தொழிற்படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நீதிமன்றங்களின்
தீர்ப்புகளை எதிர்பார்த்துத் தவித்துக் கொண்டிருந்த நிலை இந்த ஆண்டும் தொடர்கிறது.
நுழைவுத் தேர்வு ரத்துசெய்யப்பட்டுவிட்டாலும் இதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
சுயநிதிப் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாகத்
தமிழக அரசு கொண்டுவந்த சட்டம் செல்லாது என அறிவித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த
ஆண்டு மட்டும் பழைய முறையில் மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளலாம் எனப் பெரியமனது
பண்ணியிருந்தது. அதை எதிர்த்துச் செட்டிநாடு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் உச்ச
நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டில் மேலும் மோசமானதொரு தீர்ப்பு வந்துள்ளது.
இதன்மூலம் சுயநிதிக் கல்லூரிகளின் கொள்ளைக்கு முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் 65 விழுக்காடு
இடங்களை அரசிடம் கொடுக்கச் சம்மதித்திருந்தன. அதுபோலவே சிறுபான்மை வகுப்பினர்
நடத்தும் கல்லூரிகளில் பெரும்பாலானவை 50 விழுக்காடு இடங்களை அரசிடம் கொடுக்க
ஒப்புக்கொண்டிருந்தன. ஆனாலும்கூடச் சுயநிதிக் கல்லூரிகளில் அரசு தலையிடக் கூடாது
என்று நீதிமன்றம் சொல்லிவிட்டது. நிர்வாகத்தால் நிரப்பப்படும் இடங்களில் தகுதி,
இடஒதுக்கீடு முதலியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டுமென அரசும் நீதிமன்றங்களும்
ஆணையிட்டிருந்தாலும் அவற்றைத் திறம்பட மீறுவதற்கான உபாயங்கள் சுயநிதிக் கல்லூரிகளின்
நிர்வாகத்தினருக்குத் தெரியும் என்பதால் பணமூட்டைகள் இல்லாமல் இனி எவரும் அந்தக்
கல்லூரிகளின் காம்பவுண்டுகளுக்குள் நுழைய முடியாது.
சுயநிதிக் கல்லூரிகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்த புகழ்பெற்ற இனாம்தார்
வழக்கின் தீர்ப்பு கல்விச் சூழலையே நாசமாக்கிவிட்டதை நாம் அறிவோம். 'அடிப்படை உரிமை'
என்ற பெயரில் வெளிப்படையான கல்விக் கொள்ளைக்கு நீதிமன்றமே அனுமதி அளித்தது நமது
ஐனநாயகத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய துயரச் சம்பவமாகும். அந்தத் தீர்ப்பை
அடிப்படையாகக்கொண்டே இப்போது சென்னை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் ஆணை
பிறப்பித்துள்ளன.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்த நேரத்தில் அரசு சார்பில் சில தகவல்கள்
நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டன. மொழி மற்றும் மதச் சிறுபான்மையினரின் பெயரால்
நடத்தப்படும் கல்லூரிகளில் சுமார் ஐம்பது விழுக்காடு கல்லூரிகள் 2006-2007ஆம்
ஆண்டில் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒரேயொரு மாணவரைக்கூடச்
சேர்த்துக்கொள்ளவில்லை என்ற தகவலை அரசு கூறியிருந்தது.
தமிழ்நாட்டில் 76 சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் சிறுபான்மை இனத்தவரின் பெயரால்
நடத்தப்படுகின்றன. அவற்றுள் 32 கல்லூரிகளில் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு
மாணவரும் கடந்த ஆண்டு சேர்க்கப்படவில்லை. அது மட்டுமின்றி அந்த 76 கல்லூரிகளில்
15,090 இடங்கள் சிறுபான்மை இனத்தவருக்கென ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் 3,306 மாணவர்கள்
மட்டுமே கடந்த ஆண்டு சேர்க்கப்பட்டுள்ளனர். ஆக, சிறுபான்மை இனத்தவரின் பெயரால்
இந்தக் கல்லூரிகள் முழுக்க முழுக்கச் சட்டத்துக்குப் புறம்பான கல்விக் கொள்ளையில்
ஈடுபட்டுள்ளன என்ற உண்மையை ஆதாரத்தோடு நீதிபதிகளிடம் அரசு எடுத்துக்கூறியது. ஆனால்,
நீதிமன்றம் இந்த உண்மையைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அது தனது தீர்ப்பில் இது
பற்றி எதுவும் பேசவில்லை.
சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்துக்குச்
சென்றது. ஆனால், அதனால் பயனெதுவும் கிடைக்கப்போவதில்லை. ஏற்கனவே இருக்கும் இனாம்தார்
வழக்குத் தீர்ப்பைத்தான் உச்ச நீதிமன்றம் மீண்டும் எடுத்துக்காட்டும். தமிழக அரசின்
சட்டம் ரத்து செய்யப்பட்டது ரத்துசெய்யப்பட்டதுதான். இந்த நிலையை மாற்ற வேண்டுமெனில்
கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும். அவசரநிலைக் காலத்தில்
பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக்
கொண்டுவந்தாலொழிய இதில் எந்தச் சீர்திருத்தத்தையும் செய்யமுடியாது. இன்று மத்திய
அரசில் செல்வாக்கு செலுத்திவரும் தி.மு.க. உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் இந்த உரிமையைக்
கேட்டுப் பெறுவதில் முனைப்புக் காட்டாதது ஏன்?
சுதந்திரம் அடைந்த புதிதில் கொண்டுவரப்பட்ட நிலச் சீர்திருத்தச் சட்டங்கள் பலவற்றை
அடிப்படை உரிமைகள் என்ற பெயரில் நீதிமன்றங்கள் ரத்துசெய்தபோதுதான் ஒன்பதாவது அட்டவணை
என்னும் பாதுகாப்பை அம்பேத்கர் உருவாக்கினார். இப்போது கல்வி குறித்த
சட்டங்களுக்கும் அதே கதிதான் ஏற்பட்டுவருகிறது. அம்பேத்கர் உருவாக்கிய அந்தப்
பாதுகாப்புக் கவசத்தையும் இப்போது உச்ச நீதிமன்றம் அழித்துவிட்ட நிலையில்
சட்டரீதியாக நியாயம் பெறுவதற்கு இனிமேல் வழி இல்லை. எனவே, இனி இந்தப் பிரச்சினையை
நீதிமன்றங்களின் மூலமாகத் தீர்க்க முடியாது, அரசியல் ரீதியாகத்தான் சரிசெய்ய
வேண்டும். ஆனால் அத்தகைய அரசியல் உறுதி இப்போது ஆட்சியாளர்களிடம் இல்லை.
உயர் நீதிமன்றத் தீர்ப்பு வந்ததும் அரசே பல பொறியியல் கல்லூரிகளைத்
தொடங்கவிருப்பதாக உயர் கல்வி அமைச்சர் தெரிவித்தார். இன்று தமிழ்நாட்டில்
மொத்தமுள்ள கல்லூரிகளில் சுமார் பத்து சதவீதம்தான் அரசால் நடத்தப்படுபவை. மற்றவை
யாவும் தனியாரால் நடத்தப்படுபவைதான். மணல் அள்ளுவது, மது விற்பது போன்றவற்றை அரசுடமை
ஆக்கிய மாநில அரசு, இப்போது டி.வி. கேபிள் இணைப்பு வழங்கும் தொழிலிலும்
ஈடுபடப்போவதாகச் செய்திகள் வருகின்றன. இவற்றையெல்லாம்விட முக்கியமான கல்விப்
பிரச்சினையில் அரசு ஏன் இப்படி ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடாது? இங்குள்ள
சுயநிதிக் கல்லூரிகளை அரசுடைமை ஆக்குவதற்கான முயற்சிகளை ஏன் அது செய்யக் கூடாது?
ஆட்சியாளர்கள் தமது சமூகப் பொறுப்பைச் சரிவர நிறைவேற்றாதபோது, நீதிமன்றங்களின் மூலம்
பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள மக்கள் முற்படுகின்றனர். அரசின் அனைத்துப்
பிரிவுகளையும்விட நீதி அமைப்பே உயர்ந்தபட்ச அதிகாரம் கொண்டது என்பது போன்ற நிலையை
இப்போது நீதிமன்றங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆட்சியாளர்களே பெரிதும்
பொறுப்பு. வரம்பற்ற அதிகாரத்தை நீதி அமைப்பிடம் தருவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.
நீதியின் பெயரால்கூட அநீதி இழைக்க முடியும் என்பதற்கான உதாரணம்தான் சுயநிதிக்
கல்லூரிகள் பற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. கல்விச் சூழலை நாசமாக்கி நாட்டின்
எதிர்காலத்தையே இக்கட்டில் ஆழ்த்தியுள்ள இந்தத் தீர்ப்பை எதிர்க்க வேண்டியது நாட்டு
நலனில் அக்கறை கொண்டோ ரின் கடமையாகும்.
உள்ளடக்கம்