Google   www kalachuvadu.com

 

அஞ்சலி
இங்க்மார் பெர்க்மன் (1918 - 2007) மரணத்துடன் ஒரு சதுரங்கம்
அசோகமித்திரன்

இங்க்மார் பெர்க்மனின் சில குறிப்பிடத்தக்க படங்கள்

1. வெர்ஜின் ஸ்பிரிங் (ஆஸ்கார் பரிசு பெற்றது)

2. தி செவன்த் சீல் (பல பரிசுகள்)

3. கிரைஸ் அண்ட் விஸ்பர்ஸ்

4. வைல்ட் ஸ்ட்ராபெரீஸ்

5. ஸ்மைல்ஸ் ஆஃப் ஏ சம்மர் நைட்

6. சைலன்ஸ்

7. ஆடம் சொனாட்டா.

(நடிகை இன்க்கிரிட் பெர்க்மன் 1950 அளவிலேயே பெர்க்மனின் படம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டார். ஏதோ காரணம், பெர்க்மன் அவளைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால், இருபது வருடங்கள் கழித்து இன்க்ரிட் பெர்க்மனைக் கூப்பிட்டார். ஒரு தாயின் பாத்திரத்தில் நடிப்பதற்காக. அவளுடைய மகளாக லிவ் உல்மன்! அப்போது பெர்க்மனும் லிவ் உல்மனும் ஒரு கூரையடியே வாழ்ந்து வந்தார்கள். இன்க்ரிட் பெர்க்மன் மகிழ்ச்சியோடு அம்மா வேடத்தில் நடித்தார். படம் 1978இல் வெளியானது. அது வெளிவந்த சில நாள்களுக்குள் இன்க்ரிட் பெர்க்மன் இறந்து விட்டார்.)

இங்க்மார் பெர்க்மன் (1918 - 2007)

திரைப்படத் துறையில் ஒரு கவிஞராகவும் மேதையாகவும் விளங்கிய இங்க்மார் பெர்க்மன் அவருடைய தாய்நாடாகிய ஸ்வீடனில் ஜூலை 30ஆம் தேதி காலமானார். அப்போது அவர் வயது 89. ஐந்து திருமணங்கள். அவருக்குப் பிடித்தமான நடிகைகளோடு வாழ்க்கை, அதிக உபாதைகளற்ற உடல் நிலை என்று கூறினாலும் மரணம் அவருக்கு விடுதலையாக இருந்திருக்க வேண்டும். சென்னையின் மூன்று முக்கிய ஆங்கிலப் பத்திரிகைகளும் அவரைப் பற்றி விரிவாகவே கட்டுரைகள் வெளியிட்டன. அநேகமாகக் கடைசிவரை படைப்பில் ஈடுபட்டிருந்தாலும் அவர் உற்சாகமாக இருந்த நாள்கள் மிகவும் குறைவாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

இந்தியாவில் 1952இல் திரையிடப்பட்ட சைக்கிள் திருடர்கள், ரோஷமான் போன்ற அயல் நாட்டுப் படங்கள் இந்தியத் திரைப்படத் துறையை மிகவும் பாதித்தன. ஒரு முக்கியக் காரணம் அப்படங்கள் பின்பற்றக்கூடியவையாக இருந்தன. ஆனால், பெர்க்மனின் திரைப்படங்கள் 1960 அளவில் இந்தியாவில் காணக்கிடைத்தபோது அசாத்தியப் பிரமிப்பை ஏற்படுத்தின. அந்தப் பிரமிப்புக்கு மேல் அதிகம் விளைவுகள் இல்லை. டிசீகா, குரோசோவா போன்றோர் எட்டிப் பிடிக்கக் கூடிய உயரத்தில் இருந்தனர். பெர்க்மன் எட்டாத உயரத்தில் மின்னுபவராக இருந்தார்.

பெர்க்மனின் படங்களில் எளிதானது என்று ஒன்றும் கிடையாது. தீவிரத்தன்மை அவருடைய இயல்பு. அந்த இயல்பின் பரிமாணங்கள் தேர்ந்த விமரிசகர்களால்கூடப் பூரணமாக உணரப்பட்டதாகத் தெரியவில்லை. அவருடைய படங்களில் மிகவும் புகழ்பெற்ற தி செவன்த் சீல் என்பதைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் நிபுணர்கள் அனைவரும் ஒரு காட்சியை மட்டும் குறிப்பிடுகிறார்கள்; முழுப்படமோ அதன் கருத்து பற்றியோ அல்ல. இந்தியாவில் ஒரு காலத்தில் அவருடைய படம் ஒன்றைப் பார்க்க எங்கோ நிகழும் திரைப்பட விழாவைத் தேடிப் போக வேண்டும். ஆனால், சுமார் பத்தாண்டுக் காலத்தில் அவருடைய முக்கியமான படங்கள் அனேகமாக எல்லாவற்றையும் தமிழ்நாட்டில் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது.

பெர்க்மனைப் பொருத்தவரை முக்கியமல்லாத படம் என்று ஒன்றிருக்க முடியாது. சிறிது நகைச்சுவை இடம் பெற்றிருக்கும் படங்கள்கூடப் பார்வையாளர்களைத் தீவிரமான மன நிலையில்தான் வைத்திருக்கும். அவருக்கு வாழ்க்கை சில சந்தர்ப்பங்களில் சலிப்புத் தந்திருக்கலாம். அவர் பலமுறை ஓய்வு பெறுவதாகக் கூறி மீண்டும் திரைப்படம், நாடகம் அல்லது தொலைக் காட்சி முயற்சிகளில் ஈடுபடுவார். இது சமீப காலம்வரை நடந்திருக்கிறது.

இன்று அவருடைய படங்களை மொத்தமாக எடுத்து அவருடைய வெளிப்பாட்டில் எது முக்கியமாக இருந்திருக்கிறது என்று பார்க்கும்போது இரு இழைகள் தெரிகின்றன. ஒன்று சகோதரிகளிடையே கொலை வெறிக்குச் சமானமான துவேஷம். இரண்டு, கணவன் மனைவியிடையே நாம் சம்பிரதாயமாக அறியும் விசுவாசம் சாத்தியமல்ல என்னும் முடிவு. அதிலும் கிரைஸ் அண்ட் விஸ்பர்ஸ், சைலன்ஸ், ஆடம் சொனாட்டா போன்ற படங்களில் ஒரு பெண்மணியும் இன்னொரு பெண்மணியிடம் அன்பு தோன்ற இருக்கமாட்டாள். படுத்த படுக்கையாக இருக்கும் ஒரு நோயாளிப் பெண்மணி மட்டும் அவளுக்கு உதவியாக இருக்கும் பணிமாதிடம் நெருக்கமாக இருப்பதுபோலத் தோன்றும்.

பெர்க்மன் பார்வையாளர்களைச் சஞ்சலத்தில் ஆழ்த்திவிடுவதில் ஈடிணையற்றவர் என்று கூறிவிடலாம். இதற்கென அவருடைய படங்களில் பார்வையாளர்களை ஸ்தம்பிக்கவைக்கும் காட்சி ஒன்றிரண்டு இருக்கும். தி செவன்த் சீல் படத்தில் கடற்கரையில் அரையிருட்டில் ஒரு (மத்திய கால) போர்வீரன், மனித உருவில் வந்த மரணத்திடம் சதுரங்கம் ஆடுவது. அந்தப் போர்வீரன் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் அவனுடைய மத நம்பிக்கைகளைப் பாதுகாப்பதற்காக என்று போரிட்டு நாடு திரும்பும்போது அவனுடைய குடும்பம், தாய், தந்தையர் எல்லாரையும் இழந்துவிட்டிருப்பதை உணர்வான். இந்தப் படம் இறையுணர்வு அல்லது வாழ்க்கை மீட்சியைத் தேடுவதா அல்லது மத நம்பிக்கைகளைச் சமூகத்திடம் திடப்படுத்தும் முயற்சியா என்று தெரியாது. அவன் எங்கோ செய்த புனிதப்போர் எந்தக் குறிக்கோளுக்காக என்று தெரியாது. நடுவில் மரணம், மனித உருவில். அதேபோல, இன்னொரு படத்தில் ஒரு கணவன் - மனைவிக் காட்சி. கணவன் மீது அசாத்தியக் கோபம் கொண்டு மனைவி தன் அடிவயிற்றில் உடைந்த கண்ணாடிப் புட்டியால் குத்திக்கொண்டு தொடையெல்லாம் ரத்தம் பெருகக் கணவனிடம் சீறுவாள். அடுத்த நாள் காலை உணவு சம்பிரதாய ஒழுங்கோடு நடைபெறும்!

மகத்தான கலைஞன் என்று தயங்காமல் ஒத்துக்கொள்ளும்போது, பலருக்கும் பெர்க்மன் வெளிக்காட்டும் வெறி உண்மைதானா என்றும் தோன்றும். அவருடைய பாத்திரங்கள் அநேகமாக எல்லாருமே மேல்தட்டு மாந்தர். ஆனால், அவருடைய படங்கள் வர்க்க விமரிசனமல்ல. அவரே ஒருமுறை கூறியபடி அவருடைய நாட்டிலேயே அவை நன்கு ஓடவில்லை.

அவருடைய படங்களில் மிக அழகான ஒன்று வைல்ட் ஸ்ட்ராபெரீஸ். இந்தப் படத்தில் ஒரு குடும்பத்தின் வெவ்வேறு தலைமுறையினர் பிரதிபலிக்கப்படுவார்கள். இதில் வெறி கிடையாது. ஆனால், மறுபடியும் மரணம் ஒரு கருத்துருவாகச் செயல்படும். ஆபிரகாம் லிங்கனுக்கு அவருடைய சாவுக்குச் சில மாதங்கள் முன்பு ஒரு கனவு. அது வெள்ளை மாளிகை. அங்கே லிங்கன் அவருடைய பிணம் கிடத்தப்பட்டிருக்கிறதைக் காண்கிறார். வைல்ட் ஸ்ட்ராபெரீஸ் படத்திலும் அப்படியொரு காட்சி.

பெர்க்மனின் படங்கள் தத்துவ விசாரம் கொண்டவை, இருத்தலின் உண்மையறியும் தேடல் என்கிறார்கள். இது பற்றி உறுதியாகக் கூற முடியாது. ஆனால், பார்ப்போர் மூச்சே நின்றுபோகும் அளவுக்குத் தீவிரமான திரைப்படக் காட்சிகளை அவர் படைத்தார் என்பதில் விவாதம் இருக்க முடியாது.

உள்ளடக்கம்

 

 

Google