ஒரு பத்திரிகையாளன் சாதி, மதம், அரசியல் எல்லாம் கடந்து, நடு நிலைமையோடு ஒரு
நீதிபதிக்கும் மேலானவனாக இருக்க வேண்டும். இதற்கு நல்ல முன்னுதாரணமாக இருக்கிறது
காலச்சுவடின் அணுகுமுறை 'பக்கத்தில் நிற்க ஒருவர்' என்ற தலையங்கமே இதற்கு நல்ல
சாட்சி. சாய்ந்தால் சாய்ந்த பக்கம் சாயும் பல செம்மறி ஆட்டுக்கூட்டப் பத்திரிகைகள்
இதனைப் பார்த்தாவது தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும்!
ராமகிருஷ்ணன்
காயக்காடு - 614 624
ஜூன் இதழில் வெளிவந்த 'குழந்தைகள்மீதான வன்முறை' சிறப்புப் பகுதி உள்ளத்தைத் தொட்டது.
ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்கும் வாய்ப்புள்ள எனக்கு இச்செய்திகள் மிகுந்த
நம்பிக்கையைக் கொடுத்தன. தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், பெரும்பாலும் கட்டுரைகளில்
குறிப்பிடுவதைப்போல விழிப்புணர்வற்று இருப்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். பயிற்சி
நேரத்தில் 'காலச்சுவடு' கட்டுரைகளை வாசித்துக்காட்ட எண்ணியிருக்கிறேன்.
சு. துரைக்குமரன்
புதுக்கோட்டை 622 005
ஜூன் 2007 இதழ் படித்தேன். சிறப்புப் பகுதியில் குழந்தைகள்மீதான வன்முறை குறித்த
தேவிபாரதி அவர்களின் கருத்துரை சுருக்கமாகவும் நல்லதொரு விவாதத்தின் மீதான
தொடக்கமாகவும் அமைந்துள்ளது. குழந்தைகள் சமூகத்தின் பொதுச் சொத்து, எதிர்கால
உலகத்தின் நம்பிக்கையே அவர்கள்தான் என்பது மறக்கப்பட்டுவிட்டது. இனி இதன்மீதான நல்ல
விவாதங்களைக் காலச்சுவடில் எதிர்பார்க்கலாம்.
மாயாவதியின் வெற்றி குறித்து ரவிக்குமாரின் நுணுக்கமான பார்வை ஆழமானது. மாயாவதியின்
வெற்றி ஏற்படுத்தும் தன்னம்பிக்கை இந்தியா முழுவதுமுள்ள தலித்துகளின் எழுச்சியாய்
அமைந்துள்ளது என்பது உண்மைதான். ஆனால், இதைத் தக்கவைப்பதும் வளர்த்தெடுப்பதும்
மாயாவதியின் செயல்பாட்டில்தான் உள்ளது.
பெரியார் திரைப்பட விமர்சனத்தைப் பழ. அதியமான் அருமையாக முன் வைத்துள்ளார்.
பெரியாரின் தனித்துவமான சீர்திருத்த கருத்துகள் இன்னும் ஆழமாகப் படத்தில்
பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும். காலச்சுவடின் சமுதாய, இலக்கியப் பணி தொடர
வாழ்த்துகிறேன்.
மு. செல்லா
மதுரை- 625006
ஜூன் இதழில் வெளிவந்த "குழந்தைகள்மீதான வன்முறை" அவசியமான பகுதியாக இருந்தது.
கவிதாவின் கட்டுரையில் வானவில் அறக்கட்டளையின் பணி பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.
நரிக்குறவர்கள் மற்றும் ஆதியன் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மட்டும்தான்
அவர்களின் சேவையா என்றாலும் ரேவதியைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
ஆர். சுரேஷ்
மதுரை - 11
வன்முறையும் வாழ்க்கை முறையும் இன்று ஒன்றாகிவிட்டதை அன்றாட நிகழ்வுகள் நமக்குக்
காட்டிக்கொண்டே இருக்கின்றன. ஜனநாயக வழிமுறைகள் முற்றிலும் மதிப்பிழந்துபோகும்போது
வன்முறை ஒன்றே வழி என்றாகிவிடுகிறது. அருந்ததி ராய் தன்னுடைய பேட்டியில்
குறிப்பிட்டதுபோல் அமைதியான வழிகளில் நம்முடைய பிரச்சினைகளை எடுத்து வைக்கும்போது
எந்த அரசும் கண் திறந்து பார்ப்பதில்லை; மாறாக, அமைதி வழியில் போராடுபவர்களை ஒரு
பூச்சியைப் பார்ப்பதுபோல் பார்க்கின்றனர்.
ஆனால், வன்முறையும் உயிர்க் கொலையும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டபின் அதுவே இயல்பான
வாழ்க்கை முறை என்றாகிவிட்டது. ஈராக் படுகொலைகளோ காஷ்மீர் படுகொலைகளோ ஏமன்,
பாகிஸ்தான் மற்றும் ஈழத்துப் படுகொலைகளோ மக்கள் மனத்தைப் பெரிதாகப் பாதிப்பதில்லை;
காரணம், மக்கள் மனங்கள் மரத்துப் போய்விட்டன.
ஜார்க்கண்டில் தொடர்ந்து மாவோயிஸ்ட் மற்றும் நக்சலைட்களால் மக்களும் காவலர்களும்
கொல்லப்படுவதும் அஸ்ஸாம், ஆந்திராவில் நிகழும் படுகொலைகளும் ஒரு 'செய்தி' என்ற
அளவிலேயே முடிந்துபோகின்றது.
மனிதன் இன்னும் மதத்திற்காகவும் கோட்பாடுகளுக்காகவும் மட்டுமே சாகத் துணிகிறான்.
உயிர் வாழ, மனிதனாக வாழத் தேவையானவற்றிற்காகப் போராடுவதற்குத் தயாராகவில்லை.
தீமையை எதிர்த்துப் போராடி ஆட்சிக் கட்டிலில் ஏறுகிறவனும் ஆட்சியின் சுகபோகங்களில்
தன்னை இழந்துவிடுகிறான். தன் பதவி, தன் வாழ்வு, தன் குடும்பம் இப்படிக்
குறுகிப்போனவனின் பார்வை ஜனநாயகத்தின் மேன்மையை எதிர்நோக்க அஞ்சுகிறது; இந்த அச்சமே
அவனைச் சர்வாதிகாரியாக்கிவிடுகிறது; ஜனநாயகத்தின் கதவுகள் அடைக்கப்படுகையில் வன்முறை,
தானே அரங்கேறிவிடுகிறது. இதற்கு ஒரே வழி மனிதன் தன் மனிதத்துவத்தை எந்த நிலையிலும்
இழக்காது காத்துவருவது மட்டுமே.
முனைவர் இரா. சத்தியமூர்த்தி
புதுக்கோட்டை
ஜூலை 2007 இதழின் முகப்பின் மாற்றம் வித்தியாசமான தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏ.பி. வள்ளி நாயகம் அஞ்சலிக் கட்டுரை கண்டேன். தமது கொள்கைகளுடன் ஏதாவது ஒரு வகையில்
தொடர்புகொண்டிருப்பவர்கள்மீது ஏ.பி. வள்ளிநாயகத்துக்கு ஒரு இணக்கமான மதிப்பீடு
இருந்துவந்தது என்ற சேக் அப்துல்லாஹ் அவர்களுடைய கருத்து மிகச் சரியாக இருந்தது.
ஏறத்தாழ அனைத்துச் சிற்றிதழ்களும் வள்ளிநாயகம் பற்றி அஞ்சலிக் குறிப்பினை
வெளியிட்டிருக்கின்றன. வள்ளி நாயகம் 26 புத்தகங்கள் எழுதியிருப்பதும் தொடர்ந்து
சமூகப் பணியை மேற் கொண்டிருந்ததும் இந்தச் சமூகத்தின் மீது அவர் கொண்டிருந்த
அக்கறையினைப் பறைசாற்றுகின்றன. திராவிடம், பொதுவுடைமை, தலித்தியம் சார்ந்த
கருத்தியல்கள் வழியே பயணப்பட்ட அவருடைய மரணம் இழப்பென்பது வெறும் வாய்
வார்த்தையில்லை.
'சிவாஜி'க்கு தேவிபாரதி காட்டமான, ஆனால், நேர்மையான விமர்சனம் எழுதியிருக்கிறார்.
ரூபாய் 200, 300 மற்றும் அதற்கு மேலும் டிக்கெட் வாங்கி, ஏதோ திருத்தலங்களுக்குப்
போய் வேண்டுதல்களை நிறைவேற்றும் பக்தர்களைப்போல் படம் பார்த்து விட்டுத் திரும்பினர்.
இது என்ன மனநிலை?
கே.என். செந்திலின் 'இரவுக் காட்சி' சிறுகதை ஆரம்பத்தில் பிரம்மாண்டமான போக்கோடு
தொடங்கி, நடுவில் என்னென்னவோ ஆகி, முடிவில் ஒன்றுக்கும் உதவாத ஒன்றாக
முடிந்துவிட்டது. இதுமாதிரி மனம்போன போக்கில் கதை எழுதுவது பெரிய கம்பசூத்திரமல்ல.
படிக்கின்ற வாசகர்களின் கௌரவத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் படைப்புகள் இருப்பது
நல்லது.
கே. ரவிச்சந்திரன்
திருச்சி
தினகரன் அலுவலகத்தில் நடந்த வன்முறை வெறியாட்டத் திற்கு எதிராக நாடே கொந்தளிக்கும்
என நான் நினைத்தேன். மாறாக, சூழல் எங்கும் பெரும் மௌனம் அல்லது லேசான முணுமுணுப்போடு
அடங்கிவிட்டது. அறிவுலகத் தளத்தில்கூட வலுவான குரல் எதுவும் ஒலிக்கவில்லை. நாம்
எப்படிப்பட்ட அரசியல் சூழ்நிலையில் வாழ்கிறோம் என்று நினைத்துப் பார்க்கும்போது
பேரச்சம் பற்றிக்கொள்கிறது.
இந்நிலையில் ஊமைக்காயத்தின் மேல் ஒத்தடம் தந்ததுபோலக் கண்ணனின் கட்டுரை ஒரு
நிம்மதியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
ஒரு விஷயத்தைத் தவிர்த்திருக்கலாம். அப்பாவிகளின் உயிரிழப்பால் என்னென்ன நன்மைகள்
ஏற்பட்டிருக்கின்றன எனச் சிலவற்றைப் பட்டியலிட்டிருக்கிறீர்கள். கலவரங்கள்,
உயிர்ப்பலிகள் மூலம் விளையும் நன்மைகளைப் பற்றிச் சிந்திப்பது அல்லது சிந்திக்க
முற்படுவது மிகவும் அபாயகரமானதாகவே எனக்குத் தோன்றுகிறது.
பாலமுருகன்
மல்லூர்
உள்ளடக்கம்