Google   www kalachuvadu.com

 

கட்டுரை
ஆதிதிராவிடன்:
'கற்பனை'யாக்கப்பட்ட இதழ்
(உண்மெய்யும் திரிபும்)
ஸ்டாலின் ராஜாங்கம்
தீண்டப்படாதோரின் இதழியல் பயணம் நாமறிந்து 19ஆம் நூற்றாண்டின் மத்தியிலேயே தொடங்கிவிட்டது. அன்று தொடங்கி இன்று வரையிலும் பல்வேறு அரசியல் கருத்துகளையும் மாற்றங்களையும் வெளிப்படுத்துபவையாக அவை வெளியாகி வருகின்றன. அவற்றிடமிருந்து பிறந்த கருத்துகள் பல இன்று சிறந்த அரசியல் ஜனநாயகக் கருத்துகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், அவை தலித்துகளிடமிருந்து பிறந்தவை என்னும் உண்மை மட்டும் சொல்லப்படுவதில்லை. இந்நிலையில் கடந்தகால இதழ்களின் வரலாற்றைச் சொல்லுவதை இழந்துபோன அறிவடையாளத்தை மீள்கண்டுபிடிப்புச் செய்யும் சமூகச் செயல்பாடாகவே புரிந்துகொள்ள வேண்டும். தீண்டப்படாதோர் வெளியிட்ட இதழ்களில் சில: சூரியோதயம் (1869), பஞ்சமர் (1871), ஜான் ரத்தினம் நடத்திய திராவிட பாண்டியன் (1885), வேலூர் முனிசாமி பண்டிதரின் ஆன்றோர் மித்திரன் (1886), டி.ஐ. சுவாமிக்கண்ணுப் புலவரின் மகாவிகட தூதன், இரட்டைமலை சீனிவாசன் நடத்திய பறையன் (1893), இல்லற ஒழுக்கம் (1898), தசாவதானம் பூஞ்சோலை முத்துவீரப் புலவரின் பூலோக வியாசன் (1900), அயோத்திதாசப் பண்டிதரின் தமிழன் (1907), சொப்பனேஸ்வரி அம்மாள் நடத்திய தமிழ்மாது (1907), மற்றும் ஆதிதிராவிடமித்திரன் போன்ற இதழ்கள் தொடக்கக் காலத்தவையாகும்.

அயோத்திதாசரின் தமிழன் இதழை அவரது மறைவிற்குப் பின் அவருடைய மகன் க.அ. பட்டாபிராமன் 05.05.1914 முதல் 18.08.1915 வரை நடத்தினார். பின்னர் ஜீ. அப்பாத்துரையாரும் பி.எம். ராஜரத்தினமும் சேர்ந்து கோலார் தங்கவயலிலிருந்து 09.07.1926 முதல் 27.06.1934 வரை மீண்டும் தமிழன் இதழைக் கொணர்ந்தனர். அயோத்திதாசர் காலத் தமிழன் இதழுக்கும் பிந்தையோர் நடத்திய தமிழன் இதழுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இதற்கான சமூக அரசியல் பின்புலங்கள் தனியே ஆராயத்தக்கன. மேற்கண்ட இதழ்களில் தமிழன் தவிர வேறெந்த இதழும் முழுமையாகக் கிடைக்கவில்லை என்பது மாபெரும் இழப்பாகும். 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நடத்தப்பட்ட இதழ்களின் கதியும் அதுதான். அத்தகைய இழப்பு இப்போது அரசியல்ரீதியான இழப்பாகவும் மாறி நிற்கிறது. இதனால் தலித் அரசியல் வரலாற்றில் நிகழ்ந்த கடந்தகாலப் போராட்டங்கள், வெற்றிகள், இழப்புகள், ஏமாற்றங்கள் என யாவும் மங்கலாகவே தெரிகின்றன. எனினும் தலித்துகளின் நீண்ட கால அரசியல் தொடர்ச்சியினைக் கண்டெடுக்கக் கடந்த காலத்தின் மீதான வரலாற்றுரீதியான பயணமும் தேவைப்படுகின்றது.

நாமக்கல் பகுதியிலிருந்து வெளியான சமத்துவம் (1945), வேலூர் பகுதியிலிருந்து நடத்தப்பட்ட பள்ளிக்கொண்டா கிருஷ்ணசாமியின் சமத்துவச் சங்கு, 1942இல் ஆம்பூர் ஈ.சுப்பிரமணியத்தால் மாதம் இரு முறையாகத் தொடங்கப்பட்ட தென்னாடு, 1941 முதல் வார இதழாகவும் 1946 முதல் மாதமிருமுறை இதழாகவும் வெளியான ஜே.ஜே. தாஸ், மூர்த்தி ஆகியோர் இணைந்து நடத்திய உதயசூரியன், 1930களில் க.அ. பட்டாபிராமதாஸால் நடத்தப்பட்ட ஆங்கில-தமிழ் மாத இதழான தர்மதொனி போன்ற இதழ்கள் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வெளியாயின. அதற்கும் சற்றே பின்னால் நடத்தப்பட்ட அன்பு பொன்னோவியத்தின் அறவுரை, மக்கள் அறம், டி. குப்புசாமியின் பௌர்ணமி, சென்னை நீலக்கொடி, வீராசாமியின் தொண்டு, ரத்தினம் நடத்திய எரிமலை, ரத்தினமும் எக்ஸ்ரே மாணிக்கமும் இணைந்து நடத்திய சிவில் உரிமை, டாக்டர் அ. சேப்பன், சக்திதாசன் ஆகியோர் இணைந்து நடத்திய உணர்வு, மேலும் அம்பேத்கரிஸ்டு, அறிவுவழி ஆகிய இதழ்கள் இங்குக் குறிப்பிடத்தக்கவை. இத்தகைய நெடிய மரபில் இருபதாம் நூற்றாண்டின் கால்பகுதியிலேயே வெளியான இதழ்களிலொன்றுதான் ஆதிதிராவிடன் என்னும் இதழ்.

n n n

சமூகத்தளத்திலும் அரசியல்தளத்திலும் திராவிடம், திராவிடர் என்னும் சொல்லைக் கையாண்டு முதலில் அமைப்புகளையும் கருத்தியலையும் உருவாக்கியவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரே ஆவர். திராவிடம் என்பதை மொழி, இனம் என்னும் தளத்தைக் கடந்து சாதிபேதமற்ற சமூகம் என்னும் நிலையில் பொருள்படுத்தியவர்கள் இவர்களே. எனினும், எண்ணிக்கை பலங்கொண்ட பெரும்பான்மை இந்து சாதியினர் அச்சொல்லையே தங்களின் அடையாளமாக மாற்றிக்கொண்ட வேளையில், சிறுபான்மை தலித் சாதி அறிவாளிகளும் அரசியல் செயல்பாட்டாளர்களும் ஆதிதிராவிடர்கள் என்னும் கூடுதலான அரசியல் அடையாளமுள்ள பெயரின் மூலம் தங்களை வெளிப்படுத்திக்கொண்டனர். அயோத்திதாசர் காலத்திலும் அதிகம் புழக்கமில்லாத இச்சொல் அவர் மறைந்த காலத்திற்குப் பின்பே அழுத்தம் பெற்று மேலெழுந்தது. 1910களின் மத்தியில் பிராமணரல்லாதார் இயக்கம் உருபெற்றதன் பின்னணியில் இச்சொல்லிற்கான தேவை கூடுதலாகியது. 1920களில் தமிழக தலித் அரசியலில் கோலோச்சிய எம்.சி. ராஜா, இரட்டைமலை சீனிவாசன் போன்ற செயற்பாட்டாளர்களின் காலத்தில் இச்சொல் நிலைபெற்றது. இப்பெயரில் அமைப்புகளையும் இதழ்களையும் அரசியல் விண்ணப்பங்களையும் இம்மக்கள் வெளிப்படுத்தினர்.

கோபால் செட்டியாரின் ஆதிதிராவிடர் வரலாறு (1920), திரிசிரபுரம் ஆ. பெருமாள்பிள்ளையின் ஆதிதிராவிடர் வரலாறு (1922) போன்ற வரலாற்று நூல்கள் வெளியானது இக்காலத்தில்தாம். ஆ. பெருமாள்பிள்ளை ஆதிதிராவிடர் வரலாறு எழுதக் காரணமாக இருந்த எம்.சி. ராஜா சென்னை மாகாணச் சட்டப் பேரவையில் 1922இல் ஆதிதிராவிடர் என்னும் சொல்லினை அரசுப் பதிவாக்கக் கோரிக் கொணர்ந்த தீர்மானம் ஏற்கப்பட்டது. ஆதிதிராவிடர் என்னும் சொல்லைத் தலித் சாதிகள் பலவற்றையும் குறிப்பதாக இத்தலைவர்கள் மாற்றவும் செய்தனர். 1938ஆம் ஆண்டு ஆலயப் பிரவேசம் என்னும் சிறுபிரசுரத்தை வெளியிட்ட இரட்டைமலை சீனிவாசன் அந்நூலில் செடூல் காஸ்ட்கள் என்னும் 86 வகுப்புகளையும் சேர்த்தே ஆதிதிராவிடர் என்னும் சொல்லால் குறிக்கிறார்.

ஆதிதிராவிடர் என்னும் அடையாளம் அரசியல் தளத்தில் முக்கியத்துவமடைந்த சமகாலத்தில்தான் ஆதிதிராவிடன் என்னும் மாத இதழ் இலங்கையிலிருந்து வெளியானது. 1912ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட தென் இந்திய ஐக்கியச் சங்கத்தின் சார்பில் இவ்விதழ் 1919ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. எஸ்.பி. கோபால்சாமி என்பவர் இதன் ஆசிரியராவார். இச்சங்கம் 1922இல் இந்தியன் ஒடுக்கப்பட்ட இந்திய மக்களின் ஊழியன் என்று பெயர் மாற்றம் பெற்றது. இரண்டாண்டுகளுக்கும் மேலாக இவ்விதழ் வெளியானதாகத் தெரிகிறது. இரண்டாண்டு முடிவில் முதலாண்டு இதழ்கள் ஒரு தொகுதியாகவும் இரண்டாமாண்டு இதழ்கள் மற்றொரு தொகுதியாகவும் தொகுத்து வெளியிடப்பட்டன.

ஆதிதிராவிடர்களின் கல்வி, ஒழுக்கம், கலாச்சாரம், லௌகீக விசயம், ராஜ விசுவாசம் ஆகியவற்றை நோக்கமாகக்கொண்டு தொடங்கப்பட்டதாகச் சொல்லிக்கொண்டாலும், ஆதிதிராவிடர்களுக்கான கல்வியையே முதன்மை நோக்கமாய்க்கொண்டு இயங்கியது. கேசவ பிள்ளை, சிதம்பரம் நந்தனார் பாடசாலை சுவாமி சகஜானந்தர் ஆகியோர் இலங்கை சென்ற காலத்திலேயே இவ்விதழ் உருப்பெற்றது. சமய அடிப்படையில் சைவ சமய உணர்வைப் போற்றிய இதழ் இது.

தெய்வமிகழேல், சக்கர நெரிநில், ஊக்கமது கைவிடேல் என்னும் வாசகங்களை முகப்பிலே தாங்கி 16 பக்கங்களில் வெளியானது. இதழின் பக்கங்களைக் கூட்டவும் வார இதழாக மாற்றவும் தொடர்ந்து விருப்பத்தை வெளிப்படுத்திய இவ்விதழ் விருப்பம் நிறைவேறாமலேயே நின்றுபோனது. 1000 சந்தாவினை நெருங்கியிருந்த இந்த இதழ் தமிழகம், கோலார் தங்கவயல், பர்மா ஆகிய இடங்களுக்கும் அனுப்பப்பட்டது. தொடர்ந்து நன்கொடை, சந்தா ஆகியவை கிடைத்துவந்தபோதிலும் இதழ் நிலைப்பதற்கு போதுமானவையாக அவை இல்லை. ஆயிரம் பிரதிகளை நெருங்கியிருந்த இவ்விதழ் ஆதிதிராவிடர்களின் அறிவுசார்ந்த வேட்கையினை அடையாளம் காட்டக்கூடியதாக இன்றைக்கு மாறி நிற்கிறது. ஆதிதிராவிடர் அல்லாதாரும் சந்தாதாரர்களாகவும் பங்களிப்பாளர்களாகவும் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதழ் பற்றிய விமர்சனம் சுதேசமித்திரன் இதழிலும் வெளியானது.

பின்னாளில் திராவிடன் இதழின் ஆசிரியராக விளங்கிய கனக சங்கர கண்ணப்பன் சூத்திரர் யார்? ஆதிதிராவிடர்களின் தொழில் போன்ற கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிவந்தார். ஆதிதிராவிடர்கள் விவசாயம், நெசவு, போர், இசைத் தொழில், வள்ளுவர் எனப் பல்வேறு தொழில் புரிந்தவர்களாகவே இருந்து வந்துள்ளனர் என்றெழுதிய அவர் இக்கருத்தினையே எஸ். சோமசுந்தரம்பிள்ளை போன்ற சென்னை வாழ் ஆதிதிராவிடர்களும் கொண்டிருக்கின்றனர் என்று குறிப்பிட்டார். ஆதிதிராவிடர்கள் பல்வேறு தொழிலிலும் ஆற்றல் பெற்றவர்களாக இருந்தனர் என்னும் வரலாற்றுரீதியான நம்பிக்கையினைப் பலரும் கொண்டிருந்தனர் என்பதை இதன்மூலம் அறியமுடிகிறது. அதேபோல இவ்விதழில் வெளியான சுவாமி சகஜானந்தரின் உரைகள் மூலம் அவருக்கிருந்த விரிவான தமிழறிவு புலப்படுகிறது. சகஜானந்தரைப் போற்றிய இவ்விதழ் நம் தலைவர் எம்.சி. ராஜா என்று எம்.சி. ராஜாவையும் போற்றத் தவறவில்லை. இத் தலைப்பிலேயே வெளியான கட்டுரையொன்றில் "இம்மஹான் நம் ஆதிதிராவிட குலசிரேஷ்டர், சென்னை, ஆதிதிராவிட மஹாஜன சபைக்கு செக்ரடேரியும் தற்காலம் வந்துலாவும் சென்னை ஆதிதிராவிடன் பத்திரிக்கைக்கு ஆசிரியருமாவார். . . ஆதிதிராவிட மக்களில் சட்ட நிருபண சபைக்கு மெம்பராகத் தெரிந்தெடுப்பது இதுவே முதல் தடவை" (1919 ஆகஸ்ட் 15) என்று புகழ்கிறது. இதே காலத்தில் சென்னையிலிருந்து ஆதிதிராவிடன் என்னும் இதழ் எம்.சி. ராஜாவை ஆசிரியராகக்கொண்டு வெளியானது எனும் குறிப்பும் இக்கட்டுரை மூலம் கிடைக்கிறது.

பெண்கள் முன்னேற்றம் பற்றித் தொடர்ச்சியாக எழுதப்பட்ட இவ்விதழில் மறைமலையடிகள் எழுதிய நூல்கள் குறித்த விளம்பரங்கள் விரிவான அறிமுகக் குறிப்புகளுடன் பன்முறை வெளியிடப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம் கல்லல் பகுதியில் ஆதிதிராவிடர்கள் படும் சாதிக் கொடுமைகள், இலங்கையில் நடக்கும் சாதிப் பிரச்சினைகள், தென்னிந்திய ஐக்கியச் சங்கத்தின் பணிகள் போன்ற பல செய்திகளும் இடம் பெற்றன.

ஆதிதிராவிடர்களின் கல்வி சார்ந்து இவ்விதழில் பதிவுகள் தனியாக எழுதுமளவுக்கு விரிவாக அமைந்துள்ளன. ஆதிதிராவிடர்கள் கல்வியின் மூலமே சாதிய இழிவை விலக்கிக்கொள்ள முடியும் என்று உறுதிபட எழுதியது. கிறித்தவப் பாதிரிமார்கள்கூடக் கல்வியின் பெயரால் இம்மக்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்னும் கோபத்தை வெளிப்படுத்திய இவ்விதழ் இம் மக்களின் தனித்துவமான நடவடிக்கைகளினாலே இவை சாத்தியமடைய முடியும் என்று சொல்லவும் செய்தது. அதாவது, "இலங்கை தென்னிந்திய ஐக்கியச் சங்கம், தென்னிந்திய ஒடுக்கப்பட்டவர்கள் ஐக்கியச் சங்கம் மற்றும் குலாபிமானிகள் முன்னின்று நடத்தினால் மட்டுமே" கல்வி உள்ளிட்ட சீர்திருத்தங்கள் கைகூடுமென்று எழுதியது.

கோயம்புத்தூர் ஆர். வீரையன் போன்றோர் ஆதிதிராவிடர் கல்விக் குறித்துத் தொடர்ந்து எழுதிவந்தனர். அவர் பெயரில் வெளியான அறிக்கை ஒன்று:

அறிக்கை

நண்பர்கள்!

வீணாக காலங்கழிக்காதீர்கள். கோயம்புத்தூரில் நடைபெற்றுவரும் நக்ஷ்த்ரவாசக சாலை இரவு பள்ளிக்கூடத்தில் இரவு 7 மணியிலிருந்து 9 1/2 மணி வரைக்கும் இலவசமாக வாசித்து முன்னேறுங்கள்.

"முன் கசக்கும் பின் இனிக்கும்"

திருமால் வீதி                                   ஆர். வீரையன்
கோயம்புத்தூர்

என்று வெளியாகியிருந்தது. 1919ஆம் ஆண்டிலேயே சிதம்பரம் நந்தனார் பாடசாலையில் சுமார் 100 மாணவர்கள் படித்தார்கள் என்னும் குறிப்பையும் இதழ் தருகிறது.

பிராமணரல்லாதார் அரசியல் தலித் மக்களையும் உள்ளிழுத்துக்கொண்டு திராவிடர் என்னும் ஒற்றை அடையாளத்திற்குள் இணைத்தபோதுதான் தனித்துவத்தின் அடையாளமாக ஆதிதிராவிடன் என்னும் சொல்லாடல் மேலுக்கு வந்தது. எனினும், இந்நடவடிக்கையில் முன்னின்ற எம்.சி. ராஜா நீதிக்கட்சியோடு இணைந்து பணியாற்றியதோடு தன் முயற்சியின் காரணமாக அச்சொல்லுக்கு அரசின் அங்கீகாரத்தையும் பெற்றார். ஆதிதிராவிடன் இதழுங்கூடப் பிராமணரல்லாத அரசியலையும் ராஜாங்கத்தின் கல்விப் பணிகளையும் ஆதரித்து எழுதிவந்தது. டாக்டர். டி.எம். நாயரின் மரணம் பற்றி விரிவான இரங்கல் அறிக்கையும் எழுதப்பட்டது.

ஆனால், 1921ஆம் ஆண்டு சென்னை பின்னி ஆலை வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒட்டியெழுந்த கலவரத்தின் பின்னணியில் ஆதிதிராவிடன் இதழ் நீதிக் கட்சிக்கு எதிராக எழுதியது. இப்போராட்டத்தின் போது, எம்.சி. ராஜா தலித் மக்களை வேலைக்குத் திரும்பும்படி கோரியதால் அம்மக்களும் வேலைக்குத் திரும்பினர். அதனால் இம்மக்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். வீடுகள் எரிக்கப்பட்டன. புளியந்தோப்பு கலவரம் என்று சொல்லப்பட்ட இக்கலவரத்தைத்தான் பறையர்களைச் சென்னையைவிட்டே அப்புறப்படுத்த வேண்டுமென எழுதப்பட்ட சர்.பி.டி. தியாகராயரின் அறிக்கையைத் திராவிடன் இதழ் வெளியிட்டது. நீதிக்கட்சியும் திராவிடன் இதழும் தலித்துகளுக்கு எதிராக நேரடியாகப் பேசின. இவ்விடத்தில் எம்.சி. ராஜா நீதிக்கட்சியிடமிருந்து விலகி நின்றார். இன்றைக்கும் சென்னை பின்னி மில் கலவரம், நீதிக்கட்சியின் தலித் எதிர்ப்பு ஆகிய அனைத்திற்கும் கிடைக்கும் தகுதி வாய்ந்த தலித் தரப்பு ஆதாரம் இவ்விதழ்தான்.

நீதிக்கட்சியும் திராவிடன் போன்ற பத்திரிகையும் ஆதரவாயிருப்பார்கள் என்று நம்பிய ஆதிதிராவிடன் இதழ் சாதிஇந்துக்களும் கைவிட்டுவிட்டனர் என்று வருந்தி எழுதியது. திராவிடன் போன்ற இதழின் ஆதிதிராவிடர் விரோதப் போக்கைத் தொடர்ந்துதான் 'ஆதிதிராவிடர்களுக்கு தினசரியோ வார இதழோ நடத்த வேண்டும் அல்லது ஆதிதிராவிடனையாவது வார இதழாக மாற்றிட' வேண்டுகோள் விடுத்தது இவ்விதழ். அதோடு இலங்கையில் கூடியளவு நல்ல நிலைமையிலிருக்கும் இந்தியரும் ஆதிதிராவிடர்களும் இயன்ற அளவு தொகை அனுப்பும்படியும் உதவிசெய்பவர் பெயர் ஆதிதிராவிடனில் பிரசுரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதேபோலச் செய்யவும்பட்டது.

ஆதிதிராவிடர் நலனில் அர்ப்பணிப்புள்ள இந்த இதழை நீதிக்கட்சியை அம்பலப்படுத்தியது என்ற காரணத்தினாலேயே 'கற்பனையான பத்திரிக்கை' என்று சொல்லிவிடவும் இங்கு முயற்சிக்கப்பட்டது. எஸ்.வி. ராஜதுரையும் வ. கீதாவும் இணைந்து எழுதிய பெரியார்: சுயமரியாதை சமதர்மம் என்னும் நூலில் "நீதிக்கட்சி பத்திரிக்கையான திராவிடன் இழிவுக் குறிப்போடு எழுதியதாகச் சிலர் கூறுவதும் அதன் பொருட்டுக் கற்பனையான சில பத்திரிகையொன்றை ஆதாரம் காட்டுவதும் அடிப்படையில்லாதவை"(பக். 381) என்று குறிப்பிடுவது ஆதிதிராவிடன் இதழைத்தான். அதேபோல 1940களில் 'திராவிடஸ்தான் போல எங்களுக்கும் ஆதிதிராவிடஸ்தான் வேண்டும்' என்று முனுசாமிப்பிள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டபோது, அதற்கு மறுப்பாக "திராவிடர், திராவிடம் என்பவை சரித்திரச் சான்றுகளைக் கொண்ட சொற்கள், ஆதிதிராவிடன் என்ற சொல்லுக்கு சரித்திர ஆதாரமில்லை" என்று விடுதலை தலையங்கம் சொன்னது. திராவிடம் என்னும் கருத்தாக்கத்தை உறுதிபடக் கட்டியெழுப்பிய கால்டுவெல்லின் விளக்கமே இந்த மண்ணின் பூர்வகுடிகள் ஒடுக்கப்பட்டவர்களே என்பதுதான்.

தலித்துகள் தங்கள் கருத்துக்கு ஆதரவாக இருக்கும்வரை அவர்களை ஆதரவாளர்களாகச் சொல்லுவதும் தனித்துவமாக எழுதவோ செயற்படவோ முனையும்போது, அவர்களின் இருப்பையே காலிசெய்யும் நிலைமைக்குத் துணிந்ததையுமே இப்போக்குகள் சுட்டுகின்றன.

தொடக்ககால ஆதிதிராவிட முன்னோடிகள் பௌத்தம், வைணவம், சைவம் என்று வெவ்வேறு ஆன்மீக நோக்கங்களில் ஆர்வம் கொண்டிருந்தாலும் ஆதிதிராவிடர்களுக்கான நலன் எனும் பயணத்தில் ஒன்றுபட்டிருப்பதைக் காணமுடிகிறது. வித்வான் க்ஷி.கி. முனிசாமி பிள்ளை எழுதிய தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார் புராணம் என்னும் நூல் வள்ளுவர் ஆதிதிராவிடரே என்பதை நிறுவவந்த நூலாகும் என்று ஆதிதிராவிடன் (1919 ஜூன் 15) கூறுகின்றது. 26.04.1920 சுதேசமித்திரனில் ஸ்ரீமான் கோ. குப்புசாமி என்பவர் வள்ளுவர் பஞ்சமரா? என்று சகஜானந்தரை நோக்கிக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்துப் பெருமாள் நாயனார் என்பவர் வள்ளுவர் பஞ்சமரே பறையரே என்று ஆதிதிராவிடனில்தான் (1920 ஜூன் 15) எழுதினார். வள்ளுவர் தொடர்பான இத்தகு விவாதம் இருபதாம் நூற்றாண்டில் பரவலாக நடந்ததாகவும் அதில் ஆதிதிராவிட அறிவாளிகள் பலரும் வள்ளுவர் பஞ்சமரே என்று நிறுவுவதில் ஒன்றுபட்டிருந்தனர் என்றும் தெரிகிறது. அயோத்திதாசப் பண்டிதரும் இத்தகு விளக்கத்தில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

n n n

பயன்பட்ட ஆதாரங்கள்:

1. ராஜதுரை, எஸ்.வி., கீதா, வ. - பெரியார்: சுயமரியாதை - சமதர்மம். மே, 1999, விடியல் பதிப்பகம், கோவை.

2. ராஜதுரை, எஸ்.வி. - பெரியார் - ஆகஸ்ட் 15. பிப்ரவரி 1998, விடியல் பதிப்பகம், கோவை.

இதழ்கள்:

1. ஆதிதிராவிடன் (இரண்டு ஆண்டு இதழ் தொகுப்பு): மதுரை தலித் ஆதார மையம்.

2. தலித் - 2004 (ஜூலை-ஆகஸ்ட்) - ஆ.இரா. வேங்கடாசலபதியின் கட்டுரை.

உள்ளடக்கம்

 

 

Google