Google   www kalachuvadu.com

 

பத்தி

மனத்தின் அழைப்பு

கவிதா

நாகப்பட்டினத்தில் சமீபத்தில் நடந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் கலை இலக்கிய இரவில் கலந்துகொள்ள நேர்ந்தது. நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக நான் பார்த்தது, கண்ணாடி கலைக்குழுவின் 'மனசின் அழைப்பு' நாடகம். கண்ணாடி கலைக்குழு, அரவானிகளால் நடத்தப்படும் அரவானிகளின் குழு. 'மனசின் அழைப்பு' நாடகமும் அவர்களது சமூக நிலையைப் பிரதிபலிப்பதாகவே அமைக்கப்பட்டிருந்தது. அரவானிகளை இழிவுப்படுத்தும் சமூகத்தின் கொச்சையான மனப் போக்குகளுக்குக் கூர்மையான, தவிர்க்க முடியாத கேள்விகள் மூலம் எதிர்வினையாற்றும் நாடகம் அது. நாடகத்தை ஒரு முறையேனும் பார்க்கும் யாருமே அவர்களை இழிவுபடுத்தமாட்டார்கள் என்று நம்பலாம். நாடகத்தில் பங்குகொண்ட ஒரு அரவானி, "நான் எம்.எஸ்ஸி. படிச்சிருக்கேன்" என்று கூட்டத்தில் சொன்னார். எம்.எஸ்ஸி. படிப்பது போன்ற ஒரு சாதாரண விஷயங்கூட அரவானிகளுக்கு எவ்வளவு கடினமாகவும் அதை முடிப்பது எவ்வளவு பெரிய சாதனையாகவும் இருக்கிறது என்பதைக் கொஞ்சம் எண்ணிப் பார்த்தால் இந்தச் சமூகத்தில் அவர்கள் நிலை என்ன என்பது புரிந்துவிடும். நாடகம் முடியும் தறுவாயில் பல அரவானிகள் அழுதுகொண்டிருந்தார்கள்.

ஒரு பத்திரிகைப் பேட்டிக்காக நான் முதன்முறையாகச் சந்தித்த அரவானிகள், நடனக் கலைஞர் நர்த்தகி நடராஜ் மற்றும் அவரது தோழி சக்தி பாஸ்கர். சுமார் ஏழு வருடங்களுக்கு முன்பு அந்தச் சந்திப்பு நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். என் வயது காரணமாகவோ அனுபவமின்மை காரணமாகவோ அரவானிகளைச் சந்திப்பது பற்றி அப்போது என் மனத்தில் எந்த முன்முடிவும் இல்லை. அந்தச் சந்திப்பையும் மறக்க முடியாத சந்திப்பு என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால், நர்த்தகியையும் சக்தியையும் சமீபத்தில் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இடைப்பட்ட காலத்தில் அரவானிகள் பற்றியும் சமூகத்தில் அவர்களது நிலை பற்றியும் எனது பிரக்ஞை கூர்மைப்பட்டிருந்தது என்று சொல்லலாம்.

நர்த்தகி மற்றும் சக்தியைத் தொடர்ந்து சந்திக்க நேர்ந்ததில் அவர்களின் உலகத்துக்குள் அபூர்வமாக என்னை அவர்கள் அனுமதித்த பொழுதுகளில் நான் அறிந்துகொண்ட விஷயங்கள் பிரமிப்பூட்டுபவை.

ஓர் அரவானியாக மாறுவதற்கு முன்பு அவர்களுக்குள் நிகழும் மனப் போராட்டம், சாதாரண மனிதர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியது. "எங்கள் குடும்பம் உள்பட இந்தச் சமூகம் எப்படி எங்களை எதிர்கொள்ளும் என்று தெரிந்தும் அரவானியாக எங்களை வெளிப்படுத்திக்கொள்வது என்கிற முடிவை எடுக்கும்போது நாங்கள் எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கிறோம் என்பதை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது" என்கிறார் நர்த்தகி.

அரவானியாய் வெளிப்படுத்திக்கொள்வது என்பது வெறும் பெண் ஆடைகளை உடுத்திக்கொண்டு பெண்களைப் போலவே நடந்துகொள்வதில் மட்டும் அல்ல. முழுக்க முழுக்கப் பெண்களாக மாற வேண்டும் என்ற மன உறுதிகொண்ட அரவானிகள், அதற்குக் கடைப்பிடித்த பாரம்பரிய முறை மிகவும் கொடுமையானது. ஏதோவொரு காட்டிலோ குடிசையிலோ அவர்களது குல தெய்வத்துக்குப் பூஜை போடப்படும். பூஜைக்கு இடையில் 'அறுவைச் சிகிச்சை' நிகழ வேண்டிய அரவானியின் விதைகள் கயிறுகளால் கட்டி இழுக்கப்படும். பூஜை உச்சத்தை அடையும்போது அனேகமாக மரத்தால் ஆன ஒரு கத்தியால் அவர்களது ஆண் உறுப்பு வெட்டப்பட்டுவிடும். இப்படிப்பட்ட கொடூரமான முறைக்குத் தம்மை ஆட்படுத்திக் கொண்டுதான் பலர் உண்மையிலேயே அரவானிகளாக மாறியிருக்கிறார்கள் (அரசு மருத்துவமனைகளில் அரவானிகளுக்கான அறுவைச் சிகிச்சையை இலவசமாகச் செய்ய வேண்டும் என்னும் உத்தரவை அரசு சமீபத்தில்தான் பிறப்பித்திருக்கிறது. இந்த உத்தரவு அவர்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரக்கூடும்).

"எனக்கு இந்த அறுவைச் சிகிச்சை நடந்த சமயத்தில் பக்கத்திலேயே ஒரு குழியை வெட்டிவைத்திருந்தார்கள்" என்று நர்த்தகி இயல்பாகச் சொன்னாலும் அதிலுள்ள குரூரமான உண்மையை எதிர்கொள்வது கடினமாகவே இருக்கிறது. அதேபோலத்தான், நடனக் கலைஞராகியிருக்காவிட்டால் மும்பையில் சிவப்பு விளக்குப் பகுதியில் இருந்திருப்பேன் என்று அவர் சொல்லும்போது, இந்தச் சமூகத்தின் மீது அருவருப்பும் அவ நம்பிக்கையுமே ஏற்படுகின்றன.

ஆனால், நர்த்தகியோ சக்தியோ அவர்கள் மூலமாக எனக்கு அறிமுகமான தமிழ்நாடு அரவானிகள் சங்கத்தின் தலைவர் ஆஷா பாரதியோ இன்னும் நம்பிக்கையை விடாமல் பற்றிக்கொண்டிருக்கிறார்கள். சமூகத்தால் விளிம்பு நிலைக்கு விரட்டப்பட்டுவிட்டாலும் அவர்களுக்கு யார்மீதும் கோபமிருப்பதுபோலத் தெரியவில்லை. இத்தனைக்கும் நர்த்தகி, உலக அளவில் அங்கீகாரம் கிடைத்தாலும் உள்ளூரில் வீடு கிடைக்காமல் அவ்வப்போது அலைந்துகொண்டிருப்பவர். "கிடைத்த அங்கீகாரம்கூட என் நடனத்துக்குக் கிடைக்காமல் நான் அரவானி என்பதால் கிடைத்ததோ என்று சமயங்களில் என்னைப் பற்றியே சந்தேகங்கள் ஏற்படுவதுண்டு. அவ்வேளைகளில்தான் நான் உண்மையிலேயே துவண்டுபோகிறேன்" என்கிறார் நர்த்தகி.

அரவானியாக மாறியதாலேயே சக்தி தன் குடும்பத்தின் பெரும் சொத்தில் தனது பங்கை இழக்க வேண்டியிருந்தது. ஆஷா பாரதியோ தனது குடும்பத்தை மறக்க விரும்புபவராகவே இருக்கிறார். ஆனால், அவர்களிடம் எந்தவிதமான கசப்புணர்ச்சியும் இருப்பது போலத் தெரியவில்லை. சில சமயங்களில் சில வருத்தங்கள் மட்டுமே இருக்கின்றன. "நாங்கள் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு சமூகத்தின் வெறுப்புக்கு ஆளாகி எங்களையும் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் வருத்திக்கொண்டு அரவானிகளாக மாறுவதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது. நாங்கள் பெண்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது மட்டும்தான். ஆனால் உங்களை மாதிரிப் பெண்கள், பெண்ணியம் பேசிக்கொண்டு, பெண்களாகவே இருக்கமாட்டோ ம் என்கிறீர்கள். உங்களுக்குப் பொட்டு வைப்பது, பூ வைப்பது, நகை போடுவது, புடவை கட்டுவது எல்லாம் ஏளனமாக இருக்கின்றன. ஏன், பெண்மையைக் கொண்டாடுவது அவ்வளவு தப்பா? நாங்கள் அதற்காகத்தான் எங்கள் உயிரைப் பணயம் வைத்தோம்" என்று ஒரு முறை நர்த்தகி என்னிடம் சொன்னார்.

என்னுடைய அடிப்படை நம்பிக்கைகள் சிலவற்றைப் புரட்டிப்போட்ட வார்த்தைகள் அவை.

உள்ளடக்கம்

Google Ads.....

Google