Google   www kalachuvadu.com

பத்தி
அகவிழி திறந்து
கண்ணன்
படைப்பாளியின் எதிர்வினை

ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்களைச் சமீபத்தில் திருவனந்தபுரம் போகும் வழியில் புலிப்புனத்தில் சந்திக்கச் சென்றேன். பேராசிரியர் ஜேசுதாசனுடன் அவர் வாழ்ந்து வந்த பெரிய விளையின் முன் பகுதியிலிருந்த வீடு பூட்டிக் கிடந்தது. சற்றுத் தொலைவில் மகனுடன் வசிப்பதாக அறிந்து அங்குச் சென்றோம். முன் வாசலுக்கு வந்த ஹெப்சிபா அவர்களுக்கு என்னைச் சுத்தமாக அடையாளம் தெரியவில்லை. வயது 83. மறதி மிக அதிகம் என்று அவரே சொல்லிக்கொண்டார். இருந்தும் சுந்தர ராமசாமி பெயரைச் சொன்னதும் முகம் மலர்ந்தது. அறிமுகப்படுத்திக்கொண்ட பிறகு மிகுந்த பாசத்துடன் உள்ளே அழைத்துச் சென்றார். இன்னும் ஆரோக்கியமாக நடமாட முடிகிறது. அவரது மகன், மருமகள் ஆகியோருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, காலச்சுவடு கிளாசிக் வரிசையில் புத்தம் வீடு நாவலைப் பிரசுரிக்க அனுமதி பெற்றுக்கொண்டேன்.

1960களில் புத்தம் வீடு நாவலை முதலில் பிரசுரிக்க உதவி செய்தது சு.ரா. என்பதை ஜேசுதாசன் தம்பதியர் பலமுறை பதிவு செய்திருக்கிறார்கள். நாவல் கைப்படி சு.ரா.வின் கைக்கு வந்தபோது ஆசிரியர் பெயர் 'அம்மணி' என்றிருந்திருக்கிறது. கிறிஸ்தவப் பெயராக இருப்பது பிரசுரத்திற்குத் தடையாக இருக்குமோ என்ற தயக்கமே பெயர் மாற்றத்திற்குக் காரணம் என்பதை உணர்ந்த சு.ரா., இயற்பெயரையே வைத்துக்கொள்ள வலியுறுத்தியிருக்கிறார். புத்தம் வீடு ஹெப்சிபா ஜேசுதாசனின் பெயரிலேயே தமிழ்ப் புத்தகாலயம் வெளியீடாக வெளிவந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்னர், பேராசிரியர் மறைந்த பிறகு, திருமதி ஹெப்சிபா எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். வழக்கம்போல ஆங்கிலத்தில் இருந்த அக் கடிதத்தில் புத்தம் வீடு எழுதிய பின்னணி பற்றியும் எழுதியிருந்தார்.

ஐம்பதுகளில் ஒரு நாள் காலையில் வீட்டு முன்னறையில் பத்திரிகைகளைப் படித்துக்கொண்டிருந்த பேராசிரியர் திடீரென்று கோபத்துடன் எழுந்து அவற்றை விசிறியடித்துவிட்டு, 'பிராமணர்களைத் தவிர வேறு யாருமே எழுத முடியாதா?' என்று கத்திவிட்டு வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார். "மாலை அவர் வீடு திரும்பும் முன்னர் 'புத்தம் வீடு' முதல் அத்தியாயத்தை எழுதி முடித்திருந்தேன்" என்று ஹெப்சிபா குறிப்பிட்டிருந்தார்.

'தேடல்','பிரபஞ்ச தரிசனம்' நீங்கலான பிற காரணங்களும் நல்ல படைப்புகளுக்குத் தூண்டுகோலாகின்றன என்பது எனக்கு உறுதிப்பட்டது. தமிழகப் படைப்பாளிகளிடம் அரசியல், சமூக விழிப்புணர்வு இல்லை என்று குற்றஞ்சாட்டுபவர்கள் முதலில் அவை வெளிப்படும் விதங்களை அறிந்துகொள்ள உணர்கொம்புகளை வளர்த்துக்கொள்வது ஆக்கபூர்வமானது.

உலகத் தமிழ் மீடியா

மாணவருக்கு ஓர் அறிமுகம்

இளங்கலை வரலாற்று மன்றத் தொடக்கவிழாவில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்துக் கல்லூரியின் வரலாற்றுத் துறையில் பயின்று வரும் மாணாக்கர்களிடம் மீடியா பற்றிப் பேச வேண்டுமென்று என்னுடைய நண்பர் டாக்டர் பகவதி பெருமாள் அவர்களும் துறைத் தலைவர் பேராசிரியர் வித்யாசாகர் அவர்களும் கேட்டுக்கொண்டபோது எனக்குச் சற்று வியப்பாக இருந்தது. ஏனென்றால் நான் கல்வித் துறையைச் சார்ந்தவனல்ல. மீடியா ஆய்வில் டாக்டர் பட்டமும் பெற்றதில்லை.

என்னுடைய நண்பர் ஒருவர், வட இந்தியாவில் ஒரு குதிரைப் பண்ணையில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். பந்தயக் குதிரைகளை உருவாக்கும் பண்ணை அது. சமீபத்தில் அமெரிக்காவில் கார்னல் பல்கலைக்கழகத்தில் இது தொடர்பாகக் கற்பதற்காக அவர் சென்றிருந்தார். குதிரை வளர்ப்புப் பற்றி அங்குக் கற்றுத்தரப்படுகிறது. என்னுடைய நண்பர் தேர்ந்தெடுத்த பாடம் - குதிரைக்கு லாடம் அடிப்பது பற்றியது. யார் கற்றுக்கொடுத்தார்கள் என்று அவரிடம் கேட்டபோது, வழக்கமாகக் குதிரைக்கு லாடம் அடிப்பவர்தான் கற்றுக்கொடுத்தார் என்று அவர் கூறினார். அதுபோல, கடந்த பத்தாண்டுகளாகக் 'காலச்சுவடு' என்னும் இதழை நடத்தி வரும் என்னை, பட்டறிவின் அடிப்படையில், மீடியா பற்றி இங்குப் பேச அழைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

நான் சுமார் 15 அல்லது 20 நிமிடங்கள் மாணவர்களுக்கு இந்தியா மீடியாவில் இருக்கும் வாய்ப்புகள் பற்றி பேசலாமென்று நினைக்கிறேன். கலந்துரையாடல் இல்லாமல் எந்தப் பேச்சும் முழுமையடைவதில்லை. எனவே, என்னுடைய இந்த உரைக்குப் பிறகு நமக்குள் ஒரு கலந்துரையாடல் ஏற்படும் என்று மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

இன்று மீடியா மிக வேகமாக வளர்ச்சி பெற்றுவரும் ஒரு துறை. வேறெந்தத் ஒரு துறையைக் காட்டிலும் அதிக முதலீடும் அதிக வளர்ச்சியும் அதிக லாபமும் ஏற்பட்டுவரும் ஒரு துறை என்று மீடியாவைச் சொல்லலாம். மீடியா என்பது நாளிதழ்கள், பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி போன்ற வெகுஜனங்களால் படிக்கப்படுகிற, பார்க்கப்படுகிற அனைத்தையும் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சொல். மீடியாவுக்குத் தமிழில் ஊடகம் என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் நாளிதழ்களுக்கு சுமார் 20 கோடி வாசகர்களும் தொலைக்காட்சிக்கு சுமார் 40 கோடிப் பார்வையாளர்களும் வானொலிக்கு சுமார் 70 கோடி நேயர்களும் உள்ளனர். புதிய ஊடகமாக வளர்ந்துவரும் இணையத்திற்குத் தற்போது சுமார் 1 கோடி பயனாளர்கள் உள்ளனர்.

இந்தியாவில் நாளிதழ்கள் விற்பனையில் தொடர்ந்து வளர்ச்சிபெற்று வருகின்றன. இவ்வளர்ச்சி இந்திய மொழிகளில் வெளிவரும் நாளிதழ்களில் மிக அதிகமாகவும் ஆங்கில நாளிதழ்களில் குறைவாகவும் உள்ளது. மேற்கத்திய நாடுகளில் தொலைக்காட்சியின் வருகைக்குப் பிறகு நாளிதழ்களின் வளர்ச்சி, குன்றி வருகிறது. ஆனால், இந்தியாவில் அப்படியல்ல. தொலைக்காட்சி வளர்ச்சி அடைந்தாலும் நாளிதழைப் படிக்கும் பழக்கம் குறையவில்லை.

அதேபோல் வாரந்தோறும் அல்லது வாரத்திற்கு இருமுறை வெளிவரும் இதழ்களிலும் தமிழைப் பொறுத்தவரையில் கணிசமான வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. பத்திரிகைகள் அகில இந்திய அளவில் விற்பனையில் வீழ்ச்சியடைந்துவருகின்றன. ஆனால், தமிழ்ப் பத்திரிகைகளின் மொத்த வாசக எண்ணிக்கை இவ்வாண்டுவரை தொடர்ந்து வளர்ச்சிபெற்றே வருகிறது.

சுமார் 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் வெளிவந்த வெகுஜன இதழ்கள் சுமார் ஒரு டஜன் இருந்திருக்குமென்று நினைக்கிறேன். இன்று அவை பலமடங்காகப் பெருகி, தமிழில் 100க்கும் மேற்பட்ட இதழ்கள் வெளிவருகின்றன. பல்வேறு துறைகளைச் சார்ந்த இதழ்கள் வெளிவருகின்றன. அரசியல், சினிமா நீங்கலாகப் பார்த்தாலும் கணினி, சுற்றுச்சூழல், அறிவியல், இலக்கியம், விவசாயம், பக்தி, ஜோதிடம், தொழில் வளர்ச்சி பற்றிய இதழ்கள், பெண்களுக்கான இதழ்கள் எனப் பல்வேறு இதழ்கள் வெற்றிகரமாக வெளிவந்துகொண்டிருக்கின்றன.

இதழியல் துறையில் ஏற்பட்டிருக்கும் பூதாகரமான வளர்ச்சியைச் சுட்டிகாட்ட ஒரு உதாரணத்தை மட்டும் தராலாமென்று நினைக்கிறேன். இன்று செல்வாக்குடன் இருக்கும் சினிமா நட்சத்திரங்களுக்காகத் தனியான இதழ்கள் வெளிவருவது உங்களுக்குத் தெரிந்திருக்கும். விஜய், அஜீத், விஜயகாந்த், ரஜினி போன்றவர்களுக்காகப் பல இதழ்கள் இன்று வெளிவருகின்றன. தமிழில் ஒரு திரைப்பட நட்சத்திரத்துக்காகத் தொடங்கப்பட்ட முதல் இதழ் 'ரஜினி ரசிகன்' என்று நினைக்கிறேன். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்தது. இன்று திரைப்பட நட்சத்திரங்களுக்காக மட்டும் சுமார் 25 இதழ்கள் தமிழில் வெளிவருகின்றன. எம்.ஜி.ஆருக்கு அவர் வாழ்ந்த காலத்தில் எந்த இதழும் வெளிவரவில்லை. அவர் மறைந்த பிறகும் பத்தாண்டுகளுக்கு மேலாக எந்த இதழும் வரவில்லை. 5 ஆண்டுகளுக்கு முன்னர் 'இதயக்கனி' என்ற ஓர் இதழ் எம்.ஜி.ஆருக்காக வெளிவந்தது. இன்று எம்.ஜி.ஆருக்கு மட்டும் நான்கைந்து இதழ்கள் வெளிவருகின்றன. இது தமிழக இதழியல் துறையில் ஏற்பட்டு வரும் வளர்ச்சிக்கு ஒரு உதாரணம்.

அதேபோல மிகப் பெரும் வளர்ச்சி கண்டுவரும் இன்னொரு மீடியா, தொலைக்காட்சி. தமிழகத்தில் மட்டும் இன்று சுமார் 100 சேனல்கள் இயங்கி வருகின்றன என்று நினைக்கிறேன். அதேபோல் வானொலியைப் பொறுத்தவரையிலும் பல புதிய தனியார் நிறுவனங்கள் வானொலி நிலையங்களைத் தொடங்கியுள்ளன. இணையத்திலும் பல புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இங்கு இளநிலைப் பட்டப்படிப்பில் மீடியாக் கல்வி மேற்கொண்டுவரும் மாணவர்களுக்குத் தமிழகத்தில் சில பல்கலைக்கழகங்களில் முதுநிலை மீடியாக் கல்வி உள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மீடியாக் கல்வி இருக்கிறது. சென்னை லயோலா கல்லூரியிலும் கோவையில் உள்ள சில கல்லூரிகளிலும் நீங்கள் மீடியாக் கல்வி பயிலலாம். இவை தவிர ஏசியா நெட்-ஐ உருவாக்கிய சசிகுமார், தி இந்து நாளிதழின் ஆசிரியர் என். ராம் போன்ற மூத்த பத்திரிகையாளர்கள் இணைந்து மீடியாக் கல்விக்காக கிsவீணீஸீ மிஸீstவீtutமீ ஷீயீ யிஷீuக்ஷீஸீணீறீவீsனீ என்னும் கல்வி நிறுவனத்தைச் சென்னையில் தொடங்கியுள்ளனர். இதில் மீடியாவின் பல்வேறு துறைகள் சார்ந்து பல பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

சுயமாகத் தங்களுக்கு விருப்பமான மீடியாவைப் புதிதாகத் தொடங்குவது பற்றி மாணவர்கள் யோசிக்கலாம். ஒரு நாளிதழையோ கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தையோ வானொலியையோ இணையதளத்தையோ நீங்கள் தொடங்கி நடத்த முடியும். ஒரு பலசரக்குக் கடை வைப்பதற்கான முதலீட்டில் நீங்கள் சிறிய அளவில் ஒரு மீடியாக் கம்பனியைத் தொடங்கமுடியும். நக்கீரன் இதழ் மிகச் சிறிய முதலீட்டில் தொடங்கப்பட்டு இன்று பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. சில சாத்தியங்களை மட்டும் இப்போது பார்க்கலாம்.

மாணவர்கள் இணைந்து நகரச் செய்திகளை வழங்கும் இலவச நாளிதழைத் தொடங்க முடியும். இவை சென்னை போன்ற நகரங்களில் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன. இங்கும் வெற்றிகரமாக நடத்துவது சாத்தியம்தான். மாவட்ட அளவில் இருக்கும் வியாபார நிறுவனங்களிடம் இருந்து விளம்பரங்களைச் சேகரித்து நடத்த வேண்டும்.

இன்று ஒரு தனியார் வானொலி நிலையத்தை நீங்கள் தொடங்க முடியும். ஆங்கிலத் தொலைக்காட்சி சேனல்களைப் பார்க்கும்போது அவை பல்வேறுபட்ட விஷயங்கள் தொடர்பாக இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். செய்தி, சினிமா, காட்டு உயிரினங்கள், விளையாட்டு, ஃபேஷன் எனப் பலவகை சேனல்கள் உள்ளன. ஆனால், தமிழைப் பொறுத்தவரை சினிமா மற்றும் செய்தி தவிர வேறு விஷயங்களில் சேனல்கள் இல்லை. ஒரு உதாரணத்திற்காகச் சொல்வதென்றால் விளையாட்டு தொடர்பான ஒரு தமிழ் சேனலை வெற்றிகரமாக நடத்த முடியும். புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கான ஆசை மற்றும் கற்பனைத் திறன் நம்மிடமிருந்தால் இது போன்ற முயற்சிகளில் ஈடுபடலாம்.

மீடியாவில் வேலைவாய்ப்பைப் பெற விரும்புபவர்கள் சில மிக முக்கியமான தகுதிகளை வளர்த்துக்கொள்வது நல்லது என்று நினைக்கிறேன். ஒன்று ஆங்கில அறிவு. போதுமான அளவு ஆங்கில அறிவு இல்லாமல் இன்று ஆங்கில மீடியாவில் மட்டுமல்ல தமிழ் மீடியாவிலும் சிறப்பாகப் பணியாற்றுவது கடினம். உதாரணமாக, பல்வேறு தகவல்களை ஆங்கிலத்தில் இருக்கும் இணையதளங்களிலிருந்து பெற்றுப் பயன்படுத்த வேண்டியிருக்கும். ஆங்கிலத் தினசரி மற்றும் பத்திரிகைகளில் இருந்து விஷயங்களைப் படித்துப் புரிந்துகொண்டு தமிழில் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படும். எனவே, ஆங்கில அறிவு மிக முக்கியம்.

அதேபோல் தமிழ் அச்சு ஊடகங்களில் பணியாற்ற விரும்புபவர்கள் தமிழைப் பிழையில்லாமல் எழுதக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆங்கில மற்றும் தமிழ்த் தட்டச்சுப் பயிற்சி மிக உதவியாக இருக்கும். அதே போல் கணினிப் பயிற்சியும் மிக அவசியமானது.

தமிழ் மீடியாவில் பணியாற்ற நினைப்பவர்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம், தமிழ் இன்று தமிழகத்தில் மட்டும் பேசப்படக்கூடிய ஒரு மொழி அல்ல. ஆங்கிலத்தைப் போல தமிழ் இன்று ஓர் உலக மொழி. இந்தியாவைத் தவிர இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ் அரசு மொழியாக உள்ளது. அதேபோல இலங்கையில் ஏற்பட்ட இனப்பிரச்சினை காரணமாக இலங்கைத் தமிழர்கள் உலகில் பல்வேறு நாடுகளில் குடியேறியுள்ளனர். இந்தியாவிலிருந்து வேலைவாய்ப்புக் கருதிப் பல்வேறு தமிழர்கள் அமெரிக்காவில் குடியேறியுள்ளனர். கனடா தலைநகரான டொரன்டோ வில் தமிழ் ஒரு முனிசிப்பல் மொழி. எனவே, தமிழ் இன்று வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆஸ்திரேலியாவிலுங்கூடப் பேசப்படுகிறது. இந்த நாடுகளில் தமிழ்த் தொலைக்காட்சிகள், தமிழ் நாளிதழ்கள், தமிழ்ப் பத்திரிகைகள், தமிழ் வானொலிகள், தமிழ் இணைய இதழ்கள் எல்லாம் இயங்கிவருகின்றன. இவை எல்லாவற்றிலும் இன்று மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளது.

மீடியாவில் பணியாற்றுவதற்கு நான் குறிப்பிட்ட தொழில்ரீதியான திறனைத் தவிர கோட்பாட்டு ரீதியான விழிப்புணர்வும் மிக அவசியம். பத்திரிகையாளர்கள் நுண் உணர்வுள்ளவர்களாக இருக்க வேண்டும். இந்திய ஜனநாயகத்திலும் நமது அரசியல் அமைப்புச் சட்டத்திலும் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்க வேண்டும். மனித உரிமை பற்றிய விழிப்புணர்வு பத்திரிகையாளர்களுக்கு மிக முக்கியம். ஒடுக்கப்பட்ட மக்கள், பெண்கள், சிறுபான்மையினர் உரிமை பற்றி அவர்களுக்கு மிகுந்த அக்கறை இருக்க வேண்டும்.

நமது ஊடகங்கள் போலீஸ் சித்திரவதையை ஆதரிப்பது, சாதிப் பிரச்சினைகளை வளர்த்துவிடுவது, மதப் பிளவுகளை வளர்த்துவிடுவது என விற்பனைக்காக எதையும் செய்யத் துணிகின்றன. மாணவர்கள் இவற்றைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது சமூகப் பொறுப்புணர்வோடு பத்திரிகையாளராகப் பணியாற்ற மிக அவசியம். சமூகப் பொறுப்புணர்வோடு பணியாற்றும்போது ஏற்படும் மனநிறைவு பணத்தால் கிடைக்காது.

(நாகர்கோவில் தெ.தி. இந்துக்கல்லூரி வரலாற்றுத் துறை மாணவர் பேரவையின் தொடக்க விழாவில் பேசியது.)

அறிவின் அதிகாரம்

'நெய்தல்' கிருஷ்ணனும் நானும் மதுரை அரசரடியில் நடந்த குட்டித் திரைப்பட விழாவுக்காகச் சென்றிருந்தோம். நான்கைந்து ஆண்டுகள் இருக்கும் என்று நினைக்கிறேன். மதுரை ரயில் நிலையத்தில் இறங்குவதற்கு முன்பெல்லாம் கொஞ்சம் பயமாகவே இருக்கும். நடைபாதையிலிருந்து வெளியேறும் வாயிலில் பல டஜன் ஆட்டோ ஓட்டுனர்கள் பாய்ந்து வருவார்கள். அவர்களிடம் பல நீக்குபோக்குகள் சொல்லி வெளியேறுவதற்குள் மனச்சோர்வு ஏற்பட்டுவிடும். அன்று 'நெய்தல்' கிருஷ்ணனுடன் சென்று இறங்கியபோது ஒரு ஆட்டோ ஓட்டுனர்கூட அருகில் வரவில்லை. சில டாக்ஸி ஓட்டுனர்கள் படு பவ்யமாக கார் கதவைத் திறந்து நின்றார்கள். கிருஷ்ணனின் ஆகிருதியின் தாக்கம்.

அரசரடி போய்ச் சேர்ந்தோம். அங்கு கான்டீனில் காலை உணவு. கிருஷ்ணன் இரண்டு 'செட் பூரி' ஆர்டர் கொடுத்தார். மேலே ஒரு பூரி, கீழே ஒரு பூரி, இடையில் உருளைக்கிழங்கு மசாலா. கொண்டு வைத்ததும் நான் மேலே உள்ள பூரியைச் சூடு பார்த்து, பிய்த்து உண்ணத் தொடங்கினேன். கிருஷ்ணன் பூரி செட்டைத் திருப்பிப் போட்டார். ஒரு குழந்தையின் உடல் சூட்டைக் கணிப்பதுபோல இரண்டு விரல்களைப் பூரியின் மீது வைத்தார். சர்வரைப் பார்த்து 'கீழ பழைய பூரிய வச்சுட்டீங்க' என்றார். பையன் முகம் கலவரமடைந்தது. பதில் சொல்லாமல் அடுக்களைக்குள் ஓடினான்.

பல நிமிட மௌனத்திற்குப் பிறகு தலைமைச் சமையற்காரர் வெளியே வந்தார். 'தப்பு நடந்துவிட்டது' என்றார். பல வருடங்களாக வெற்றிகரமாக நடந்துவந்த தொழில்தந்திரம் அம்பலப்பட்டுவிட்ட நாணம் அவர் முகத்தில். மேலே இருக்கும் பூரியை உண்டுவிட்டு கீழ் பூரியில் கைவைப்பதற்குள் அது இப்படி ஆறிப் போய்விட்டதே என்று எண்ணியபடி உண்டுவிடுவதே வாடிக்கையாளர் வழக்கம். இனி அப்படி நடக்காது என்று தலைமைச் சமயற்காரர் கிருஷ்ணனிடம் உறுதி கூறினார். மேல்முறையீடு எதுவும் செய்ய வேண்டாம் என்றும் வேண்டினார். மதியம் என்ன? என்றார் கிருஷ்ணன். அன்றைய சமையல் தெரிவிக்கப்பட்டதும் சில சிறப்புத் தயாரிப்புகளுக்குக் கிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்தார். வாயில்வரை வந்து வழியனுப்பினார்கள். அங்கிருந்து திரையிடப்படும் இடத்திற்கு நீண்டதூரம் நடந்து சென்றோம். இரண்டு படங்கள் முடிந்து சுமார் ஒரு மணிக்கு வெளியே வந்ததும் கான்டீன் பையன் காத்துக்கொண்டிருந்தான். சமையல் விபரங்கள் முழுவதையும் எங்களிடம் எடுத்துக்கூறி, கிருஷ்ணனைக் கையோடு அழைத்து வரும்படி கான்டீனில் கேட்டுக்கொண்டதாக வேண்டினான். அங்கிருந்த மூன்று நாள்களும் காலையும் மதியமும் இந்த ராஜ உபசரிப்பு தொடர்ந்தது.

ஒரே ஒரு கேள்வியின் தாக்கத்தை எண்ணி நான் வியந்துகொண்டிருந்தேன். அறிவின் அதிகாரம்?

காபி கடை நிறபேதம்

நண்பர்கள் மணியும் ஷர்மாவும் நானும் பெர்லினில் ஒரு காபி கடைக்குப் போயிருந்தோம். (2002இல்) கடை காலியாக இருந்தது. அங்கிருந்த ஒரே பெண் பணியாளர் வந்து தேவையை அறிந்துகொண்டு சென்றார். அவர் பார்க்கத் தூய ஆரிய ஜெர்மானியர் போல இருந்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு பார் மேஜைக்குப் பின்னிருந்து அவர் ஒரு துப்பாக்கியை உருவுவதைப் பார்த்தேன். ஜேம்ஸ் பாண்ட் நாயகிபோல அதை ஸ்டைலாகப் பிடித்தபடி ஒயிலாக எங்களை நோக்கி நடந்து வந்தார். உயரும் பதற்றத்தை வெளிக்காட்டாமல் அமர்ந்திருந்தேன். என் மார்பை நோக்கி அதைக் காட்டியபடி அவர் விசையை அழுத்தியதும் அதிலிருந்து சுடர் பற்றியது. மெழுகுவத்தி ஒன்றைக் கொளுத்தி மேஜையின் மையத்தில் வைத்துவிட்டு அவர் தன் இருப்பிடத்திற்கு மீண்டார். காபியும் சில பணியாரங்களும் வந்தன.

பல மேற்கத்திய 'கபே'க்கள் போல இதிலும் புகழ் பெற்ற மாஃபியா தலைவரான கிறீ சிணீஜீஷீஸீமீஇன் புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது. நண்பர்கள் அந்த நீணீயீமீ யாருடையதாக இருக்கும் என்று பேசிக்கொண்டார்கள். ஷர்மா இது நிச்சயமாக ஜெர்மானியர் நடத்தும் கபே அல்ல என்றார். பணியாளரை அழைத்து நண்பர்கள் விசாரித்தார்கள். உரிமையாளர் துருக்கியர் எனத் தெரிந்தது. கொஞ்ச நேரம் மூளையைக் கசக்கிவிட்டு நண்பரிடம், 'எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?' என்றேன். 'இங்குச் சூழல் இறுக்கமற்று இருக்கிறது. பணிப்பெண் நம்மை மரியாதையுடன் நடத்துகிறார். எனவே, இது ஜெர்மானியரின் நீணீயீமீ அல்ல என ஊகித்தேன்' என்றார்! ஒரு அந்நியனால் ஒருபோதும் உணரமுடியாத நுட்பம் இது. வாழ்ந்து பெற்ற அனுபவத்தால் நிறவெறியின் கொடுமையை ஒரு நுட்பமான செய்தியின் வழி அன்று அந்த நண்பரால் வெளிப்படுத்த முடிந்தது. பின்னர் நவநாஸிகளால் தாக்கப்பட்ட ஒரு வங்காளி முதியவரையும் தூய ஆரியப் பிரதேசமாகக் கருதப்படும் பெர்லினின் புற நகர்ப் பகுதிக்குச் சென்று வந்த ஒரு இளம் தமிழக மாணவியையும் சந்தித்து அறிந்த செய்திகளும் பெற்ற உணர்வுகளும் ஜெர்மனியின் எதிர்மறையான இந்தக் கூற்றை உள்வாங்கிக்கொள்ள உதவின.

என்னைப் பெர்லினுக்கு அழைத்து விருந்தோம்பிய நண்பர் சுசியும் அவர் மனைவி இன்பாவும் பெர்லினுக்கு அகதிகளாக வந்திறங்கியபோது வெவ்வேறு ஜெர்மானியக் குடும்பங்களால் தத்தெடுக்கப்பட்டனர். அவர்களைப் பெற்றோருக்கு இணையாகக் கருதி அந்த ஜெர்மானியக் குடும்பப் பெயர்களைத் தம் பெயரோடு இணைத்துக்கொண்டுள்ளனர். ஒரு சமூகத்தின் இரண்டு முகங்கள் இவை. இந்த இரண்டாம் முகம் தொழில் முற்போக்காளர்களின் பதிவுகளில் வழக்கமாக இருட்டடிப்புச் செய்யப்பட்டுவிடும்.

உள்ளடக்கம்

 

 

Google