நந்து சுந்தரம்
தமிழில்: நஞ்சுண்டன்
இயக்கம்: டேவிஸ் ககன்ஹைம்
தயாரிப்பு: லாரி டேவிட், லாரன்ஸ் பெண்டர், ஸ்காட் ஜீ. பர்ன்ஸ்
அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபரும் அதிபராகும் வாய்ப்பை மயிரிழையில்
தவறவிட்டவருமான அல்கோர் நடித்திருக்கும் An Inconvenient Truth என்னும்
ஆவணப்படத்தின் மீதான குற்றச்சாட்டு எளிமையானது. படத்தைப்
பார்த்துக்கொண்டிருக்கும்போது, அந்தக் குற்றச்சாட்டைப் புறக்கணிப்பது கடினம். புவி
வெப்பமடையும் அபாயத்தைப் பற்றிய அதிர்ச்சியூட்டும் உண்மைகள் நம்மைச் சரமாரியாகத்
தாக்கும்போது, அல் கோர் அதை அரசியலாக்கி ஆதாயம் தேட முயல்கிறார் என்பதை மனம் ஏற்க
மறுக்கிறது. மேலும், புவி வெப்பமடைவது உண்மைதானா என்னும் முக்கியமான கேள்வியும்
இந்தப் பிரச்சினையின் மையத்தில் உள்ளது.
இந்தப் பிரச்சினையைச் சூழ்ந்துள்ள சர்ச்சையை அல் கோர் திறம்பட எதிர்கொள்கிறார்.
கூர்ந்து மதிப்பிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் வெகுஜன ஊடகங்களையும் மேற்கோள்காட்டி,
விஞ்ஞானிகள் வெளியிட்ட கட்டுரைகளில் 925 புவி வெப்பமடைகிறது என வாதிட்டதை அவர்
சுட்டிக்காட்டுகிறார். ஆனால், ஊடகங்களில் வெளியாகும் பல கட்டுரைகள் புவி
வெப்பமடைகிறது என்பதற்கு எதிராக வாதிட்டு, அதைச் சர்ச்சைக்குரிய ஒன்றாகச்
சித்தரிக்கப் பார்க்கின்றன.
இந்தப் பிரச்சினையின் அரசியல் பின்புலம் இதுதான்: மக்கள் தொகை மிகுந்திருந்தாலும்,
இந்தியா புவி வெப்பமடைவதற்கு முக்கியக் காரணமல்ல. இந்தியாவுக்கும் சீனாவுக்கும்
கழிவு வெளியீட்டு அளவைக் குறைப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும் இந்தியா
க்யோட்டோ ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், சந்தேகமில்லாமல் பசுங்கூட
வாயுக்களை (greenhouse gases) வெளியேற்றுவதில் முன்னணி நாடான அமெரிக்கா, க்யோட்டோ
ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏன் என்றால் அந்த நாட்டின் அரசியல் சூழ்நிலை அதை
அனுமதிக்கவில்லை.
இந்தப் பின்னணியில் கோரின் படம் முக்கியத்துவம் பெறுகிறது. நச்சுக் கழிவுகளை
வெளியேற்றுவதில் நமக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வேறுபாடு இன்று மிக
அதிகமிருக்கலாம்; இருந்தாலும், நம் பொருளாதாரம் வளர வளர, நாம் புவியை மாசுபடுத்தும்
வழிகளும் அதிகரிக்கின்றன. இது நாம் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம். ஏனென்றால்,
அதைப் பார்த்த பிறகு சமூகத்திற்கு நாம் உண்மையாகவே எப்படியாவது உதவ முடியும். ஒரு
பல்பை மாற்றுவது போன்ற எளிய செயல்கூட அதற்கு உதவலாம்.
இந்தப் படம் அமெரிக்காவில் அரசியல் மாற்றத்தை உருவாக்கும் என்று கோர் உங்களை நம்பச்
செய்யலாம். ஆனால், அதை என்னால் நம்ப முடியவில்லை. ஹிலாரியின் தலைமையில் குடியரசுக்
கட்சியினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அவர்களும் க்யோட்டோ ஒப்பந்தத்தை
ஏற்றுக்கொள்ள முடியாமல் போகலாம். ஏனென்றால், அந்த ஒப்பந்தம் விதிக்கும்
கட்டுப்பாடுகள் மிக அதிகம்; அமெரிக்காவின் மாசு வெளியேற்றமும் கொடூரமான அளவு
அதிகம்.
இந்த ஆவணப்படம் இரண்டு விஷயங்களை நிரூபிக்க முயல்கிறது. ஒன்று, புவி வெப்பம்
அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. அதோடு, அதன் விளைவுகள் பல பரிமாணங்களைக்
கொண்டது; அழிவுக்கு இட்டுச் செல்வது. உண்மையில், அது புவியை அழிப்பதற்கான ஒரு
வழியே. இன்னொன்று, அமெரிக்க அரசாங்கத்தால், அதிலும் குறிப்பாக புஷ்ஷின்
நிர்வாகத்தில், புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்த எதுவும் செய்யப்படவில்லை.
படத்தின் பெரும்பகுதி கோர் புவி வெப்படைதல் குறித்த படக்காட்சியைக் காட்டுவதாக
எடுக்கப்பட்டுள்ளது. இது சாதாரண வகுப்பறையல்ல. இதைத் தயாரிக்க ஆறாண்டுகளாயின.
இப்பிரச்சினையை கோர் சுவாரசிய மானதாகவும் விளக்கமானதாகவும் ஆக்கியிருப்பதே
இவ்விஷயத்தில் அவருக்குள்ள ஆழ்ந்த அறிவுக்கும் ஈடுபாட்டுக்கும் சான்று.
கோர் உணர்ச்சியை வெளிக்காட்டாத மரக்கட்டை அரசியல்வாதியாக இருக்கலாம்; ஆனால்,
அதிகாரத்துக்கு ஏங்கும் வழக்கமான அரசியல்வாதியல்ல என்னும் உணர்வே படம் பார்த்த பின்
எனக்கு ஏற்பட்டது.
கோரின் உளவியல் பின்புலத்தைச் சொல்வதற்காக வலுவானதும் இணையானதுமான இரு பகுதிகளாகப்
படம் தொடங்குகிறது. வாஷிங்டன் ஹோட்டல் ஒன்றிலிருந்து தனது தந்தையார் இனப்பெருக்கம்
செய்விப்பவராகப் பணிபுரிந்த டென்னஸ்ஸி மாநிலப் பண்ணை ஒன்றுக்குக் கோர் மாறிய
விதத்தை, கோர் வளர்ந்து பெரிய பையன் ஆவதை, அவர் தந்தையாரும் அவரும் எதிர்கொண்ட
மருத்துவப் பிரச்சினைகளைக் காட்டும் காட்சிகள் தோன்றி மறைகின்றன. இக்காட்சிகளுக்கான
திரைக்கதை பிரமாதம். கோரிடம் உயிரோட்டம் சிறிதும் இல்லையென்றாலும், அவர்
ஆவணப்படத்திற்குப் பொருளும் தனக்கே உரிய அணுகுமுறையையும் தருகிறார். இரண்டு
பேராசிரியர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு ஆவணப்படத்தை அமர்க்களமாகத்
தொடங்குகிறார். அவர்களில் ஒருவர், தென் அமெரிக்க, ஆப்பிரிக்கக்கண்டங்கள் ஒன்றாக
இணைந்திருந்தன என்பதை மறுப்பவர் (இக்கருத்து இப்போது நிரூபிக்கப்பட்டுவிட்டது).
மற்றொருவர், ஒவ்வொரு நாடும் வெளியேற்றும் கரியமிலவாயுக் கழிவையும் அளவிட வேண்டும்
என உலகிலேயே முதலில் கூறியவர். இந்த அளவீடுகளே அழிவுக்கு இட்டுச்செல்லும்
அளவுக்குப் புவி வெப்பமடைந்து கொண்டிருப்பதைச் சந்தேகமற நிரூபித்தன.
கோர் அமெரிக்க அதிபராகவே ஆகியிருக்கக்கூடியவர் என்றாலும், அவரது காட்சிப்படத்
தொகுப்பு தனிச்சிறப்புடன் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதுதான். சூரியனிலிருந்து
பூமியைக் காட்டும் படம், துருவங்களில் எவ்வளவு வேகமாகப் பனி கரைகிறது என்பதைக்
காட்டும் படம், துருவக் கரடியைக் காட்டும் கிராஃபிக்ஸ் தொடர்காட்சிப் படங்கள் என
எல்லாமே தொழில்நுட்பரீதியாகக் கச்சிதம். அதுவே படத்தை மையநீரோட்டத்திற்கு இட்டுச்
செல்கிறது. இந்த ஆவணப்படம் இடதுசாரி அறிவுஜீவி ஒருவரின் கலைப் படைப்பு முயற்சியல்ல.
கோர் மிகச் சிறந்த ஆசிரியர் என்னும் இன்னொரு விஷயத்தையும் விரிவுரை வடிவிலான இந்த
ஆவணப்படம் நிரூபிக்கிறது.
கோருக்குக் கணீரென்ற குரல். ஆனால், அவர்தான் சொல்ல நினைப்பதை எவ்வளவு சிறப்பாகச்
சொன்னாலும், நம் கவனத்தை ஈர்க்கும் முகபாவம் ஒன்றுகூட அவரால் காட்ட முடியவில்லை.
நாள்தோறும் அதிகரித்துவரும் அவருடைய பருமன் அவரைக் கவர்ச்சியானவராகக் காட்டவில்லை.
அவரை மைக்கேல் மூருடன் ஒப்பிடுவதைத் தவிர்க்க முடியாது. மூர் அவரைவிட
ஆர்ப்பாட்டமானவர், அதிகத் தாக்கத்தை ஏற்படுத்துபவர். கோர் எடுபடவேயில்லை. அவரால்
மூர் அளவிற்கு நம்மைப் பாதிக்க முடியாது.
உள்ளடக்கம்