தயாரிப்பு: ஆர்.எஸ். சண்முகம்
இசை: அர்விந்த் சித்தார்த்தா
ஒளிப்பதிவு: கே. ஷரத் சந்தர்
கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம்:
காவ்யா புகழேந்தி
குறும்படங்களும் ஆவணப்படங்களும் பெருகிப்போன சூழலில் மேலும் ஒரு குறும்படம்
அப்புவின் சினிமா. திரைப்பட உருவாக்கத்தில் வர்த்தகம் மற்றும் பொருளாதாரக்
காரணங்களால் தங்கள் கற்பனை கடிவாளமிடப்படுகிறது என்று நம்புபவர்கள், குறும்படங்களில்
தாங்கள் சொல்ல வந்ததை எந்தவிதக் கட்டுப்பாடுமின்றிச் சொல்லமுடிவதாலும் தொழில்நுட்ப
வளர்ச்சியின் உதவி இருப்பதாலும் தங்கள் எண்ணங்களைக் காட்சிப்படுத்தச் சிறந்தவழியாகக்
குறும்படங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். நல்ல படங்களை விரும்பிப் பார்ப்பவர்களைத்
திருப்திப்படுத்தக் கூடிய வாய்ப்பு குறும்படங்களுக்கு இருக்கின்றபோதும் அவை அதைச்
சரிவரச் செய்கின்றனவா என்பதை யோசிக்கவைக்கும் வரிசையில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது
அப்புவின் சினிமா.
ஒரு பிஞ்சு மனத்தில் ஏற்படும் காயத்தைக் கருவாகக்கொண்ட இக்குறும்படம், அதைக்
அழுத்தமாகக் காட்சிப்படுத்தத் தவறிவிட்டது. அப்புவும் சுரேஸும் ஒன்றுவிட்ட அண்ணன்
தம்பிகள். குடும்பத்தில் இளையவரான அப்புவின் தந்தை மதம் மாறித் திருமணம் புரிகிறார்;
அந்த அதிர்ச்சியால் அவர் தந்தை மரணமடைவதன் காரணமாகக் குடும்பத்திலிருந்து
ஒதுக்கிவைக்கப்படுகிறார். மூத்தவரான சுரேஸின் தந்தை வசதி வாய்ப்புகளோடு நகரத்தில்
வசிக்கிறார். கிராமத்திற்கு வரும் சுரேஸ் அப்புவோடு விளையாடுவதை விரும்புகிறான்.
சுரேஸின் தாய்க்கு இதுபிடிப்பதில்லை. அப்புவின் தாயும் அப்பு சுரேஸோடு சேர்வதை
விரும்பவில்லை. ஒரு நாள் சுரேஸ் அப்பா அம்மாவோடு காரில் திரைப்படத்திற்குச்
செல்கிறான். தன்னோடு அப்புவையும் வரச்சொல்லி வற்புறுத்த, அழுது அடம்பிடித்துத்
தாயிடம் அனுமதி வாங்கி சுரேஸோடு படம் பார்க்கச் செல்கிறான் அப்பு. தியேட்டரில்
சுரேஸின் தாய் சுரேஸைத் தன்னோடு 'சேர் டிக்கெட்'டிலும் அப்புவைக் கார் டிரைவரோடு 'தரை
டிக்கெட்'டிலும் அமர்த்துகிறாள். சுரேஸின் தந்தை மனைவியை எதிர்த்து எதுவும்
சொல்லவில்லை. சுரேஸோடு சேர்ந்தமர்ந்து சினிமாப் பார்க்க ஆசைப்பட்ட அப்புவின் மனம்
படம் பார்ப்பதில் லயிக்கவில்லை. வீட்டிற்குத் திரும்புகையில் காரில் வர நாசூக்காக
மறுத்துவிடுகிறான் அப்பு. தியேட்டரிலிருந்து வீட்டிற்கு நடந்து வரும் அவனை
அறிமுகமற்ற மனிதர் ஒருவர் சைக்கிளில் அழைத்துக்கொள்கிறார்.
சகோதரர்களுக்கிடையே உள்ள பொருளாதார ஏற்ற தாழ்வுகள், மதங்கள் குறித்த கேள்விகளை அப்பு
கேட்க, அவனைச் சமாதானப்படுத்தும்விதமான பதில்கள் தரப்படுகின்றன. யதார்த்தமாக
இருக்கவேண்டிய காட்சிகள் வலிந்து உருவாக்கப்பட்ட சோகச் சம்பவங்களாய் இருப்பதாலேயே
காட்சிகளால் கண்களைத் தாண்ட இயலவில்லை. மாதா கோவிலுக்காக ஃபாதரிடம் தாராளமாக நன்கொடை
தரும் பெரிய மனிதர் அடுத்த விநாடி தன் மகன் கிறிஸ்தவப் பெண்ணோடு மணக்கோலத்தில்
வந்திறங்குவதைப் பார்த்து அதிர்ச்சியில் எதுவும் பேசாமல் உடனடியாக மரணமடைவது
எந்தவிதப் பாதிப்பையும் பார்வையாளனுக்கு ஏற்படுத்தவில்லை. சுரேஸின் தாய் அப்புவிடம்
காட்டும் கடும் வெறுப்புக்கான அவசியம் படத்தில் இல்லை. இறுதியில் சைக்கிளில் வரும்
மனிதர் அப்புவிடம் "இருட்டில் செல்லப் பயமாயில்லையா?" எனக் கேட்க, "இருட்டைப்
பார்க்கப் பயமாயில்லை மனிதர்களை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது" எனச் சொல்கிறான்
அப்பு. காட்சியிலோ இருட்டை விளக்குவைத்துத் தேடவேண்டியிருக்கிறது. சின்ன சின்ன
விஷயங்களில் தென்படும் அசிரத்தை பார்வையாளனின் கவனத்தைப் படத்திலிருந்து
அப்புறப்படுத்திவிடுகிறது. குறும்படம் போல் இல்லாமல் ஒரு தொலைக் காட்சித்
தொடரிலிருந்து தவறிவிழுந்த ஒரு 'எபிசோட்'போல் இருப்பது ஏனென்று புரியவில்லை. |