நீங்கள் கேட்பீர்கள் . . .
ஏன் அவனுடைய கவிதை
கனவுகளையும் இலைகளையும் பாடவில்லையென . . .
வந்து பாருங்கள் குருதி படிந்த வீதிகளை!
வந்து பாருங்கள் குருதி படிந்த வீதிகளை!
- பாப்லோ நெரூடா
ஜெயலட்சுமியை நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது. இந்தியாவின் மகாராஷ்டிரா
மாநிலத்தில் விதர்பா பகுதியில் ஏழாம் வகுப்பு படித்து வந்த மாணவியான ஜெயலட்சுமி,
விவசாயம் பொய்த்ததால் நொடித்துப் போன தன் தந்தையால் தன்னை எட்டாம் வகுப்பு படிக்க
வைக்க இயலாது என உணர்ந்த கணத்தில் விதர்பாவில் வறுமைக்கும் கடனுக்கும்
அவமானத்திற்கும் பயந்து ஆயிரக்கணக்கானவர்கள்போல் தற்கொலை செய்துகொண்ட சிறுமி.
பத்திரிகை உலகமும் அறிவு உலகமும் கவனிக்க மறந்த ஜெயலட்சுமி போன்றோரைப் பற்றி
எழுதுவதற்கென்றே ஒரு பத்திரிகையாளர் கார்களும் பஸ்களும் போகாத மூலை முடுக்கெல்லாம்
20 ஆண்டுகளாகத் திரிந்து எழுதிக்கொண்டிருக்கிறார்.
இந்தியாவின் பத்திரிகைகள் கவனிக்க மறந்த, இந்திய நடுத்தர வர்க்கம் பார்க்க
விரும்பாத, அரசாங்கம் கண்டுகொள்ளாத ஜெயலட்சுமி போன்ற ஏராளமான இந்தியர்களைப்
பொதுப்புத்தியில் சங்கடமான ஆனால், ஆணித்தரமான கேள்விகளாகப் பதிவுசெய்தவர் பி.
சாய்நாத். தற்போது ஹிந்து பத்திரிகையின் கிராமப்புற விவகார எடிட்டராகப் பணிபுரிந்து
வரும் சாய்நாத்திற்கு 2007ஆம் ஆண்டின் இதழியல், இலக்கியம், தகவல்தொடர்பு, கலைக்கான
பிரிவில் ரமோன் மகஸாஸே விருது வழங்கப்பட்டிருக்கிறது.
1957இல் சென்னையில் பிறந்த பாலகும்மி சாய்நாத் வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
பத்திரிகையாளராக ப்ளிட்ஸ் பத்திரிகையில் பணியாற்றி அதன் துணைத் தலைமை ஆசிரியராகவும்
பிரபல பத்தி எழுதுபவராகவும் விளங்கினார். 1993இல் வேலையை விட்டு விலகி டைம்ஸ் ஆப்
இந்தியா பத்திரிகையின் ஆய்வு உதவித்தொகை பெற்று அடுத்த சில வருடங்கள் இந்தியாவின்
பத்து மிக வறிய கிராமங்களுக்குப் பல பயணங்களை மேற்கொண்டு கட்டுரைகளைப் பிரசுரித்தார்.
1997இல் 'நல்ல வறட்சியை எல்லோரும் விரும்புவார்கள்' என்னும் தன் புத்தகத்திலும்
தன்னுடைய பல்வேறு கட்டுரைகளிலும் சாதாரணப் பார்வைக்குத் தென்படாத இந்திய ஏழைகளின்,
தலித் மக்களின், ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை இந்தியாவின் ஏற்றத்தாழ்வுகளைக்
கூர்மையாக்கும் பொருளாதார வளர்ச்சி(!)யை ஆதாரபூர்வமாக எழுதினார்.
சாய்நாத் எழுதிய 'சாதீயக் கொடுமைகள்' குறித்த கட்டுரைகள் தேசிய அளவிலான தலித்
வன்கொடுமைகள் குறித்த பொதுவிசாரணையில் ஆதாரங்களாக முன்வைக்கப்பட்டன.
"சகமனிதர்களின் மீது அக்கறையற்ற பார்வையாளர்களை உருவாக்கும்" இயந்திரமாக இன்றைய
பத்திரிகையுலகை விமர்சிக்கும் சாய்நாத், கிராமங்களில் நேரடியாக இளம்
நிருபர்களுக்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்திவருகிறார்.
சாய்நாத்தை விருதுக்குத் தேர்வு செய்ததன் மூலம் மணிலாவிலிருந்து செயல்படும் ரமோன்
மகஸாஸே அறக்கட்டளை, கிராமப்புற ஏழைகளை இந்தியாவின் பொதுப்புத்தியில் மீட்டு
நிலைநிறுத்திய அவருடைய தீவிரப் பணியை அங்கீகரிப்பதற்காக இவ்விருதை வழங்குவதாகக்
கூறியுள்ளது.
தமிழகத்திலிருந்து இவ்விருதைப் பெறும் இரண்டாம் நபர் பி. சாய்நாத். இரண்டு
வருடங்களுக்கு முன்பு சென்னை அடையார் புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர்.
சாந்தா அவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
இந்த விருதைப் பற்றி இந்தியா டுகெதர் இணைய தளத்திற்கு அளித்த பேட்டியில் சாய்நாத்,
"இது போன்ற விருதுகள் நிச்சயமாகச் சில மாற்றங்களைக் கொண்டுவரும். இது போன்ற
எழுத்துக்களுக்கான வெளியை உருவாக்கித்தரும், பல பத்திரிகைகள் இது போன்ற
செய்திகளைப்போட ஊக்குவிக்கும். இத்தகைய செய்திகளை எழுதும் ஆர்வம் இருந்தும்
தயங்கிக்கொண்டிருப்பவர்களை ஊக்கப்படுத்தவும் உதவும்.
தனிப்பட்ட திருப்தியும் நிச்சயமாக இருக்கிறது" எனக் கூறுகிறார். |