Google   www kalachuvadu.com

 

அஞ்சலி
மைக்கலேஞ்சலோ அன்டோனியோனி
(1912 - 2007)
ஒரு சகாப்தத்தின் மறைவு
அம்ஷன் குமார்
'இறந்தால் மட்டும் போதாது. சரியான தருணத்தில் இறக்க வேண்டும்' என்றார் சார்த்தார். ஏதோ முன்கூட்டியே சொல்லிவைத்தாற்போல் மைக்கலேஞ்சலோ அன்டோ னியோனியும் இங்க்மார் பெர்க்மனும் ஜூலை முப்பதாம் தேதியன்று சில மணி நேர இடைவெளியில் இறந்துபோனார்கள். எக்ஸிஸ்டென்ஷியலிச சினிமாத் தலைமுறையின் முன்னணி இயக்குநர்களின் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு என்று சொல்லத்தக்க வகையில் அது சரியான தருணம்தான் போலும். குறையொன்றுமில்லை என அறிவிப்புச் செய்யும் வகையில் இருவருக்கும் நெடுகச் சாதனைகள் படைத்த வாழ்க்கை. இயற்கை மரணம். பழுத்த வயது.

பெர்க்மனைவிட ஐந்து வயது மூத்தவரான அன்டோ னியோனிக்கு 94 வயது. அவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பல வருடங்களாகப் பேச முடியாதிருந்தும் படத்தை இயக்கும் ஆற்றல் பெற்றிருந்தார். விம் வென்டர்ஸுடன் இணைந்து 1996இல் ப்யாண்ட் த க்ளவுட்ஸ் என்னும் படத்தை இயக்கினார். தொடர்ந்து சில குறும்படங்களும் அவரிடமிருந்து வந்தன.

அன்டோ னியோனி இத்தாலியில் பெராரா என்னும் ஊரில் 1912இல் பிறந்தார். பொருளாதாரப் பட்டப்படிப்பிற்குப் பின் சினிமாக் கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். டாகுமெண்டரி படங்களையும் இயக்க ஆரம்பித்தார். ரோஸலினி, மார்சல் கார்னி ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். 1950இல் அவரது முதல் முழுநீளப் படம் தயாரானது. அப்பொழுது நியோ-ரியலிச அலை அடித்து ஓய்ந்து இத்தாலியில் காமெடிப் பட அலை அடிக்கத் தொடங்கியிருந்தது. தன் நிலைப்பாட்டினை உணர்த்தும் கலைஞர்கள் செயல்பட உகந்த நேரமல்ல அது. ஆனாலும் அன்டோ னியோனி, பெல்லினி உட்பட சில கலைஞர்கள் தங்கள் கலங்களில் செல்லத் துணிந்தனர்.

அன்டோ னியோனியின் படங்கள் அவரது சமகால இத்தாலிய இயக்குநரின் படங்களைவிட வசீகரமான கட்டமைப்பு உடையவனவாயிருந்தன. புறத்தே பளிச்செனத் தோன்றும் நகர்ப்புறங்கள். உடனடியான லயிப்பினை ஏற்படுத்தும் ஒளிப்பதிவு. அழகான நடிகர் நடிகையர்கள் அவர் படங்களுக்குத் தனித்த சோபையைத் தந்தனர். கதைச் சம்பவங்களுக்குப் பதில் காட்சிச் சம்பவங்களுக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்தார். துல்லியமான கதாபாத்திர வார்ப்புகளும் கிடையாது. உறவுகள் காத்திரமானவையாகவோ பூர்த்தியை நோக்கியனவாகவோ இராது. அவரது கதாபாத்திரங்கள் தங்களைப் பிறரிடமிருந்து துண்டித்துக்கொள்ள முயன்ற வண்ணம் இருப்பார்கள். அவெஞ்சுரா படத்தில் வரும் பெண் ஒரேயடியாகத் தொலைந்துபோய்விடுகிறாள். த பாசஞ்சர் படத்தில் கதாநாயகன் தனது சுயத்தை அழிக்கும் முகமாக ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டு உயிரை இழக்கிறான். பலமாக யூகித்துப் புரிந்துகொள்ள வேண்டிய அவரது படங்களின் இறுதிக் காட்சிகள் சினிமாவின் சாத்தியங்களை விசாலப்படுத்துவதாக இருக்கும். உதாரணம் ப்ளோ-அப் படம். அதில் புகைப்படங்கள் அழகான தன்மை உடையனவாக இருக்கும். அவற்றைத் தொகுத்துப் பார்க்கும் சினிமா கலவரத்தை விளைவிக்கும். ஆனால், இறுதிக் காட்சியில் ஒரு டென்னிஸ் ஆட்டத்தின் வாயிலாக சினிமா பார்வையாளர்களை ஞானப் புரிதலுக்கு இட்டுச் செல்கிறது. அத்தகைய அற்புத சினிமாக் கணங்களை அன்டோ னியோனிக்குப் பிறகு தார்கோவ்ஸ்கியிடம்தான் எனக்கு அனுபவிக்கக் கிடைத்தன. இழந்த நம்பிக்கையை மீட்டுக்கொள்ள மனிதனுக்கு சினிமாவின் மொழி உதவக்கூடும் என்பதை அன்டோ னியோனி வலிமையுடன் உணர்த்தினார். மனிதன் நம்பிக்கையை இழக்கத் தொழில்மயமான உலகம் ஒரு முக்கியக் காரணம் என்பதை ரெட் டெஸர்ட் படம் காட்டியது. அவரது எல்லாப் படங்களும் அந்நியமாகிப்போன, உறவுகள் அறுபட்ட மனிதர்களை நாத்திக எக்ஸிஸ்டென்ஷியலிசப் பார்வையில் சித்தரித்தன.

கிறிஸ்தவ எக்ஸிஸ்டென்ஷியலிசப் பார்வை பெர்க்மனுடையது. ஸ்வீடனிலுள்ள உப்சலாவில் அவர் 1918இல் பிறந்தார். தந்தை ஒரு லூதரன் பாதிரி, தாய் தந்தை இருவருமே கண்டிப்புமிக்கவர்கள். துயரமான சிறு பிராயம். பேனி அண்ட் அலெக்ஸாண்டர் படத்தில் ஒழுங்கின் பெயரால் இம்சைக்குள்ளாகும் சிறுவன் பெர்க்மனாக இருக்கக்கூடும். கலை இலக்கியம் ஆகியவற்றிற்கான பட்டப்படிப்பிற்குப் பின் அவர் நாடக உலகினுள் புகுந்தார். இறுதிவரை நாடகத்தின் மீது அவருக்குப் பெரும் ஈடுபாடு இருந்தது. அவர் எழுத்தாளருங்கூட. முதலில் திரைக்கதை எழுதுபவராக சினிமாவில் நுழைந்தார். இயக்குநராகப் புகழ்பெற்ற பிறகுங்கூட அவர் மற்றவர் படங்களுக்குத் திரைக்கதைகள் எழுதிக் கொண்டிருந்தார். நான்குமுறை மணம்புரிந்தவர். நடிகை லிவ் உல்மன் உட்படப் பல காதலிகள். 1976இல் வரி ஏய்ப்புக் குற்றம் சுமத்தப்பட்ட பிறகு ஸ்வீடனை விட்டுத் தானாக வெளியேறியவர், மீண்டும் பல வருடங்கள் கழித்து அங்குத் திரும்பினார். பரோதீவில் தனது இறுதிநாள்களைப் படித்துக்கொண்டும் போனில் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டும் கழித்தார்.

கடவுள் நம்பிக்கை-நம்பிக்கையின்மை ஆகியவையால் அலைக்கழிக்கப்படும் உலகம் அவருடையது என்றபொழுதும், சமயத்தின்மீது தான் கொண்டிருந்த தளராத பிடியை ஒரு பலமாக உணர்ந்தவர். மறுமலர்ச்சிக் காலத்திலிருந்து சமயத்தின் தொப்புள் கொடியைக் கலை அறுத்துக்கொண்டுவிட்டதால் மனிதனின் சிருஷ்டி இயல்புகள் வீரியத்தை இழந்ததாக அவர் உறுதியாக நம்பினார். கலை அதன் பின் ஒரு செத்த பாம்பு. அதன் பிரேதத்தை நகர்த்திச் செல்லும் எறும்புகளில் ஒருவன் கலைஞன். இவ்வாறு அவரது உருவகம் செல்கிறது. ஆளுமை வியாபகமற்ற ஒரு பேராலயத்தின் உன்னதத்தைத் தனது கலை எய்த வேண்டும் என்னும் பேராவல் கொண்டிருந்தார்.

பெர்க்மனின் சினிமா அகவயமானது. அதில் ஆன்மாவின் பூகோளம் வரையப்படுகிறது. இறுக்கம் மிகுந்த சூழ்நிலைகளே அப்பரப்பினை ஆக்ரமிக்கின்றன. அவரது மனிதர்கள் சுலபமாக வாயைத் திறப்பதில்லை. பேச ஆரம்பித்த உடனேயே அவர்களது ரணம் கிளறப்பட்டுவிடுகிறது. அதன் பிறகு அவர்களிடமிருந்து வெளிப்படுவதெல்லாம் நீண்ட புலம்பல்கள்தான். கடந்த காலத்தின் அகோரச் சுமையை இறக்கிவைக்கும் பொழுதே தங்களுடைய உறவுமுறைகள் செப்பனிடப்பட இயலாததாயும் இருப்பதை உணர்ந்துகொள்கிறார்கள். வின்டர் லைட் படத்தில் காதலனும் (!) காதலியும்; ஸைலன்ஸ் க்ரைஸ் அண்ட் விஸ்பர்ஸ் படங்களில் சகோதரிகள்; ஆடம் சானடாவில் தாயும் மகளும்; ஒயில்ட் ஸ்ட்ராபெரிஸில் தந்தையும் மகனும் . . . பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

ஆனாலும் நித்தியத்திற்கும் நிர்க்கதிதான்; நியதி என்பதுமில்லை. கடவுளின் கருணையாக ஒரு சுனை பீறிட்டுக் கிளம்புகிறது வர்ஜின் ஸ்பிரிங் படத்தில். குடும்பத்தின் மீதும் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. ஸெவன்த் சீல்படத்தில் வரும் கழைக்கூத்தாடி அன்னை மேரியைக் குழந்தையுடன் பார்க்கும் வரம் பெற்றுள்ளான். எமனையும் பார்த்து அவனால் முன்னெச்சரிக்கை கொள்ள முடிகிறது. பேரழிவிலிருந்து காப்பாற்றப்படுவது அவனது குடும்பம் மட்டுமே.

'எனக்கும் மற்றவர்களைப் போல் அன்டோ னியோனி பெர்க்மன் படங்களைவிட வெஸ்டர்ன் படங்கள்தான் உற்சாகம் தருவனவாக உள்ளன' என்று பெர்க்மன் எழுதினார். அப்பொழுது அவர் புகழ் உச்சக்கட்டத்திலிருந்தது. சினிமா சாதனத்தின் ஈர்ப்புகள் எப்பொழுதுமே கலைக்கு உகந்தவையாகச் செயல்படுவன அல்ல. சினிமாவைப் பெரும் கலையாக்கிய ஐரோப்பாவிலுங்கூட மாபெரும் கலைஞர்கள் தங்கள் படைப்புகளைத் தரப் போராட வேண்டியிருந்தது. அதில் அவர்கள் வெற்றியும் பெற்றார்கள் என்பது வரலாறு.

அவர்கள் நிலைப்படுத்திய உலகுடன் போஸ்ட்மாடர்னிஸக் காலத்தில் வாழ்வதாகப் பாவனைகொள்ளும் நாம் நம்மை எவ்வாறு பொருத்திக்கொள்வது?

இன்றும் தனிமனிதர்களின் தேடல்கள் அர்த்தமிழக்கவில்லை. தனிமனிதர்கள்தான் முக்கியமான முடிவுகளை எடுக்கிறார்கள். அசலான வாழ்க்கையை அவர்களிடந்தான் காணமுடிகிறது. போராடுவதற்கான சக்தியையும் போராட்டத்திற்கான உந்துதலையும் அவர்களிடமிருந்தே உலகம் பெற்றுக்கொள்கிறது. அன்டோ னியோனி, பெர்க்மன் படங்களை மீண்டும் மீண்டும் பார்க்க இது போன்று நிறையக் காரணங்கள் உள்ளன.

உள்ளடக்கம்

 

 

Google