Google   www kalachuvadu.com

 

மதிப்புரை

புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்புகள்
ஓர் உதாரணச் செம்பதிப்பு

ஜி. குப்புசாமி

புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்புகள்
பதிப்பாசிரியர்: ஆ. இரா. வேங்கடாசலபதி
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629 001
முதல் பதிப்பு: டிசம்பர் 2006
பக் 840, விலை ரூ. 450

தமிழில் இலக்கிய மொழிபெயர்ப்பு என்பதைப் பற்றித் தீர்க்மான பார்வையின்றி, குழப்பமான மேம்போக்கான கருத்தாக்கங்களே நிலவிவந்த ஒரு காலகட்டத்தில் மொழிபெயர்ப்பைப் பற்றித் தெளிவான இலக்கியப் பிரக்ஞைகொண்ட பார்வையை முன்வைத்தவர் புதுமைப்பித்தன். தழுவலா மொழிபெயர்ப்பா என்பது பற்றி கல்கி, க.நா.சு. ஆகியோருடன் புதுமைப்பித்தன் நடத்திய விவாதங்கள் ஆ. இரா. வேங்கடாசலபதி பதிப்பித்த 'அன்னை இட்ட தீ' தொகுப்பில் விரிவாகவே இடம்பெற்றிருக்கின்றன. தாம் மொழிபெயர்த்த நூல்களுக்கு எழுதிய முன்னுரைகளும் மொழிபெயர்த்த கதைகளுக்குப் புதுமைப்பித்தன் எழுதிய அறிமுகக்குறிப்புகளும் இப்போது வேங்கடா சலபதி பதிப்பித்திருக்கும் 'புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்புகள்' தொகுப்பில் முழுமையாகக் கிடைக்கின்றன. மொழி பெயர்ப்பு அதன் நவீன அர்த்தத்தில் வேர்விடத் தொடங்கியிருந்த அந்தக் காலகட்டத்திலேயே புதுமைப்பித்தனுக்கு மொழிபெயர்ப்பு குறித்த மிக ஆழமான புரிதல் இருந்திருப்பது இத்தொகுப்பின் மூலமாகத் தெளிவாகிறது. இது அவரது மேதமைக்கு மற்றொரு சான்று.

நவீனத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடியாகக் கருதப்படும் புதுமைப்பித்தன் அவரது சிறுகதைகளுக்காகவும் கட்டுரைகள் மற்றும் இலக்கிய விமரிசனங்கள், விவாதங்களுக்காகவும் அறியப்பட்டிருக்குமளவிற்கு மொழி பெயர்ப்புகளுக்காகக் கவனம் பெறாதிருப்பதற்கான காரணம் அவரது மொழிபெயர்ப்புகள் முழுமையான தொகுதியாக வெளிவந்திராததும் அவற்றைப் பற்றி எந்த விவாதமும் தமிழ்ச் சூழலில் நடைபெறாததுமேயாகும். இந்த இடை வெளி சலபதியின் பேருழைப்பாலும் அர்ப்பணிப்பாலும் சாத்தியமாகியுள்ள இத்தொகுப்பின் மூலம் நிரப்பப்படும் என்று நம்பலாம். பக்க அளவில் எடுத்துக்கொண்டால் தன் சொந்தக் கதைகளைவிடச் சற்றுக் கூடுதலாகவே புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்புகளும் செய்திருப்பது தீவிர வாசகர்கள் பலருக்கும்கூட இத்தொகுப்பு வெளிவந்திருப்பதற்கு முன் தெரிந்திருக்காது.

மேதாவிலாசமும் அந்தரங்கசுத்தியும் சுதந்திரமும் கொண்ட அசலான கலைஞனாக இருந்தபோதிலும் தனது படைப்புகளில் உருவ அமைதியைக் கொண்டுவருவதில் போதிய சிரத்தை எடுத்துக்கொள்ளாதவர் என்று புதுமைப்பித்தன் மீது ஒரு விமரிசனம் இருந்துவருகிறது. 'கதையைக் கடைசிவரை நடத்திக்கொண்டு செல்வதில் பொறுமையில்லாதவராகவும் மிகுந்த ஈடுபாட்டுடன் ஆரம்பித்த பல கதைகளில் களத்தை விஸ் தாரமாக அமைத்து, பாத்திரங்களை ஒருவர் பின் ஒருவராக எழுப்பிப் பெரும்போக்காக நகர்த்தும் சிரத்தை பின்பகுதியில் சலிப்படைந்து அதுவரையிலும் கவனமாக இழைத்துக்கொண்டுவந்த இழைகளையெல்லாம் அவசரஅவசரமாக இழைநுனிகளில் பட்பட்டென்று முடிச்சுப்போட்டு முற்றுப்புள்ளி குத்திவிடுவதையும்' புதுமைப்பித்தனின் பீறிட்டுப் பிரவாகிக்கும் மேதமை நிகழ்த்திவிடுகிற அமைதிக்குலைவுகளாக சுந்தர ராமசாமி வருணிக்கிறார். இத்தகைய விமரிசனங்களும் விரக்திக்கும் மனக் கசப்பிற்கும் ஆளான கலைஞர் எனும் பெயரை அவர் பெற்றிருந்ததும் புதுமைப்பித்தன் தனது மொழிபெயர்ப்புகளிலும் அத்தகைய அவசரமும் அசிரத்தையுமான கையாளலைத்தான் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று எவ்விதமான ஆய்வோ ஒப்பு நோக்கலோ இன்றி உண்டாகியிருந்த ஓர் அபிப் பிராயமும் அவரது மொழிபெயர்ப்புகள்மீது போதிய கவனக்குவிப்பு இல்லாததற்குக் காரணியாக இருக்கலாம். ஆனால், சலபதி பதிப்பித்திருக்கும் இம்முழுமையான தொகுப்பை மறு வாசிப்பு செய்கையில் நவீனத் தமிழ் இலக்கியத்துக்கு மட்டுமல்ல, நவீனத் தமிழ் மொழிபெயர்ப்பியலுக்கும் புதுமைப்பித்தன்தான் முன்னோடி என்பது தெளிவாகிறது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை பிறமொழி ஆசிரியர்களின் கருவை, கருத்தை, கதையை, கதை மாந்தரை உள்வாங்கிக்கொண்டு மூல ஆசிரியர் பெயர் சுட்டியோ சுட்டாமலோதான் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுவந்திருக்கிறது. 1930களில் மொழிபெயர்ப்புப் பற்றிய நவீனப் பார்வையும் அணுகு முறையும் தமிழ் இலக்கிய உலகில் காலூன்றத் தொடங்கின. இந்தத் தருணத்தில்தான் அதுவரையிலான மொழி பெயர்ப்புகள் தழுவல் என்றும் மூலத்திற்குத் துரோகம் செய்வன எனவும் இனங்காணப்பட்டன. நவீன இலக்கிய மொழிபெயர்ப்பு என்பதற்கு அதன் இன்றைய பொருளில் முன்னோடிகள் எனப் பாரதி, வ.வே.சு. ஐயர், மகேசகுமார சர்மா, புதுமைப்பித்தன் ஆகியோரைத்தான் கூறமுடியும். (-ஆ. இரா. வேங்கடாசலபதி தனது பதிப்புரையில்.)

புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த கதைகளில் அவரது வாழ்நாளில் நூலாக்கம் பெற்ற தொகுப்புகள் உலகத்துச் சிறுகதைகள், பிரேத மனிதன், உயிர் ஆசை, (அமெரிக்கக் கதைகள்), மணியோசை (ஜப்பானிய கதைகள்), மற்றும் உலக அரங்கு என்ற நாடகக் கதைகள் ஆகியவையாகும். அவரது மறைவிற்குப் பின் பளிங்குச் சிலை (ருஷ்யக் கதைகள்), தெய்வம் கொடுத்த வரம், முதலும் முடிவும், பலிபீடம் போன்றவை வெளி வருகின்றன.

'அமைப்பு லாவண்யங்களிலும் கையாளப்படும் அசாதாரண, வார்த்தைக்கு மீறிய அதீத விஷயங்களிலும் சிகரங்கள் என்று சொல்லப்படும் கதைகளையும் தமிழ்நாட்டு வாசகர்களின் விருப்பு வெறுப்புகளை மதித்துக் கூடுமானவரை ஓரளவு கதைச்சத்து இருக்கக் கூடிய, ஆனால் அமைப்பு விசேஷங்களுடன் பொருந்திய கதைகளையும் தேர்ந்தெடுத்துத் தருவதே என் நோக்கம்' என்று 'உலகத்துச் சிறுகதைகள்' தொகுப்பின் முன்னுரையில் கூறும் பு.பி. தேர்ந்தெடுத்த கதைகளைப் பார்க்கும்போது அவரது பரந்த வாசிப்பும் அவர் வரித்துக்கொண்டிருந்த புனைபெயருக்குத் தகுந்தாற்போல் புதுவிதமான கதைகளை அறிமுகப்படுத்தும் ஆர்வமும் வெளிப்படுகின்றன. அத்தகைய புதுவிதமான கதைகளிலும் அன்றைய நவீன இலக்கிய உலகை உதாரணப்படுத்தும் நுட்பமான கலையம்சங்கள் கொண்ட கதைகளைத்தான் அவர் பொறுக்கியெடுத்திருக்கிறார்.

'உலகத்துச் சிறுகதைகள்' தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஷெஹர் ஜாதி - கதைசொல்லி, அராபிய இரவுகளின் பின்னீட்சியாக ஹென்றி டிரெக்னியரால் புனையப்பட்ட கதை. தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள கர்ணாமிர்தமாகக் கதைகள் பொழிந்து வந்தவளுக்கு மரணபயம் நீங்கி, கணவனும் இறந்த பிற்பாடு, அவளுடைய சிருஷ்டி மனத்தில் கவிகிற வெறுமையை, விரக்தியை, காதலுக்கு ஏங்கும் தவிப்பை மிக அற்புதமாகச் சித்தரிக்கும் இக்கதையைப் புதுமைப்பித்தன் மொழிபெயர்க்கப் பயன்படுத்தியிருக்கும் நடை கவனிக்கத்தக்கது. மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளனுக்குப் பலவிதமான நடைகளையும் பல்வேறுவிதமான தொனி வேறுபாடுகளையும் படம்பிடித்துக் காட்டும் திறமை இருக்க வேண்டுமென்பதற்கு உதாரணமாக இக்கதையில் பயன்படுத்தப்பட்டுள்ள நடையும் கதையின் அடிநாதக்குரலும் அவரது 'சிற்பியின் நரகம்' சிறுகதைக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதை உணரலாம். இதில் சுவாரசியமூட்டும் தகவல் என்னவென்றால் 'சிற்பியின் நரகம்' வெளி வந்தது ஆகஸ்ட் 1935இல். 'ஷெஹர்ஜாதி' வெளிவந்தது நவம்பர் 1935இல். இரண்டு கதைகளிலும் இருவேறு கலைஞர்கள். ஒரு கலைப் படைப்பு நிறைவடைந்ததும் சூழ்கிற வெறுமை. கலையின் பூரணத்துவம் சூனியத்திலா முடிகிறது? இரண்டு கதைகளிலும் ஒரே விதமான கேள்விகள். படைப்பு மனம் உருவாக்கும் கதைகளின் உணர்வுத்தளம் மட்டுமல்ல, அது தேர்ந்தெடுத்து வாசிப்பதும் தன் மொழியில் பெயர்த்துக்கொள்வதும்கூட அதே அலைவரிசையில் இயங்கும் படைப்புகளாகத்தான் இருக்கின்றன.

தற்போது மறுவாசிப்புக் கோருகிற மற்றோர் அற்புதமான சிறுகதை எலியா எஹ்ரன்பர்கின் 'ஓம் சாந்தி! சாந்தி!' (பு.பி. மொழிபெயர்த்த கதைகளின் தலைப்புகளிலும் வசனங்களிலும் சிற்சிலமுறை இவ்வாறான இந்திய, தமிழக, வட்டாரக் கலாச்சாரப் பாதிப்புகள் மயங்கிக் காணப்படுகின்றன.) பாழ்வெளியான ஒரு பிரதேசத்தைக் கைப்பற்ற நடக்கும் ஒரு வியர்த்தமான யுத்தத்தின் மத்தியில் எதிரிகள் இருவர் ஒருவருக்கொருவர் நேருக்குநேர் சந்தித்துக்கொள்கின்றனர். களைப்பில் ஸ்தம்பித்து ஒருவரையொருவர் தாக்கவும் திராணியின்றி வெறித்துக்கொண்டு நிற்கின்றனர். பின் ஒருவர் தன்னிடமிருந்த புகைக்குழலை எதிரிக்குத் தருகிறான். இருவரும் மாறிமாறிப் புகைத்து, ஆசுவாசப்படுத்திக்கொண்டு, பின் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு மடிந்துபோகின்றனர். அவர்கள் மடிந்து, மக்கி, பலகாலம் கழித்து மனித சூன்யப் பிரதேசமாக வெறிச்சோடிப்போயிருக்கும் அப்பகுதியில் ஒன்றோடொன்று கலந்து பிணைந்திருக்கும் எலும்புக் கூடுகளுக்கும் அருகே விழுந்து கிடக்கும் புகைக்குழலுக்கும் மத்தியில் கதை தொடர்ந்து செல்கிறது. வெகு நுணுக்கமான இக்கதையை இவ்வளவு துல்லியமாக மொழிபெயர்க்க ஒரு மகத்தான கலைஞனால்தான் இயலும்.

புதுமைப்பித்தனின் மொழியாளுமையும் நடையின் பலமும் அலெக்ஸாண்டர் குப்ரினின் 'பலிபீட'த்தை (Yama, the Pit) வாசிக்கையில் தெள்ளெனத் தெரிகிறது. இந்நாவலின் முதல் ஒன்பது இயல்களை மட்டுமே புதுமைப்பித்தன் மொழிபெயர்க்க, அவர் மறைவிற்குப் பின் இந்நாவலின் முதல் பாகத்தின் எஞ்சிய நான்கு இயல்களைக் க.நா.சு. மொழிபெயர்த்து நிறைவு செய்திருக்கிறார். முதல் ஒன்பது இயல்களிலிருக்கும் காத்திரமும் ஆழமும் புதுமைப்பித்தனைவிட மொழிபெயர்ப்புகளைப் பற்றி அதிகம் பேசியவரும் அதிகம் மொழி பெயர்த்த வருமான க.நா.சு. நிறைவுசெய்த பகுதிகளில் நீர்த்துப் போயிருப்பது புதுமைப்பித்தனின் மேதமைக்குச் சான்று.

புதுமைப்பித்தனை முன்வைத்து நடத்தப்பட்ட மற்றொரு பெரிய விவாதம் தழுவல்கள் குறித்தது. 'மொப்பஸான் கதையின் தழுவு' என்ற விளக்கக் குறிப்பைத் துணைத்தலைப்பாகச் சேர்த்துத் 'தமிழ் படித்த பெண்டாட்டி' என்னும் கதையை புதுமைப்பித்தன் வெளியிட்டுள்ளார். இந்த ஒரு கதையைத் தவிர வேறெந்தத் தழுவல் கதையையும் புதுமைப்பித்தன் என்னும் பெயரில் அவர் எழுதி வெளியிடவில்லை. மேலும், அவரது வாழ் நாளில் அவர் செய்திருந்த தழுவல் கதைகள் எதுவும் நூலாக்கம் பெறவுமில்லை. அவர் எழுத்துலகில் நுழைந்த முதல் இரண்டாண்டுகளில் மட்டுமே இத்தகைய தழுவல் கதைகள் சிலவற்றை எழுதியிருப்பதைத் தழுவல்கள் பிரதானமாக நிகழ்ந்து வந்த காலகட்டத்தில் பொதுத் தன்மைக்கு ஆளாகிச் செய்த காரியமாகத்தான் கருத இடமிருக்கிறது என்று குறிப்பிடும் சலபதி, தழுவலா மொழிபெயர்ப்பா என்ற விவாதத்தை 1937இல் தொடங்கிவைத்துத் தழுவி எழுதுதலை மிகத்தீர்க்கமாக எதிர்த்த அவர் 'புதுமைப்பித்தன்' என்ற பெயரில் இல்லாமல் வேறு பெயர்களில் இக்கதைகளை வெளியிட்டதை வைத்துப் பார்க்கையில், தன் படைப்பியக்கத்தில் கதையைக் கையாளும் வெவ்வேறு உத்திகளுக்கான பயிற்சியாகவே இத்தகு தழுவல்களை முயன்று பார்த்திருக்க வேண்டும் என்று சரியாகவே அனுமானிக்கிறார்.

சாதாரண மனிதனுக்குப் பிறநாட்டு நாகரிக சம்பிரதாயங்கள்மீதுள்ள சந்தேகத்துடனும் பயத்துடனும் கலந்த வெறுப்பைப் போக்கி மற்றவர்கள் இலக்கியங்களை அனுதாபத்துடன் அளாவளாவவைக்கும் நோக்கத்தில் மட்டுமே மொழி பெயர்ப்பதாகக் கூறும் புதுமைப்பித்தன், அயல்மொழி ஆள் பெயர்கள், புறச் சின்னங்கள், பழக்கவழக்கங்கள் போன்றவற்றை அப்படியே மொழிபெயர்ப்பிலும் கொண்டுவருகிறார். பலசமயங்களில் வாக்கியத்தின் போக்கிலோ அடைப்புக்குள்ளோ அடிக்குறிப்புகளிலோ விளக்கியும் செல்கிறார். மொழிபெயர்க்கப்படும் கதையின் கலாச்சாரத்திற்கு மொழிபெயர்ப்பு விசுவாசமாக இருக்க வேண்டிய அதே நேரத்தில் வாசிப்பவனுக்கும் விலகலைக் கொண்டுவந்துவிடக் கூடாதென்ற கவனத்தில் இவ்விருநிலைகளுக்கிடையே சிலவேளைகளில் அவர் சமன்செய்ய நேர்ந்திருக்கிறது.

இருந்தும், இத்தகைய சிற்சிறு சறுக்கல்களை அதனதற்குரிய விமரிசன மதிப்பில் நிறுத்திவிட்டு அவர் மொழிபெயர்த்த சுமார் எழுபது கதைகளில் உருவ அமைதி கூடிப்பெற்ற, நுட்பமான கலையம்சங்கள் நிறைந்த, அழுத்தமான கதைகளாக 'இஷ்ட சித்தி', 'ஓம் சாந்தி! சாந்தி!', 'நாடகக்காரி', 'ரோஜர் மால்வினின் ஈமச் சடங்கு', 'சிரித்த முகக்காரன்', 'ஷெஹர்ஜாதி', 'முதலும் முடிவும்', 'மிளிஸ்', 'உயிர் ஆசை' போன்ற கதைகளைக் கூறமுடிகிறது. புதுமைப்பித்தன் என்று நாமெல்லோரும் அறிந்திருக்கும் கலைஞனின் ஆன்மா சிறிதளவேனும் பிரதிபலிக்கக்கூடிய கதைகளையே தெரிவுசெய்து வந்திருக்கிறார் என்பது 'சிரித்தமுகக்காரன்', 'இஷ்டசித்தி' போன்ற கதைகளை வாசிக்கும்போது புலப்படுகிறது. 'சிரித்த முகக்காரன்' கதையில் காணப்படும் இந்தப் பத்தியைத் தனியாக வாசித்தால் அது ஏதோவொரு புதுமைப்பித்தனின் சிறுகதையில் இடம்பெற்றிருக்கக்கூடிய வரிகளாகவே தோன்றுகிறது:

'ஒவ்வொரு சிறு பேச்சும், ஒவ்வொரு சிறுவம்பும், சிரிப்பைத் தூண்டும் விஷயமும் உலகத்தின் சோகத்திலேதான் பிறக்கிறது. அதுதான் உண்மை. மனிதர்கள் பரஸ்பரம் சந்தித்துக்கொள்வது குதூகலமோ, துக்கமோ எதுவானாலும் உலகத்தின் சோகத்திலும் சத்தியத்திலும் பிறக்கிறது.'

இத்தகைய செம்பதிப்புக்குப் பின்னால் இருந்திருக்கக்கூடிய வேங்கடாசலபதியின் பேருழைப்பு பிரமிப் பூட்டுகிறது. இதுவரை வெளிவந்த புதுமைப்பித்தனின் நூல்களை வரிசையாகத் தொகுத்து மறுபதிப்பு செய்கிற மேம்போக்கான வழியை முற்றிலுமாகத் தவிர்த்து, இக்கதைகள் முதலில் பிரசுரமான சஞ்சிகைகளில் இடம் பெற்றிருந்த அறிமுகக் குறிப்புகள், அடிக்குறிப்புகளையும் கவனமாகத் தேர்ந்தெடுத்து (பிற்பாடு வெளிவந்த தொகுப்புகள் பலவற்றில் இத்தகைய குறிப்புகள் சௌகரியமாக விடுபட்டுப் போயுள்ளன!) ஏற்கெனவே மொழிபெயர்ப்புக் கதையாகச் சேர்த்து வைத்திருந்த தவறான கதைகளைக் களைந்து, மூல பாடத்திலுள்ள அச்சுப்பிழை மட்டும் திருத்தம் செய்து பெரும் பொறுப்புணர்வோடு இத்தொகுப்பைப் பதித்திருக்கிறார் சலபதி. 'பிரேத மனிதன்' குறுநாவலின் இரண்டாம் பதிப்பில் (புதுமைப்பித்தன் காலத்திலேயே வெளிவந்தது) சேர்க்கப்பட்டிருந்த ஒரு முழு இயலையும் மாற்றம் செய்யப்பட்டிருந்த பத்திகளையும் கவனமாக இத்தொகுப்பில் சேர்த்திருக்கிறார். புதுமைப்பித்தன் மறைவுக்குப் பின் வெளிவந்த பதிப்புகளில் பதிப்பாளர்கள் செய்திருந்த மாற்றங்கள், பொறுப்பற்ற விடுதல்கள் களையப்பட்டிருக்கின்றன. பின்னிணைப்புகளில் புதுமைப்பித்தன் எழுதிய குறிப்புகள், முதல் வெளியீட்டு விவரங்கள், புனைபெயர், வெளிவந்த இதழ், முதல் பதிப்பு விவரங்கள் ஆகியவை தரப்பட்டு ஒரு முழுமையான செம்பதிப்புக்கு உதாரணமாக இருக்கின்றன. புதுமைப்பித்தன் ஆய்வாளர்களும் இன்றைய தலைமுறை வாசகர்களும் சலபதிக்கும் காலச்சுவடு பதிப்பகத்துக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளனர்.

உள்ளடக்கம்

Google Ads.....

Google