றி காந்தியடிகள் மொழிந்தது குறித்ததும் வாசகர்களுக்குத் தேவையே. 'புதிய ஆக்கிரமிப்பாளர்கள்' என்னும் கட்டுரை சக்கரியாவின் நேர்மையான நோக்கைக் காட்டுகிறது. 'புத்தி ராட்சகர்க'ளின் வீழ்ச்சியையும் கேரளப் பொது மக்களின் இன்றைய நிலையையும் சக்கரியா அப்பட்டமாக வெளியாக்கிவிட்டார். ராமச்சந்திர காந்தி குறித்த யு.ஆர். அனந்தமூர்த்தியின் அஞ்சலி, காந்தியின் பேரன்களில் ராஜ்மோகன் காந்தியுடன் ராமச்சந்திர காந்தியும் எவ்வளவு ஆழமானவர் என்பதைப் புரிந்து கொள்ளச் செய்தது. நானும் கொங்கு நாட்டில் பிறந்து வளர்ந்தவன் என்பதால், சு.கி. ஜெயகரனின் 'நீர் உயர . . .' கட்டுரையை உணர்ந்துகொண்டு பாராட்ட முடிகிறது.

தேவமைந்தன்
புதுச்சேரி

'காலச்சுவடு' ஆகஸ்ட் 07 இதழில் ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யரின் பத்தி கண்டேன். காந்தி வாழ்ந்த அன்றைய காலகட்டத்தில், காந்தி சொன்னவாறு ஒரு பங்கி இனப்பெண் குடியரசுத் தலைவர் ஆவது உண்மையிலேயே ஒரு பெரும் புரட்சியாகத்தான் இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இன்றைய நிலையில் ஒரு குடியரசுத் தலைவராக ஒரு பெண் ஆவதென்பது ஏதோ நடக்கக் கூடாத காரியமில்லை; உலக மகா அதிசயமும் இல்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியும் இந்நாட்டின் ஊடகங்களும் ஏதோ நாம் பெற்ற தவப் பயனால்தான் ஒரு பெண் குடியரசுத் தலைவர் ஆகிறார் என்பது போலப் பிரச்சாரம் செய்தது. நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்க முன்வராத இந்த அரசியல் கட்சிகள், ஒரு பெண்ணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்துவிட்டோ ம் என்று ஆர்ப்பாட்டம் செய்கின்றன. நிச்சயமாகப் பிரதீபா பட்டீல் பங்கி இனப்பெண் அல்ல.

பா. திருச்செந்தாழையின் சிறுகதை (ஆண்கள் விடுதி அறை எண் 12) ஒரு சாதாரண மனிதனைக் காமம் என்ன பாடு படுத்திவைக்கிறது என்பதை மிக யதார்த்தமாகச் சித்தரிக்கிறது. காமத்தின் வெளிப்பாடுகளாக அவர் சித்தரிக்கும் மூன்று சம்பவங்களுமே யதார்த்தமானவை. அவற்றைத் தாண்டாமல் எந்தவொரு மனிதனும் காமத்தைக் கடந்திருக்க முடியாது. திருச்செந்தாழையின் நடையும் கதைக்கு மெருகேற்றுகிறது. மதுபாலின் மலையாளச் சிறு கதையும் அவ்வாறே. முதுகுளத்தூர் கலவரம் பற்றி இன்னும் விரிவாக அலசியிருக்கலாம். பால் சக்கரியாவின் பத்திகள் படிக்கப் படிக்க அவர்மீதுள்ள வாசக மரியாதை கூடிவருகிறது.

கே.எஸ். முகம்மத் ஷுஐப்
காயல்பட்டிணம் - 628 204

'ஆண்கள் விடுதி. அறை எண் 12' - (பா. திருச்செந்தாழை) சிறுகதை குறித்துச் சில சர்ச்சைகள் எழக்கூடும். அல்லது அவ்வாறு உருவாக வேண்டும். படைப்பிலக்கியத்தின் நோக்கம் அப்படித்தான் இருக்க வேண்டும். மனிதனின் அகவுலகம் குறித்த சிந்தனையை அதன் புதிர்த்தன்மையை அடையாளங்காட்ட முயலும் கதைகள் அரிதாகவே தென்படுகின்றன. பா. திருச்செந்தாழையின் கதை பேசும் செய்திகள் இயல்பானவைதான். பாலியல் சித்திரங்களை இலக்கியமாக்கலாமா? என்னும் கேள்வி ஒரு தரப்பிலிருப்பிலிருந்து எழுந்துகொண்டேயிருக்கிறது. மனிதனை, அவனது அகக்கூற்றைப் புனிதமாகக் காட்ட முயலும் மதிப்பீடுகளை அப்பட்டமாகத் தகர்த்தெறியவும் அவற்றைப் பேசவும் வேண்டும் என்பதை, 'ஆண்கள் விடுதி அறை எண்-12' ஸ்தாபிக்கின்றது. வேட்கையும் தேடலும் நிரம்பிய கவிஞனின் பறத்தல் மனநிலை, பா. திருச் செந்தாழையினுடையது. அவரது கதையில் விரவிக்கிடக்கின்ற சொற்கள், பொய்களை வெட்டிச்சாய்த்துக்கொண்டே வருகின்ற படைவாளினைப் போல சுழல்கிறது. பா. திருச்செந்தாழையிடம் உள்ள வீச்சு நிறைந்த படைப்புகளைத் தமிழ் எழுத்துலகம் எதிர்கொள்ள வேண்டும்.

கே. ரவிச்சந்திரன்
திருச்சி.

'நீதிமன்றங்கள் இழைக்கும் அநீதி' சரியான தருணத்தில் எழுதப்பட்ட தலையங்கமாக அமைந்துவிட்டது. சுயநிதிக் கல்லூரிகளின் மாணவர்களிடம் கொள்ளையடிக்கும் மனப்பான்மைக்கு நீதி மன்றங்கள்தானே கடிவாளமிட வேண்டும்? அப்படியிருக்க மாணவர்களின் கதி அதோகதியாவதை நீதிமன்றங்களாலேயே தடுத்து நிறுத்த முடியாது என்றால் பிறகு யாரால்தான் தடுக்க முடியும்?

கே.எஸ். பட்டாபி ராமையா
ராய்ப்பூர் 492 007

எளியவர்க்கான கல்வி உரிமைகள் மறுக்கப்பட நீதிமன்றங்கள் துணைபோவது குறித்த தங்கள் தலையங்கம் தெளிவானது. நர்சரி முதல் மருத்துவக் கல்விவரையுள்ள சட்டங்களையும் விதிகளையும் எதிர்த்து வழக்காடுவது ஒரு தொடர் நிகழ்வாக உள்ளது. நமது கல்வி உரிமை குறைக்கப்பட்டது என்று நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த மாணவர்கள் வழக்குகள் தொடர்வது சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் தமது கல்வி வாய்ப்புகளில் பங்குகொள்வதைப் பொறுக்காத சிறுமனத்தைக் காட்டுகிறது. அடுத்து வழக்காடுபவர்கள், கடந்த முப்பதாண்டுகளாகச் சுயநிதிக் கல்விக் கூடங்களைத் தொடங்கிய கல்வி வணிகர்களது தீராத பணப் பசியாளர்கள். அரசியல் சட்டம் வழங்கிய சமநீதிக் கோட்பாட்டினை இவ்விருபிரிவினருக்காக நிலை நிறுத்தும் நீதிமன்றங்கள் அடிப்படைக் கல்வியையே பெரும் போராட்டத்திற்கிடையில் முடித்து உயர்கல்வியை நாடும் எளியவர்க்கும் அது உண்டு என்பதை ஏன் மறுக்கின்றன? சமூக நீதியில் உடன்பாடில்லாததே காரணம் என்பது தெளிவு. அரசியல் சட்டத்தினைத் திருத்தும் பாராளுமன்றத்தின் அதிகாரத்தையும் நீதிமன்றங்கள் கட்டுப்படுத்துவது சமூக நீதிக்கு முரண்படும் காரணத்தினால்தான். புதிய அரசியல் சட்டமே நிரந்தரத் தீர்வைத் தரும். அரசுகளும் அவ்வப்பொழுது சூழ்நிலைக்கேற்பச் சட்டங்கள் இயற்றுவதற்கு மாறாக, ஒரு முழுமையான கல்விச் சட்டத்தை நிறைவேற்றி, கல்விக்கூடச் சேர்க்கை, நிர்வாகம் ஆகியவற்றை முறைப்படுத்த வேண்டும்.

ச.சீ. இராஜகோபாலன்
சென்னை

ஆகஸ்ட் இதழ் படிக்க வாய்ப்புக்கிட்டியது. பலவிதமான சிந்தனைக் கட்டுரைகள் தமிழரிடையே ஒருவிதமான மூளைச்சலவை முயற்சி மாதிரி தோற்றமளிக்கின்றன. இதழ் பூராவும் வலுக்கட்டாயமான தமிழாக்க முயற்சி, தமிழே ஏதோ ஒரு கரடுமுரடான மொழிபோல் தமிழர்க்குத் தோற்றமளிக்க வாய்ப்பிருக்கிறது. இப்படியிருக்க, அட்டையில் மட்டும் "காஷ்மீர்: இந்திய ஜனநாயகத்துக்கு ஒரு சவால்" ஏன்? 'மக்களாட்சி முறைக்கு ஒரு சவால்' என்று அச்சடித்திருக்கலாமே?

ஸி.ழி. சதாசிவன்
மதுரை - 3

தலையங்கம் கவனம் பெற வேண்டிய ஒன்று. அரசியல் நிலையையும் நீதித் துறையின் செயல்பாட்டையும் உள்ளது உள்ளபடி அது எடுத்துக்காட்டுகிறது. சமீபகாலமாக, கல்வி என்பது வணிகப் பொருளாக மாறிவிட்டதைச் சுட்டிக்காட்டுகிறது. பொதுவாகவே நம் கல்விமுறை மனிதநேயத்திற்கு முக்கியம் அளிக்கவில்லை; பொருள் நாட்டத்தை மட்டுமே மனத்தில் கொண்டு செயல்பட்டுவருகிறது. மக்களிடம் விழிப்புணர்வு வேண்டும். அரசின் பொருளாதார நிலையையும் கற்பவர்களின் அதிக எண்ணிக்கையையும் கருத்தில் கொண்டு கூடுதலாக ஒரு சிறு தொகையை அரசுக் கல்லூரிகளின் மேம்பாட்டிற்காகக் கொடுக்க மக்கள் தயாராக இல்லை. ஆனால், சுயநிதிக் கல்லூரிகளில் கண்ணை மூடிக்கொண்டு பணத்தைக் கொட்டத் தயாராக இருக்கின்றனர். இந்த மனநிலை நீங்க வேண்டும். தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளபடி "நீதியின் பெயரால்கூட அநீதி இழைக்க முடியும்" என்னும் நிலை மேலோங்கி வருவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

தலையங்கம் குறிப்பிட்டது போல் "இங்குள்ள சுயநிதிக் கல்லூரிகளை அரசுடைமை ஆக்குவதற்கான முயற்சிகளை ஏன் அது (அரசு) செய்யக்கூடாது?"

"புதிய ஆக்கிரமிப்பாளர்க"ளின் மூலதனம் மனித மனத்தின் பலவீனமே. இப்பலவீனத்தைப் புரிந்துகொண்ட "அறவிலை வணிகர்கள்" இன்றைய புதிய கடவுளர்கள். செல்வச் செழிப்பில் வாழும் இவர்கள் தேர்ந்த அரசியல்வாதிகளுக்கு இணையாகக் காட்சியளிப்பதில் வல்லவர்கள். ஜே. கிருஷ்ணமூர்த்தி குறிப்பிடுவதுபோல மனிதன் எதிர்வரும் பிரச்சினைகளை எதிர்நோக்குவதிலிருந்து தப்பித்தலாலேயே இத்தகைய புதிய கடவுளர்களின் வருகை மிகுந்து காணப்படுகிறது.

முனைவர் இரா. சத்திய மூர்த்தி
புதுக்கோட்டை 622 004

சக்கரியா அவர்கள் அமிர்தானந்தமயியைச் சங்கப் பரிவாரின் செல்லப்பிள்ளை என்று குறிப்பிடுவது முற்றிலும் தவறு. எந்த மனிதனும் எந்த மதத்தைச் சார்ந்தும் இருக்கலாம். சாராமலும் இருக்கலாம். அது அவர்களைப் பொறுத்த விஷயம். அமிர்தானந்தமயி செய்கின்ற நற்பணிகள், மக்கள் நலப்பணிகள், நலிந்த பிரிவு மக்களுக்குக் காட்டுகின்ற பரிவு, கல்வி, மருத்துவம், இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்டோ ருக்கு இருப்பிடம் இதைப் பற்றி சக்கரியாவுக்குத் தெரியாமல் போனது ஏனோ?

அமிர்தானந்தமயி போன்றவர்கள் இறைப் பணியும் சமுதாயப் பணியும் ஆற்றாமல் போனால் வேறு எந்தப் பெண்மணிகள் ஆற்றுவார்கள்? பெண்கள் ஜனத்தொகை ஆண் ஜனத்தொகையை விட அதிகமான கேரளாவில் ஒரு பெண் முதல்வர்கூட வராமைக்கு யார் தடை? மார்க்சிஸ்ட் கட்சியா? அல்லது காங்கிரஸ் கட்சியா? தன்னம்பிக்கையும் சமூகப் பார்வையும்கொண்ட பெண்கள் கேரளாவில் இல்லையா? இதை சக்கரியா விளக்கியிருக்க வேண்டும். பெண் விகிதாச்சாரம் அதிகமுள்ள கேரளாவில் ஏன் ஒரு பெண் முதல்வர் வர முடியவில்லை?

கே. கணேசன்
கோயம்புத்தூர் - 27

புதிய ஆக்கிரமிப்பாளர்களான இடது, வலது அரசியல் தலைவர்களோடு மாதா அமிர்தானந்தமயியையும் சேர்த்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இடதுசாரிக் கோட்டையான கேரளத்தில் அமிர்தானந்தமயியின் எதேச்சாதிகாரம் நிறுவப்பட்டது எப்படி என்கிற சக்கரியாவின் கேள்வி மாதாவின் செயல்பாடுகளைக் கேரளவாசியாக இருந்தும் முழுவதும் கவனிக்க முடியாத காரணத்தாலா அல்லது தெரிந்தும் தெரியாததுபோல் நடிப்பதினாலா?

மாதா அமிர்தானந்தமயியின் பின்புலம் இவர் கூறுகிற கடற்கிழவர்களாலோ பொருளாதார மண்டலங்கள் நிறுவும் குத்தகை முதலீட்டாளர்களாலோ வடிவமைக்கப்பட்டதல்ல. அரசியல் தலைவர்கள் எவரது அனுகூலமான பார்வையும் அவர்மீது விழுந்ததில்லை. சொல்லப்போனால் சக்கரியாவைவிட மிக மோசமான விமர்சனத்தை மாதாவின் மீது வைத்தவர் ஏ.கே. அந்தோணி.

எந்த நேரமும் கடல் சீற்றத்தையும் நடுக்கும் கடல் காற்றின் குளிரையும் அனுபவித்தவாறு வாழ்கிற கடற்புற வாழ்க்கைமுறை மாதாவினுடையது. தனது மிகச் சிறு பருவத்திலேயே தென்னை மட்டையில் நார் உரிக்கின்ற பணியைச் செய்யப் பணிக்கப்பட்ட கேரளாவின் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சிறுமி எவ்விதம் உலக நாடுகளின், ஏன், அரபு நாட்டின் தலைமை ஷேக் வரை ஆகர்ஷித்துவிடுகின்ற ஒரு மனுஷியாக மாறினார்?

ஒரு பலசரக்குக் கடையைக்கூட நிர்வகிக்க முடியாத கேரள அரசியல் தலைவர்கள் தங்கள் போர் நாடகங்களின் பார்வையாளனாகக் குடிமகனை வைத்திருப்பதற்கும் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஏழை விதவைக்கும் சுனாமியால் வீடிழந்தவர்களுக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிலமும் வீடும் மருந்துகளுமாக வழங்கி அவர்கள் மனத்தில் வாழ்வாதார நம்பிக்கையூட்டும் ஒரு ஆன்மீகத் தலைமைக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு ஒரு சாதாரணமானவனுக்கும் புரியக்கூடிய உண்மையில்லையா?

அமிர்தானந்தமயி என்னும் பெண்மணியை மிக மென்மையாகவோ அல்லது கடுமையாகவோ நீங்கள் விமர்சித்தால் அதை வெறுமே வாசித்துவிட்டு எதிர்க் கேள்விகள் எழுப்பாமல் போகிற ஒரு மனிதக் கூட்டந்தான் நீங்கள் எதிர்பார்க்கின்ற ஜனநாயகம் என்றால் நாங்கள் மௌனமாக இருக்கவே விழைகின்றோம்.

க. தெய்வ்
செங்கோட்டை

மாதா அமிர்தானந்தமயி படத்தை ராணி அலங்காரத்துடன் நீங்கள் வெளியிட வேண்டிய அவசியம் என்ன? அம்மாவை அவமதித்து எழுதுவது ஏன்? போலிச் சாமியார்கள் போல் அம்மாவும் சங்கப் பரிவாரத்தின் ஓர் அங்கம் என்பதை ஆதாரத்துடன் வெளியிட முடியுமா?

கட்டுரையாளர் மதக்கண்ணோடு பார்க்கிறார். அம்மாவை "இந்து மதவாதி" என்று கூறுவதன் மூலம் பக்தர்களையெல்லாம் "சங்கப் பரிவார்" உறுப்பினராக்க ஆசைப்படுகிறாரா?

B. ஆவுடையப்பன்
இலத்தூர்

உள்ளடக்கம்