Google   www kalachuvadu.com

 

தலையங்கம்
புதுக் கணக்கு
 
வீடுகளுக்குக் கேபிள் டி.வி. இணைப்புச் சேவையை வழங்க 'அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன்' என்னும் புதிய நிறுவனத்தைத் தமிழக அரசு ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கியுள்ளது.

சலுகைக் கட்டணத்தில் இணைப்புகள் கொடுத்தால்கூட ஆண்டுக்கு 600 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வருமானம் கிடைக்கும் என்பதால் தமிழக அரசே கேபிள் டி.வி. சேவையை ஏற்கலாம் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ஜூலை மாதத்தில் 'கணக்கான' ஒரு கோரிக்கை வைத்தார். பல்வேறு காரணங்களால் அதற்கு ஆதரவு பெருக, அவசரம் அவசரமாக இந்த நிறுவனத்தைத் தமிழக அரசு தொடங்கியிருக்கிறது. முதல் நாள் மின்சார வாரியம் மூலம் இச்சேவை நடைபெறும் என்று அமைச்சரவை முடிவெடுக்க, மறுநாள் புதிய நிறுவனம் என அறிவிப்பு வருகிறது. இப்புதிய பொதுத் துறை நிறுவனம் தகவல் மற்றும் தொழில் நுட்பத் துறையின் கீழ் இயங்கும். இந்நிறுவனம் தொடங்கப்படுவதன் காரணம் 'திங்களைப் பாம்பு கொண்டது'போல வெளிப்படையானது என்றாலும், அதை நியாயப்படுத்தச் சட்டம் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் ஏதாவது சொல்லியாக வேண்டும் என்பதற்காக, வரியல்லாத வகையில் அரசுக்கு வருமானம் தரும் தொழில் எனக் காரணம் கூறப்படுகிறது.

தற்போது தொலைக்காட்சி நிறுவனங்கள் தமது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி மூலம் வானத்தில் மிதக்கவிடுகின்றன. அரசுத் தொலைக்காட்சி நிறுவனம் தரை வழியாகவும் இதைச் செய்கிறது. இவ்வலைகளைத் தொழில்நுட்பக் கருவிகள் கொண்டு இயங்கும் multi system operator

(M.S.O.) எனப்படும் இடை அமைப்புகள் பிடித்திழுத்து, கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் துணையுடன் வீடுகளுக்குக் கேபிள் மூலம் கொண்டு சேர்க்கின்றன. இந்த இணைப்புக்கென ஒரு தொகையை இணைப்புப்பெற்ற குடும்பங்களிடமிருந்து கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மாதந்தோறும் வசூலிக்கிறார்கள். அப்பணத்தின் பங்குகள் வி.ஷி.ளி.வுக்கும் பிறகு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் செல்கின்றன. இடைநிலை நிறுவனங்களாக இயங்கும் வி.ஷி.ளி.க்கள் இதில் அதிக லாபம் பார்க்கின்றன. வீடுகளில் வசூலிக்கப்படும் தொகை அதிகமெனப் புகார் எழ, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஒரு தொகையை நிர்ணயித்துள்ளது. இதை மீறி நடந்ததாகக் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள்மீது புகார் இருப்பதாகத் தெரியவில்லை.

இப்போது அரசு தொடங்கியுள்ள நிறுவனம் வி.ஷி.ளி.க்களின் சேவையை எடுத்துக்கொள்ளப்போவதாகத் தெரிகிறது. இருபது நாள்களுக்கு மேல் பலரையும் குழம்பவைத்துச் சமீபத்தில்தான் அரசு இதைத் தெளிவுபடுத்தியது. எனினும், இந்த அறிவிப்புப்படி தற்போதுள்ள அமைப்புகள் எவையும் மாறாது தொடர்ந்து நீடிக்கும். அதனால், முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் ஏற்படும் தொழில் போட்டிகள் மக்களைப் பாதிக்காமல் இருக்க வேண்டும். வலிமை வாய்ந்த ஓர் ஏகபோகத்தில் அரசின் நுழைவு உடைப்பை ஏற்படுத்தலாம். அது ஒரு சாதகமான அம்சம்.

சலுகைக் கட்டணத்தில் இணைப்புகள் கிடைக்கும். தனியார் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களிடம் புகார்களுக்குத் தீர்வு போன்ற ஒன்று கிடைக்கலாம். ஆனால், அரசு நிறுவனத்திடம் மக்கள் உரிமையுடன் சண்டை போடலாம் என்றெல்லாம் அரசு அறிவிப்பைக் கேட்டு வளர்ந்திருந்த நம்பிக்கையை, 'வருமானம் தேடும் தனியாரைப் போன்ற இன்னொரு அமைப்பு இந்த கார்ப்பரேஷன்' என்ற அறிவிப்பு கலைத்துப்போட்டுவிட்டது. மேலும், அரசு என்பது சேவை அமைப்பு என்ற மக்களின் ஆழ்மனப் பதிவை அசைத்திருக்கிறது. இதன் விளைவுகள் கடுமையானவை. ஆனால், வெளிப்படையானவை அல்ல.

தனி நிறுவனமாக இயங்கும்போது ஏற்படும் பிரச்சினைகள், அடுத்து வரும் அரசின் கொள்கை(!) முடிவுப்படி இந்த நிறுவனத்திற்கு ஏற்படப்போகும் கதி, அப்போது தொடர்புடைய ஊழியர்களின் எதிர்காலம், ஆகியவை பற்றிய கவலைகள் நம்மை வருத்தமடையவைக்கின்றன. சட்டச் சிக்கல்களைத் தாண்டி, இப்புதிய துறை வெளிவர வேண்டிய பிரச்சினையும் உள்ளது.

மாநில அரசு, மத்திய அரசு அட்டவணைகளை மறந்துவிட்டுப் பார்த்தால், தொலைத் தொடர்புத் துறையுடன் இருப்பதே கேபிள் டி.வி.யின் எதிர்கால நலனுக்கு நல்லது. ஒரே இணைப்பில் தொலைபேசி, பிராட்பேண்ட் போன்ற வசதிகள் அறிவியல் வளர்ச்சியால் சாத்தியமாகும்போது, கேபிள் டி.வி.யும் அதனுடன் இணைந்து செல்ல ஏதுவாகும்.

எப்படியோ, எதிர்காலச் சமூகத்தின் மன, உடல் ஆரோக்கியத்திற்குக் காரணமாகும் கல்வி, மருத்துவத் துறைகள் அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விலகிப் போய்க்கொண்டிருக்க, கொஞ்சம் கொஞ்சமாகக் குடியும் கும்மாளமும் அரசிடம் வந்து நிற்கின்றன. டைட்டானியம் ஆலை தொடங்க வல்லமை கொண்ட அரசு பெட்டிக் கடைக்குப் பக்கத்தில் இன்னொரு பெட்டிக் கடை திறந்திருக்கிறது (குடும்ப உள் சண்டையால் அப்படிக் கிடையாது என முதல்வர் திரும்பத் திரும்பச் சொன்னாலும்). கேபிள் டி.வி. நிறுவனம் தொடங்குவது ஒரு கோபத்தின் விளைவு என்பதாகவே மக்கள் புரிந்துகொள்வர்.

உள்ளடக்கம்

 

 

Google