Google   www kalachuvadu.com

 

மதிப்புரை

ரஸவாதி

அய்யப்ப மாதவன்

ரஸவாதி
பௌலோ கொய்லோ
ஆங்கிலத்தில்: ஆலன் ஆர். கிளார்க்
தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629 001
முதல் பதிப்பு: டிசம்பர் 2006
பக் 160, விலை ரூ. 80

வாசிப்பும் உற்சாகமும் கலந்த சரளமான நடையில் எழுதப்பட்ட ரஸவாதி அண்மைக் காலத்திய குறிப்பிடும்படியான மொழிபெயர்ப்பு நாவல்.

ஒரு மாயாஜாலக் கதைத்தன்மை கொண்ட நாவல் போன்று தோன்றினாலும் எதார்த்த வாழ்வின் கூறுகள் மாயாஜாலமாகவே இருக்கின்றன. தவிர வாழ்வு, விநோதமான சம்பவங்கள்வழியே இழுத்துச் செல்கிறது என்பதற்குச் சந்தியாகு உதாரணமாக உள்ளான்.

தேடல் என்பது சந்தியாகு போன்ற ஆடோ ட்டியின் வாழ்வில் புதிய பரிமாணங்களையும் பயணங்களையும் மானிடப் பரவசத்திற்கு அழைத்துச்செல்கிறது. அவன் ஆடுகளுடன் பேசிக்கொண்டே பொழுதுகளை விசித்திரமாய்க் கழிப்பது நமக்கு ஆனந்தத்தை ஏற்படுத்துகிறது. ஆடுகளுக்குப் பொழுதுபோக அவன் படிக்கும் புத்தகங்களை வாசித்துக்காட்டுவதும் ஆடுகள் அவன் சொல்படி நடந்துகொள்வதாக அவன் நம்புவதும் பிறகு ஆடுகளுக்கு அவன் மொழியோ சைகையோ எதுவும் புரியவில்லையென்றும் அவன்தான் அதன் போக்கிற்குப் பழகிவிட்டான் என்பதைச் சொல்லும்போதும் நமது வாழ்வின் இயல்பான போக்கும் இப்படித்தான் இருக்கும் என்பது புலனாகிறது.

அவன் ஒரே கனவை இரண்டுமுறை காண்கிறான். அது புதையல் பற்றிய கனவு. கனவில் வரும் குழந்தை புதையல் இருப்பதாகச் சொல்கிறது. இடத்தைச் சொல்வதற்குள் இரண்டுமுறையும் கனவிலிருந்து விழித்துவிடுகிறான். ஒரு கனவு பலிக்கும் என்ற நம்பிக்கையில்தான் அவனது பயணம் தொடங்குகிறது. தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான ஆடுகளிடமிருந்து விடைபெறுகிறான். கனவை நோக்கி மெல்ல மெல்ல நகர்கிறான். அவன் கனவை அடைந்தானா அடையவில்லையா என்பது முக்கியமானதல்ல. ஒரு பயணம் அதில் எதிர்கொள்ளப்படும் ஆபத்துகள் தாங்கமுடியாத வலிகள் இவற்றையெல்லாம் சுமந்துகொண்டு செல்வதன் காரணம் கடைசி இலக்கான புதையல் மாத்திரமில்லை. இடைப்பட்ட மிகச் சில தருணங்களே அதனை நோக்கி நகர்த்துகிறது.

முடிவற்றப் பாலைவனத்தில் அவன் பாத்திமா என்ற பெண்ணைச் சந்திக்கிறான். கண்ணுக்கினிய பாத்திமா என்கிற புதையலைவிடவும் வேறெதுவும் முக்கியமில்லை. தவிர வாழ்வதற்குரிய நிம்மதி பாத்திமா என்று மட்டுமே தோன்றுகிறது. பாத்திமாவுடன் நிம்மதியாய் இந்தப் பாலைவனத்தின் ஆலோசகராக ஆதிவாசிகளுடன் இணைந்து வாழ்ந்துவிடலாமென்று சந்தியாகு தான் சந்தித்த ரஸவாதியிடம் கூறுகிறான். ரஸவாதியோ அவனிடம் அவன் வந்த நோக்கம் வேறு என்றும் பாலைவனத்தில் புதையலைத் தேடித்தான் வந்ததாகவும் அத்தோடு பிரமிடுகளையும் பார்க்க ஆவலாக இருந்ததாகவும் ஆனால், வாழ்க்கையில் ஒரு பெண், வசதிகள் வந்தவுடன் லட்சியத்திலிருந்து, முதன்மையான நோக்கத்திலிருந்து விலகுவது கூடாதென்றும் அதற்குரிய தாத்பரியங்களை விளக்குகிறார்.

கீழைத் தேய அற்புதங்கள், சித்துகள், புராதன நம்பிக்கைகள் கொண்ட இந்த நாவல் சர்வதேச வாசகரை மனத்தில் வைத்து எழுதப்பட்டிருந்தாலும் இந்தியாவின் ஏதோ ஒரு பிரதேசத் தன்மையை மையப்படுத்தும் நாவலாகவே இருக்கிறது. நாவல் என்பதைவிட நீள்கவிதை என்றோ அரைத் தூக்கத்தில் கேட்ட பாட்டி கதை என்றோ சொல்லலாம். பௌலோ கொய்லோ தீவிரமான கிறித்துவ நம்பிக்கைக் கொண்டவராக இருந்தாலும் இயற்கையின் அற்புதங்களைச் சொல்லும் கீழைநாட்டுக் கதைசொல்லியாக மாறிவிடுகிறார். அது நாவலில் வெளிப்படும் இடம் சந்தியாகு காற்றாய் மாறும்போது நமக்குள் ஏற்படும் சஞ்சாரம் நிலையற்று அலைகிறது.

ஒரு படைப்பு தத்துவங்களைக் கோரி நிற்கவும் தர்க்கங்களைப் போதிக்கவல்லதுமான நாவல்களோடு எளிய உரையாடல்களைக் கொண்ட இந்த நாவலும் தன்னுடைய இடத்தை நிச்சயப்படுத்திக்கொள்கிறது என்று சொல்லலாம்.

உள்ளடக்கம்

Google Ads.....

Google