Google   www kalachuvadu.com

 

அஞ்சலி

ஆத்மாவின் சமிக்ஞைகளைப் புரிந்துகொண்டவர்
ராமச்சந்திர காந்தி (1937-2007)

யூ.ஆர். அனந்தமூர்த்தி
தமிழில்: நஞ்சுண்டன்

நான் ராமச்சந்திர காந்தியை (எனக்கு அவர் ராமு காந்தி) முதலில் பார்த்தது ஆக்ஸ்ஃபோர்ட் ரெஸ்ட்டாரெண்ட் ஒன்றில். அவருக்கு அப்போது இருபத்தாறோ அல்லது இருபத்தேழோ வயது. என் நண்பன் 'இவர்தான் ராமச்சந்திர காந்தி' என்றபோது, காந்திஜிக்கு இருந்த காது ஏதாவது தெரிகிறதா என ஆர்வத்தோடு நான் அவரை உற்றுப் பார்த்தேன். என் குட்டி மகனுக்கும் அவரைக் காட்டினேன். இதைப் பல வருடங்கள் கழிந்த பிறகு அவருக்கு நினைவுபடுத்தியபோது, அந்த நாள்களில் தான் சிந்தித்துக்கொண்டிருந்த முறைக்கும் இப்போதைய முறைக்கும் ஏற்பட்டுள்ள பெரும் வேறுபாடு குறித்துப் பேசினார். அவரது முதல் புத்தகம் அந்த ஆக்ஸ்ஃபோர்ட் காலத்திலேயே வெளியாகியிருந்தது. அது மேற்கத்தியச் சிந்தனையிலேயே பிறந்து அவரைப் பெயர் பெற்றவராகச் செய்த புத்தகமாயிருந்தது. ஆனால், ராமச்சந்திர காந்தி அதைக் கைவிட்டு மாறினார். அப்பட்டமான இந்தியப் பார்வை கொண்டவரானார். நேரு மையத்தில் ஒருமுறை ஐரோப்பாவின் புகழ்பெற்ற ஒரு தத்துவஞானி இந்தக் காலத்தைக் குறித்துப் பேசிய பிறகு எல்லோரும் ஆச்சரியப்பட்டு உட்கார்ந்திருந்தபோது, அங்கிருந்த ராமு காந்தி, 'ரமணர் அடைந்திருந்த பிரக்ஞை நிலையும் நம்முடைய இந்தக் காலத்தைப் புரிந்துகொள்ள அவசியமல்லவா?' என்று ஒரு ரிஷியை அந்தக் கூட்டத்திற்கு அழைத்து வந்து மேற்கத்திய ஞானத்தால் ஆச்சரியப்பட்டவர்களைக் கூச்சப்படவைத்தார்.

எனக்கு வெகுநெருக்கமானவர்களில் ராமு காந்தியும் ஒருவர். அஷிஷ் நந்தி, சிவ விஸ்வநாதன், கன்னடத்தின் கே.வி. சுப்பண்ணா ஆகியோரின் பேச்சுக்கு எப்படியோ அப்படியே நான் ராமு காந்திக் கும் கண், காது, மற்றும் மனத்தைச் சதா திறந்துவைத் திருந்தேன். ஆனால், அவ்வளவு நெருக்கமானவரானா லும் அவரிடம் எனக்குச் சலுகை ஏதும் இருக்கவில்லை. எனக்கு மட்டுமல்ல, அவருடைய எந்தச் சினேகிதருக்கும் அவரிடம் சலுகை இருக்கவில்லை. இந்தியா இண்டர்நேஷனல் சென்டரில் - இப்போது அவர் கடைசி மூச்சுவிட்ட இடம் - சதா அவரைப் பார்ப்பேன். பார்த்த ஒவ்வொருமுறையும் அவரிடம் பேச்சுக்கொடுக்கப் போனதில்லை. ஏனென்றால், தனக்குள் அவ்வளவு ஆழ்ந்து சிந்தனை வசப்பட்டவராக அவர் ஒரு மூலையில் உட்கார்ந்திருப்பார். அவர் எதிரில் ரம் கலந்த ஒரு கிளாஸ் இருக்கும். மணிக்கணக்காக அது காலியாகாமல் இருந்ததைப் பார்த்திருக்கிறேன். சில சமயம் இந்தியா இண்டர்நேஷனல் சென்டரின் பாரில் இருந்த ஆர்வலர்கள் தங்கள் சினேகிதர்களுக்கு அவரை அறிமுகப்படுத்துவார்கள் - 'இவர் மகாத்மா காந்தியின் பேரன்' என்று. அப்போது மிகவும் சங்கோஜப்பட்ட ராமு என்னிடம் சொன்னது: 'பாருங்கள் காந்தியின் இந்தப் பேரன் ரம் குடிக்கிறான் என்பதைச் சுட்டிக்காட்டவே கபடமிக்க இந்த ஆர்வலர்கள் என்னை இப்படி அறிமுகப்படுத்துகிறார்கள்.' ராமுவின் கஷ்டம் புகழ் பெற்ற ஒரு பாட்டனாரைப் பெற்றிருந்தது மட்டுமல்ல. மிகுந்த சாணக்கியத்தனம் கொண்டவரெனப் பெயர் பெற்றிருந்த ராஜாஜியும் அவருக்குத் தாய்வழிப் பாட்டனார்.

ராமு காந்தி உண்மையான அர்த்தத்தில் ஒரு சஞ்சாரி. எந்த ஒரு வேலையிலும் ஒட்டிக்கொண்டவரல்ல. ஆக்ஸ்ஃபோர்டில் படித்துவிட்டு வந்த பிறகு ஹைதராபாத் மையப் பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராகத் தேர்வானார். அங்கிருக்கும் கல்வியாளர்கள் சிலர் இன்றைக்கும் நினைத்துக்கொள்வது போல, அத்துறையை வளர்த்தார். அது, சரோஜினி நாயுடு வசித்த பங்களாவில் இருந்தது. அது பழங்காலத்து அழகானதொரு கட்டடம். காம்பௌண்ட் நிறைய வளர்ந்து நின்ற மரங்கள். துணைவேந்தருக்கு அந்த மரங்களின் மேல் கண் விழுந்தது. அதிலும் குறிப்பாக அங்கிருந்த ஒரு பெரிய மரத்தின் மேல் அவர் கண்ணாயிருந்தார். கவிஞரான சரோஜினி நாயுடுவுக்குப் பிடித்தமான மரமாயிருந்தது அது. அதை வெட்டத் துணைவேந்தர் தீர்மானித்தார். ராமு காந்தி அதை எதிர்த்தார். துணைவேந்தர் இவர் பேச்சைக் கேட்கவில்லை. மரத்தை வெட்டியேவிட்டார்கள். அதை வெட்டிய தினமே பேராசிரியர் ராமச்சந்திர காந்தி ராஜினாமா செய்துவிட்டார். இது நடந்த பிறகு, ராமு காந்தி எங்கும் நிரந்தரமாகத் தங்கி வேலைசெய்யவில்லை. தன்னிடமிருந்த கொஞ்ச நஞ்சப் பணத்தையே அளவாகச் செலவிட்டு டில்லியின் பெங்காலி மார்க்கெட்டிற்கு அருகில் இருந்த ஒரு வீட்டின் சிதிலமடைந்த வெளி அறையில் தனியாக வசித்துக்கொண்டிருந்தார். அவ்வப்போது அவர் மகள் வந்து அவரைப் பார்த்துவிட்டுப் போவாள். அந்த அறையிலிருந்த ஒரே படம் ரமணருடையது. திடமானதாகத் தோன்றும் கோலொன்றை நிலத்தில் ஊன்றி, அநாயாசமெனத் தோன்றும்படி தொங்கவிட்ட ஷீணித்த காலின்மேல் காலிட்டுக் கோவணாண்டியாகப் பாறைமேல் உட்கார்ந்திருக்கும், காந்திஜியைவிட அதிக நிர்வாணமான, ரமணர். தன்னிடமிருந்த, கருணை பொங்கும் கண்களைக்கொண்ட, ரமணரின் இன்னொரு படத்தை என் மனைவி எஸ்தருக்கு அவள் கான்ஸரிலிருந்து குணமடைந்துகொண்டிருந்தபோது, நம்மைக் கட்டிப்போடும் அந்தப் படத்தின் பாரத்தைத் தாங்கமாட்டாமல் சங்கோஜத்தோடு 'இதைக் கொடுக்கட்டுமா?' என்று கேட்டுத் தந்தார். இப்போதும் அது எங்கள் வீட்டிலிருக்கிறது.

நான்கு கவளம் சாப்பிடவும் படிக்கவும் தினந்தோறும் ராமு காந்தி தன் அறைக்கு அருகிலேயே இருந்த இண்டியா இன்டர்நேஷனல் சென்டருக்கு வந்துகொண்டிருந்தார். ராமு காந்தி சஞ்சாரி. ஆனால், பெங்காலி மார்க்கெட்டின் தன் சந்நியாசி அறைக்கும் இண்டியா இன்டர்நேஷனல் சென்டரின் இதமான சூழலுக்கும் ஒட்டிக்கொண்ட சஞ்சாரி. அனேகமாக வெயிலின் தகிப்பைத் தாங்க முடியாமல் சில தினங்களுக்கு முன்பு சென்டரின் அறையில் இருந்த நிலையிலேயே இறந்திருக்க வேண்டும். சில மாதங்களுக்கு முன்பு அவரைப் பெங்களூருக்கு வருமாறு அழைத்திருந்தேன். தனக்கும் வர ஆசைதான், அப்போதைக்கு உடல் நலம் சரியில்லை என்று அவர் பதில் எழுதியிருந்தார்.

ராமு காந்தி அவ்வப்போது ஜேபியிலிருந்து ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துத் திறந்து, அதில் எதையோ எழுதிக்கொள்வார். அல்லது தோளில் ஒரு பையை மாட்டிக்கொண்டு இரண்டு வெய்ஸ்ட் கோட்டுகளை இஸ்திரி செய்யப்படாத ஜிப்பாவின் மேல் தரித்துக் கழுத்தில் ஒரு மஃப்ளரைச் சுற்றி லோதி கார்டனில் வாக்கிங் போகும்போதும் திடீரென நின்று, நோட்டுப் புத்தகத்தை எடுத்து எதையோ எழுதிக்கொள்வார். நானோ அவரைப் பழங்காலத்து ரிஷி என்றே உணர்ந்திருந்தேன். சில சமயம் துர்வாசராகவும்கூட.

என்னுடைய நினைவொன்றைச் சொல்கிறேன். அயோத்தியில் மசூதி இடிக்கப்பட்டு நாடெங்கும் தொல்லையும் பயமும் கொண்ட சூழ்நிலை படர்ந்தபோது, ராமு காந்தி என்னிடம் ஒரு விஷயத்தைப் பகிர்ந்துகொண்டார். 'இன்னும் பதினைந்து தினங்களில் நாங்களெல்லோரும் ஒன்றாகப் பார்லிமெண்ட் பவனிலிருந்து தொடங்கிக் காந்திஜி கொலையுண்ட பிர்லா மாளிகைவரை பாதயாத்திரை போக வேண்டும். அதனால் இன்றிலிருந்து நான் ரம் குடிக்கப்போவதில்லை. உங்கள் எல்லாச் சினேகிதர்களுக்கும் சொல்லுங்கள். நானும் என்னுடைய எல்லாச் சினேகிதர்களுக்கும் சொல்கிறேன்.'

நாங்கள் எவ்வளவு முயன்றும் எங்களுக்குக் கிடைத்தவர்கள் சுமார் 25 பேர். அதனால் ராமு மனமொடிந்து போகவில்லை. 'எல்லா மகத்தான செயல் பாடுகளும் சில பேருடன்தானே தொடங்குகின்றன' என்பது அவர் கருத்து. நாங்களெல்லோரும் ஒரு நாள் காலை குறிப்பிட்ட இடத்தில் சேர்ந்தோம். ராமு எங்களுக்குத் தலைமையேற்றார். நாங்கள் பாதயாத்திரையில் பாடுவதற்காக அவர் தாகூரின் 'ஏட்ல சலோ . . .' பாடலைத் தேர்ந்தெடுத்திருந்தார். பாத யாத்திரை தொடங்கியபோது, அந்தப் பாடலைப் பாடியவாறு ஜனக்கூட்டத்துக்கு மத்தியில் நாங்கள் இருபத்தைந்து பேர் சீரியஸாகப் பாதயாத்திரை போனது எனக்கு சங்கோஜத்தைத் தந்தது. ஆனால், தாகூருடைய பாடலின் பலமோ அல்லது கவர்ச்சிகரமான கண்களைக் கொண்ட ராமு காந்தியின் முகத்து ஈர்ப்போ தெரியவில்லை. எங்களை நாங்களே மறந்து எங்கள் உயர்ந்த நோக்கத்தில் அவரவர் பெருமையை மறந்து கட்டுப்பாட்டோ டு, வரிசையாக நடப்பது சாத்தியமாயிற்று.

சுற்றியிருந்த ஜனங்கள் சில சமயம் சிரித்தபடி, சில சமயம் கேலியாகப் பார்த்தபடியிருந்தாலும் அதே பாணியில் அதே உச்சஸ்தாயில் பாடியவாறு நேராக நாங்கள் காந்திஜி கொலையுண்ட இடத்தை அடைந்து அங்கே மௌனமாக அமர்ந்து பிரார்த்தித்தோம். பிறகு அங்கேயே தொடங்கிய கூட்டத்தில் திபெத்தியத் துறவிகள் சிலர் வந்து தங்கள் பிரார்த்தனையை நடத்தினார்கள். திபெத்தியர்களின் பிரார்த்தனை முறை நமக்கு விசித்திரமாகத் தோன்றுகிறது. ஆனால், அந்த விசித்திரமே எங்கள் மனத்தைத் தீவிரமாகத் தாக்கியது. அங்கே சிலர் பேசிய பிறகு, நாங்கள் திரும்பி வந்தோம். (ராமுவின் பாட்டனாரின் அஹிம்சைக் கட்டுப்பாட்டை இக்காலத்தில் தக்கவைத்துக்கொண்டவர் தலாய் லாமா.)

அவ்வப்போது ராமு காந்தி தவத்திலிருந்து வெளி வந்து காரியவாதியாக வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. ஒருமுறை ராமு என்னிடம் சொன்னார், 'காந்திஜியளவுக்குப் பெரிய தொழில்நுட்பவாதி எந்தக் காலத்திலும் இருந்ததில்லையோ என்னவோ?' சர்க்காவில் நூற்பதில் தொடங்கி உப்புச் சத்தியாக்கிரகம் வரைக்கும் அதோடு இறுதியில் தன்னைவிடப் பெரிய தடியொன்றைப் பிடித்து நவகாளியில் கல்லையும் மண்ணையும் மலத்தையும் கூட்டிப் பெருக்கி வெறும் காலில் நடந்ததுவரைக்கும் அவரது எல்லாச் செயல்பாடுகளும் விரும்பியதைச் செயல்படுத்தும் தொழில் நுட்பமே என ராமு புரிந்துகொண்டிருந்தார்.

எல்லாவற்றையும் சமிக்ஞைபூர்வமாக - சமிக்ஞைகளைச் சுயத்திலிருந்து விடுதலையடைந்த, பொருள் பொதிந்த ஆத்மாவின் சமிக்ஞைகளாக - பார்ப்பதே ராமு காந்தியின் சிந்தனை முறை. தன்னைவிட உயரமான கோலைப் பிடித்துக் காந்திஜி நவகாளியில் நடந்ததிலிருந்து, காந்திஜி எப்படித் தானிருப்பதைவிடப் பெரியவராகும், வளரும் விருப்பத்தை அந்தக் குண்டும் குழியுமான நிலப்பரப்பில் பயனுள்ளதுமான கோலின் மூலம் அறிவுறுத்தினார் என்பதை ராமு கவனித்திருந்தார்.

காந்திஜி அவருக்குத் தாத்தா. ஆனால், ராமு சரணடைந்தது ரமணரிடம் என்று எனக்குச் சில சமயம் தோன்றியது. அவர் ஒவ்வொரு கணத்திலும் அத்வைதச் சித்தாந்தத்தை நமக்கு உண்மையெனத் தோன்றும்படி எங்கெங்கிருந்தோ நிரூபணங்களைக் கொண்டுவந்தார். தயீப் மேத்தாவின் சாந்தி நிகேதன் ஓவியத்தைக் குறித்து ராமு எழுதிய புத்தகமான 'ஸ்வராஜ்' இதற்கோர் எடுத்துக்காட்டு. இந்தப் புத்தகத்துக்கு நான் ஒரு முன்னுரை எழுத வேண்டுமென்று அவர் விரும்பினார். உலகில் வேறு யாரும் ஓவியக் கலையைப் பற்றி எழுதாத முறையில் ராமு எழுதியிருந்தார். அது ஒரு தீவிரமான தியானம். புறவயமான ஓவியத்தோடு அகவயமான மனமும் சேர்ந்து ஒன்றிணையும் தியானம். நான் இந்தப் புத்தகத்தைக் குறித்து எழுதியிருந்தது அவருக்குப் பிடித்திருந்தது. கோவிலில் ஆராதனை செய்வதை நான் ஞாபகப்படுத்திக்கொண்டேன். ஒரு சின்ன தீபத்திலிருந்து தொடங்கிப் பல சின்ன தீபங்களால் தெய்வச் சிலையைப் பிரதட்சிணையில் சுற்றிக் காட்டியவாறு, அங்கங்கே நின்று, படிப்படியாக முழுச் சிலையும் தீபாராதனையில் கொஞ்சம் கொஞ்சமாக ஆனால், இறுதியில் பூரணமாக நமக்குத் தெரியுமாறு செய்வதைப் போன்ற எழுத்து இது.

ராமு காந்தியின் அற்புதமான இன்னொரு புத்தகம் 'சீதாஸ் கிச்சன்' - சீதையின் சமையலறை. சங்கப் பரிவாரத்தினர் ராமன் பிறந்த இடம் என்று பார்க்கும் இடத்தையே ராமு காந்தி அந்தப் பிரதேசத்தின் நாட்டுப்புறக் கதைகளைப் பின்பற்றிச் சீதையின் சமையலறை என்று அழைக்கிறார். அயோத்திச் சம்பவம் தொடர்பாக இவ்வளவு தீவிரமான இந்தியப் பிரக்ஞையின் மூலமாகவே முகிழ்த்த வேறொரு புத்தகம் இல்லை.

இந்தப் பத்துப் பதினைந்து வருடங்கள் என் மனோ உலகத்தில் மிகுதியான கலவரங்களும் சங்கடங்களும் நிறைந்த காலம். வெறுப்பின் அடிப்படையில் எழும் உக்கிரமான மதியூக வாதங்களை மெடீரியலிஸ்டாக, செக்யூலரிஸ்டாக மட்டும் நிராகரிக்காமல், ஆழமான ஆன்மிக நிலையிலிருந்தும் நிராகரிக்க எனக்குக் கற்பித்த குருவும் நண்பரும் ராமச்சந்திர காந்தி.

நான் கேரளாவிலிருந்தபோது, ராமு காந்தியை விவாத அரங்கம் ஒன்றுக்கு அழைத்திருந்தேன். அவரோடு என் நண்பரான காலம் சென்ற நிர்மல் வர்மா வந்திருந்தார். இந்தியாவின் பெரிய தத்துவவாதிகளில் ஒருவரான தயா கிருஷ்ணாவும் இருந்தார். அவர் மனைவி சேலையுடுத்து, குங்குமம் வைத்துக்கொண்டு, கான்சரில் இழந்த கூந்தலின் மிச்சம் மீதியைச் சுத்தமாக வாரியிருந்த மிகுந்த அன்புள்ள அமெரிக்கப் பெண் மணி. அவருக்குக் குருவாயூர் கோவிலைப் பார்க்க வேண்டுமென்று ஆசை. ராமு காந்தி அவரை அழைத்துக்கொண்டு போனார். ஆனால், குருவாயூரில் அந்தப் பெண்மணி இந்து அல்லவென்று கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. உடனே ராமு காந்திக்குத் தன் தாத்தாவின் நினைவு வந்தது. தானும் கோவிலுக்குள் வரவில்லை என்று எதிர்ப்பைக் காட்டித் துர்வாசக் கோபத்தில் திரும்பி வந்திருந்தார்.

இந்தியாவின் சாஸ்திரங்கள், மத நூல்கள், வேத உபநிஷத்துகள், புராணங்கள் இவற்றில் ஆழ்ந்த ஈடுபாடுகொண்ட ராமுவுக்கு இஸ்லாமின் ஒரு பெரிய தத்துவவாதியோடு, அதுவும் அத்வைதம் குறித்து, தீவிரமாக விவாதித்து வெற்றிபெற வேண்டுமென்று பெரிய ஆசை இருந்தது.

ராமுவுக்குத் திடீரென்று புதிய விஷயங்கள் தோன்றிக் கொண்டிருந்தன. எடுத்துக்காட்டாக, தத்துவ இயலுக்கென்று தான் ஒரு நூல்நிலையத்தை நிர்மாணிப்பதானால் புத்தகங்களை எப்படிப் பிரிப்பார் என்று ஒருமுறை அவர் என்னிடம் சொன்னார். ஒன்று, பரமாத்மாவை உருவமுள்ளவராகவும் சற்குணராகவும் புரிந்துகொண்டவர்களின் புத்தகங்கள். இதில் வைஷ்ணவ சம்பிரதாய நூல்கள் இருக்கும். இரண்டு, பரமாத்மாவை உருவமற்றவராகவும் சற்குணராகவும் புரிந்துள்ளவர்களின் புத்தகங்கள். இந்தப் புத்தகங்களை எழுதியவர்கள் இஸ்லாம், கிருத்துவ, யஹோவ மதங்களில் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களில் சைவர்களும் இருப்பார்கள். மூன்று, பரமாத்மாவை உருவமற்றவராகவும் நிர்குணவாதியாகவும் புரிந்துள்ளவர்களின் புத்தகங்கள். இதில் பௌத்த நூல்கள் இருக்கும். ரமணரின் நூல்களிருக்கும். நான் அப்போது ஒன்றைச் சேர்த்தேன். 'அல்லமனின்* வசனங்களும் இருக்கும்.'

குறும்புத்தனத்துக்காக நான் அப்போது ராமுவிடம் ஒரு பேச்செடுத்தேன். 'பரமாத்மா சற்குணன், உருவமுள்ளவன் எனக் கொள்வதும் சற்குணன், உருவமற்றவன் எனக் கொள்வதும் எனக்குப் புரிகின்றன. ஆனால், பரமாத்மாவை உருவமுள்ளவனாகவும் நிர் குணனாகவும் கொள்வது சாத்தியமா?' ராமு எவ்வளவுக்குச் சாத்வீகமான மௌனியோ அதேயளவுக்குச் சில சமயம் நீட்ஷே வர்ணிக்கும் டயோனிஷியன் அறிவின் உற்சாகி. ராமு மிகுந்த நாடகீயமாகத் தன் முழு உடம்பையும் குலுக்கிப் பேசிக்கொண்டிருந்த ஆள். இரண்டு கைகளையும் தூக்கிப் பலமாகச் சிரித்து 'அது பியூரோக்ரஸி' என்றார். தனக்கெதிரான யாரையும் கேலிச் சித்திரக்காரனைப் போல ஏதோ ஒரு விலங்குக்கு ஒப்பிட்டு, நம்மை 'அட அப்படித்தானே!' என்று அப்பாவித்தனத்தால் வினோதமாக எண்ணச் செய்து சந்தோசமூட்டிக்கொண்டே இருப்பார் ராமு. மறுகணமே அவர் ரமணரிடம் ஒன்றிப்போவார்.

அரசியல் ரீதியாக யாருக்கும் சாத்தியமில்லாத ஒன்றை ராமு எழுதியிருந்தார். காஷ்மீர் யாருக்குச் சேர வேண்டும்? ராமு எழுதியபடி, 'பாகிஸ்தான் இந்தியாவைப் போலவே எல்லா மதத்தவர்களையும் சமமாகப் பார்க்கும் செக்யூலர் நாடாக இருந்தால், காஷ்மீர் இந்தியாவுடனிருக்க வேண்டுமா அல்லது பாகிஸ்தானுடன் இருக்க வேண்டுமா என்பது எனக்கு அவ்வளவு முக்கியமான கேள்வியே அல்ல.' இப்படிப் பேசக்கூடியவர்களிடம் வெறியற்ற தேசப்பற்று இருக்கும். அதோடு எல்லா மதங்களும் தம் உள்ளார்ந்த சத்தியத்தினால் வாழ்ந்துகொண்டிருக்கின்றனவே அல்லாது நாம் கட்டமைக்கும் வீராவேசமான அமைப்புகளினாலல்ல என்னும் நம்பிக்கையிருக்கும்.

நான் யோசிக்கும்போதெல்லாம் இப்படி என் மனசில் எங்கெங்கோ ராமு காந்தி எட்டிப் பார்த்துக்கொண்டேயிருக்கிறார். நான் உயிரோடிருக்கும்வரை அவர் இப்படி எனக்குள் இருக்கவே இருப்பார்.

n

* 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அல்லம பிரபு கன்னட வசன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். பஸவண்ணருக்கும் அக்கமகா தேவிக்கும் சமகாலத்தவர். வசன இலக்கியத்தில் செய்த மொழியியல் சோதனைகளால் இன்றைக்கும் கன்னட இலக்கியப் படைப்பாளிகளைத் தொடர்ந்து பாதிப்பவர் அல்லம பிரபு.

உள்ளடக்கம்

Google Ads.....

Google