Google   www kalachuvadu.com

 

தலையங்கம்

பக்கத்தில் நிற்க ஒருவர்

தமிழக அரசின் பொது சுகாதாரத் துறையால் பிறப்பிக்கப்பட்டிருக்கும் சமீபத்திய ஆணை ஒன்று அரசு பொது மருத்துவமனைகளின் பிரசவ அறையினுள் மகப்பேறுக்காக அனுமதிக்கப்படும் பெண்ணுடன் அவருடைய கணவன் அல்லது உறவுக்காரப் பெண்களில் யாராவது ஒருவர் உடனிருப்பதற்கு அனுமதியளிக்க வகை செய்கிறது. பல காலமாக உளவியல் ஆய்வாளர்களாலும் மகளிர் நல அமைப்புகளாலும் வலியுறுத்தப்பட்டு வந்த விஷயம் இது.

வறிய நிலையில் வாழும் பெரும்பான்மை மக்கள் தம் உடல் மற்றும் பொது சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகளுக்கு அரசு பொது மருத்துவ மனைகளையே முற்றாகச் சார்ந்திருக்கிறார்கள். மேம்பட்ட மருத்துவச் சேவைகளை வழங்குவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டுள்ள அரசு பொது மருத்துவமனைகளின் நம்பகத் தன்மை கேள்விக் குள்ளாகிவருகின்றது. தொடர்ந்த விமர்சனங்கள் அரசை விழிப்படைய வைத்துள்ளன. அவற்றின் தரம் மேம்பட்டு வருவதைக் காண முடிகிறது.

தவறான புரிதல்களும் மூட நம்பிக்கைகளும் உடல் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு அறிவியல் ரீதியிலான தீர்வுகளை நாடுவதற்குப் பெரும் தடையாக இருந்துவருகின்றன. தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையை அரசின் முற்போக்கான அணுகு முறையின் விளைவு எனச் சொல்ல முடியும்.

கருவுற்றப் பெண்களுக்குப் பிரசவ காலம் என்பது பெரும் பதற்றத்தையும் உடல் ரீதியான வலியையும் தோற்றுவிக்கக்கூடியது. பரிவும் அக்கறையும் கொண்ட ஒருவர் அந்தத் தருணத்தில் உடனிருப்பது அவற்றை எதிர்கொள்ளும் வலிமையை அவர்களுக்கு அளிக்கும். பொது மருத்துவமனைகளில் பிரசவத்திற்காகச் சேர்க்கப்படும் பெண்கள் அவமானப்படுத்தப்பட்டுவருவதை உணர்ந்த சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதையின் முன்முயற்சியால் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பொது மருத்துவமனைகளில் அரவானிகளுக்கு இலவசப் பாலின மாற்று அறுவை சிகிச்சை அளிக்க வகை செய்யும் அரசாணைக்கு வித்திட்டதும் அவர்தான்.

பொதுவாகவே அரசின் அணுகுமுறைகளில் மாற்றங்கள் தென்படத்தொடங்கியுள்ளன. பாலியல் அடையாளமற்ற அரவானிகள் பயன்பெறத்தக்க வகையில் உயர் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைப் பதிவேடுகளில் மூன்றாம் பாலினமாய் அவர்களைச் சேர்ப்பது குறித்தும் உயர் நிலைப் பள்ளிகளில் பாலியல் கல்வியை ஒரு பாடமாக வைப்பது குறித்தும் சம்பந்தப்பட்ட துறைகளால் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. தலித்துகளுக்கு அர்ச்சகராகும் உரிமையை வழங்கும் அரசாணை அரசின் முற்போக்கான அணுகுமுறைக்கு ஒரு முக்கியச் சான்று.

முற்போக்கு எண்ணம் கொண்ட தற்போதைய மாநிலங்களவை உறுப்பினரும் கவிஞருமான கனிமொழி முன்வைக்கும் கோரிக்கைகள் இவற்றுக்கான உந்து சக்தியாக விளங்குகின்றன எனக் கருத இடமுள்ளது. பல்வேறு செயல்பாடுகள் மூலம் புறக்கணிக்கப்பட்ட பிரிவினரின் மீதான அக்கறையை வெளிப்படுத்திவரும் கனிமொழி தனக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திவருகிறார். கனிமொழியும் முதல்வரும் சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்களும் பாராட்டுக்குரியவர்கள்.

உள்ளடக்கம்

Google Ads.....

Google