Google   www kalachuvadu.com

 

பிறக்கும் ஒரு புது அழகு
அரசியல், ஊடக வன்புணர்ச்சியின் கதை

துணிவுமிக்க சத்தியத்தின் குரலாகப் பதிவாகியுள்ளது கண்ணனின் கட்டுரை.அதிகாரத்தின் எந்த எதிர்பார்ப்புமின்றி இவ்வளவு உரத்தச் சப்தம் எழுப்பிய எழுத்துக்கள் (சமீபத்தில்) இவருடையதுதான் என்று நினைக்கிறேன்.

சிவராஜ்
அறச்சலூர் - 638 101

நடுநிலை பிறழாமல், எவ்வித உள் நோக்கமுமின்றி, தொடர்புடைய எவர் மனத்தையும் காயப்படுத்தாமல், அதே சமயம் எதனையும் மறைக்காமல் உண்மையைத் தேடி எடுத்து எழுதப்பட்டுள்ள 'பிறக்கும் ஒரு புது அழகு' மதுரைச் சம்பவம் பற்றி இதுவரை யாராலும் எழுதப்படாத, தொட்டுக் கூடப் பார்த்திராத துல்லியமான பதிவு.

பழமன்
கோவை

'பிறக்கும் ஒரு புது அழகு' நேர்மையோடும் துணிச்சலோடும் நுட்பமான பதிவுகளோடும் எழுதப்பட்ட கட்டுரையாகும். ஜூன் இதழைப் பார்த்து ஏமாந்த எனக்கு, இவ்வளவு சிறப்பான ஒரு கட்டுரைக்காக மேலும் ஒரு மாதம் காத்திருந்தது வீண் போகவில்லை. வெகுஜன இதழ்கள் பலவும் வெளிப்படுத்தத் தயங்கிய பல உண்மைகளை எந்தவிதத் தயக்கமுமின்றி, மிகத் தெளிவான சொல்லாடல்களோடு கூறியுள்ளீர்கள்.

"'தினகரன்' மீதான தாக்குதலைத் தூண்டியதாகக் குற்றஞ்சாட்டப்படும் அழகிரி, ஊடகச் சுதந்திரம் என்னும் நோக்கில் பார்க்கும்போது, ஊடகச் சுதந்திரத்தின் நாயகன் போல - அவருடைய நோக்கங்களுக்கும் அப்பால் - காட்சியளிக்கிறார்!"

பல பத்திரிகையாளர்களின் உள்ளத்தில் உணரப்பட்ட உண்மையான இந்த வாக்கியத்தை மீண்டும் மீண்டும் வாசித்தேன்.

ரவிக்குமார் குறித்தும் சல்மா குறித்தும் தோழமையைத் தள்ளிவைத்து விட்டுத் தயக்கமில்லாமல் தகுந்த நேரத்தில் சுட்டிக்காட்டியுள்ளீர்கள். ஆனால், கனிமொழியைப் பற்றித் தங்களிடம் அதிக நம்பிக்கை வெளிப்படுவதாக உணர்கிறேன்.

சமீபத்தில் அ.தி.மு.க. தலைமை நிலைய இடிப்பு தொடர்பாக ஜெயலலிதாவுக்குப் பதிலளித்த முதல்வர் கருணாநிதி படு ஆபாசமாக ஜெயலலிதாவைப் பாலியல் ரீதியாக இழிவுபடுத்தி அறிக்கை தந்தார். அதன்பிறகு முதல்வர் தனது பிறந்த நாள் உரையில் கொடநாடு எஸ்டேட் சிக்கலை வெளிப்படுத்தும் விதமாக மிக அருவருக்கத்தக்க வகையில் மீண்டும் பாலியல் ரீதியாக ஜெயலலிதாவைத் தாக்கினார். அரசியல் ரீதியாக முதல்வர் கருணாநிதி ஜெயலலிதாவை எப்படி விமர்சித்தாலும் அதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்காது. ஆனால், இப்படியெல்லாம் கருணாநிதி எழுதுவதைக் குறித்துக் கனிமொழியின் நிலைபாடு என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

சாவித்திரி கண்ணன்
சென்னை -41

ஜூலை இதழில் 'பத்திரிகை சுதந்திரம் மீதான கொலை வெறித் தாக்குதல்' கட்டுரை படித்தேன். பலராலும் கலவரத்தின் தூண்டுதல் நபராக இனம் காணப்பட்ட அழகிரி இன்னும் கைது செய்யப்படவில்லை. இது பத்திரிகைச் சுதந்திரத்துக்கு ஏற்பட்ட அவமானமே! சுதந்திரமாகப் பத்திரிகை செயல்பட வேண்டும் என்னும் எண்ணம் கொண்ட முதல்வர் 'தினகரன்' மதுரை படுகொலைகள் குறித்த நடவடிக்கையில் தனது கட்டுப்பாட்டுக்குள் நடவடிக்கை எடுக்கத் தவறியது மக்களுக்கு அதிருப்தியே. பல்வேறு மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி மக்களிடம் இந்த அரசுப் பெற்றுள்ள மிகப்பெரும் நம்பிக்கைக்கு மதுரைச் சம்பவம் களங்கம் ஆகிவிட்டது என்பதைத் தி.மு.க.வும் முதல்வரும் உணர வேண்டும். தனது ஆட்சியில் ஜனநாயகத்தின் ஒரு தூணாக இருக்கும் ஊடகங்கள்மீதும் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை, கொலைகளைக் கைகட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்த்த தி.மு.க. அரசு மக்களிடம் நம்பிக்கை இழக்காமல் இருக்கக் கடும் நடிவடிக்கை எடுப்பது உடனடித் தேவை. குற்றவாளிகள் இரத்த உறவாக இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும். இதன் மூலம் ஊடகங்களின் சுதந்திரம் பாதுகாக்கப்படும். தவறும் பட்சத்தில் ஊடகங்களும் செய்தியாளர்களும் மிகுந்த அச்ச உணர்வோடு வாழ நேரிடும்.

'தலித்துகளைக் காப்பாற்றும் பொறுப்பு' கண்ணோட்டம் படித்தேன். குட்டி ரேவதியின் கருத்து சரியானதே! கடந்த காலங்களில் உயர்சாதி ஆதிக்கம் கொண்ட பா.ஜ.க. உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியை முதல்வர் ஆக்கியதையும் ஆட்சியிலிருந்து கவிழ்ந்ததையும் இந்திய மக்கள் அறிவர். தற்போது மாயாவதியோடு கூட்டுச் சேர்ந்துள்ள பிராமணர்கள் உண்மையிலேயே பா.ஜ.க.வை, காங்கிரஸை வெறுத்தவர்கள்தானா என்பது போகப்போகத் தெரியும். மாயாவதியோடு கூட்டணி அமைத்து வெல்வதன் மூலம் இந்துத்துவாக் கொள்கையை ஏதேனும் அமல்படுத்தலாம் எனத் திட்டமிட்டுப் பிரிந்து நின்ற சக்திகளின் கூட்டாகவும் சந்தேகப்பட இடமுண்டு. இருப்பினும் மாயாவதியைக் கவிழ்க்க வாய்ப்பில்லை. ஆனால் மாயாவதிக்கு எதிர் முனையில் செயல்பட இவர்களால் முடியும். இதன் பின்புலம் என்ன என்பது குறித்து அறிந்துகொள்ள நாடு ஆவலாகவே உள்ளது.

ஆரிசன்
கீழ்க்கொடுங்காலூர் 604 403

'பிறக்கும் ஒரு புது அழகு' கட்டுரையை மிகவும் ரசித்தேன். 'தினகரன்' மீதான தாக்குதலையும் அதைத் தொடர்ந்து நடந்துள்ள நிகழ்ச்சிகளையும் இதைவிடச் சிறப்பாக விமர்சிக்க முடியுமா என்று தெரியவில்லை. சமீப காலமாகக் காலச்சுவடு ஒரு சிலரைக் கொஞ்சம் அதிகமாகவே Project செய்கிறதோ என்ற கவலை என்னுள் இருந்தது. அதை வெளிப்படையாக எழுத ஏனோ மனம் வரவில்லை. பார்க்கலாம். நாம் அதிகமாகக் கவலைப்படுவதாக இருக்கலாம் என்று இருந்துவிட்டேன். காலச்சுவடு தன் நடுநிலை தவறவில்லை என்பதோடு, மிகுந்த முதிர்ச்சியுடன் நிகழ்வுகளை விமர்சிக்கும் திறன் கொண்டுள்ளதைப் பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஜி.எஸ்.ஆர். கிருஷ்ணன்
பெங்களூர்

உள்ளடக்கம்

Google Ads.....

Google