Google   www kalachuvadu.com

 

மூன்றாவது கண்
ஒரு அரசும் ஒவ்வொரு அரசும்
ஆந்திர விவசாயிகள் மீதான ஒடுக்குமுறையும் இடதுசாரி அறிவு ஜீவிகளும்
தேவிபாரதி
தம் நிலங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காகவும் நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் வழங்கக் கோரியும் போராடி வரும் ஆந்திரப் பிரதேச விவசாயிகள் கடந்த 28.07.2007 அன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பொன்றிற்கு அழைப்புவிடுத்திருந்தனர். ஆளும் காங்கிரஸ் கட்சியின் 'தோழமை' அமைப்புகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியாலும் தலைமையேற்று நடத்தப்பட்ட இந்த முழு அடைப்புப் போராட்டத்தின்போது தம் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேரணி நடத்திய விவசாயிகள்மீது கடும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது ராஜசேகர ரெட்டி தலைமையிலான அரசு. அப்பொழுது நடந்த துப்பாக்கிச் சூட்டில் அறுவர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்குவதாகக் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையிலேயே வாக்குறுதி அளித்திருந்தது. தமது தோழமைக் கட்சியின் தலைமையிலான ஆந்திரப் பிரதேச அரசின் இந்த ஒடுக்குமுறை நடவடிக்கையைக் கண்டு அதிர்ச்சியடைந்த இடதுசாரிகள் தம்முடன் இணைந்து போராடுமாறு தம் பரம வைரிகளான மாவோயிஸ்ட்டுகளை அழைத்தனர். தம் மாநில விவசாயிகள்மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டு கொதித்துப்போன அறிவுஜீவிகள் தமது கண்டனங்களைப் பல வழிகளில் பதிவு செய்தனர். மின்னஞ்சல்களின் வாயிலாகவும் வலையகங்களிலும் கண்டன அறிக்கைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறைப் பேராசிரியராகப் பணிபுரியும் ஜெயதி கோஷ் தன் அறிவுத் துறை நண்பர்களுக்கு ஓர் அறிக்கையினை மின்னஞ்சல் வழி அனுப்பினார். இளம் இடதுசாரி அறிவுஜீவிகளுள் முக்கியமானவராகக் கருதப்படும் அநிகேத் ஆலம் அவ்வறிக்கையை மின்னஞ்சல் மூலம் தன் சக அறிவுஜீவிகளுக்கு அனுப்பி அவர்களுடைய ஒப்பங்களைப் பெற்று இணையத்தில் வெளியிட விரும்பினார். மின்னஞ்சலில் பெறப்பட்ட ஜெயதி கோஷின் அறிக்கையை வெளியிடும் தன் விருப்பத்தைத் தெரிவித்து அதற்கு அவர்களுடைய இசைவையும் ஒப்பத்தையும் வேண்டி ஒரு குறிப்பைத் தன் நண்பர்களுக்கு 29.7.07 அன்று மின்னஞ்சல் மூலம் அனுப்பினார் அநிகேத் ஆலம். ஜெயதி கோஷின் அறிக்கையும் அநிகேத் ஆலத்தின் குறிப்பும் கீழே தரப்பட்டுள்ளன.

ஜெயதி கோஷ் அவர்களின் அறிக்கை

கீழே கையொப்பமிட்டுள்ள நாங்கள், ஜூலை 28 ஆம் தேதி நடைபெற்ற மாநிலந்தழுவிய முழு அடைப்பின்போது, ஆந்திரப் பிரதேசத்தின் முடிகொண்டா கிராமத்தில் காவல் துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டால் அதிர்ச்சியும் திகைப்பும் அடைகிறோம். பலருடைய உயிரிழப்புக்கும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் படுகாயமுற்றதற்கும் காரணமாகியிருக்கிறது இந்தத் துப்பாக்கிச் சூடு. முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள்மீது, முதல்வர்தானே ஒப்புக்கொண்டதுபோல, பலப்பிரயோகம் செய்ய வேண்டாம் என உத்தரவிட்டிருந்ததையும் மீறித் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது காவல் துறையின் மேலாதிக்கச் செயலைக் காட்டுகிறது.

ஆனால், தங்கள் நிலத்தைப் பாதுகாக்கப் போராடும் ஏழைகளின் இயக்கத்தை மாநில அரசு எவ்வாறு ஒடுக்கியது என்பதைச் சுட்டிக்காட்டாமல் காவல் துறையின் அப்படிப்பட்ட மேலாதிக்கத்தை விளக்கிவிட முடியாது. போராடும் இயக்கத்தின் தலைவர்கள்மீது மூவாயிரத்துக்கும் அதிகமான வழக்குகள் போடப்பட்டுள்ளன, ஆயிரக்கணக்கானோர் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள்.

போராடும் ஏழை மக்கள்திரளின் எழுச்சியை அனுதாபத்தோடும் தனது தேர்தல் வாக்குறுதிகளுக்கு உடன்பாடான முறையிலும் எதிர்கொள்ளாமல், அந்த இயக்கத்தை நசுக்கப் பயனற்றதும் அபாயகரமானதுமான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது மாநில அரசு. இத்தகைய ஒடுக்குமுறை நடவடிக்கைகளைக் கைவிடுமாறு நாங்கள் மாநில அரசைக் கேட்டுக் கொள்கிறோம். தம் நிலவுரிமைக்காக எழுச்சிபெற்றுப் பெருந்திரளாகப் போராடும் ஏழை மக்களோடு நாங்கள் எங்களை முழுமையாக ஒன்றிணைத்துக்கொள்கிறோம். ரங்காராவ் அறிக்கையின்படி, தன்வசமுள்ள 60 இலட்சம் ஏக்கர் நிலத்தைப் பகிர்ந்தளிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

- ஜெயதி கோஷ்

அநிகேத் ஆலத்தின் குறிப்பு

அன்புள்ள நண்பர்களே!

ஆந்திரத் துப்பாக்கிச் சூடு மீதான ஓர் அறிக்கையை இணைத்துள்ளேன். இதை நாங்கள் நாளை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். உங்கள் பெயரைச் சேர்த்துக்கொள்ளலாமா எனத் தயவுசெய்து தெரிவியுங்கள். மேலும், அறிக்கையில் கையொப்பமிட விருப்பமுள்ள மற்றவர்களின் பெயர்களையும் தெரிவியுங்கள்

- அநிகேத்

புரட்சிகரச் செயல்பாடும் ஆழ்ந்த மனிதநேயமும் மட்டுமே சோசலிசத்தின் உண்மையான சுவாசம். உலகம் தலைகீழாக்கப்பட வேண்டும். வழியாமல் தவிர்க்கப்பட்டிருக்கக்கூடிய ஒவ்வொரு துளிக்கண்ணீரும் ஒரு குற்றச்சாட்டே. மிருகத்தனமான கவனக்குறைவால் எளியதொரு மண்புழுவை நசுக்குகிறவன் குற்றவாளியே.

- ரோஸா லக்ஸ்ம்பர்க் (1918)

(அநிகேத்தின் மின்னஞ்சலுக்குக் கீழே காணப்பட்ட மின்னஞ்சல் ஒப்பம்)

அநிகேத் ஆலத்தின் மின்னஞ்சல் தகவலைப் பெற்றவர்களுள் ஒருவரான யோகேந்திர யாதவ், ஜெயதி கோஷின் அறிக்கையில் கையொப்பமிடுவது தொடர்பாகச் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். இந்தியாவின் தலையாய தேர்தல் ஆய்வாளரான யாதவ் பிற்பட்டோ ருக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் ஆதரவாளர். இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர்களின் வாதங்களைத் தர்க்கரீதியிலும் சமூகநீதி அடிப்படையிலும் எதிர்கொண்டுவரும் அறிஞர். 30 ஜூலை 2007 அன்று அநிகேத்துக்கு யாதவால் அனுப்பப்பட்ட அந்த மின்னஞ்சலில் காணப்படும் தகவல் இது.

யோகேந்திர யாதவின் எதிர்வினை

அன்புள்ள அநிகேத்,

எனக்கொரு தயக்கம். நாட்டின் பிற பகுதிகளில் நடந்த இதையொத்த நிகழ்வுகளைக் கண்டித்துள்ளது போன்றே, ஆந்திராவில் நடந்த காவல் துறைத் துப்பாக்கிச் சூட்டையும் நான் கண்டிக்கிறேன். இந்த நிகழ்வுகளைக் கண்டிப்பதில், ழிகிறிவி இயக்கத்துடன் நான் ஏற்கனவே இணைந்துள்ளேன். சற்றுப் பெரிய அளவில் நந்திகிராமில் நடந்த இதே போன்ற நிகழ்வைக் கண்டிப்பதற்கு எதுவுமே செய்யாமல் ஆந்திராவில் நடந்த சம்பவத்தைக் கண்டித்து அறிக்கைவிட விரும்பும் பல நண்பர்களோடு இணைந்துகொள்ளுமாறு நீங்கள் என்னை அழைக்கிறீர்கள். இந்த அறிக்கையைப் படித்தேன். அதனோடு நான் உடன்படுகிறேன். ஆனால், இதே அறிக்கை (சில குறிப்பான விஷயங்கள் நீங்கலாக) நந்திகிராம் நிகழ்வுக்கும் பொருந்தும் (சி.பி.எம். தொண்டர்கள் நந்திகிராம் பகுதிக்குள் பத்திரிகையாளர்களை நுழையவிடாமல் தடுத்ததன் விளைவாகவே அந்நிகழ்வு தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் நமக்குக் கிடைக்காமல்போயின). மேற்கு வங்கத்தின் நந்திகிராமிலும் ராஜஸ்தானின் ஸ்ரீகங்கா நகரிலும் நடந்த இதே போன்ற நிகழ்வுகளையும் உங்கள் அறிக்கை சுட்டிக்காட்டும்பட்சத்தில், நான் அதில் கையொப்பமிடவே இன்னமும் விரும்புகிறேன்.

(இத்தகையதொரு அறிக்கை, அண்மைக் காலத்தில் நாட்டின் பிற பகுதிகளில் நடந்த இதையொத்த நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டாமல் இருப்பது சரியான நிலைப்பாடாக இருக்க முடியாது. இதை நீங்கள் யோசித்துப் பாருங்கள். நாம் ஏன் இதைத் தவிர்ப்பதற்கு விரும்புகிறோம்?) என் அணுகுமுறையில் ஏதாவது தவறு இருப்பின் தயவுசெய்து அறிவுறுத்துங்கள். தயவுசெய்து சங்கடப்படாமல் எனது முந்தைய அறிக்கையை யார் யாருக்கெல்லாம் அனுப்பியிருந்தீர்களோ அவர்களுக்கு இதையும் அனுப்பிவையுங்கள்.

தங்கள் அன்புள்ள

- யோகேந்திர யாதவ்

யாதவின் மேற்கண்ட மின்னஞ்சலைத் தன் குறிப்புரை ஒன்றுடன் அநிகேத் அலம் 30 ஜூலை 2007 அன்று மற்றவர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார். அக்குறிப்பும் கீழே தரப்பட்டுள்ளது.

அநிகேத் ஆலத்தின் மின்னஞ்சல் குறிப்பு

அன்புள்ள அனைவருக்கும்,

ஆந்திரப் பிரதேசக் காவல் துறைத் துப்பாக்கிச் சூடு தொடர்பாக முன்னர் அனுப்பிய அறிக்கைக்கு யோகேந்திர யாதவ் அவர்களின் எதிர்வினையை அனுப்புகிறேன். எனக்கு அனுப்பப்பட்டிருந்தாலும் அரசியல் கிளர்ச்சிகளுக்கும் காவல் துறை அட்டூழியங்களுக்கும் நாம் ஆற்றும் எதிர்வினைகள் தொடர்பான சில முக்கியமான பிரச்சினைகளைக் குறித்து அவருடைய அஞ்சல் விவாதிக்கிறது எனக் கருதுகிறேன். ஆகவே, நான் முன்னர் அனுப்பிய மின்னஞ்சலைப் பெற்றுள்ள அனைவருக்கும் அதை அனுப்புகிறேன்.

- அநிகேத்

இம்மின்னஞ்சல் செய்திகளைப் பெற்றவர்கள் ஆற்றிய எதிர்வினைகள் குறித்து இதுவரையிலும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. யோகேந்திர யாதவ் எழுப்பிய கேள்விகளுக்கு இடதுசாரி அறிவுஜீவிகள் ஏதாவது பதிலளித்தார்களா எனவும் தெரியவில்லை. இடதுசாரி அறிவுஜீவிகள், குறிப்பாக சி.பி.எம். சார்பு ஊடகவியலாளர்கள், யோகேந்திர யாதவின் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்திருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்காதது ஏனோ?

மின்னஞ்சல் தகவல்களின் மொழிபெயர்ப்பு: நஞ்சுண்டன்

மின்னஞ்சல் தகவல்களை அனுப்பி உதவியவர்: ஆ.இரா. வேங்கடாசலபதி

புகைப்படங்கள்: http://landstrugglesinap.wordpress.com

உள்ளடக்கம்

 

 

Google