Google   www kalachuvadu.com

 

சு.ரா. பக்கங்கள்

காலத்தின் கனல் - 4

4.1.97 சனிக்கிழமை

நேர் நிரை - சிறுகதை. நாஞ்சில் நாடன். 'ஓம் சக்தி' தீபாவளி மலர் 96.

கூழைக் கொம்புப் பசு. காளையங்கன்றுகள். கடைசி ஈத்து. (பிரசவம். மிருகங்கள் சம்பந்தப்பட்டு). கிடாரியா கிடேரியா? ஆனை அறுகம் புல். பால்ராஜ் ஈர்நேர் சம்சாரி. தொழுப்பிறப்பு. பின் ஈன்ற இரண்டையும் காயடித்து மூக்குப் பூறி லாடம் அடிக்க வேண்டும். காலால் பசு ஒற்ற ஆரம்பித்தது.

நல்ல தமிழ். பின்னணியையும் வாழ்க்கை முறையையும் கண் முன்னே நிறுத்த உதவும் மொழி.

பால்ராஜ் தன் சகோதரி பேரின்பத்திற்குத் தன் வீட்டுப் பசுங்கன்றைத் தர விரும்பி அவள் வீட்டுக்குச் செல்கிறான். கதையின் முக்கால் பங்கு இந்த விஷயத்தை நுட்பத்துடன் சொல்கிறது. அடுத்தது கங்காதரனைப் பற்றியது. சுகவாசி, மண்ணோடு சம்பந்தமில்லாமல், உழைப்பில் ஈடுபடாமல் இருக்கிறான். கங்காதரன் ஓட்டலில் உணவருந்தும்போது பால்ராஜ் வந்து அவன் மேஜைமீது உட்கார்ந்து கொள்கிறான். கங்காதரன் இடம் மாறுகிறான். கங்காதரனிடம் உழைப்பும் இல்லை; காலமாற்றத்தை ஏற்றுக்கொள்ளவும் முடிவதில்லை. பால்ராஜின் வாழ்க்கை, பேரின்பத்தின் வாழ்க்கை விரும்பும்படி இருக்கிறது.

8.1.97 புதன்

Perfume - Patrick Suskind. The story of a murderer.

8.1.97 அன்று சுமார் 50 பக்கங்கள் படித்தேன். துறை சார்ந்த (மணம், நறுமணம், நறுமணத் திராவகங்கள் தயாரிப்பு) மிக நுட்பமான, விரிவான, ஆழமான அறிவை வெளிப்படுத்தும் நூல்.

படைப்புத் திறன் கொண்டது. கதையின் சரடு கொண்டது. ஒருவிதத்தில் எளிமையாகப் புரிந்துகொள்ளக் கூடியது.

துர்வாசனைகள் x நறுமணங்கள்.

9.1.97

காலையில் 4 மணிக்கு எழுந்திருந்து Patrick Suskindன் Perfume படித்துக்கொண்டிருக்கிறேன். இதமாகவும் விருப்பத்துடனும் படித்துக்கொண்டு போக முடிகிறது. ஆவலைத் தூண்டுவதாக இருக்கிறது. நாளொன்றுக்கு 50 பக்கங்கள் வரையிலும் படித்தால் நாலைந்து நாட்களில் படித்து முடித்துவிட முடியும்.

17.1.97

ஒரு சிறுகதைக்கான கரு. சாவி. சாவி கடைக்குக் கொண்டுபோவதுபற்றி ஒரு தகப்பனார் செய்யும் கெடுபிடி. கீழே வைக்கக் கூடாது. யாருடனும் பேசக்கூடாது. சிறுவன் சாவியைக் கீழே வைத்துப் பழகுகிறான். மரத்தில் வைக்கிறான். ஒரு நாள் சாவியைக் காணோம். பயந்து விடுகிறான். ஆனால், கடை திறந்துவிடுகிறது. மற்றொரு பையன் திறந்துவிடுகிறான். அப்பாவிடம் சொல்ல முடியவில்லை. கடைத் திண்ணையிலேருந்து எடுத்தேன்னு சொல்லுவேன். கடைத் திண்ணையிலேருந்து எடுத்தது தப்புன்னு உங்கப்பா சொல்லுவாரா?

29.1.97 செவ்வாய்

காலை 5 மணி

ஆதிலட்சுமி என்ற பெண்ணைப் பற்றி ஒரு குறுநாவல் எழுதலாம் என்ற எண்ணத்திலிருக்கிறேன். இவள் நாகர்கோவிலில் வாழ்ந்திருந்த ஒரு பெண். எனக்கு இவளைத் தெரியும். நேரில் தெரியாது என்றாலும் பலரும் சொன்ன செய்திகள் - தொலைவில் பார்க்க நேர்ந்த சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. இது போல் மிக நெருக்கமாகத் தெரியாதவர்களைப் பற்றித்தான் நன்றாக எழுத முடிகிறது, கற்பனைக்கான இடைவெளி அதிகம் இருப்பதால்.

ஆதிலட்சுமி மிக மோசமான ஒரு பெண்ணாக இருந்து ஒரு பிம்பமாக, தெய்வ கன்னியாக மாறுகிறாள். ஆதிலட்சுமி - விபசாரி, கடை வைத்திருப்பவள், வண்டி - குதிரை வண்டி - வைத்திருப்பவள் - பல தடவை தண்டனை பெறுகிறாள் - வக்கீல் குமாஸ்தா, பக்தை - பண்பாடு - ஒழுக்கம், வசதி, இந்து மதச் சின்னங்கள் - பெண்ணைக் கட்டிக் காக்கிறாள், பூட்டி வைத்துக்கொள்கிறாள் - அரசியல் ஈடுபாடு இருக்கிறது. நூறு பக்கங்களில் இவளுடைய கதையை எழுத முடியும் என்று நம்புகிறேன். இப்போது எழுதிக்கொண்டிருக்கும் நாவலை முடித்ததும் இந்தப் பணியைச் செய்யலாம்.

31.1.97 வெள்ளி

Perfume படித்து முடித்தேன். சிருஷ்டித் திறன் மிகுந்த படைப்பு என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. தான் எடுத்துக்கொண்டிருக்கும் விஷயத்தின் மீது இறுக்கமான பிடிப்பு இருக்கிறது ஆசிரியருக்கு. மூலம் மொழியின் மீது மிகுந்த வலிமையைக் காட்டுவதாக இருக்கலாம். கதை யதார்த்த தளத்தில் செல்லவில்லை. யதார்த்தம் கோலோச்சும் காலங்களிலேயே யதார்த்தத்தை மீறும் பல படைப்புகளும் வந்துள்ளன. குறியீட்டுத் தன்மை கொண்ட நாவலாக இருக்கலாம். இந்த நாவலை ஆசையுடன் நான் படிக்கத் தொடங்கினேன் என்றாலும் படிக்கும் நேரத்தில் மனம் நழுவிப் போய்விடுவதை உணர்ந்தேன். அவ்வாறு பல பகுதிகள் மனம் நழுவிப் போய்விட்டன. அத்துடன் எனக்குப் புரியாத ஆங்கிலச் சொற்களும் இந்நாவலில் நிறைய வருகின்றன. ஒவ்வொரு தடவையும் ஆங்கில அகராதியைப் புரட்டுவது உபயோகமானது என்றாலும் பல சமயங்களில் அதனைச் செய்ய மிகுந்த சோம்பல் ஏற்படுகிறது. மொழியை எழுதவோ பேசவோ பயன்படுத்தாதவர்கள் அகராதி மூலம் புதிய சொற்களின் பொருளைத் தெரிந்துகொண்டாலும் அவற்றைத் தக்கவைத்துக்கொள்வது மிகச் சிரமமானது.

25.7.98 சனிக்கிழமை

........

இப்போது Age of Innocence - Edith Wharton படிக்கத் தொடங்கியிருக்கிறேன். Age of Innocenceஐ மற்றொரு சந்தர்ப்பத்தில் படிக்கலாம் என்று முடிவுசெய்து 'பொன்னியின் புதல்வர்' படிக்கத் தொடங்கினேன். இது சுந்தாவால் எழுதப்பட்டு 1976ஆம் ஆண்டு வானதியால் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் பொழுது எப்படிப் போயிற்று என்று சொல்லத் தெரியவில்லை. தெளிவில்லாமல் இருக்கிறேன்.

கல்கியின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தபோது அவர்மீது மரியாதை ஏற்பட்டது. கல்கியின் நிறையான அம்சங்களை மட்டுமே தொகுத்துக் கொண்டுபோகும் முறை உண்மைக்குப் புறம்பாக இருக்கிறது. கல்கியின் இயற்கை வருணனைகூட எனக்குத் திருப்தி தருவதில்லை. மிகை எப்போதும் என்னை உறுத்துகிறது. நேற்றையக் கவிஞர்கள் இயற்கையைப் பார்த்ததுபோல் இவர் இயற்கையைப் பார்க்கிறார். புத்தகங்கள் மூலம் இயற்கையைப் பார்ப்பதைவிடக் கண்ணால் இயற்கையைப் பார்ப்பது நல்லது.

நான் இயற்கையுடன் இயற்கையான உறவுகொள்ள விரும்புகிறேன். இயற்கையை மனதைக் கொடுத்துப் பார்ப்பதுதான் இயற்கையான பார்வை. இயற்கையைப் பார்த்ததும் மனதை நெகிழ வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கற்பனை எவருக்கும் வேண்டாம். இயற்கை நெகிழச் செய்கிற அளவுக்கு நெகிழ்ந்தால் போதும். நெகிழச் செய்யவில்லை என்றால் அதை வெளிப்படையாக வைத்துக்கொள்ளலாம்.

28.7.98 செவ்வாய்

........

கல்கியின் வாழ்க்கை வரலாற்றை - 'பொன்னியின் புதல்வர்' - தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கிறேன். மிகவும் ஆர்வத்துடன் படிக்க முடிகிறது.

27.7.98லிருந்து 4.8.98 வரையிலும்

........

.....பொன்னியின் புதல்வர் படித்து முடித்தேன். என்னை வெகுவாகப் பாதித்த புத்தகம் என்று பட்டது. இன்று பொன்னியின் புதல்வர் மூலம் நான் பெற்ற பாதிப்பை ஒரு குறிப்பாக எழுதப்போகிறேன்.

உள்ளடக்கம்

Google Ads.....

Google